வியாழன், 26 மே, 2016

மகா வைத்தியநாதையர்

மகா வைத்தியநாதையரைப் பற்றி ....
உ.வே.சாமிநாதய்யர் 

மே 26 . மகா வைத்தியநாதையரின் பிறந்த தினம். அவரைப் பற்றி  உ.வே.சா. நிறைய எழுதியிருக்கிறார். “என் சரித்திரத்தி”லிருந்து ஒரு பகுதி இதோ:
============





மகா வைத்தியநாதையரைப் பார்ப்பதே எனக்கு மிகவும் ஆனந்தமாக இருந்தது. அவர் முகத்திலே இருந்த ஒளியும் அமைதியும் அவர் உள்ளத்தின் இயல்பை விளக்கின. அத்தோற்றத்தினால் மட்டும் என் ஆவல் அடங்கவில்லை. அவர் இடையிடையே பேசின மெல்லிய வார்த்தைகளிலே இனிமை இருந்தது. அந்த இனிமையும் என் மனத்தைக் கவர்ந்தது. ஆனால் அவ்வார்த்தைகளாலும் என் ஆவல் அடங்கவில்லை. வைத்தியநாதையராய் இருந்த அவர் எதனால் மகா வைத்தியநாதையர் ஆனாரோ அச்சங்கீதத்தைக் கேட்க வேண்டுமென்ற ஆசை எனக்கு அதிகரித்தது. ‘இவர் வந்திருக்கிற காரியமோ வேறு. இக்கூட்டத்தில் ஒரு சம்பந்தமும் இல்லாமல் நமது ஆவலை  நிறைவேற்றுவதற்காக இவர் பாடுவது சாத்தியமாகுமா? நமக்கு இவ்வளவு ஆசை இருப்பது இவருக்குத் தெரிவதற்குத்தான் சந்தர்ப்பம்  உண்டா?........எப்படியாவது ஒரு பாட்டைக் கேட்டால் போதுமே.....ஒரு பாட்டானால் என்ன? நூறு பாட்டானால் என்ன? அதற்கு இதுவா சமயம்?’ என்று என் மனத்துக்குள்ளே ஆட்சேப சமாதானங்கள் எழுந்தன. இந்த யோசனையிலே சுந்தர சுவாமிகளும் தேசிகரும் என்ன பேசினார்கள் என்பதைக் கூட நான் நன்றாகக் கவனிக்கவில்லை.

திடீரென்று எனக்கு ஆச்சரியம் உண்டாகும்படி சுப்பிரமணிய தேசிகர் பேசத் தொடங்கினார்: “உங்களுடைய சங்கீதத்தைக் கேட்க வேண்டுமென்று இங்கே படிக்கும் மாணாக்கர்கள் சிலர் ஆசைப்படுகிறார்கள். பிள்ளையவர்கள் வாக்கிலிருந்து சில பாடல்களைச் சொன்னால் திருப்தியாக இருக்கும்” என்று அவர் மகா வைத்தியநாதையரை நோக்கிக் கூறிய போது, நான் என் காதுகளையே நம்பவில்லை. ‘நாம் கனவு காண்கிறோமோ? நம்முடைய யோசனையினால் விளைந்த பகற் கனவா இது?’ என்று கூட நினைத்தேன். நல்லவேளை, அது வாஸ்தவமாகவே இருந்தது.

“அதற்கென்ன தடை? காத்திருக்கிறேன்” என்று சொல்லி மகா வைத்தியநாதையர் பாட ஆரம்பித்து விட்டார். தேவகானமென்று சொல்வார்களே அச்சங்கீதம் அப்படித்தான் இருக்குமோவென்று எனக்குத் தோற்றியது. முதலில் தமிழ்ச் சூத சங்கிதையிலிருந்து சில செய்யுட்களைச் சொல்லத் தொடங்கினார். தமிழ்ச் செய்யுளாக இருப்பதனாலே முதலில்  அவை மனத்தைக் கவர்ந்தன. பிள்ளையவர்கள் வாக்கென்ற பெருமையும் அவைகளுக்கு இருந்தது. மகா வைத்தியநாதையருடைய இன்னிசையும் சேர்ந்து அப்பாடல்களுக்கு என்றுமில்லாத அழகைக் கொடுத்தது. அந்த இன்னிசை முதலில் இந்த உலகத்தை மறக்கச் செய்தது. பாவத்தோடு அவர் பாடுகையில் ஒவ்வொரு வார்த்தையும் உள்ளத்துள்ளே படிந்து படிந்து ஒரு பெரிய காட்சியை நிர்மாணம் செய்து வந்தது.

சூதசங்கிதையில் கைலாஸத்தில் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் காட்சியை வருணிக்கும் செய்யுட்கள் அவை. வெறும் பாடல்களை மாத்திரம் படித்தபோதும் எங்களுக்கு உள்ளத்துள்ளே காட்சிகள் எழும். புறத்தே உள்ள பார்வையும் இருக்கும். ஆனால் அப்பாடல்கள் இசையோடு கலந்து வந்தபோதோ எல்லாம் மறந்து போயின. அப்பாட்டு எப்படிச் சுருதியிலே லயித்து நின்றதோ அப்படி எங்கள் மனம் அப்பாட்டின் பாவத்திலே லயித்து நின்றது. ஒரு பாடலைக் கூறி நிறுத்தும் போதுதான் அவர் பாடுகிறார், நாம் கேட்கிறோம் என்ற வேற்றுமை உணர்ச்சி உண்டாயிற்று.

பாடல்களைக் கூறிவிட்டுப் பிறகு பொருளும் சொன்னார். பாடல்  சொல்லும்போதே பொருள் தெரிந்து விட்டது.

பாட ஆரம்பித்துவிட்டால் அதை நிறுத்திவிட மனம் வருமா? கேட்பவர்களுக்குப் போதுமென்ற திருப்திதான் உண்டாகுமா? சூத சங்கிதையிலிருந்து அப்பெரியாருடைய இசை வெள்ளம் வேறு மடைகளிலே திரும்பியது. பிள்ளையவர்கள் வாக்காகவுள்ள வேறு பல பாடல்களை அவர் இசையுடன் சொன்னார்.

பிறகு சுப்பிரமணிய தேசிகர், “உங்கள் தமையனார் வாக்காகிய பெரிய புராணக் கீர்த்தனையிலிருந்து சில கீர்த்தனங்கள் பாட வேண்டும்” என்றார். வைத்திய நாதையரிடத்திலுள்ள ‘சரக்கு’ இன்னதென்று தேசிகருக்கு நன்றாகத் தெரியும். அவர் ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டே வர அந்தச் சங்கீத சிகாமணி தடையின்றிப் பாடி வந்தார்.

அவர் கீர்த்தனங்களைப் பாடும்போது பிடில், மிருதங்கம் முதலிய பக்க வாத்தியங்கள் இல்லை. அக்காரணத்தால் அவர் இசைக்குக் குறைவு இருந்ததாக எனக்குத் தோற்றவில்லை. அவர் கையினால் மெல்லத் தாளம் போட்டுப் பாடியபோது ஒவ்வொருவருடைய இருதயமும் அப் பாட்டோடு ஒன்றிப் பக்கவாத்தியம் வாசித்ததென்றுதான் சொல்ல வேண்டும். இணையற்ற இன்பம்

அதுவரையில் அடைந்திராத இன்பத்தை அன்று அடைந்தேன். ‘இவர்களுடனே போய் இருந்து சங்கீத அப்பியாசம் செய்யலாமா?’ என்ற ஆசைகூட இடையே தோற்றியது. ஒருவாறு மகா வைத்தியநாதையரது கான மழை நின்றது. சுந்தர சுவாமிகள் விடை பெற்றுக் கொண்டனர். அவரோடு மகா வைத்திய  நாதையரும் பிறரும் விடை பெற்று எழுந்தனர். அவர்கள் யாவரும் மடத்தில் அவரவர்களுக்குரிய இடத்தில் விருந்துண்டு பிற்பகலில் திருவையாற்றுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

அன்று பிற்பகலில் சுப்பிரமணிய தேசிகரை நான் பார்த்த போது, “காலையில் மகா வைத்தியநாதையர் பாட்டைக் கேட்டீரா?” என்று அவர் கேட்டார். “இந்த மாதிரி சங்கீதத்தை இதுவரை நான் கேட்டதே இல்லை.அவர்களுடைய சாரீரம் எல்லோருக்கும் அமையாது. வெறும் சாதகத்தால்மட்டும் வந்ததன்று அது” என்றேன்.

“சாதகம் மாந்திரம் போதாதென்பது உண்மைதான். அவர் நல்ல சிவபக்தர். சிவகிருபை அவருக்கு நல்ல சாரீரத்தை அளித்திருக்கிறது. அவர் செய்துவரும் அப்பியாசம் அந்தச் சாரீரத்திற்கு வளப்பத்தைத் தருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அவரது தூய்மையான ஒழுக்கம் அந்தத் திவ்விய சாரீரத்தின் அழகு கெடாமல் பாதுகாக்கிறது” என்று சொல்லி விட்டு, “அவர் தமிழறிவும் உமக்குப் புலப்பட்டிருக்குமே!” என்றார்.

“ஆம், அவர் பாடல் சொல்லும்போதே பொருள் தெளிவாகிறது” என்றேன்.

[ நன்றி: “என் சரித்திரம்” ]

தொடர்புள்ள பதிவுகள்:
உ.வே.சா