கன்னத்தில் போட்டுக் கொள்கிறேன்
ரா.கி. ரங்கராஜன்.
[ ஒவ்வொரு ஆண்டும் தேவன் நினைவு நாள் ( மே, 5) அன்று தேவன் அறக்கட்டளை சென்னையில் ஒரு விழா நடத்தி, பலரைக் கௌரவிப்பது வழக்கமாக இருந்தது. அப்படிப்பட்ட தேவன் அறக்கட்டளை விழா ஒன்றுக்குச் சென்ற அனுபவத்தை ஒரு நகைச்சுவைக் கட்டுரையாக வடித்திருக்கிறார் ரா.கி.ரங்கராஜன். இது 2000 -இல் நடந்த சம்பவம் என்று எண்ணுகிறேன். ]
தேவன் அறக்கட்டளை விழாவுக்காக பாரதீய வித்யா பவனுக்குப் போயிருக்கவும் வேண்டாம். கால்தவறிக் கீழே விழுந்திருக்கவும் வேண்டாம்.
அண்ணா நகருக்குக் குடி வந்த பிறகு எனக்கு இது இரண்டாவது விழுகை. (இப்படியொரு சொல் தமிழில் இருக்கிறதா என்று பேராசிரியர் டாக்டர் மறைமலைதான் சொல்ல வேண்டும்.)
இந்தத் தடவையும் சதி செய்த வில்லன் ஒரு சிவப்புக் கம்பளம்தான். இரண்டு வரிசைகளுக்கும் நடுவே வாசலிலிருந்து மேடை வரை நீளமாக விரித்திருந்த சிவப்பு விரிப்புத்தான். “ஆகா! நமக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு!” என்ற அகங்காரத்துடன் முதல் வரிசையை நோக்கி மார்பை நிமிர்த்திக் கொண்டு நடந்ததால், விரிப்பில் இருந்த சிறிய சுருக்கத்தைக் கவனிக்கத் தவறிவிட்டேன். (விழாக்களுக்குச் செல்லும் வயோதிகர்கள் இதைச் சிவப்பு எழுத்தில் எழுதி வைத்துக் கொள்வது நலம்.)
ஒரு இடறு இடறி இரண்டு நாற்காலிகளைத் தாண்டி மூன்றாவது நாற்காலியில் போய் விழுந்தேன். அதில் அமர்ந்திருந்தவர் நல்ல காலமாக ஓர் ஆண்மகன், பெண்ணாக இருந்தால் மேலும் மூன்று நாற்காலிகள் தூரத்துக்கு என்னை எட்டித் தள்ளி விட்டிருப்பார். இந்த நல்லவர், ’கிழம் நழுவிக் காலில் விழுந்தது’ என்று அனுதாபப்பட்டவராக என்னை அன்போடு தாங்கிப் பிடித்துக் கொண்டு தன் நாற்காலியிலேயே உட்காரும்படி சொல்லிவிட்டு, வேறொரு இருக்கைக்குப் பெருந்தன்மையுடன் போய்விட்டார்.
“என்ன? என்ன?” என்று பலர் கேட்டார்கள். ” யார் விழுந்தது, ரா.கி. ரங்கராஜனா?” என்று சிலர் கேட்டார்கள். “ரா.கி. ரங்கராஜனா? யார் அவர்?” என்று என் பின்னால் ஒருவர் சொல்வதும் காதில் விழுந்தது. ஆகவே இதை நல்ல பப்ளிஸிட்டி என்றும் சொல்ல முடியாது.
வானதி திருநாவுக்கரசு “என்னப்பா? என்ன ஆச்சு?” என்று கேட்டார். தேவன் அறக்கட்டளையின் செயலாளர் சாருகேசியும் எழுத்தாளர் வாதூலனும் வந்து ”காப்பி சாப்பிடுகிறீர்களா?” என்று பரிவோடு கேட்டார்கள். சற்றுப் படபடப்பாக இருந்ததால் சரி என்றேன். உடனே சென்றார்கள். உடனே மறைந்தார்கள். விழா முடிந்த பிறகுதான் வந்தார்கள். “அடி ஒன்றும் பலம் இல்லையே?” என்றார்கள். காப்பியைப் பற்றி அவர்களும் சொல்லவில்லை. நானும் கேட்கவில்லை. பாவம், அவர்களுக்குத் தலைக்குமேல் வேலை அப்போது.
ஜ.ரா. சுந்தரரேசன் என் நெருங்கிய நண்பர் என்று ரொம்பப் பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கிடையாது. சரியான துரோகி. உள்ளே நுழையும்போதே நான் அவரிடம், “நீங்கள் முன்னால் போங்க. நான் தங்கள் தோளைத் தொட்டாற்போல் வருகிறேன்” என்று சொல்லியிருந்தேன். ஒப்புக் கொள்கிற மாதிரி தலையாட்டியவர், என்னை முன்னால் போகவிட்டு, என் தோளைத் தொட்டாற்போல் பின்னால் வந்தார். நான் விழுந்ததும் எச்சரிக்கை அடைந்து பத்திரமாக வேறொரு வரிசையில் போய் உட்கார்ந்து கொண்டு, “அடி கிடி இல்லையே?” என்று கேட்கிற மாதிரி அங்கிருந்தே கையை வீசிச் சைகையில் கேட்டார். பக்கத்து நாற்காலி காலியாக இல்லை. இருந்திருந்தால் தூக்கி அவர்மீது அடித்திருப்பேன்.
விழா முடிந்த பிறகு என்னிடம் வந்தவர், “விழுந்ததுதான் விழுந்தீர். போட்டோவில் விழுந்திருக்கக் கூடாதோ?” என்று சிலேடை வேறே! இவரா என் சிநேகிதர்!
விழுந்து எழுந்தாவது தேவன் விழாவுக்குப் போயிருக்க வேண்டுமா என்று நீங்கள் கேட்கலாம். தேவனின் எழுத்துக்கு அடிமை நான். அத்துடன், கும்பகோணம் அரசினர் கல்லூரியில் என் தந்தையிடம் சம்ஸ்கிருதம் படித்த மாணவர் அவர். அதனால் என்மீது அவருக்குத் தனிப் ப்ரீதி, மேலும் என் முதல் சிறுகதையை ஆனந்தவிகடனில் பிரசுரித்தவரும் அவரே.
இரண்டு தமிழ்ப் புத்தகங்களை வெளியிடுவது அன்றைய நிரலில் முக்கிய நிகழ்ச்சி. ஒன்று சென்ற வருடம் கல்கியின் சார்பில் நடைபெற்ற நகைச்சுவைப் பயிலரங்கத்தில் பேசிய சிலரின் சொற்பொழிவுத் தொகுப்பு. (என் கட்டுரையும் உண்டு!) ‘கல்கி வளர்த்த சிரிப்பலைகள்’ என்ற இந்தப் புத்தகத்தில், கல்கியின் எழுத்திலிருந்து சில நகைச்சுவை முத்துக்களையும் தொகுத்துச் சேர்த்திருக்கிறார் வாதூலன்.
இரண்டாவது புத்தகம் ‘கல்கியின் கடிதங்கள்’ என்ற தலைப்புக் கொண்டது. டி.கே.சி. ராஜாஜி, கல்கி ஆகியோர் தங்களுக்குள் எழுதிக் கொண்ட கடிதங்களுடன், கல்கி தன் மனைவிக்கும், மகனுக்கும், மகளுக்கும் எழுதிய கடிதங்களும் இதில் இடம் பெற்றிருக்கின்றன. தொகுத்தவர் சுப்ரபாலன்.
ஆறு மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிக்க வேண்டும். ஆறேகால், ஆறரை, ஆறேமுக்கால் என்று நேரம் ஓடிக்கொண்டிருந்தது. புத்தகங்களை வெளியிட வேண்டிய ஹிந்து என். ராம் ஏழு மணிக்குத்தான் வந்தார். நிகழ்ச்சி நேரத்தைத் தப்பாக எண்ணி விட்டேன் என்று ஏதோ சாக்குச் சொன்னார். அதையாவது மன்னிக்கலாம். தான் இன்னும் இரு புத்தகங்களையும் வாசிக்க முடியவில்லை என்றும், ஆனால் நிச்சயமாய் நன்றாகத்தான் இருக்கும் என்று நம்புவதாகவும் சொன்னார். இது எப்படி இருக்கு!
பழம் பெரும் எழுத்தாளரான பரணீதரன் (‘மெரீனா’) புத்தகங்களைப் பெற்றுக் கொண்டார்.
ஹிந்துவில் தொடர்ச்சியாக வேடிக்கையான கட்டுரைகளை எழுதி வருகின்ற வி. கங்காதரும், ஹிந்து துணை ஆசிரியர் ஸி.வி. கோபாலகிருஷ்ணனும் (ஸிவிஜி) தேவனின் பரம ரசிகர்கள். தேவன் அறக் கட்டளை சார்பாக இருவருக்கும் பதக்கங்கள் அணிவித்துப் பாராட்டினார்கள்.
தேவனின் படைப்புக்களில் ஒவ்வோர் பகுதியாகக் குறிப்பிட்டு என்னென்ன விதத்தில் அது சிறப்பு என்று கங்காதர் பாராட்டியது பிரமிப்பைத் தரும் பேச்சாக இருந்தது. அடுத்து, ஸிவிஜியும் நன்றாகவே பேசினார்.
இந்த விழாவுக்குப் போனதில் எனக்குக் காலில் மட்டுமல்ல, மண்டையிலும் அடி. எப்படி என்கிறீர்களா? அண்ணா நகரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் ஏன் எல்லாரும் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் என்று இரண்டு வாரம் முன்பு கிண்டல் செய்தேன் அல்லவா? அதற்கு இங்கே பழிக்குப் பழி.
இந்த விழாவில், பரணீதரன் ஒருவரைத் தவிர மற்ற அத்தனை பேரும், முதல் வாக்கியம் முதல் கடைசி வாக்கியம் வரை ஆங்கிலத்திலேயே பேசினார்கள்! அதுவும் முழுக்க முழுக்கத் தமிழ் எழுத்தாளரான தேவனின் ரசிகர்கள் நிறைந்த தமிழர்களின் கூட்டத்தில்! தமிழிலேயே பிறந்து தமிழிலேயே வளர்ந்த அக்மார்க் தமிழர்கள், ஆங்கிலத்திலேயே சண்ட மாருதம் செய்தார்கள்!
புத்தி, புத்தி இனிமேல் எந்தப் பேச்சாளர்களையும் கேலி செய்ய மாட்டேன். கன்னத்தில் போட்டுக் கொள்கிறேன்.
[ நன்றி: அண்ணா நகர் டைம்ஸ் ]
தொடர்புள்ள பதிவுகள்:
ரா.கி.ர : என் முதல் கதை!
ரா.கி.ர : கல்கியின் முத்திரை
ரா.கி.ர: கட்டுரைகள்
தேவன் நினைவு நாள்: 2010
தேவன் நூற்றாண்டு விழா
தேவன் படைப்புகள்
ரா.கி. ரங்கராஜன்.
ரா.கி.ரங்கராஜன் |

தேவன் |

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக