ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர்
உ.வே.சாமிநாதய்யர்
8-12-35ல் சென்னை பச்சையப்பர்
கலாசாலை மண்டபத்தில் நடைபெற்ற ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதரவர்கள் நூற்றாண்டு விழா வின்போது உ.வே.சாமிநாதய்யர் செய்த முன்னுரைப் பிரசங்கம் இது.
வித்துவான்களின் உபகாரம்
நாம் ஜபம் செய்யும்
மந்திரங்களுக்கு உரிய ரிஷிகள் இருக்கிறார்கள். எந்த மந்திரத்தை ஜபம் செய்ய ஆரம்பித்தாலும்
அதை வெளிப்படுத்திய ரிஷியை முதலில் வணங்கிவிட்டு ஆரம்பிகிறோம். ஞானத்தையும் வித்தையையும்
உலகத்துக்கு அளித்த பெரியோர்களை வந்தனம் செய்யவேண்டிய அவசியத்தையும் அவர்களுக்கு நாம்
செலுத்த வேண்டிய நன்றியறிவையும் இது புலப்படுத்தும். இப்படியே பலவகையான கலைகளைப் பயில்பவர்கள்
அவற்றை உலகத்தில் வழங்கச் செய்த பெரியோர்களை வணங்குவது கடைமையாகும்.
வித்தைகள் அழிந்துபோகாமல்
வித்துவான்கள் காப்பாற்றி அவற்றை உலகத்தில் பிரகாசிக்கச் செய்கிறார்கள். பிரமதேவருடைய
சிருஷ்டி அழிந்தாலும், அவர்களுடைய சிருஷ்டி
அழியாமல் நிலைபெற்று விளங் குகின்றது. வித்தைகள் உலகத்திலே அழியாமல் இருக்க வேண்டுமென்று
மனம், வாக்கு, காயம் என்னும் திரிகரணங்களாலும்
அவர்கள் பலவகையாக உழைத்து ஒன்றையும் எதிர்பாராமல் பேருதவி புரிகின்றார்கள். அவர்கள்
செய்த நன்றியை நாம் எந்தக் காலத்திலும் மறவாமல் இருக்கவேண்டும்.
சங்கீதமும் தெய்வங்களும்
பழையகாலம் முதல் சங்கீத
வித்தையை உலகத்தில் பரவச் செய்தவர் பலர். நமது நாட்டில் சங்கீதம் உயர்ந்த ஸ்தானத்தை
அடைந்திருக்கிறது. தேவர்களே சங்கீதத்துக்கு முதற்குருவாக விளங்குகிறார்கள். அதற்கு
உரிய ஆசாரியர்கள் சிவபெருமான், நந்திதேவர்,
முருகக்கடவுள், மாதங்கி, பதஞ்சலி, நாரதர் முதலியோர். இசையைப்பற்றி
மகா வைத்தியநாதையரவர்கள் செய்த ஓர் உபந்நியாசத்தில், "பசுர் வேத்தி, சிசுர்வேத்தி வேத்தி கான ரஸம்பணி:" என்பதை எடுத்துக்காட்டி
'இதில் பசு வென்றது
நந்தி தேவரையும், சிசு வென்றது முருகக்
கடவுளையும், பணியென்றது பதஞ்சலியையும்
குறிக்கும்' என்றார்கள். இதற்கு
வேறு வகையாகப் பொருள் சொல்வதும் உண்டு.
பரமசிவன் இரண்டு வித்தியாதரர்களைத்
தம் காதிலே இரண்டு குழைகளாக அணிந்துகொண்டிருக்கிறார். தாமே வீணையை வாசித்து மகிழ்ந்து
வருகிறார். "எம் இறை நல் வீணை வாசிக்குமே" என்றார் ஒரு பெரியார். திருமாலோ
எப்பொழுதும் தும்புரு நாரதர் களுடைய கானலஹரியில் ஈடுபட்டு இன்புறுவதோடு தாமும் புல்லாங்குழலை
வாசித்து உயிர்களை இன்புறுத்து கிறார். பிரமதேவரோ கலைமகளின் யாழிசை யமுதத்தைப் பருகிக்கொண்டிருக்கிறார்.
