திங்கள், 12 நவம்பர், 2012

மலர் மோகம் : சிறுகதை

மலர் மோகம்
பசுபதி
அன்றைக்குப் பிடித்த மோகம் இன்னும் விடவில்லை.

ஒவ்வொரு தீபாவளியிலும் நான் 'வழி மேல் விழி' வைத்துக் காத்துக் கொண்டிருப்பது  தீபாவளி மலர்களுக்குத் தான். வீட்டிற்கு எப்போதும் 'ஹிந்து' 'தினமணி' கொண்டுவரும் வேலுவிற்கு   முன்னமே சொன்னால் சைக்கிள் மணியோடு மலர்களும் வந்து இறங்கும். முக்கியமாய்க் ’கல்கி’, ’விகடன்’ மலர்கள் வாங்குவோம். பிடித்த பக்ஷணங்களைக் கொறித்தபடி, பிடித்த எழுத்தாளர்களின் புதுப்  படையல்களை அன்றே 'ஸ்வாஹா' செய்துவிடுவேன்.

எனக்குப் பத்து, பன்னிரெண்டு வயதிருக்கும். ஒரு தீபாவளியன்று  அப்பாவிடம் எனக்கு வந்ததே பார்க்கணும் ஒரு கோபம்! தீபாவளியன்று வீடு தேடி வந்த விருந்தாளியிடம் வழக்கம்போல, போட்டோ ஆல்பம் காட்டிக் கொண்டிருந்த தந்தையிடம் , "எப்போதும் என் பிறந்த மேனிப் போட்டோவையே எல்லோருக்கும் காட்டி என் மானம் வாங்குவதற்குப் பதிலாய், நான் பிறந்த வருடத் தீபாவளி மலர்கள் ..ஒன்றிரண்டாவது காப்பாற்றி வைத்து என்னிடம் கொடுத்திருக்கக் கூடாதா? " என்று சண்டை போட்டேன்.

என் கோபம் அடங்கவே இல்லை. என் அபிமான எழுத்தாளர்களான 'கல்கி' 'தேவன்' இருவரும் விகடனில் இருந்த காலம் அல்லவா அது? அடடா, எவ்வளவு 'த்ரில்' லாக இருக்கும் அக்கதைகளைப் படிக்க? தீபாவளி விளம்பரங்களைப் பார்க்க ?   

சில நாள்களுக்குப் பின் திடீரென்று ஒர் எண்ணம். 'விகடன்' அலுவலகத்திற்கே சென்று, பழைய மலர்களைக் காட்டச் சொல்லி, அங்கேயே படித்துவிட்டு வந்தால் என்ன? அவ்வளவுதான், உடனே மௌண்ட் ரோடு பஸ்ஸில் ஏறி விட்டேன்.விகடன் காரியாலயத்தில் வெளியே இருக்கும் காவலாளியே என்னை ஓரங்கட்டி விட்டான். "தம்பி, இதெல்லாம் போகாத ஊருக்கு வழி. அதெல்லாம் உன்னைப் போன்றவர்க்கு இல்லை" என்று சொல்லி விட்டான். ஒரே ஏமாற்றம்.

சில வருடங்கள் கழிந்தன. நான் திடீரென்று, பழைய புத்தகக் கடைகள் என்ற சங்கநிதி, பதுமநிதிகளைச் சென்னையில் கண்டுபிடித்தேன். அதுவும், மூர் மார்க்கெட் முத்து என் ஆப்த நண்பனாகி விட்டான். சரோஜா தேவி முதல் 'ஸாடர்டே ஈவினிங் போஸ்ட்' வரை எல்லாம் அவன் தயவு. அவனிடம் என் ஆசையைத் தெரிவித்தேன். "நான் தேடித் தருகிறேன் " என்ற அவன் வாக்குறுதி எனக்குத் தேனாகத் தித்தித்தது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பின்..திடீரென்று முத்து கூப்பிட, நான் தண்டையார்ப் பேட்டைக்கு ஓடினேன்.அதே, அதே தான்! என் பிறந்த வருட 'விகடன்' மலர் ! கடைக் காரனிடம் என் இதயத் துடிப்பைக் காட்டாமல் ( பாவி, விலை ஏற்றிவிடுவானே!) பேரம் செய்து வீட்டிற்குக் கொணர்ந்தேன்.சில பக்கங்கள் இல்லை. அதனால் என்ன? முழுக்க, முழுக்க பொக்கிடங்கள் ! உ.வே.சாமிநாதய்யர்  என்னமோ சங்க நூல்கள் கிடைத்தவுடன் ஆனந்தத்தில் மிதந்தார் என்பார்கள். ஊஹும், ஐயா கிட்ட நெருங்க முடியாது. அன்று தர்மனின் தேர்போல வானில் பறந்தேன்.

மலரில் என்ன இருந்தன, என்கிறீர்களா? இதோ, சில ஐடம்கள்.

