உ
செல்வமலைச் செவ்வேள்: சில நினைவுகள்
பசுபதி
ஒரு கோயிலுக்குக் குடமுழுக்கு விழா நடக்கும் போது, அந்தக் கோவில் வளர்ச்சியை முழுதும் பார்த்த ஒருவன் மனத்தில் சில காட்சிகள் – வரலாற்று நிகழ்வுகள் – ஒரு திரைப்படம் போல் ஓடுவதில் ஆச்சரியமில்லை. அக்காட்சிகள் சிலவற்றைப் பதிவு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
காட்சி 1
1988 –இல் ஒரு நாள் என்று நினைவு. டொராண்டோ, ரிச்மண்ட் ஹில் ( Richmond Hill) கோவிலில் திரு ஜானகிரமண ஸ்தபதியுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். “எப்படி அவர் ‘சிவசுப்பிரமணிய’ மூர்த்தியாய்ச் சிலையை வடிவமைத்தார் என்று கேட்கிறேன். அவர், எப்படிக் காலையில் இறைவனைத் தியானித்து, முருகனின் தியான ஸ்லோகத்தை மனத்தில் சொல்லிக் கொண்டே தொடங்கும் தன் சிற்பப் பணி எப்படி இறையருளால் ஒரு நெற்றிக் கண் கொண்ட முருகனை கடைசியில் ஈந்தது என்று விவரிக்கிறார். எனக்குப் புல்லரிக்கிறது. “சிவசுப்பிரமணியர்” என்ற நாமமும் என்னுள் ஒலிக்கத் தொடங்குகிறது.
காட்சி 2
1988 அல்லது 1990. திருப்புகழ் ’குருஜி’ ராகவன் டொராண்டோவிற்கு வந்திருக்கிறார். நான் திருப்புகழ் நூலிலே தேடுகிறேன். அருணகிரி எங்கேனும் “சிவசுப்பிரமணியர்” என்ற பெயரைப் பயன்படுத்தி இருக்கிறாரா என்று. கடைசியில் ‘ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு’ என்று ஒரு திருவொற்றியூர் திருப்புகழைக் கண்டுபிடிக்கிறேன். ‘சொருபப் பிரகாச” என்று தொடங்கும் அத் திருப்புகழில்
”குருகுக்குட வாரகொடி செருவுக்கிர ஆதபயில்
. பிடிகைத்தல ஆதியரி மருகோனே
குமரப்பிர தாபகுக சிவசுப்பிர மாமணிய
. குணமுட்டர வாவசுரர் குலகாலா “
என்று வரும். அத்திருப்புகழை டொராண்டோத் திருப்புகழ் அன்பர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார் குருஜி ராகவன்.
காட்சி 3
1990. ரிச்மண்ட் ஹில் கோவில் வெளியிட்ட இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகிறது. அதிலிருந்து ஒரு பகுதி:
“ (முருகனின் ) ஐந்தாம் படை வீடான ‘குன்றுதோறாடல்’ ஓர் இடத்தை மட்டும் குறிப்பதன்று; குன்றுகள் தோறும் குலவும் குமரனின் திருவிளையாடலையே குறிக்கிறது. இந்தக் குன்றுகளுக்கெல்லாம் பிரதிநிதியாகப் பொதுவாகத் திருத்தணி போற்றப்பட்டாலும், முருகனுக்கு ஏற்படும் புதுக் கோவில்களையும் சேர்ப்பது முறையே. உதாரணமாக, ரிச்மண்ட் ஹில்லில் உள்ள சிவசுப்பிரமணிய மூர்த்தியை, தமிழ் மரபிற்குப் பொருந்த ‘ செல்வமலைச் செவ்வேள்’ என்று அழைத்துப் போற்றலாம். செல்வர்களின் வீடுகள் பல உள்ள இவ்விடத்தில், ‘ஆன்மிகச் செல்வத்தை மறக்காதே’ என்று அறிவுறுத்தும் வகையில் கோயில் கொண்டுள்ளான் ஆறுமுகன். இந்த இடத்தை ‘ஸ்ரீகிரி’ என்று வடமொழியில் அழைக்கலாம். வள்ளி-தெய்வானை இருவரும் திருமாலின் குமாரிகள் , பார்வதி விஷ்ணுவின் சோதரி என்ற புராணக் கதைகளை அநுசரித்துச் செல்வமலைக் குமரனை மாமி வீட்டில் உள்ள மருகனாக எண்ணி, ரசித்து, மகிழலாம்”.
காட்சி 4
1990 –இல் ஒரு நாள். என் சோதரர், ‘திருப்புகழ் அடிமை’ நடராஜன் சென்னையில் தவத்திரு ஸாதுராம் ஸ்வாமிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது , தற்செயலாக, என் சோதரர், நான் ‘ரிச்மண்ட் ஹில்லுக்கு’ செல்வமலை என்று மொழியாக்கம் செய்ததைக் குறிப்பிடவே, அதை ரசித்த ஸ்வாமிகள், உடனே கீழ்க்கண்ட ‘அருட்புகழை’ அருளினார். ( அருணகிரி நாதர் எப்படி மிகக் கடினமான திருப்புகழ் பாடல்களை ஆசுகவியாய்ப் பாடினார் என்பது ஸாதுராம் ஸ்வாமிகள் பாடுவதைக் கேட்டவர்களுக்குப் புரியும் ) .
அருட்புகழ்
ராகம் : ஷண்முகப்ரியா
தய்ய தனத்தன தத்தன தத்தன தனனத் தனதான
உய்வர் திருப்புகழ் கற்றவர் எனும்அற் புதம்ஓரா
. . உய்தி பெறத்தமிழ் சொற்றுனை வழிபட் டுணரேன் நான்;
வைவ துரைப்பது மற்றெதும் உனதர்ச் சனையாக
. . வள்ளி மறத்தி திறத்த!நின் மனம்வைத் தினிதேலாய் ;
சைவர் பழிச்சுடும் அப்பணி ஜடையற் கருள்சேயே!
. . தைவ குருத்துவ புத்திர! தமிழிற் ப்ரியவேளே!
செய்வ தனைத்தையும் அர்ப்பணி ஜநர்நற் கனடாவில்
. . செல்வ மலைச்சிவ ஸுப்பிரமணியப் பெருமாளே.
ஸாதுராம் ஸ்வாமிகள்
29-11-1990
சென்னை -61
[ பழிச்சுடும் –போற்றிடும் ]
( பின் குறிப்பு: சங்கீத வித்வான் நெய்வேலி சந்தான கோபாலன் பின்னர் சென்னைக்கு விடுமுறையில் நான் சென்றிருந்தபோது இதை ஷண்முகப்ரியா ராகத்தில் அமைத்து எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார் என்பதும் இதற்குத் தொடர்புள்ள ஒரு நிகழ்வே ]
செல்வமலைச் செவ்வேளுக்கு – அரகரோகரா
டொராண்டோ தீரனுக்கு - அரகரோகரா
ஆண்டேரியோ அழகனுக்கு –அரகரோகரா
கனடா கந்தனுக்கு – அரகரோகரா
வெளியான கட்டுரை, 28 அக்டோபர், 2012 ]
தொடர்புள்ள பதிவுகள்:
பசுபடைப்புகள்
அனுபந்தம்
===========
இக்கட்டுரையைப் படித்த ஆசுகவி
சிவசூரி அளித்த கவிதைகள்:
செல்வமலைச் செவ்வேள்
ஆசு கவிதிரு சாது முனியவர்
ஆசை யுடன்உனைப்
பாடிடவே
தேசு புகழுடன் செல்வ மலைதனில்
சிங்காரக் கோயிலில்
கூடியவா.
பாசு பதிமுதல் பாவலர் பற்பலர்
பக்தி யுடன்நினைப்
பாடிடுவார்
காசு பணம்நிறை கானடா நாட்டிலே
காலடி வைத்தவன்
ஆடிடுவாய்.
முத்தமிழ் வித்தகர் மாமுனை வர்பலர்
முந்தித் துதிப்பதை
வேட்டனையா
சித்தம் களித்திடும் சிந்து பலவிதம்
செல்வ மலைதனில்
கேட்டனையா.
வெள்ளிப் பனிமலை வேண்டி விரும்பியே
வேலவன் அங்குநீ சென்றனையோ
கொள்ளை அழகுடன் குட்டிக் குழந்தையாய்க்
கொஞ்சக் குருபரன்
நின்றனையோ
அப்பனின் பேரின் முதலெழுத்து அட
அய்யனே நீயுமே
கொண்டனையா
சுப்பனே நின்னைச் சிவனாகக் கூடவும்
செல்வ மலைதனில்
கண்டனரா.
சிற்றுளி கொண்டு செதுக்குமுன் சிற்பியின்
சிந்தனையில்
பற்றிய பாலன் முருகனின் நாமம் பதிந்திருக்க
நற்றுணை யாக
நுதல்விழி வந்து நடனமிடக்
கற்சிலை செய்யக் கடவுள் வழிதனைக்
காட்டினரே.
கல்லில் கடவுளைக் காட்டும் கலைஞரின் கண்களின்முன்
எல்லை கடந்த எழிலுரு கொண்ட இளமிறையாய்ச்
செல்வ மலையில் திருவிழி மூன்றும்
திகழ்ந்திடவே
சொல்லில் வராத சுகந்தரு சோதியன்
தோன்றினனே.
வெள்ளிப் பனிமழை வீழ்ந்திடும் நாட்டில் விளங்குமெழில்
துள்ளும் தொராந்தோ துதிசெயும் தொண்டர் துணையெனவே
கள்ளின் சுவையுடைக் கன்னித்
தமிழ்தினம் காதுபட
வள்ளிக் கணவன் திருவிழி மூன்றுடன் வந்தனனே.
அருண
கிரியார் அருளிய பாடல் அனுதினமும்
உருகும் உளமுடன் ஓதும் அடியார் உயிர்வளர்க்கப்
பெருகும் நிதிக்கும் நிதியாய் சிவசுப் பிரமணியாய்க்
கருணை முகிலெனக்
கண்முனம் வந்தனன் கந்தய்யனே.
செல்வ மலைவாழ் சிவமணி நாமம்
செபிப்பவர்க்குக்
கல்லாக் கலையும் கணத்தில் உணர்த்தும் கருணையினால்
எல்லா
நலமும் இகத்தினில் சேர இமைப்பொழுதில்
வல்லான் அருளினால் நாடும் நகரும்
மணம்பெறுமே.