இந்திராதி தேவர்கள் ரம்பை முதலிய மங்கையரின் சங்கீதத்தில் உருகி மகிழ்கிறார்கள். கந்தர்வர்,
வித்தியாதரர், கின்னரர் என்னும் தேவகணங்களுக்குச்
சங்கீதமே காலப்போக்கு.
சங்கீதமும் ஆலயங்களும்
இவ்வாறு தெய்வங்களையும்
தேவகணங்களையும் கவர்ந்துகொண்ட சங்கீதத்திற்குத் தெய்வஸ்தானங்களாகிய கோயில்களின் தனிச்சிறப்பு
ஏற்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானது. இசையை ஈசுவரார்ப்பணம் செய்வதுதான் தக்கது. இதனையறிந்தே
பழைய காலத் தில் சங்கீத நிகழ்ச்சிகள் ஆலயங்களிலே நிகழ்ந்து வந்தன. கோயில்தோறும் சங்கீத
வித்துவான் ஒருவர் நியமிக்கப்பெற்று ஒவ்வொரு காலத்துக்கும் உரிய கானங் களைச் செய்து
வந்தனர்; ஒவ்வொரு ஸந்நிதிக்கும்
தனித் தனியே அமைக்கப்பட்டவர்களும் உண்டு.
சிவாலயங்களிலும் விஷ்ணு
வாலயங்களிலும் முறையே தேவாரத்தையும் திவ்யப்பிரபந்தத்தையும் பண்ணோடு ஓதிவரும்படி முற்காலத்தில்
அரசர்கள் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
திருஆமாத்தூர் என்னும்
ஸ்தலத்தில்தேவாரங்களைப் பண்ணோடு கற்றுச் சந்நிதியில் பாடும் பொருட்டுப் பல குருடர்களுக்கு
ஆகாரம் முதலியன அளித்து வரும்படி ஒரு சோழன் ஏற்பாடு செய்திருந்தானென்று சிலாசாஸ னங்களால்
அறிகிறோம். தஞ்சை முதலிய இடங்களி லுள்ள சிவாலயங்களில் தேவாரம் ஓதுவதற்கு உரிய வர்கள்
பழைய அரசர்களால் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
அவர்கள் *'பிடாரர்கள்' என்று சாஸனங்களில் வழங்கப்படுகிறார்கள்.
கோயில்கள் நிறைந்து விளங்கும் தமிழ் நாட்டில் கோயிலில்லாத ஊர் எப்படி அருமையோ அப் படியே
சங்கீதமில்லாத கோயிலும் அருமையாகும்.
--------
* இது 'பட்டாரகர்கள்' என்பதன் மருஉ.
இசைத்தமிழ்
பழைய காலத்தில் சங்கீதத்திற்கு
ஒரு தனிச் சிறப்பு இருந்ததென்று தமிழ் நாட்டின் பழைய சரித்திரம் தெரிவிக்கின்றது.
தமிழின் பெரும் பிரிவுகள் மூன்று. அவற் றுள் ஒன்று சங்கீதமாகிய இசைத்தமிழ். இசைத்தமிழ்
தான் தனியே ஒன்றாக நிற்பதோடு மற்ற இரண்டு பிரிவுகளாகிய இயலிலும் நாடகத்திலும் கலந்திருக்கிறது.
இயற்றமிழ்ச் செய்யுட்களை இசையோடு சொல்லாவிட் டால் அவற்றிற்குரிய நயம் புலப்படாது. தமிழில்
வழங்கும் செய்யுட்களுள்ளே இன்ன இன்ன செய்யுளை, இன்ன இன்ன ராகத்திலேதான் படிக்கவேண்டுமென்ற வரையறை யுண்டு.
நாடகத் தமிழுக்கோ இசையானது இன்றியமையாததென்பது வெளிப்படை. அதனாலேதான் இசையை நடுநாயகமாக
வைத்து இயலிசை நாடக மென்று வழங்கினார்கள் போலும்.
சங்கீத வித்துவான்களுக்கு
இருந்த மதிப்பு
சங்கீத வித்துவான்களுக்கு
முற்காலத்தில் இருந்த கௌரவத்திற்கு எல்லையில்லை. எந்தக்குலத்திற் பிறந்தவர்களாயிருப்பினும்
அவர்களுக்கு முடியுடைவேந்தர்களும் பிறரும் மிக்க மதிப்பையளித்து மற்ற வித்துவான் களைக்
காட்டிலும் அதிகமான சம்மானம் செய்துவந்தார்கள். அரசர்கள் காலையில் விழித்து எழும்பொழுதே
சங்கீதத்தைக் கேட்டு எழுவார்கள். அவர்களுடைய முன்னோர்களின் குண விசேடங்களைத் தெரிவிக்கும்
பாட்டுக்களைப் பாடி அம்மன்னர்களை எழுப்புவதற்கென்று தனியே நியமிக்கப்பட்ட சில சங்கீத
வித்துவான்கள் இருந்தார்கள்; இவர்களைச் சூதரென்றும்
இங்ஙனம் பாடுதலைத் துயிலெடை நிலையென்றும் சொல்லுவார்கள். அரசன் போர்க்களத்தில் புண்பட்டு
விழுந்துகிடந்தால் அந்தப் புண்ணாலுண்டான துன்பத்தை இசையால் போக்குவது அக்கால வழக்கம்.
ஒரு சங்கீத வித்துவானுடைய
கவலையைப் போக்குவதற்கு விறகு சுமந்து சென்று பாடி அவருடைய பகைவனை மதுரை ஸ்ரீ சோமசுந்தரக்
கடவுள் ஓடச் செய்ததோடு சேற்றில் நின்று பாடிய அந்த வித்துவானுக்குத் தம் சந்நிதியில்
நின்று பாடும்படி ஒரு பலகையையும் அளித்தாரென்று திருவிளையாடல் தெரிவிக்கின்றது.
நாயன்மார்களுள் ஆனாயநாயனா
ரென்பவர் புல்லாங் குழல் ஊதியும், திருநீலகண்ட யாழ்ப்பாணர்
திருஞான சம்பந்தமூர்த்தியின் தேவாரப் பதிகங்களை யாழில் அமைத்து வாசித்தும்,
ஆழ்வார்களுள் திருப்பாணாழ்வா ரென்பவர்
வீணையை வாசித்தும் பேறு பெற்றார்கள். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி யென்ற மூவரும் தாம் இயற்றிய சிவஸ்தோத்திரங்
களைச் செய்திருக்கிறார்கள். "அருச்சனை பாட்டே யாகும்" என்றார் ஒரு பெரியார்.
இதனால் சிவபெருமானுக்குச் சங்கீதத்திலுள்ள பிரியம் வெளிப்படும். கோபத்தைத் தணிப்பது
சங்கீதத்தின் பெருமைகளுள் ஒன்று; முருகக் கடவுள் சூரனையழித்த
கோபம் தணியுமாறு கந்தர்வர்கள் பாடிக்கொண்டு சென்றார்களென்றும், கைலாச மலையை எடுத்த இராவணன் மீது
ஈசுவரனுக்கு இருந்த கோபம் சாமகானத்தால் நீங்கிற்றென்றும் நூல்கள் கூறுகின்றன.
"இழுக்குடைய பாட்டிற் கிசை நன்று" என்பதனால் சில பாட்டுக்களிலுள்ள சொற் குற்றம்
இசைநயத்தால் புலப்படாதென்று தெரிகிறது.
சங்கீத வித்துவான்களின்
வகை
சங்கீதத்தை வளர்த்துவரும்
பெரியோர்கள் பலர். அவர்களுள் சங்கீதத்தை மட்டும் அப்பியாசம் செய்து வந்து தம்முடைய
வாய்ப்பாட்டினால் யாவரையும் இன்புறுத்தியவர்கள் ஒரு சாரார்; சங்கீதத்தை ஓரளவு பயின்று அதற்கேற்ற சாகித்தியங்களைச்
செய்து உதவியவர்கள் ஒரு சாரார்; சங்கீதத்திலே சிறந்த
ஆற்றல் படைத்துச் சாகித்தியத்திலும் வன்மையடைந்து பொன் மலர் மணம் பெற்றதுபோல விளங்கியவர்கள்
ஒரு சாரார். இம் மூவகையினராலும் சங்கீதம் விரிவடைந்தது. இவர்களை யன்றி இசையைக் கருவிகளில்
அமைத் துப் பாடி இன்புறுத்தியவர்களும் உண்டு. சங்கீதப் பயிற்சி மட்டும் உடையவர்களாகப்
பாடிவந்த பெரியோர்களுடைய ஆற்றல் அவர்கள் காலத்தோடு போய்விடும்; அவர்களால் அக்காலத்திலிருந்தவர்கள்
மட்டும் பய னடைகின்றனர். சாகித்தியம் செய்யும் வகையினருடைய உழைப்போ அவர்கள் காலத்தோடல்லாமல்
பிற்காலத் திலும் பயனைத் தருகின்றது. சாகித்தியம் மட்டும் இயற்று பவர்கள் சங்கீத ரசத்திற்கேற்ற
சாகித்தியங்களை செய்வதற்குத் தடையுறுவார்கள். ஸ்வானுபவத்தில் சங்கீதப் பயிற்சியும்
இடைவிடாது பாடும் முயற்சியும் உடையவர்களுடைய சாகித்தியத்தில் தனியாக ஒரு ஜீவன் இருக்கும். அங்ஙனம் அமைந்த சாகித்தியங்களே சங்கீத மாளிகைகளை அழகுபடுத்தும் பிரதிமைகளாகும்.
அவற்றை அமைப்பவர்களே சங்கீத தெய்வத்திற்கு மிகவும் சிறந்த பணிவிடை செய்தவர்களாவார்கள்.
அத் தகைய பெரியோர்கள் பலர் தமிழ் நாட்டில் இருந்து வந்தார்கள். வேங்கடமகி, பச்சை மிரியன் ஆதிப்பையர்,
பாபநாச முதலியார், அனந்தபாரதி, பெரிய திருக் குன்றம் சுப்பராமையர்,
கனம் கிருஷ்ணையர், மதுரகவி, கவி குஞ்சரமையர், ஆனை ஐயா, கோபாலகிருஷ்ண பாரதிகள்,
வையை ராமசாமி ஐயர், பட்டணம் சுப்பிர மணிய ஐயர் முதலிய
வித்துவான்கள் சங்கீதத்திலும் சாகித்தியத்திலும் ஒருங்கே ஆற்றல் வாய்ந்தவர்களாக விளங்கினார்கள்.
மெட்டுக்களைப் பிறரைப் பாடச் செய்து அவற்றிற்கேற்பச் சாகித்யங்களை இயற்றி அவற்றைப்
பிறரைக்கொண்டு பாடச்செய்தவர் சிலர். அவர்களுள் மாயூரம் முன்ஸீபாக இருந்த வேதநாயகம்
பிள்ளை ஒருவர்.
சங்கீத மும்மணிகள்
சிலர் வடமொழியிலும்
தெலுங்கு முதலிய பிற பாஷைகளிலும் கீர்த்தனங்களை இயற்றி விளங்கினாரகள். அவர்களுள் மிகச்
சிறந்த மூவர்களைச் சங்கீத மும்மணிக ளென்று சங்கீத உலகம் பாராட்டுகின்றது. அவர்கள் திருவாரூர்
முத்துசாமி தீக்ஷிதர், தாளப்பிரஸ்தாரம் சாமா
சாஸ்திரிகள், ஸ்ரீ தியாகையர் என்பவர்களே.
இவர்கள் மூவரும் ஒரே காலத்தவர்கள். தீக்ஷிதரென்றால் முத்துசாமி தீக்ஷிதரையும்,
சாஸ்திரிகளென்றால் சாமா சாஸ்திரிகளையும்,
ஐயரவர்களென்றால் தியாகையரவர் களையும்
சங்கீத உலகம் குறிக்கும். இதுவும் அவர்களுடைய பெருமையைத் தெரிவிப்பதாகும்.
ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர்
முத்துசாமி தீக்ஷிதரவர்கள்
காலஞ் சென்று நூறு வருஷங்களாகின்றன. இவர்களுடைய சரித்திரத்தைப் பலர் எழுதியிருக்கிறார்கள்.
அவற்றாலும் கேள்வியாலும் எனக்குத் தெரிந்த சில முக்கியமான விஷயங்களை மட்டும் கூறுகிறேன்.
திருவாரூரின் பெருமை
திருவாரூர் என்னும்
ஸ்தலத்தில் அவர் பிறந்தவர். பெரியவர்கள் பிறந்ததனால் ஓரிடத்திற்கு மகிமையுண்டாகும்.
இயல்பாகவே மகிமையுள்ள இடத்தில் அவர்கள் பிறப்பதுமுண்டு. திருவாரூரோ இயல்பாகவே சிறப்
புடையது. அந்தப் பூமியே தெய்விகம் பொருந்தியது. அந்த ஸ்தலத்தில் உண்டான புற்றில் சிவபெருமான்
எழுந்தருளியிருக்கின்றாரென்றால் அந்த மண் விசேஷத் தைப் பற்றி வேறு என்ன சொல்லவேண்டும்!அதனால்
இது பஞ்ச பூத ஸ்தலங்களுள் பிருதிவி ஸ்தலமாகும். திருவாரூரென்பதில் ஆரென்பது பிருதிவியைக்
குறிக்கும். இது பூமாதேவியின் ஹிருதய கமலமென்று கூறப்படு மாதலால் இங்கேயுள்ள கோயில்
பூங்கோயில் என்று தமிழில் வழங்கும். இது பராசக்தி க்ஷேத்திரமென்றும் பிரணவஸ்தலமென்றும்
கூறப்படும். அத்தலத்தில் பிறத்தல் முக்திக்குக் காரணமென்பர். இங்கே எழுந்தருளி யிருக்கும்
மூர்த்திக்கு வன்மீக நாதரென்றும் புற்றிடங் கொண்டாரென்றும் திருநாமங்களுண்டு. இங்குள்ள
தியாகராஜமூர்த்தி அஜபா நடனம் செய்தருள்பவர். இந்த மூர்த்தி தந்தையை இழந்த சோழ வமிசத்துக்
குழந்தையொன்று ஆளுதற்கு உரிய பிராயத்தை அடையும் வரையில் பெருங் கருணையால் சோழ அரசராக
இருந்து அரசாண்டனர்; அப்போது தருமம் நான்கு
கால்களோடு நின்று விளங்கியதால் இத்தலத்தில் தர்ம விருஷபதேவர் நான்கு கால்களோடும் நின்ற
கோலமாக ஸ்ரீ தியாகேசர் ஸந்நிதியில் உள்ளார். ஸ்ரீ தியாகேசர் அரசராக இருந்தமைபற்றி அவருக்கு
ராஜோபசாரம் நடைபெற்று வந்தது. இப்பொழுதும் அவ்வாறே நடந்து வருகிறது. தேவாரத்தைக் கண்டுபிடித்துப்
பண்வகுப் பித்த சோழமன்னன் இந்த ஸ்தலத்தில் தியாகேசருக்கு உரிய திருப்பணிகளைச் செய்தான்.
ஒரு பசுவின் கன்று இறந்ததற்காகத் தன் மகன் மீது தேரைச் செலுத்திய மனுநீதிச் சோழன் அரசாண்ட
நகரம் இதுவே. சோழர்களுக்கு முடி கவிக்கும் நகரங்கள் ஐந்தனுள் ஒன்று இது. சமீபத்தில்
சட்டஞானத்தில் ஒப்புயரவற்ற பெரும் புகழ் பெற்ற ஜட்ஜ் முத்துசாமி ஐயரவர்கள் தோன்றிய
பெருமை வாய்ந்த ஸ்தலமும் இதுவே.
பிறப்பு
திருவாரூரில் சங்கீத
வித்துவான்கள் தொன்று தொட்டு வாழ்ந்து வந்திருக்கிறார்கள். தீக்ஷிதர் பிறந்தது சங்கீத
பரம்பரை. " குலவிச்சை கல்லாமற் பாகம் படும்" என்பது ஒரு தமிழ்நூற் செய்யுள்;
குலவித்தை யானது கல்லாமலே பாதி
வந்துவிடுமன்பது இதன் பொருள்.
தீக்ஷிதருடைய முன்னோர்கள்
அக்கினிஹோத்ரம் செய்துவந்தமையால் இவர் பரம்பரையினருக்குத் தீக்ஷித ரென்னும் பெயர் அமைந்தது.
இவருடைய தந்தையாராகிய ராமசாமி தீக்ஷிதரென்பவர் பெரிய சங்கீத வித்துவான். அவர் வைத்தீசுவரன்
கோயிலில் இருந்தபொழுது ஸ்ரீ பாலாம்பிகை கனவில் தோன்றி முத்துமாலை ஒன்றை யளித்தாகக்
கூறுவர். அது புத்திரப்பேற்றைக் குறிப் பிக்குமென்பர். இதுபோலவே வெள்ளிய மாலை முதலியன கனவிற் காணப்பட்டதாகவும் அவற்றின் பயன் புத்திரப்பேறென்று முனிவர்களைக் கேட்டுத்
தெரிந்து கொண்டதாகவும் சீவகசிந்தாமணி, பெருங்கதை, முதலிய ஜைன நூல்கள்
கூறுகின்றன. இவர் பிதாவினுடைய கிருபையையும் குருவினுடைய கிருபையையும் பெற்றவர்;
பஞ்சாயதன பூஜையைச் செய்து வந்தார்.
அதற்கேற்றவாறு இவர் கீர்த்தனங்களை அமைத்திருக் கின்றார்.
கல்விப் பயிற்சியும்
இயற்கையும்
இளமை தொடங்கியே தீக்ஷிதருக்கு
வேதத்திலும் வடமொழியிலும் முறையான பயிற்சி உண்டாயிற்று. சில காலம் காசியில் வசித்து
வந்தமையால் வடநாட்டுச் சங்கீத்திலும் பழக்கம் ஏற்பட்டது. இவர் நல்ல ஒழுக்கமுடையவர்.
இவருடைய பெருமைக்கு அதுவும் ஒரு காரணமாகும். பிற வித்துவான்களுடைய திறமையை அறிந்து
சந்தோஷிக்கும் நற்குணமுடையவர்; அவர்களுடன் அன்புடன்
பழகுபவர்.
ஒரு முறை இவர் திருவையாற்றிற்குச்
சென்றிருந் தார். அப்பொழுது உத்ஸவகாலமாதலால் திருவீதியில் எழுந்தருளும் சுவாமிக்குப்
பின்னே சிஷ்யர்களோடு பஜனை பண்ணிக்கொண்டு சென்ற ஸ்ரீ தியாகையரவர்கள் நாயகி ராகத்தில்
அமைந்த "நீ பஜனகான" என்னும கீர்த்தனத்தைப் பாடிக்கொண்டே சென்ற போது இவர்
உடன் சென்று கேட்டுவிட்டு அவரை நோக்கி, " நாய கிக்கும் தர்பாருக்கும் வேறுபாடு இல்லாமல் பலர் பாடுவார்கள். தர்பார் சம்பந்தமில்லாமலே நாயகி ராகத்தை நீங்கள் கீர்த்தனத்தில் அமைத்திருக்கிறீர்கள்;
பாடினீர்கள். உங்களைப்போல ராகங்களுடைய
நுட்பங்களை அறிந்து பாடுபவர்கள் மிக அருமை" என்று பாராட்டினாராம்.
மனிதர்களையே பாடிக்
காலங்கழித்த சில சங்கீத வித்துவான்கள் பிற்காலத்தில் பச்சாதாப முற்றுத் தெய்வங்களின்
மீது பாடியதுண்டு. மதுரகவி, 'எப்படியாட் கொள்வையோ?'
என்று ஸ்ரீ மீனாட்சி விஷயமாகவும்,
கனம் கிருஷ்ணையர், 'தில்லையப்பா' என்று ஸ்ரீ நட ராஜப் பெருமான் விஷயமாகவும்
பாடிக் கண்ணீர் விட்டார்களாம். வித்தையை ஈசுவரார்ப்பணம் செய்ய வேண்டு மென்பதே முத்துசாமி
தீக்ஷிதருடைய கொள்கை யாதலால் இவருக்கு அந்த விதமான வருத்தம் இல்லை. இவர் சமரச புத்தியை
யுடையவர். இன்முகமும் இன்சொல்லுமுள்ளவர். பாடும்போது இவர்பால் அங்க சேஷ்டை இராது. இவருடைய
வாழ்க்கை இளமையிலேயே நற்குலப் பிறப்பாலும் சிவஸ்தல யாத்திரையாலும் பெரியோர் அனுக்கிரகத்ததாலும்
குறைபாடில்லாத உயர்ந்த வழியிற் சென்றது.
காசியாத்திறையினால்
தேசாடன விருப்பம் இவர் மனத்திற் குடிகொண்டது. உபதேச ஸ்தலமாகிய காசியில் சிதம்பரநாத
ஸ்வாமி யென்பவரிடம் ஸ்ரீ வித்தையைக் கற்றுக்கொண்ட இவர் பராசக்தி க்ஷேத்திரமாகிய திருவாரூரிலிருந்து
அந்த மகா மந்திரத்தை உருவேற்றிப் பலனைப்பெற்றது பொருத்தமாகவே உள்ளது.
கீர்த்தனைகளை இயற்றல்
காசியிலிருந்த பின்பு
திருத்தணிகைக்கு வந்து தவம் புரிந்து முருகக்கடவுளுடைய திருவருளை இவர் பெற்றார். அதுமுதல்
இவர் கீர்த்தனங்களை இயற்றத் தொடங்கினார். ஸ்ரீ குகப்பெருமான் திருவருள் பெற்ற மையை
நினைந்து, "குருகுக" என்ற
முத்திரையைத் தம்முடைய கீர்த்தனங்களில் அமைப்பது இவர் வழக்கம்.
வடமொழியில் கீர்த்தனம்
மிகவும் அரிய செயல். திருவருட்பேறு நிரம்ப உடையவர்களுக்கல்லாமல் அது கைகூடாது. திருத்தணிகைப்
பெருமான் பால் அருள் பெற்றது தொடங்கி ஸ்தலங்கள்தோறும் தீக்ஷிதர் சென்று ஸ்வாமி தரிசனம்செய்து
அவ்வக் கோயில்களில் எழுந்தருளியிருக்கும் மூர்த்திகள் விஷயமாக இனிய கீர்த்தனங்களை
இயற்றித் துதித்து வந்தார்.
கீர்த்தனங்களின் இயல்பு
தீக்ஷிதருடைய கீர்த்தனங்களில்
அவ்வத்தல வரலாறுகள் இயன்ற வரையில் அமைந்திருக்கும். உரிய ராகப்பெயர் பெரும்பாலும்
தொனியில் காணப்படும். சங்கீத அம்சம் அவற்றில் மிகவும் சிறப்பாக அமைந்திருக்குமென்று
சொல்வது மிகை. சங்கீத இன்பத்தை நினையாமற் படித்து போதிலும் பக்தி மார்க்கத்தை அவற்றால்
தெரிந்து கொள்ளலாம். அதனால்தான் இவருடைய கிருதிகள் உயர்வடைந்தன.
தேவாரம் முதலிய திருமுறைகளும்
திருப்புகழும் ஸ்தலங்கள் தோறுமுள்ள மூர்த்திகளைப் பாடியனவே; திவ்யப் பிரபந்தத்திலுள்ள சில பகுதிகளும் இத்தகையனவே.
பிற்காலத்தில் மனிதர்களைப்
பாடிய பாட்டுக்கள் மலிந்தன. ஆனாலும் அத்தகைய பாட்டுக்களுக்கு அந்த அந்தக் காலத்திலேதான்
மதிப்பு இருக்கும். தெய்வ ஸ்துதியாக உள்ள பாட்டுக்களோ என்றும் குன்றாத இளமையோடு இலங்குகின்றன.
மனமொழி மெய்களால் தெய்வத்துக்குத் தொண்டு புரிந்த தீக்ஷிதரவர்களுடைய கீர்த்தனங்கள்
சங்கீத நூலாதலோடு பக்தி வாசகமும் ஞான சாஸ்திரமும் ஆகும்; ஸ்தலங்களின் பெருமைகளைக் கூறும் புராணச் சுருக்கமும்
சிவாகம நுட்பங்களை விளக்குவனவும் யோகவழியைக் காட்டுவனவும் அவையே.
இப்படியே பல ஸ்தலங்களுக்கும்
சென்று ஸ்தல விஷயங்களை விரிவாக அமைத்துத் தமிழில் கீர்த்தனங் கள் பாடியவர்களுள் எனக்குத்
தெரிந்தவர்கள்:-பாபநாச முதலியார், கனம் கிருஷ்ணையருடய
தமையனாராகிய பெரிய திருக்குன்றம் சுப்பராமையர் முதலியவர் கள். இவர்கள் இயற்றியவற்றிற்
பல மெட்டுக்கள் விளங்காமையால் ஒளி மழுங்கி மறைந்து கிடக்கின்றன. பாடு வோரும் மிகச்
சிலரே.
தேவாரப் பண்கள் ரக்தி
ராகத்தில் அமைந்துள்ளன. ஆதலால் அந்த ராக பாவங்களை அறிவதற்குத் தீக்ஷிதருடைய கீர்த்தனங்களைக்
கீழ்வேளூர்வாசியான சொக்கலிங்க தேசிகரென்பவர் கற்றனர்; பிறகு ராக பாவங்கள் புலப்படும்படி தேவாரங்களைப் பாடிப்
பல பாடசாலைகளை அமைப்பித்துக் கற்பித்து வந்தனர். தேவார கோஷ்டிகள் இப்பொழுது பாடி வரும்
சம்பிரதாயங்கள் எல்லாம் அவர் கற்பித்தனவே. அவருடைய சிறிய தகப்பனார் தீக்ஷிதரிடம் கற்றுக்
கொண்டவர். அவர் பெயர் ஞாபகத்தில் இல்லை.
தீக்ஷிதருடைய கீர்த்தனங்களின்
மேம்பாட்டிற்குக் காரணம் அவற்றிற் பெரும்பாலன ரக்தி ராகங்களிலே அமைந்திருந்தலும் த்ஸௌகத்தில்
(முதற் காலத்தில்) அமைந்திருத்தலும் ஆகும். இவர் எல்லாத் தெய்வங்களின்மீதும் பாடியிருக்கிறார்.
இதனாலும் இவருடைய கிருதிகள் பல இடங்களிற் பரவின.
நமது கடமை
சில வருஷங்களாக இந்நாட்டில்
சுத்தமான சங்கீ தத்துக்குப் பலவகையான இடையூறுகள் ஏற்பட்டுள் ளன. பாஷைக்குரிய அழகையும்
சங்கீத அமைப்பையும் குலைத்து நிற்கும் பாட்டுக்கள் இப்போது மூலை முடுக்கு களிலெல்லாம்
பரவிவிட்டன. பழைய சங்கீத வித்துவான்களையும் பழைய சாகித்தியங்களையும் மறந்து விட்டோம்.
இனி, ஸபைகளில் பழைய ஸாகித்தியங்களைப்
பாடும் முயற்சி அதிகரிக்க வேண்டும். தெரிந்தவர்களிடத்தில் முறையாக கற்றுப் பாடச் செய்வது
உத்தமம். ஸ்வரப்படுத்தி அச்சிற் பதிப்பித்தல் மட்டும் போதாது. அதில் கீர்த்தனங்களின்
முழுத் தோற்றமும் அமையாது. ஸினிமா முதலியவற்றிற்குப் புதிய பாட்டுக்களை அமைப்போர்கள்
பழைய பாட்டுக்களை இணைக்கக் கூடிய இடங்களில் இணைத்துப் பயன்படுத்த வேண்டும். இத்தகைய
செயல்களாலேதான் தீக்ஷிதரைப் போன்ற பெரியோர்களுடைய அருமை பெருமைகளை உலகம் உணர்தல் கூடும்.
இறைவன் திருவருளால் நம் முயற்சிகள் நற்பயனை அளித்து உதவுவனவாக.
---------------------
[ நன்றி : நல்லுரைக் கோவை -2 , மதுரைத் திட்டம் ]
தொடர்புள்ள பதிவுகள் :
2 கருத்துகள்:
அருமையான செய்திக்
அற்புதமான உரை. ! அருமையான தகவல் புதையல்.! சாஸ்திரிய சங்கீதம் ,பண்டைய தமிழ் நாட்டில், குறிப்பாக சைவ ஆலயங்களில், எவ்வாறு பயன்படுத்தப் பட்டது , அதன் லக்ஷியம் என்ன என்பதை இவ்வளவு தெளிவாகவும், அளப்பரிய விஷய ஞானத்தோடும், விளக்கும் ஒப்பற்ற உரை , இன்றைய நாட்களில் கிடைத்தற்கரியது ! மேலும் திருவாரூர் பற்றிய விசேஷ செய்திகளும் மிகவும் அருமை.. மெத்த நன்றி.
கருத்துரையிடுக