உ.வே.சாவின் 'அம்பலப் புளி' கதை. டி.கே.சி இரு போலிக் கம்பன் கவிகளைக் கிழித்திருந்தார். 'ரைட் ஆனரபிள்' வி.எஸ். ஸ்ரீநிவாச சாஸ்திரியாரின் முதல் தமிழ்க் கட்டுரை. சென்னை மேயரான சத்யமூர்த்தியின்  'சௌந்தர்ய நகரம்' சென்னையை 'சிங்காரச் சென்னை'யாக்கும் வழிகளைச் சொன்னது. பாரதி சொன்ன ஒரு சின்னக் கதையை அவர் நண்பர் வரகவி அ.சுப்ரமண்ய பாரதி எழுதியிருந்தார். வையாபுரி பிள்ளையின்  ஒரு கவிதை.(அட, கவிதை கூட எழுதுவாரா?)

பாகவதர், என்.எஸ்.கே ..படங்கள். கல்கி, துமிலன், தேவன், நாடோடி...யின் கதைகள். 'கடல் கடந்த ஹிந்துக்கள்' என்ற கட்டுரை. தேசிக விநாயகம் பிள்ளை, சோமு கவிதைகள்.

ஆனால், எனக்கு மலரில் மிகவும் பிடித்தது ராஜாஜியின் 'சிவப்பு அனுமார்' கதை. மகம்மது கவுஸ் உஸ்தாது புலியாட்டத்தில், ஆவேசம் வந்து, சங்கிலியை மீறி, போலீஸ் ஹெட் வரதராஜுலுவின் தலையில் இறங்கி, பின் கரடி வேஷச் சுப்பனின் தோளைக் கவ்வ... திருப்பித் திருப்பி அந்தக் கதையை எவ்வளவு முறை படித்திருப்பேன், கணக்கிட முடியாது!

போன வருடம். என் மகளின் தலை தீபாவளி. வீட்டிற்கு வந்தவளிடம் , அந்த மலரைக் காட்டி, மலர் கிடைக்க நான் பட்ட பாடெல்லாம் சொன்னேன்.

"அதெல்லாம் சரி, நான் பிறந்த வருட தீபாவளி மலர் ஒன்று எனக்குக் காட்டு " என்றாள்.

என் அப்பாவிடம் நான் ஐம்பது ஆண்டுகளாகக் கொண்டிருந்த கோபம் தணிந்தது.
**********
 
[ இது ‘தென்றல்’ இதழில் நவம்பர் 2006-இல் வெளிவந்தது..]

அந்தத் தீபாவளி மலரின் முழுப் பொருளடக்கம் என்னவென்று அறிய விருப்பமா? கீழே பாருங்கள்!தொடர்புள்ள பதிவுகள்:

தீபாவளி மலர்

6 கருத்துகள்:

KAVIYOGI VEDHAM சொன்னது…

அட்டகாசம்..ஸ்வாமி..ஆமாம் அதென்ன சரோஜாதேவி புக்..நாங்கள் 9ஆம் வகுப்பில் வாத்யாருக்குத் தெரியாம
கணக்குப்புத்தகம் நடு வேரகசியமா வெச்சுப்படித்தோமே அந்த ரொம்ப நல்ல புக்கா??
கிளு கிளுப்பா இருந்திருக்குமே..
வேதம்

சு.பசுபதி சொன்னது…

:-))
இது கதை, சுவாமி!

Swami சொன்னது…

அருமை.

ஆனந்த விகடனைக் கேட்டுக் கொண்டால் பழைய தீபாவளி மலர்களையும் மறுபதிப்பு செய்வார்களா?
குறைந்த படசம் இருக்கிற மலர்களை ஸ்கேன் செய்து போட்டாலும் போதும்.

சு.பசுபதி சொன்னது…

@Swami

நன்றி. நான் இந்தக் கருத்தை அவர்களுக்குத் தெரிவித்தேன் ...பல ஆண்டுகளுக்கு முன். பலருக்குத் தங்களுக்குப் பிடித்த ஓர் ஆண்டு தீபாவளி மலர் ( பிறந்த வருடம், நண்பர் பிறந்த வருடம், மணமான வருடம், ..) வேண்டியிருக்கும்.
வருவாய் அதிகரிக்கும் என்று சொன்னேன். பதில் இல்லை.

usharaja சொன்னது…

Very interesting story!

பெயரில்லா சொன்னது…

இந்தப் பொக்கிஷக் 'கதை'யின் சிகரம் நீங்கள் கொணர்ந்த பொருள‌டக்கம்! எத்தனை பேர்கள், அதில் எத்தனை பெயர்களில் ஒளிந்த பேர்வழிகள்! அத்தனையும் படிக்கத் தூண்டும் பெயர்கள்..

இத்தனையிலும், ராவுஜியின் (நாரதர் ஸ்ரீனிவாச ராவ்) அவர்களின் குறும்புப் படங்கள் என்னவாயிருக்கும் என்றறிய ஆவல்.

யாரை என்று தனித்துப் பாராட்டி,' படித்திட ஆவல்' என்று சொல்ல? அத்தனையும் பொக்கிஷங்களாம் பெயர்கள். எது கிடைக்குமோ, காத்திருப்போம்...

கருத்துரையிடுக