ஜி.என்.பி.யின் சாரீரமும் சங்கீத பாணியும்
கல்கி
மே 1. ஜி.என்.பாலசுப்பிரமணியம் அவர்களின் நினைவு தினம்.
‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 4-8.44 -இல் நடந்த ஜி.என்.பி யின் கச்சேரியைக் கேட்டபின் ஒரு ‘கல்கி’ இதழில் எழுதிய விமர்சனக் கட்டுரை இதோ!
============
நாட்டில் பெரியோர்கள் பலர் தங்கள் அபிப்பிராயங்களை
மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் சங்கீதம் சம்பந்தமாக நான்
இரண்டு வருஷத்துக்கு முன்பு கூறிய ஒரு அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டதைப் பகிரங்கப்படுத்த
விரும்புகிறேன்.
சங்கீத வித்வான் பூரீ ஜி.என். பாலசுப்பிரமணியத்தைப்
பற்றி முன் ஒரு முறை எழுதிய போது, "ஜி.என்.பி. நாலு கச்சேரி செய்தால் ஒன்று நிச்சயம் நன்றாயிருக்கும்.' என்று
எழுதியிருந்தேன். இப்போது, ஜி.என்.பி. நாலு கச்சேரி
செய்தால், அவற்றில் மூன்று நிச்சயம் நன்றாயிருக்கும்' என்று
சொல்லும்படி ஆகிவிட்டது.
இரண்டு வருஷத்துக்குள்ளே இவ்வளவு சிறந்த அபிவிருத்தி
- மூன்றுமடங்கு அபிவிருத்தி - ஜி.என்.பி. அடைந்திருப்பது குறித்து எனக்கு அளவில்லா
ஆனந்தம் ஏற்படுகிறது. இந்த அபிவிருத்திக்கு - இரண்டு வருஷத்துக்கு முன்னால் நான்
சற்றும் எதிர்பாராத அபிவிருத்திக்கு - முக்கிய காரணம் ஜி.என்.பி.யின்
சாரீரத்திலும் சங்கீத பாணியிலும் ஏற்பட்டிருக்கும். அதிசயக்கத்தக்க மாறுதல்கள்.
'இமிடேஷன் வைரமானது வாங்கியவுடனே பள பளவென்று
பிரகாசிக்கிறது. சிறிது சிறிதாகப் பல்லை இளித்துக் கொண்டு வந்து கடைசியில் அதன்
உண்மை ஸ்வரூபத்தை - அதாவது தான் வெறுங் கண்ணாடித் துண்டு என்பதை காட்டிவிடுகிறது.
உண்மையான வைரமோ அதனுடைய இயற்கை நிலையில் பிரகாசமின்றி
மங்கிக் கிடக்கிறது. அதைப் பட்டை தீர்த்துத் தேய்க்கத் தேய்க்கப் பிரகாசம் பெற்று
நவநவமான வர்ண ரேகைகள் வீசி ஜாஜ்வல்யமாய்த் திகழ்கிறது.
இமிடேஷன் வைரத்தைப் போல் முதலிலே நன்கு பிரகாசித்துப்
பிறகு மங்கிவிடும் வித்வான்களின் சாரீரத்தை நாம் பார்த்து
அனுதாபப்பட்டிருக்கிறோம். –
ஆனால், உண்மையான
வைரத்தைப்போல் நாளாக ஆக மெருகு ஏறிப் பிரகாசிக்கும் சாரீரத்தை அவ்வளவு சுலபமாக
நாம் பார்ப்பது கிடையாது. –
சமீப காலத்தில் இரண்டு சிறந்த சங்கீத வித்வான்களின் விஷயத்தில்
அந்த அருமையான காரியம் நடந்திருப்பது குறித்து நாம் பெரிதும் சந்தோஷப்பட வேண்டும்.
ஜி.என்.பி. விஷயத்திலும், மதுரை மணி ஐயர் விஷயத்திலும் இந்த அதிசயம் நடந்திருக்கிறது.
நாலு வருஷத்துக்கு முன்னால் அவர்களுடைய பாட்டைக்
கேட்கும்போது, 'ஆஹா இப்பேர்ப்பட்ட சங்கீத சம்பத்து
உள்ளவர்களுக்குக் குரலில் இனிமையுள்ள சுகபாவமும் இருந்தால் எவ்வளவு
உயர்வாயிருக்கும்? ' என்று பரிதாபமடைந்தோம்.
இப்போது, அவர்கள் இருவருடைய சாரீரமும்
எப்படி இனிமையும் சுகபாவமும் ஏறி, மிகமிக அபூர்வமான இடங்களில் எல்லாம் சிறிதும் தடுமாறாமல்
சஞ்சரிக்கக் கூடியவையாயிருக்கின்றன என்பதைக் கண்டு அதிசயித்து மகிழ்கிறோம்.
ஜி.என்.பியின் சாரீரம்
இரண்டு வருஷத்துக்கு முன்பு கூட இவ்வளவு பதமடைந்து சுகபாவம் பெற்றிருக்க வில்லை.
நாலிலே இரண்டு கச்சேரியில், 'இன்று சாரீரம் ஒத்துக்கொள்ளவில்லை!" என்று
ஏமாற்றத்துடன் முடிவு செய்ய வேண்டியதாயிருக்கும். ஜி.என்.பி. யின் சாரீரம்
இரண்டு கச்சேரியைக் கெடுத்ததென்றால், மூன்றாவது கச்சேரியும் சுகப்படாமல் போனதற்கு
ஜி.என்.பி. யின் பிர்க்காமயமான சங்கீதபாணி, காரணமாயிருந்தது.
பிர்க்கா சங்கீதத்தில் ஒரு
தொந்தரவு என்னவென்றால், குறிப்பிட்ட
இடத்தில் குறிப்பிட்ட பிடிகளில் எதிர் பார்க்கும் சங்கதிகள் விழுந்தேயாக வேண்டும்.
அப்படி விழாமல் போனால் விசிறிகள் உடனே இன்றைக்கு கச்சேரி சுகப்படவில்லை' என்று தீர்ப்பளித்துவிடுவார்கள்.
அதோடு, சாரீரமும் இடக்குச்செய்து
எங்கேயாவது ஒரு இடத்தில் இங்கிலீஷ் பேசி விட்டால், கச்சேரி தொலைந்தது. அப்புறம், பாடகர் எவ்வளவுதான் 'கொடி’ வித்தை செய்தாலும், கச்சேரி களை கட்டுவதில்லை.
ராஜாஜி அன்று சங்கீதத்தைப்
பற்றிப் பொதுவாகச் சொன்னார்: 'டாங்கிகளையும் குண்டுகளையும் வைத்துக் கொண்டு நடத்தும்
யுத்தத்தைக் காட்டிலும் இந்த சங்கீத யுத்தம் ரொம்பக் கடினமானது. அந்த ஆயுத
யுத்தத்தில் ஒரு தடவை தோல்வியடைந்தால் இன்னொரு தடவை ஜயிக்கலாம். இந்தச் சங்கீத
யுத்தத்திலே ஒரு தடவை தவறிவிட்டால், போயே போச்சு!"
ராஜாஜி மேலே கூறியது, பிர்க்கா பிராதான்யமான சங்கீத
பாணிக்கு மிகவும் பொருந்துவதாகும்.
இந்த இடையூறுகளையெல்லாம்
ஜி.என்.பி. கடந்து மேலே வந்துவிட்டார் என்பதை 4.8.44 ல் மயிலை சங்கீத சபையில் அவர் செய்த கச்சேரி
நிரூபித்தது.
ஜி.என்.பி. யின் சாரீரமும்
சங்கீத பாணியும் இப் போது அடைந்திருக்கும் மேன்மை, அன்று அவர் பைரவி ராக ஆலாபனை செய்தபோது வெளியாயிற்று.
உண்மையான கர்நாடக சங்கீதம்
எப்படி இருக்க வேண்டுமென்று நாம் விரும்புகிறோமோ, அதில் என்னென்ன அம்சங்கள் இருக்கவேண்டுமென்று
எதிர்பார்க்கிறோமோ, அவ்வளவும்
அந்த ஆலாபனத்தில் இருந்தன. பைரவி ராகத்தின் ஸ்வரூபத்தை அதில் பூரணமாகக் கண்டோம்.
நாபீ கமலத்திலிருந்து மேலோங்கி வந்த நாத கம்பீரத்தைக் கண்டோம். அதிசயமான
லாகவத்தோடு ஆகாச வெளியில் இஷ்டப்படியெல்லாம் சஞ்சரித்து வந்த மனோ தர்மத்தைக்
கண்டோம். சுருதியோடு கலந்து நின்ற கார்வையை ஆங்காங்கு கண்டோம். உசிதமான அளவு மணி
உதிர்ப்பது பிர்க்காக்களையும் கண்டோம்.
இவ்வளவுடன் ஜி.என். பி. யின்
சாரீரம் எவ்வளவு தூரம் பதமடைந்து எவ்வளவு விஸ்தாரமும் அடைந்திருக்கிறது என்பதைக்
கண்டு வியந்தோம்.
'இப்போதெல்லாம்
மூன்று ஸ்தாயிகளில் பாடுகிறவர்களே இல்லை' என்று யாரோ ஒரு உபந்நியாசக வித்வான் சொன்னாரல்லவா? அதைப் பொய்ப்படுத்துவதற்காகவே
செய்தது போல், ஜி.என்.பி.
அன்று சில வேலைகளைச் செய்தார். பைரவி ராக ஆலாபனையில் தார ஸ்தாயி மத்தியமத்தில்
நின்று அவர் சஞ்சரித்தபோது, சபையோர் 'ஹா ஹா' என்றார்கள்.
பிறகு, பஞ்சமத்துக்குப் போய்க் கார்வை
கொடுத்து நின்றபோது 'ஹா ஹா.
ஹா' என்றார்கள்.
அத்துடன் ஜி.என்.பி. கீழே இறங்கினாரா? இல்லை! மேலே, தைவதத்துக்குப் போனார். எல்லோருக்கும் மூச்சு நின்று
விடும்போல் ஆகிவிட்டது. இன்னும் மேலே சென்று அவர் நிஷாதத்தைப் பிடித்ததும்
எல்லோருக்கும் மூச்சே நின்று போய்விட்டது! பாடகர் கீழே இறங்கிவந்த பிறகுதான்
சபையோர் ஹாய்யாக மூச்சு விட்டார்கள்.
பாலக்காட்டு மணி எந்த
வித்வானுக்குப் பக்க வாத்தியம் வாசித்தாலும், கச்சேரி சிறப்பாகிவிடுகிறது என்பதில் இரகசியம்
ஒன்றுமில்லை. என்றாலும், ஜி.என்.பி. யின் பாட்டுக்கும் மணியின் மிருதங்கத்துக்கும்
விசேஷ பொருத்தம் இருக்கிற தென்பது உண்மையேயாகும். ஜி.என்.பி. யும் மணியும் சேரும்
கச்சேரிகளில் பாட்டுக்கு மிருதங்கமும், மிருதங்கத்துக்குப் பாட்டும் ஒன்றுக் கொன்று சோபை
அளிக்கின்றன. பாட்டும் பக்கவாத்தியமும் அவ்வளவு ஒற்றுமையாகச் சேர்வது மிகவும்
அருமை யென்றே சொல்லவேண்டும்.
அழகுக்கு அழகு செய்வதுபோல், ஸ்ரீ செளடய்யாவின் கம்பீர பிடில்
நாதமும் ஸ்ரீ வேணு நாயக்கரின் ஜிலுஜிலுப்பான கஞ்சிரா ஒலியும் மேற்படி கச்சேரியை
நன்கு சிறப்பித்தன. ★
தொடர்புள்ள பதிவுகள்:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக