விக்கிரமன் – நேர்காணல்
தமிழகத்தின் மூத்த எழுத்தாளர்களில் குறிப்பிடத் தக்கவர் விக்கிரமன். முதலில் வேம்பு என எழுதத் தொடங்கி பின் விக்கிரமன் ஆனார். தனது 13-ஆம் வயதில் எழுதத் தொடங்கிய அவரை எழுத்தாளர்களுக்கு எழுத்தாளர் என்றே சொல்லலாம்.
“எழுத்தாளர் சங்கம் நிறுவிய பிதாமகர்’ என்றே இவரை வர்ணிக்கலாம். தம் வாழ்நாளை எழுத்தாளர்களுக்கென்றே அர்ப்பணித்தவர். இவரால் பல எழுத்தாளர்கள் புகழ் பெற்றதையும் வளம் பெற்றதையும் மறுக்க முடியாது.
இவரது படைப்புகளில் சமுதாயப் பிரச்சினைகளும் அரசியல் பிரச்சினைகளும் கலந்து இழையோடின. அச்சகப் பணிகள், பதிப்பகப் பணிகள் எல்லாம் இவருக்கு கைவரப் பெற்ற கலையாக இருக்கின்றன.
“கல்கிக்குப் பிறகு வரலாற்று நாவல்களில் தனக்கென தனிமுத்திரை பதித்தவர்’ என பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனால் பாராட்டப் பெற்றவர்.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களால் “முத்தமிழ் அன்பர்’ எனப் பாராட்டப் பெற்றவர்.
விக்கிரமனின் எழுத்துலக வாழ்க்கை மிக எளிமையாகத் தொடங்கியது தான் என்றாலும், அவர் ஒரு கவிஞராக- கட்டுரையாசிரியராக- சிறுகதை எழுத்தாளராக- சரித்திர நூலாசிரியராக- இதழாசிரியராக- எழுத்தின் எல்லா பரிமாணங்களும் பளிச்சிடும் வண்ணம் திகழ்கிறார். சத்திய ஆவேசம் அவரது எழுத்தாய்ப் பிரதிபலித்தது. 30 வரலாற்றுப் புதினங்கள், ஆறு சமூக நாவல்கள், பத்து சிறுகதைத் தொகுப்புகள், இளைஞர்களுக்கான வரலாற்று நூல் இரண்டு, மூன்று பயண நூல் தொகுப்புகள், சிறுவர் இலக்கியம், நாடகம், கவிதை, கட்டுரை, வரலாற்றுப் புதினம் என பலதிறப் படைப்பாளி இவர்.
மேலும் “தமிழ் நாட்டில் தெலுங்கு மன்னர்கள்’ என்னும் நூல் மூலம் ஆங்கிலத்திலும் தடம் பதித்தவர்.
இவரது படைப்புகளை ஆய்வுக்காக இன்றும் பலர் ஏற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய விக்கிரமனை “இனிய உதயம்’ இதழுக்காகச் சந்தித்தோம். அதிலிருந்து…
தாங்கள் படைப்பாளியாக உருவானது எப்படி?
“”1940-ஆம் ஆண்டில்- என் பன்னிரண்டாவது அகவையில் இலக்கிய தாகம் ஏற்பட்டது. இலக்கிய வழிப் பயணத்தில் நான் இளைப்பாறி முன்னேற வழிகாட்டி யாக- பசுஞ்சோலையாக இருந்தவர்கள் பலர்.
நாள்தோறும் இலக்கிய விழிப்பு மகாகவி பாரதியாரின் திருமுகத்தில்தான். “வந்தே மாதரம் என்போம்; எங்கள் மாநிலத் தாயை வணங்குதுமென் போம்’ என்ற தேசிய- தமிழுணர்வை என் பிஞ்சு நெஞ்சில் விதைத்த மகாகவி பாரதியார் போன்ற மேதைகள் அனைவரும் என் நெஞ்சில் நிறைந்தவர்களாகி விட்டனர்.
கரிய இருளில், கருங்கடலில் நீந்தத் தொடங்கிய பன்னிரண்டு பதின்மூன்று வயதுச் சிறுவனான நான், நல்வழிகாட்டும் கலங்கரை விளக்கைத் தேடினேன்.
எழுத்து, பேச்சு எனும் இரு தண்டவாளங்கள்மீது என் இலக்கியத் தேர் ஊர்ந்து செல்லத் தொடங்கியது.
இதய ஒலிக்குச் சுருதி சேர்க்க அமைந்ததுபோல் கையெழுத்துப் பத்திரிகையில் என் இலக்கிய விதையை விதைக்க முற்பட்டேன்.
“கலாவல்லி’ என்றும்; “பரமஹம்சர்; என்றும் கையெழுத்து ஏடுகளை இலக்கியக் கனவின் முதல் படியாக அமைத்துத் தவழ்ந்து ஏறத் தொடங்கினேன்.
மகாத்மா காந்தியின் “ஹரிஜன்’ ஆங்கிலப் பத்திரி கையை என் பள்ளித்தோழர் நா. சுப்பிரமணியம் எனக்கு அறிமுகப்படுத்தினர்.
நண்பர் சுப்பிரமணியமும் நானும் நாள்தோறும் சந்தித்தோம். அதன் பலன் இருவரும் சேர்ந்து ஒரு கையெழுத்து ஏட்டை நடத்துவதென்று தீர்மானித்தோம். அதற்கு “தமிழ்ச் சுடர்’ என்று பெயர் சூட்டினோம்.
இதுவே எனது எழுத்துலகப் பிரவேசம் எனலாம்.”
பத்திரிகையாளராகத் தங்களை அடையாளம் காட்டியது எப்படி?
“”கையெழுத்து இதழ் தயாரித்தவுடன் முதலில் எங்கள் தமிழாசிரியரிடம் (இராமகிருஷ்ணா பள்ளி) காட்டினேன். பிறகு “ஸண்டே டைம்ஸ்’ எம்.சி. சுப்ரமணியம் அவர்களிடம் காட்டினேன். அங்கே வை. கோவிந்தன், நா. நாராயண அய்யங்கார் ஆகியோரிடம் ஆசி பெற்றோம்.
மூதறிஞர் ராஜாஜி அப்பத்திரிகையை “பேஷ் பேஷ்’ என பாராட்டினார்.
ஏ.கே. செட்டியார் ஒருமுறை எங்களைப் பார்த்தார். “என் வாழ்த்து நிறைய உண்டு. ஆனால் உங்களுக்கு ஒரு சிறு உதவி செய்யப் போகிறேன். நல்ல காகிதம் கிடைக்காத இந்தச் சமயத்தில் மிகச் சிரமப்பட்டு நல்ல காகிதத்தில் எழுதியிருக்கிறீர்கள். என்றும் எழுத்து மறையாமல் இருக்க வேண்டும். உங்கள் “தமிழ்ச் சுட’ருக்கு ஒவ்வொரு மாதத்திற்கு ஆகும் காகிதத்தை நண்பர் சத்ருக்கனார் கொடுப்பார். எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானாலும் ஒவ்வொரு இதழுக்கும் தேவையானதை வாங்கி, பிறகு எழுதி அவரிடம் கொடுத்துவிடுங்கள். அவர் பைண்டு செய்து கொடுத்து விடுவார்’ என்றார்.
முழுப் பத்திரிகையை ஏ.கே. செட்டியாரிடம் காட்டினோம். ஒவ்வொரு பக்கமாகப் பார்த்து, குறைகள் இருந்தால் எடுத்துக் கூறி, நிறைவு இருப்பின் பாராட்டி ஊக்குவிப்பார்.
ஏ.கே. செட்டியாரைச் சந்தித்ததால்தான் பத்திரிகை உலகில் பணியாற்றும் ஆர்வம், தூண்டுதல் எனக்கு ஏற்பட்டது. அது என் வாழ்வின் பெருந்திருப்பம் என்றே கூறலாம்.”
“வேம்பு’ – விக்ரமன் ஆனது எப்படி?
“அமுதசுரபி’ எடிட்டர், பதிப்பாளர் “வேம்பு’வாக இருந்தேன். அமரர் கல்கியின் “பார்த்திபன் கனவு’ நாவலின் ஒரு கற்பனைப் பாத்திரத்தின் பெயர் விக்கிரமன். அது என்னை பாதித்தது. விக்கிரமன் ஆனேன்.”
தாங்கள் சிறுகதை ஆசிரியராகப் பரிணமித்தது எப்படி?
“”என் நண்பர் நா. இராமச்சந்திரன் எழுதிய கதை ஒன்று “மாலதி’ எனும் இதழில் வெளியாகி இருந்தது. 1942-ஆம் ஆண்டு நண்பர் நவீனன் அவர்களின் ஆதரவால் “நண்பா மறந்துவிட்டாயா?’ என்ற சிறுகதையை “மாலதி’ இதழ் வெளியிட்டது. அதைத் தொடர்ந்து “வள்ளிக் கணவன்’, “விளையாட்டுக் கல்யாணம்’ என்ற சிறுகதைகளும் அதில் வெளிவந்தன. அப்போது எனது இயற்பெயரான வேம்பு என்ற பெயரிலேயே அவை வெளியாகின.”
“அமுதசுரபி’ தோன்றிய விதம் குறித்து….?
“”1948-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் சூட்டிய பெயரில் வெளிவந்த இதழ்தான் “அமுதசுரபி’.
முதன்முதலில் வித்வான் வே. லட்சுமணன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு “அமுதசுரபி’ தொடங்கப் பட்டது. பிரபல ஓவியர் ஆர்யா “அமுத சுரபி’க்கு முதல் அட்டைக்கு படம் போட்டு பெருமை சேர்த்தார். இரண்டு இதழ்கள் வெளிவருவதற்குள்ளேயே ஏகப்பட்ட பிரச்சினைகளைச் சந்தித்தது. “அமுதசுரபி’யிலிருந்து வித்வான் லட்சுமணன் விலகி விட்டார்.
பத்திரிகை நடத்துவது என்றால் பொருளாதார பலமும், திறமையான நிர்வாகமும் இருக்க வேண்டும். ஒரு ஆசிரியருக்கு எவ்வளவு பொறுப்போ அவ்வளவு பொறுப்பு நிர்வாகிக்கும் உண்டு என்ற கருத்துடைய நான் ஆசிரியர்- நிர்வாகி என்ற இரண்டு பொறுப்புகளையும் ஒருசேர ஏற்றுக் கொண்டேன்.”
ஒரு பத்திரிகையாளர் பொறுப்பு என்ன? சமூகத்தின் மீது அவனது பார்வை எப்படி இருக்க வேண்டும்?
“”ஒரு பத்திரிகையாளனுக்கு அழுத்தமான சமூக உணர்வு இருத்தல் வேண்டும். தான் சந்திக்கும் சமூக நிலைமைகளை நடுநிலையில் நின்று சீர்தூக்கிப் பார்க்கவும், நல்லனவற்றைப் பாராட்டவும், தீயவற்றைக் கண்டிக்கவும் அவனுக்குத் துணிச்சல் வேண்டும். உண்மையை நேரடியாகக் கண்டறியவும்- அதை அவ்வாறே உலகோர்க்கு உணர்த்தவும் அவன் அயராது உழைக்க வேண்டும்.
நம்மிடம் எந்த சக்தியும் இல்லை. நாம் நல்லது செய்தால் எப்போதும் நன்மை விளையும். வேள்வி போன்று ஒரு செயலைச் செய்தால் அதற்கு என்றும் பலன் கிடைக்கும் என்றுதான் தோன்றுகிறது.”
நம்மிடம் எந்த சக்தியும் இல்லை. நாம் நல்லது செய்தால் எப்போதும் நன்மை விளையும். வேள்வி போன்று ஒரு செயலைச் செய்தால் அதற்கு என்றும் பலன் கிடைக்கும் என்றுதான் தோன்றுகிறது.”
“அமுதசுரபி’ அடையாளம் காட்டிய படைப்பாளர் எவர்?
“”திரைப்பட நடிகர்- நடிகைகள், அரசியல் தலைவர் கள் மற்றும் கவர்ச்சிக் கன்னியர் ஆகியோரின் படங்களை அட்டைப் படமாகப் பிரசுரித்து தங்கள் விளம்பரத்தைப் பெருக்கிக் கொள்ளும் எண்ணற்ற இதழ்களுக்கு நடுவே, சங்க இலக்கியப் பாடல்களில் வரும் காட்சிகளை, நாடு போற்றும் தியாகிகளின் உருவங் களை, கவிஞர்களின்- எழுத்தாளர்களின் இதயங்களைப் படம் பிடித்து, அவற்றை ஒவ்வோர் இதழுக்கும் அட்டைப் படமாக வெளியிடுவதன் மூலம் தன்னைத் தனித்துவத்தோடு காட்டி வெளிவந்தது “அமுதசுரபி’ “அமுதசுரபி’ தொடக்கக் காலம் முதல் நான் ஆசிரியராகப் பணியாற்றிய காலகட்டத்தில்- அந்தக் காலத்தில் எழுதிய படைப்பாளர்களின் படைப்புகளை வெளியிட்டு சிறப்பு செய்தது.
அவர்களுள் பாரதிதாசன், பெ.நா. அப்புசாமி, சுந்தானந்த பாரதி, நாடோடி, கி.ஆ.பெ. விசுவநாதம், மா. இராஜமாணிக்கனார், பி.ஸ்ரீ, ஆச்சார்யா, ம.பொ.சி., வையாபுரிப் பிள்ளை, லா.ச. ராமாமிர்தம், தி. ஜானகி ராமன், தமிழ்வாணன், பூவை. எஸ். ஆறுமுகம், வல்லிக் கண்ணன், துமிலன், த.நா. குமாரசுவாமி, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, விந்தன், ஜெயகாந்தன், தேவபாரதி, ராஸ்ரீ தேசிகன், சுகி. சுப்ரமணியன், மீ.ப. சோமு, சாண்டில்யன், மாயாவி, அகிலன், ரா.பி. சேதுப் பிள்ளை, மு.வ., க.நா. சுப்ரமணியம், அ.மு. பரம சிவானந்தம், கம்பதாசன், சுரதா, எல்லார்வி, நாரண துரைக்கண்ணன், கோவி. மணிசேகரன், லட்சுமி, வசுமதி ராமசாமி என பட்டியல் நீளும்.”
முதன்முதலின் படைப்புலகில் சோமலெக்குப் பிறகு பயணக் கட்டுரைகள் மூலம் தனிப் பெருமை பெற்றவர் நீங்கள். அந்த அனுபவம் குறித்து…
“”1944-ஆம் ஆண்டில் எனது ஊர் சுற்றும் பயணம் தொடங்கியது. நானும் நண்பர் ஸுபாவும் முதலில் மாமல்லபுரம் சென்றோம். சிற்பங்களை ரசிக்க உதவக் கூடியதாகவும், ஓரளவுக்கு வழிகாட்டியாகவும்- அதே சமயம் சிற்பம் அமைக்கப்பட்ட காலம், விவரம் பற்றிய ஆராய்ச்சிக் குறிப்பு விளங்கக் கூடிய நூல் ஒன்றைத் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை உதயமாயிற்று.
பட்டம் பெற்ற சரித்திர ஆசிரியர்களோ அல்லது ஓவிய- சிற்பக் கலைத் துறையில் பெரும் அறிவாளி களோ நாங்கள் அல்லர். ஆசையால் “மாமல்ல புரம், ஒரு வழிக் குறிப் புப் புத்தகம் காண் போம்’ எனும் கட்டுரை வடித்தேன்.
1943-ல் காஞ்சி கோவில்களைப் பற்றி “கலைக்காஞ்சி’ என்ற தொடர் “ஜ்வாலா’ என்ற வார இதழில் வெளிவந்தது. தொடர்ந்து “அமுதசுரபி’யில் திருப்பரங்குன்றம், “சோழர்களின் பெருமை கூறு’, “கங்காபுரி காவலன்’, திருக்குற்றாலத்தைப் பிரதிபலிக்கும் “சித்திர சபை’ என தமிழகத்தின், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று இந்தியாவின் கலை, இலக்கியம், பண்பாட்டை வெளிச்சமிட்டுக் காட்டும் பல பயணக் கட்டுரைகளைப் படைத்தேன்.
இதனைத் தொடர்ந்து மூன்று முறை மலேசியாவிற்கும், சிங்கப்பூருக்கும், பாரீஸ், ரோம், துபாய், இலங்கை என இலக்கிய நட்பு பயணத்தை உருவாக்கினேன். என் பயணம் வெறும் உல்லாசப் பயணம் அல்ல; இலக்கிய நட்பு பரிவர்த்தனைப் பயணங்கள் என்றே சொல்வேன்.”
தமிழகத்து எழுத்தாளர்களையும் சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளீர்கள். அதன் அனுபவம்?
“”எழுத்தாளன் என்பவன் ஓரிடத்தில் முடங்கிவிட விரும்பாதவன். எழுத்தாளர்களுக்குப் புதுவித அனுபவமும், சிந்தனையும், கலந்துரையாடல் மூலம் கருத்துப் பரிமாற்றமும், பழகும் வாய்ப்பும் ஏற்படுத்த விரும்பினேன்.
கல்கத்தா தமிழ் மன்ற விழாவிற்கு இங்கிருந்து எழுத்தாளர்களை அழைத்துச் சென்று, அங்குள்ள தமிழர்களுடன் கலந்துறவாடி, கருத்தரங்கம், கவியரங்கம் போன்றவற்றில் பங்கேற்கச் செய்து தமிழ்ப் படைப்பாளர்களைக் கௌரவிக்க முயன்றேன்.
1984-85-ல் மகாகவி பாரதியாரின் நூற்றாண்டையொட்டி எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் திரட்டி டெல்லியில் மாநாடு நடத்தி எழுத்தாளர்களை எழுத்தாளர் சங்கம் மூலம் சிறப்பித்தோம்.
1986-ல் கன்னியாகுமரிக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர் களை அழைத்துச் சென்று, இரண்டு நாள் மாநாடு நடத்தி எழுத்தாளர் சங்கக் கிளையை நிறுவினோம்.
1987-ல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு எழுத்தாளர்களை- நண்பர்களை அழைத்துச் சென்று கருத்தரங்கு களில் பங்கேற்க வைத்தேன்.
தொடர்ந்து பாரதி பிறந்த நாளில் பாரதி பிறந்த எட்டயபுரத்திற்கு அழைத்துச் சென்று விழாக்கள் எடுத்தோம்.
இதுதவிர தனிப்பட்ட முறையில் நண்பர்களுடன் அஜந்தா, எலிபெண்டா, வாதாபி என வரலாற்றுச் சிறப்பு மிக்கப் பயணங்களை மேற்கொண்டு, வரலாறுகளைக் கண்டறிந்து வந்தது என எழுத்துப் பயணமும் எழுத்தாளர் பயணமும் மேற்கொண்டேன்.”
தங்களது கவியுலகப் பயணம் குறித்து?
“”நான் கவிதை எழுத வேண்டுமென்று ஆரம்பித்து எழுதவில்லை. நான் ஒரு கதைப்பித்தன், கட்டுரை மோகன். பொருளகப்பட்டால் பிடித்து உலுக்கும் எண்ணங்கொண்ட என் கருத்திலே உருவான எண்ணங்கள் கவிதையாகத் திரிந்தது என்னால் அல்ல. என்னுள்ளே இயங்கும் பராசக்தியால்தான்.
திமிங்கலங்கள் போன்ற “பெரிய’ கவிஞர்கள் வாழும் இந்த இலக்கியக் கடலில் நான் ஒரு சாதாரண மீனுக்குச் சமானம். எளியேனுடைய இதயத்தினின்றும் எழுந்த ஒரு கவியே நான்.
கவிதை என்பது இலக்கண வரம்புடன் கூடியதாயிருக்க வேண்டும் என்பது ஒரு கட்சியின் பதில்.
இலக்கண வரம்பற்றதாய் இருக்க வேண்டும் என்பது மற்றொன்றின் பதில்.
இரண்டுமின்றி தக்க ஓசையுடையதாய்- எளிமை யாய்- இனிமையாய் இருப்பதோடன்றி சுலபமாகப் புரிந்து, இதயத்தைத் தொடுவதுதான் கவிதை. என் கட்சி மூன்றாவதுதான்.”
எழுத்தாளர்களுக்கென்று சங்கத்தை நிறுவிய பெருமை தங்களுக்கே உண்டு. அதன் வெற்றி, எதிர்பார்ப்புகள் எப்படி?
“”இது குறித்துச் சொன்னால் பெரிய தனி நூலே எழுத வேண்டிவரும்.
“தனிமரம் தோப்பாகாது’, “ஒரு கை தட்டினால் ஓசையிராது’, “கூடிவாழ்ந்தால் கோடி நன்மை’ என தமிழ் மொழிகள் உண்டு. நாம் இன்றும் சங்க காலத்தில் வாழ்கின்றோம். ஆம்; சங்கங்கள் நிறைந்த காலத்தில் வாழ்கின்றோம்.
நான் எழுத்தாளர் சங்கத்திற்கு முன்பே 1946-48-ல் சைதாப்பேட்டையில் நண்பர்களுடன் இணைந்து “பாரதி ராட்டைக் கழகம்’ என்று தோற்றுவித்தோம். 1951-ல் தொடங்கி இன்றைய நாள் வரை “பாரதி கலைக் கழகம்’ மூலம் கவிஅரங்கங்கள், இலக்கிய விழாக்கள் நடத்தி வருகிறோம். பாரதி ராட்டைக் கழகத்தைத் தொடங்குவதற்கு முன்பே “தமிழ்நாடு கையெழுத்துப் பத்திரிகை எழுத்தாளர் சங்கம்’ தொடங்கி, 1945-ல் எழுத்தாளர் நாடோடி தலைமையில் ஒரு மாநாடு நடத்தினோம்.
1945-ல் சைதாப்பேட்டையில் இருந்த சேரிப் பகுதிகளுக்குச் சென்று துப்புரவுப் பணி செய்ததோடு தெரு பெருக்கும் தொழிலாளர்களுக்காக “தோட்டிகள் சங்கம்’ ஒன்றை அமைத்தேன்.
1956-ல் சிறுவர்களின் எதிர்காலத்தைத் திட்டமிடு வதற்கும், அவர்களை நெறிப்படுத்தி பண்புள்ளவர்களாக வளர்ப்பதற்கும் “பூச்செண்டு சங்கம்’ என்று உருவாக்கி னேன்.
இந்தியாவில் பல்வேறு மொழி எழுத்தாளர்களிடம் உள்ள வலிமையான அமைப்புகள் நம் தமிழ் எழுத்தாளர்களிடம் இல்லையே என்ற ஆதங்கமும், எழுத்தாளர்களுக்கென்று பல வசதிகளைச் செய்து தரவும், இலக்கிய விழாக்கள், போட்டிப் பரிசுகள், புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்தல் போன்ற பல திட்டங்களை உருவாக்கவும், எழுத்தாளர்களை எல்லாம் ஒன்று கூட்டி சங்கம் அமைக்க வேண்டும் என்ற ஆசையும் என்னுள் எழுந்தது. என்னைப் போலவே கல்கி, அகிலன், சாண்டில்யன், ம.பொ.சி. போன்றவர்கட்கும் இருந்தது. அதன் பயனாக கல்கி தலைமையில் எழுத் தாளர் சங்கம் முதன் முதலில் அமைந்தது. அதில் நான், நா. இராமச்சந்திரன் போன்றவர்கள் செயற்குழுவிலும்; ப. கோதண்டராமன், க.நா.சு., ஆர். ரகுநாதன், ஆர்.வி. போன்றவர்கள் நிர்வாகப் பொறுப்பிலும் இருந்தார்கள். ஏறக்குறைய நான்காண்டுகள் மிகச் சிறப்பாக அச்சங்கம் செயல்பட்டது.
கல்கிக்குப் பிறகு தலைமைப் பதவிக்குப் போட்டி ஏற்பட்டது. சாண்டில்யன்- தேவன் தலைவர் பதவிக்குப் போட்டியிட, தேவன் வெற்றி பெற்றார். தொடர்ந்து செயற்குழுவில் பணி எனக்கு. 1968-களில் முதலில் சங்கத்தின் தலைவரானேன்.
1962-ல் எழுத்தாளர்களின் படைப்புகளை நூல் வடிவில் கொண்டு வரவும், எழுத்தாளர்களுக்குக் கடனுதவி போன்ற பொருளாதார உதவிகள் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் த.நா. குமாரசாமி, சாண்டில்யன் ஆகியோருடன் இணைந்து எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம் உருவானது. நூல்களும் வெளியிடப் பட்டன. பிற்காலத்தில் ஏற்பட்ட கருத்து மோதல்கள், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளின் காரணமாக இச்சங்கம் செயலிழந்து விட்டது.
1968-க்குப்பின் எனது தலைமையில் இயங்கிய எழுத்தாளர் சங்கம் ஒவ்வோர் ஆண்டும் எழுத்தாளர் மாநாடு நடத்தியது.
அம்மாநாட்டில் வி.வி.கிரியும் எம்.ஜி.ஆரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து பலர் தலைமை ஏற்றாலும் எழுத்தாளர் சங்கம் சரிவர இயங்கவில்லை. நானும் “அமுதசுரபி’ பத்திரிகையில் உழன்று தொடர்ந்து செயல்பட முடியவில்லை.
1977-ஆம் ஆண்டு மீண்டும் சங்கப் பணிகளைத் தொடர முயற்சித்தேன். ம.பொ.சி. இல்லத்தில் பெ.சு.மணி, சுப்ரபாலன், கல்யாணசுந்தரம், குமாரவாடி இராமானுஜம் (சேரா) அன்பு வேதாச்சலம் ஆகியோர் கூடி தமிழ் எழுத்தாளர் சங்கம் மீண்டும் உருப்பெற திட்டம் தீட்டினோம். அதுவே “அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்க’மாக உருப்பெற்றது.
நாரண துரைக்கண்ணன், முகவை இராசமாணிக்கம், அகிலன், வாசவன், கு. குமாரவேலு, பெ.சு. மணி, தீபம் நா. பார்த்தசாரதி, ரசம், டாக்டர். முத்துக்கண்ணப்பர், டாக்டர். உமாபதி, கோவி. மணிசேகரன், வா.மு. சேதுராமன், லட்சுமி, வசுமதி ராமசாமி, சா. கணேசன் போன்ற மாபெரும் எழுத்தாளர்கள், கவிஞர்கள் இடம் பெற்றனர்.
1977 முதல் 80 வரையில் சங்கத் தலைவராகவும்; 81 முதல் 83 வரை பொதுச் செயலாளராகவும்; 84 மற்றும் 89 ல் மீண்டும் தலைவராகவும் பணியாற்றினேன்.
1984 முதல் 1988 வரை ஏறக்குறைய நான்கு ஆண்டு காலம் எழுத்தாளர் சங்கம் தனித்தன்மையுடன் வீறு நடைபோட்டது.
கல்கத்தாவில் நடைபெற்ற எழுத்தாளர் மாநாட்டில் கு. ராஜவேலு, நாரண துரைக்கண்ணன், ராஜம்கிருஷ்ணன் ஆகியோருக்கு என் முன் முயற்சியில் சிறப்பு பாராட்டு, பட்டம் வழங்கப் பெற்றது. அதில் தமிழகத்திலிருந்து 110 பேர் கல்கத்தாவுக்கு கே. ராமமூர்த்தி துணையுடன் அழைத்துச் செல்லப்பட்டு, எழுத்தாளர்களின் வாழ்த்தையும் பாராட்டையும் பெற்றனர்.
எனது தலைமையில் எழுத்தாளர்களுக்கு பெருமை பல தேடித் தந்தேன். தமிழகத்தில் பிற மாவட்டங்களில் அனைத்திந்திய எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் இணைச் சங்கங்கள் ஆரம்பிக்கப் பட்டன.
1988-ல் மூன்று நாட்கள் சென்னை கலைவாணர் அரங்கில் பிரம்மாண்டமான எழுத்தாளர் சங்க மாநாடு நடத்தினோம். அதில் கலைஞர், குமரி அனந்தன், இராம வீரப்பன், தா. பாண்டியன், நா. காமராசன், குன்றக்குடி அடிகளார் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்புடன், அன்றைய ஆளுநரின் ஆலோசகராக இருந்த அ. பத்பநாபன் அவர்கள் மாநாட்டினைத் தொடங்கி வைத்தார்.
அம்மாநாட்டு மேடையில் பிரபல எழுத்தாளர்கள் கல்கி, அகிலன், நா. பார்த்தசாரதி, சுகி. சுப்ரமணியம், லட்சுமி போன்றவர்களின் உருவப்படங்கள் திறக்கப்பட்டும், எழுத்தாளர்கள் கு.சா.கிருஷ்ணமூர்த்தி, கி.வாஜ., அப்துல்ரஹீம், ராஜம்கிருஷ்ணன், இராஜாமணி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் இம்மாநாட்டின் மூலம் எழுத்தாளர் சங்கத்திற்கு என்று தனி அலுவலகம் ஒன்றை அரசிடமிருந்து பெற்றோம்.
இன்றும் நுங்கம்பாக்கம், கல்லூரி சாலை, ஈ.வி.கே. சம்பத் மாளிகை என்ற தமிழக அரசின் கட்டடத்தின் தரைத்தளத்தில் இயங்கி வருகிறது.”
எழுத்தாளர் கூட்டுறவு சங்கத்தின் செயல், இன்றைய நிலையில் அதன் பங்களிப்பு குறித்து…
“”அ.இ.த. எழுத்தாளர் சங்கம் செயல்பட முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த காலத்தில், எழுத்தாள அன்பர்களின் வேண்டுகோளின் பேரில் “அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், சென்னை’ எனும் அமைப்பை 92-ல் முறைப்படி பதிவு செய்து, அச்சங்கத்தை பத்தாண்டுகளாக நடத்தி வந்தோம். இதில் எழுத்தாளர் நலம் மட்டுமல்லாமல், காவிரி நதிநீர் பங்கீடு குறித்து 2002-ல் தமிழகம் முழுவதும் அ.இ.த. எழுத்தாளர்கள் அடையாள உண்ணாவிரதம் இருந்து தமிழர் நலனுக்குக் குரல் கொடுத்தோம்.
கடந்த பத்தாண்டுகளில் படிப்படியாக வளர்ச்சி பெற்று சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெய்வேலி, மன்னார்குடி, வேலூர், காரைக்குடி, அருப்புக்கோட்டை, சேலம், கோவை, காஞ்சிபுரம் என கிளைச் சங்கங்களாக விரிவடைந்துள்ளன.
இன்று தமிழகத்தில் எத்தனையோ இலக்கிய அமைப்புகள், எழுத்தாளர் சங்கங்கள் இருந்தபோதி லும், எனது தலைமையில் இயங்குகின்ற அ.இ. தமிழ் எழுத்தாளர் சங்கம் மட்டும்தான் பதிவு செய்யப்பட்ட, கணக்குகளைச் சரியாக அரசுக்குச் சமர்ப்பிக்கின்ற சங்கமாக முறையாகச் செயல்பட்டு வருகிறது.
“இலக்கிய நந்தவனம்’ எனும் இதழினை சங்கத்தின் சார்பில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம்.
“தமிழ் எழுத்தாளர் நலநிதி அறக்கட்டளை’ மூலம் கடந்த 20 ஆண்டுகளில் 50-க்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்துள்ளனர். தற்போது ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து- கடந்த ஐந்து ஆண்டுகளாக கல்விப் புரவலர் ஜேப்பியார் ரூ.500/- என வழங்கி வருகிறார்.”
“தமிழ் எழுத்தாளர் நலநிதி அறக்கட்டளை’ மூலம் கடந்த 20 ஆண்டுகளில் 50-க்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்துள்ளனர். தற்போது ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து- கடந்த ஐந்து ஆண்டுகளாக கல்விப் புரவலர் ஜேப்பியார் ரூ.500/- என வழங்கி வருகிறார்.”
எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம் மூலம் நூல்களை வெளியிடுவதை ஏன் தொடர்ந்து செயல்படுத்த முடியவில்லை?
“”இதற்கு அரசுதான் காரணம் என்பேன். கூட்டுறவு மூலம் வீட்டு லோன், கடை லோன், கார் லோன், ஸ்கூட்டர் லோன் என வங்கிகள் பல லோன்கள் வழங்கு கின்றன. ஆனால் எழுத்தாளர்களுக்கு தங்கள் படைப்பு களுக்கு வங்கிகள் பணம் வழங்கத் தயங்குகிறது. எழுத் தாளர்களின் படைப்புக்கு நூலக ஆணைக்குழு நூல் பெற ஆணை பிறப்பித்தாலும் அதற்கு வங்கிகள் கடன் தர அஞ்சுகின்றன. இத்தனைக்கும் ஆசிரியரின், பதிப் பகத்தின் பேரில் காசோலை வழங்கினாலும், நேரடியாக வங்கி மூலம் தரப்பட்டாலும் வங்கிகள் கடன் தர ஏன் அஞ்சுகின்றன என்று புரியவில்லை. எழுத்தாளர் கூட்டுறவு சங்கத் தோல்விக்குப் பிரதான காரணம் இதுதான் எனலாம்.”
உலகில் தமிழ் தனக்கென தனிச்சிறப்பைப் பெற்று செந்தமிழ் சிறப்பைப் பெற்றுள்ளது. தமிழுக்கு தமிழ் எழுத்தாளர்கள் செய்ய வேண்டிய பொறுப்பாக எதைக் கருதுகிறீர்கள்?
“”என்னைக் கேட்டால் செந்தமிழ் என்று ஒன்று இருக்க செம்மொழி எதற்கு என்றே கேட்கத் தோன்று கிறது. செம்மொழிக்கான சிறப்பை பலதுறை அறிஞர்கள் ஏற்கெனவே அதற்கான பணிகளைச் செய்துள்ளனர்.
தமிழை வளர்க்கவும், தமிழை வென்றெடுக்கவும் பல படைப்புகள் தமிழில் தோன்றி, பல சிறப்புகளைப் பெற்றுள்ளது. உண்மையாகவே தமிழுக்குச் சிறப்பு செய்ய வேண்டுமானால் தமிழில் படித்தவர்களுக்கு மட்டுமே தமிழக அரசில் வேலை வாய்ப்பு என்ற சட்டத்தைப் பிறப்பிக்க வேண்டும். அறவே மெட்ரி குலேஷன் பள்ளிகள் ஒழிக்கப்பட வேண்டும்.
காங்கிரஸ் அரசு ஆளுகிறபோது ஐந்தாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தமிழிலேயே பாடத் திட்டங்கள் வழங்கப்பட்டன. பின்னர் வந்த திராவிட அரசுகள் எல்லாம் தமிழைப் பின்னுக் குத் தள்ளி ஆங்கி லத்தை முன்னிலைப் படுத்தின. அதன் விளைவு இன்று தமிழ்வழிக் கல்வி பின்னுக்குத் தள்ளப் பட்டு விட்டது.
சமீபத்தில் ஒரு செய்தி. “கார்ப்ப ரேஷன் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி அறிமுகம் ஆகும்’ என்று அமைச்சர் உறுதியளிக்கிறார். எப்படி தமிழ் வளரும்?
ஒருபுறம் தமிழுக்காக பல திட்டங்கள் தீட்டினாலும் மற்றொரு புறம் அதனை ஆழ குழி தோண்டிப் புதைக்கும் காரியங்களும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் அல்ல. தமிழ்தான் என் கட்சி. கையெழுத்துகூட தமிழில் போட உத்தரவு போட வேண்டிய நிலை, கடைகளுக்கு பெயர்ப் பலகை வைக்க சட்டம் இயற்றும் நிலை. எப்படி தமிழ் வளரும்? ஒரு தலைமுறையே தமிழை மறந்த நிலைதான் இன்று என்பது வருத்தத்துக்குரியது. வேறு என்ன சொல்ல?”
இன்றைய இளைய தலைமுறையிடத்து நற்பண்பு, நாட்டுப்பற்று, தமிழ்ப்பற்று, படைப்பாற்றல் எத்தன்மையதாய் இருக்கிறது?
“”படைப்பாற்றல் என்பது இளமையிலேயே துளிர்க்க வேண்டும். இன்றைய இளைய தலைமுறையிடத்தில் நாட்டுப்பற்றுக்குக் குறைவில்லை எனலாம். வழிகாட்டுதல் சரியாய் இருந்தால் தமிழ்ப்பற்றும் நாட்டுப்பற்றும் படைப்பாற்றலும் வளரும். அக்காலத்தில் பெரியோர்களின் வழிகாட்டுதல் நேர்மையுடையதாய், அர்த்தம் பொதிந்ததாய் அமைந்தன. நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி படைப்பாற்றலை பின்னுக்குத் தள்ளி விட்டது. எதை விதைக்கிறோமோ அதுதானே விளையும்?”
தமிழகத்தின் பிரபலமான எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி யவர் நீங்கள். இன்றைய சூழலில் தங்களை ஆகர்ஷித்த எழுத்தாளர் யார்?
“”நான் அக்காலத்திலேயே பிரபலமானவர் என்று எவரையும் கருதியதில்லை. எழுத வருபவர்கள் யாராய் இருந்தாலும் அவர் களுடைய படைப்புகள் நல்லதாய், சமூகத்தைப் பிரதிபலிப்பதாய் இருந்தால் எழுத வைப்பேன். இன்றும் அவ்வாறே நல்ல படைப் புக்கு தக்க பரிசு தருகிறேன். அது “அமுதசுரபி’யிலிருந்து “இலக்கிய பீடம்’ வரை தொடர்கிறது.”
பிற மொழிப் படைப்புகள் தமிழில் வெளிவருகின்றன. அதேபோல் தமிழ்ப் படைப்புகள் பிற இந்திய மொழிகளில் எந்த அளவு பங்களிப்பைத் தந்திருப்பதாகக் கருதுகிறீர்கள்?
“”பெரிய அளவில் இல்லை என்றே சொல்ல வேண்டும். இருமொழி கற்றவர்களே- புலமை வாய்ந்தவர்களே இத்தகைய பணியைச் செய்ய வேண்டும். சாகித்ய அகாடமி, நேஷனல் புக் டிரஸ்ட் போன்றவை பிரபலமானவர்களை மட்டுமே மொழி பெயர்ப்பினை மேற்கொள்கின்றன. ஏன்- இன்னும் சொல்லப் போனால் சாகித்ய அகாடமி என்னை இதுநாள் வரை கூட்டத்துக்கு அழைத்ததில்லை. என் படைப்புகளைப் பிரசுரித்ததும் இல்லை. அவரவர்களுக்கென்று ஒரு போக்கினை கையாள்கின்றனர். இதில் மூக்கை நுழைக்க நான் தயாராய் இல்லை. தனிப்பட்ட வர்களே- இருமொழி, மும்மொழி புலமை வாய்ந்தவர் களே இத்தகைய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.”
எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை இன்னும் தோளில் சுமந்தே விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். பெரிய பதிப்பாளர்களே விளம்பர ரீதியாய் வெற்றி பெற முடிகிறது. இதற்கு விடிவுதான் என்ன?
“”இதற்கு அரசு அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம். சிறு பிரசுரதாரர்கள், எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை அரசிடம் கொண்டு சேர்க்க முடிய வில்லை. சமீபகாலமாய் நூலகத் துறை மந்தமாகவே செயல்படுகிறது. 500 புத்தகங்கள் எடுத்ததை 600 புத்தகமாகப் பெற எழுத்தாளர் சங்கம்தான் முன்முயற்சி எடுத்தது. நூலகங்களுக்கு வாங்க வைத்தது. 1000 பிரதிகள் என்று கலைஞர் அறிவித்த பிறகு கடந்த 2008-ஆம் ஆண்டு பதிப்பித்த நூல்களுக்கு இப்பொழுதுதான் (2010) ஆர்டர் போட்டிருக்கிறார்கள். இதற்கும் பில் அனுப்பி, அதற்கான காசோலை 2011-ல் கிடைக்கும். ஒரு புத்தகம் போட்டு மூன்று ஆண்டுகள் கழித்து நூலகத்துறை யிடமிருந்து பணம் பெற்றால் படைப்பாளிக்கு என்ன பலன் கிடைக்கும்? பதிப்பாளர்களுக்கு என்ன லாபம் கிடைக்கும்? இந்தப் போக்கு மாற வேண்டும். இதற்கு அதிகாரிகள், அரசு ஊழியர்களின் வேலைப்பளு காரண மாக எழுத்தாளர்களை- பதிப்பாளர்களை பலிகடா ஆக்குகிறார்கள். இப்போக்கு மாற வேண்டும். நேரடியாய் தலைமை நூலகத்துறை நூலினை பெற்றும், நூல்களை விநியோகிக்கவும் வேண்டும். அந்தந்த ஆண்டுக்குரிய நூல்களைப் பெற்றும், மொத்தமாகப் பணப் பட்டுவாடா செய்ய முன்வர வேண்டும். இங்கு அரசு என்பது அதிகாரிகளின் கைப்பாவையாக அல்லவா இருக்கிறது. அதுவரை இப்படித்தான் இருக்கும்.
“பதிப்பாளர்- படைப்பாளர் சங்கம்’ இதற்கு முன் முயற்சி எடுத்தது. அது தோல்வியைத்தான் தழுவியது. பதிப்பாளர்கள் சங்கம்- அதாவது பெரிய பதிப்பாளர் கள், பதிப்பாளர்- விற்பனையாளர் சங்கம் போன்றவை முன்முயற்சி எடுக்க வேண்டும்.”
இன்றைய சூழலில் சிறு பத்திரிகைகள், பெரிய பத்திரிகைகள் எவ்விதம் இருக்கின்றன? எவ்விதம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
“”எனக்கு சிறு பத்திரிகைகள் என்று சொல்வதில் விருப்பமில்லை. லட்சியப் பத்திரிகை என்று வேண்டு மானால் சொல்லலாம். நம் எண்ணங்களை- சிந்தனை களை மக்களிடம் கொண்டு சேர்க்கவே பத்திரிகை நடத்துகிறோம். பத்திரிகை என்றால் பொருளாதாரத்தை சரியாகப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். பொருளா தார பலம் இல்லாவிடில் லட்சியம் கருகிப் போய் விடுகிறது. அதனால்தான் பத்திரிகை நடத்துவதில் வியாபார மனப்பான்மையும் இருக்க வேண்டும். அதில் நல்ல லட்சியங்களைச் சொன்னால் வெற்றி அடையலாம்.
பத்திரிகைத் தொழில் ஆரம்பத்தில் நஷ்டத்தில்தான் ஆரம்பிக்கிறது. புத்தகத் தொழில் லாபத்துடன் ஆரம்பிக்கிறது. காரணம் புத்தகத்தின் விலையை அடக்க விலையைவிட பல மடங்கு கூடுதலாக வைக்கிறார்கள். அதனால் புத்தக வெளியீட்டுத் தொழிலில் நஷ்டம் வர வாய்ப்பில்லை. ஆனால் அதிலும் கடந்த காலங்களில் நூலகத்துறையின் திட்டமிடாத போக்கால், அதிலும் பெரிதாக லாபம் கிடைப்பது அரிதாகவே இருக்கிறது.
பெரிய பத்திரிகைகள் இன்றைய நிலையில் வியாபாரமே நோக்கமாய்க் கொண்டு மலிவான கருத்துகளையும், பெண்களின் ஆடைகளைத் தோலுரித் துக் காட்டும் தன்மை கொண்டவைகளாய் வண்ண வண்ணமாய் காட்சியளிக்கின்றன. இவை படித்து எடைக்குப் போடத்தான் பயன்படுமே அல்லாமல் வேறு எதற்குப் பயன்படும்?”
இன்றும் “இலக்கிய பீடம்’ எனும் இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறீர்கள். அதன் பங்களிப்பு பற்றி?
“”இலக்கிய பீடம் 1997-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் முதல் இது நாள் வரை தொடர்ந்து வருகிறது. முதலில் காலாண்டு இதழாக வந்தது. அஞ்சல்துறை சலுகை கிடைக்காததால் மாத இதழாகப் பரிணமித்து வருகிறது. இலக்கிய பீடம் இலக்கியத்தைக் குறிக்கோளாகக் கொண்டு “ஓவியம் செய்வோம், காவியம் செய்வோம், கலைகள் வளர்ப்போம்’ என்ற முழக்கத்துடன் வெளிவருகிறது.
“இலக்கிய பீடம்’ ஒவ்வோர் ஆண்டும், ஏப்ரல் திங்களில் அதன் ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி, இலக்கியவாதிகளுக்கு இலக்கிய பீட விருதையும், ரூ.10,000 பரிசு வழங்கியும் சிறப்பித்து வருகிறது. இது தவிர, கடந்த ஆண்டிலிருந்து திருமதி ரங்கநாயகி அம்மாள் நாவல் போட்டி நடத்தி சிறந்த நாவலுக்கு ரூ.5,000 பரிசு வழங்கி வருகிறது. இந்நாவல்களை இலக்கிய பீடம் பதிப்பகம் வாயிலாக நூல்கள் வெளியிட்டு எழுத்தாளர்களுக்கு சரணாலயமாக விளங்கி வருகிறது.
“இலக்கிய பீடம்’ ஆறாம் ஆண்டு தொடக்க விழாவின்போது, “இந்த நிகழ்ச்சி என் இலட்சியப் பயணத்தில் ஒரு குளிர் சோலை. என் கடன் பணிசெய்து கிடப்பதே. நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்.’ இவையே நான் நாள்தோறும் முணுமுணுக்கும் மந்திரங்கள்.
“இலக்கிய பீடம்’ ஆறாம் ஆண்டு தொடக்க விழாவின்போது, “இந்த நிகழ்ச்சி என் இலட்சியப் பயணத்தில் ஒரு குளிர் சோலை. என் கடன் பணிசெய்து கிடப்பதே. நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்.’ இவையே நான் நாள்தோறும் முணுமுணுக்கும் மந்திரங்கள்.
இதழியலை அதன் பத்திரிகை கொள்கைகளுக்காக நான் தேர்ந்தெடுக்கவில்லை. என்னுடைய கடமை களையும் குறிக்கோள்களையும் வெளிப்படுத்தும் கருவியாகவே நான் அதைப் பயன்படுத்துகிறேன். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டுதல் என் லட்சியம். என் உயிர்க் கொள்கைகளை இதழ்கள் மூலமாகவே பரப்புவேன். பிறரைப் பற்றி சினந்தும் அவதூறாகவும் எழுதமாட்டேன். உணர்ச்சிகளைத் தூண்டுகிற மாதிரியும் என் எழுத்துகள் அமையா. இதழியல் எனக்கோர் அனுபவமாக அமைகிறது. “என்னை நானே அறிந்துகொள்வதற்கும் என் குறைகளைக் கண்டு திருத்துவதற்கும் இதழ்கள் எனக்கு உதவட்டும்’ என்ற காந்தி மகானின் வழியில் நின்று முத்தமிழ் அமுதத்தை உங்கள்முன் படைக்கிறேன்.”
இன்றைய வளரும் படைப்பாளர்களுக்குச் சொல்ல விரும்புவது?
“”ஓர் எழுத்தாளர் எழுதும் புத்தகத்தை மற்றொரு எழுத்தாளர் விமர்சிப்பதைவிட வாசகர்கள் விமர்சிப்பது தான் சாலச் சிறந்தது. ஓர் எழுத்தாளர் எழுதிய கதையையோ, நாவலையோ இன்னோர் எழுத்தாளன் படிப்பது குறைவு. அதை ஆற அமர சிந்தனையைத் தூண்டும் விதத்தில் படிப்பது வாசகர்கள் மட்டுமே என்பதை உணர வேண்டும்.
பிற எழுத்தாளர்களின் படைப்புகளையும் பழைய இலக்கியங்களையும் ஆழமாக இளம் எழுத்தாளர்கள் கவனம் செலுத்திப் படிப்பதில்லை. ஏதோ சில கதைகளைப் படித்துவிட்டு நானும் எழுதுகிறேன் என்று சொல்லி எழுதினால் அந்த எழுத்துக்கு ஆழம் போதாது. புதுமைப்பித்தனைத் தெரியாத- படிக்காத எழுத் தாளர்கள்கூட இருக்கிறார்கள். அவர்கள் கற்றுக் கொள்வதைவிட வளர்த்துக் கொள்ள வேண்டியவை அதிகம். அதனால் வளரும் எழுத்தாளர்கள் பிற இலக்கியங்களையும் பழமையானவற்றையும் அதிகமாக ஆழ்ந்து படிக்க வேண்டும்.
மேலும் தமிழ் எழுத்தாளர்கள் பிழையின்றி எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் சிறு பிழை இருந்தாலும் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால் தமிழில் ஏராளமான பிழை களுடன் எழுதுகின்றனர். அதைத் திருத்திக் கொள்ள அவர்கள் முயல வேண்டும். எழுத்தாளர்கள் அடிப்படையில் இலக்கணப் பிழையோடு எழுதினால், நல்ல அப்பளத்தில கல் இருந்து நம் பல்லைக் குத்துவதுபோல்தான் இருக்கும். எனவே சந்திப்பிழை, ஒருமை, பன்மை, உயர்திணை, அஃறிணை போன்றவற்றையாவது தெரிந்து கொண்டு தவறு இல்லாமல் எழுத வேண்டும்.”
சரஸ்வதி, எழுத்து, ஞானரதம் என பழமையான இதழ்கள் நூல்வடிவம் பெற்று காலத்தின் பெட்டகமாய்த் திகழ்கிறது. தங்கள் பொறுப்பில் வந்த “அமுதசுரபி’யை அவ்வண்ணம் கொண்டு வரலாமே?
“”அமுதசுரபி காலப்பெட்டகம்- பல எழுத்தாளர்களின் உறைவிடம் என்பது உண்மைதான். அதற்கு தக்க முறையுடன், சிறப்புடன், தரத்துடன் யாராவது முன்னின்று கொண்டுவரும் பட்சத்தில் வெளியிட உள்ளேன். யார் முன்வருவார்கள்?
நேர்காணல்: அண்ணல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக