பாலஸரஸ்வதியும் ஜயம்மாளும்!
கல்கி
மே 13. பாலசரஸ்வதி அவர்களின் பிறந்த தினம்.
கல்கி அவர்கள் விகடனில் 1934-இல் எழுதிய கட்டுரை இதோ!
=================
சென்னையில் சென்ற மாதக் கடைசியில் நடந்த சங்கீதப் பெருவிழாவின்போது
கிரிட்டிக்குகள், ரஸிகர்கள் முதலியோரில்
பலரகமானவர்களைச் சந்திக்க நேர்ந்தது. முக்கியமாக பரத நாட்டிய விஷயத்திலே தான் இவர்களுடைய
கிரிடிக் தன்மையும், ரஸிகத் தன்மையும் சிறப்பாக
வெளியாயின.
திருநெல்வேலியிலிருந்து தமிழ் அன்பர் மாநாட்டுக்கு வந்திருந்த பிரதிநிதிகளில் கலாசாலை ஆசிரியர் ஒருவர். மாநாட்டுக்குப் பின்னர் ஸ்ரீமதி பால ஸரஸ்வதியின் பரதநாட்டியக் கச்சேரி பார்க்க வேண்டும் என்பதற்காகவே ஒரு வாரம் அவர் சென்னையில் தங்கினார். அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது ஆறு மாதத்துக்கு முன்பு விகடனில் பாலஸரஸ்வதியின் நாட்டியத்தைப் பற்றி வெளியான கட்டுரையைப் பற்றிப் பிரஸ்தாபம் வந்தது. "இன்னும் இரண்டொரு நண்பர்களிடம் கேட்டேன். அவர்கள் ‘விகடனில் ரொம்ப நன்றாயிருக்கிறது என்று சொல்லி விட்டதாகவும், அவ்வளவு ரொம்ப சொல்லியிருக்க வேண்டியதில்லையென்றும் தெரிவித்தார்கள்" என்று அக்கலாசாலை ஆசிரியர் கூறினார்.
எனக்குக் கொஞ்சம் பயம் உண்டாகிவிட்டது.
பரத நாட்டியத்தில் புதிதாக ஏற்பட்ட உற்சாகத்தினால் ஒரு வேளை மிகைப்படுத்திவிட்டோமோ
என்று நினைத்தேன். ஒரு மாதிரி கெளரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, "ஆமாம்; நம்முடைய நாட்டில் ஒன்றையும் நன்றாக இல்லை என்று சொல்லும்
வழக்கம் கிடையாதல்லவா? ரொம்ப மோசமானதைக் கூட மரியாதைக்காக
சுமாராக இருக்கிறது என்கிறோம். ஆகவே உண்மையிலே நன்றாக இருப்பதை 'ரொம்ப நன்றாகயிருக்கிறது' என்று கொஞ்சம் அழுத்தித் தானே சொல்லவேண்டியிருக்கிறது?" என்றேன்.
ஜனவரி மாதம் 1ஆம் தேதி சங்கீத மகாநாட்டுக் கொட்டகையில் ஸ்ரீமதி பாலஸரஸ்வதியின் நாட்டியக் கச்சேரி நடந்தபோது, இந்த நண்பர் என் அருகில் இருந்தார்.
அலாரிப்பு', 'ஜதிஸ்வரம்', 'சப்தம்' பதவர்ணம் ஆகியவை நடந்து கொண்டிருந்தபோது
"பேஷ்! நன்றாய்த்தானிருக்கிறது"
என்று சொல்லிக் கொண்டிருந்தார்! ஆனால். .
"நித்திரையில் ஸ்வப்பனத்தில்..."
என்று தமிழ்ப் பதத்திற்கு அபிநயம் ஆரம்பமாயிற்றோ இல்லையோ என்னுடன் சண்டைபிடிக்கத் தொடங்கிவிட்டார்.
"நீர் முதலில் எழுதினதுதான் சரி. பின்னால் சொன்ன சமாதானம் தவறு. உண்மையில் ரொம்ப நன்றாயிருப்பதை ரொம்ப நன்றாயிருக்கிறது
என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது?" என்று கேட்டார்.
ஆனால் இந்த நண்பர் மட்டும் ஜனவரி மாதம்
5ஆம் தேதி வரையில் சென்னையில் தங்கியிருந்து அன்று மாலை
ஸ்ரீமான் டி.கே. சிதம்பரநாத முதலியார் வீட்டில்
நடந்த பாலஸரஸ்வதியின் அபிநயக் கச்சேரிக்கு வந்திருத்தாரானால் என்னை என்ன பாடுபடுத்தியிருப்பாரோ
தெரியாது. பால ஸரஸ்வதியைப் பற்றி நான் எழுதியது சுத்தமாய்ப் போதாது என்று கருதி டி.கே.சி.
போன்றவர்களுடன் சேர்ந்து அதிகமாய்ச் சண்டை பிடித்திருப்பார் என்று கருதுகிறேன்.
உண்மையான ரசிகர்களிடத்தில் இந்த ஆச்சரியமான
குணம் காணப்படுகிறது. அதாவது நன்றா யில்லாத எதையும் இவர்களால் அதிக நேரம் சகிக்க முடியாது.
ஆனால் ஏதாவது நன்றாயிருந்துவிட்டால் அவர்களுக்கு ஒன்றும் தலைகால் புரியாது. நன்றா யிருக்கிறது; நன்றாயிருக்கிறது என்று கூத்தாடுவார்கள். ஆனால் மிஸ்டர் கிரிடிக் இம்மாதிரி ஏமாறுவது
கிடையாது.
டி.கே.சி. அவர்கள் வீட்டில் நடந்த மேற்படி
கச்சேரியில் என் அருகில் உட்கார்ந்திருந்தார் வேறொரு நண்பர்.
"இதுவும் சொல்லுவாள் அநேகம் சொல்லுவாள்
அவள் மேலே குற்றம் என்னடி- அடியே போடி என்னும் பதத்திற்கு அபிநயம் பிடிக்கையில் அடியே
போடி' என்னும்போது நாட்டியக்காரியின் உதட்டின் துடிப்பைப் பார்த்ததும்
சபையிலிருந்த மற்ற யாவரையும் போலவே இருவரும் பெரும் வியப்படைந்தார். ஆனால் அவர் என் காதில் என்ன சொன்னார்
என்று தெரியுமா?
"ஆமாம் இந்தப் பெண் அபிநயம் நன்றாய்த்
தானிருக்கிறது. ஆனால் இவளைவிடத் திறமையாக அபிநயம் பிடிக்கிறவர்கள் இருக்கலாமல்லவா? இன்னும் நாலைந்து பேரைப்பார்த்தால்தானே இதன் மதிப்பை உள்ளபடி அறியலாம்?" என்றார்.
இவர் முதல்தர ஆர்ட் கிரிடிக் ஆகக்கூடியவர்
என்று உடனே தெரிந்து கொண்டேன். "இந்த அபிநயம் நன்றாயிருக்கிறது. இதற்காக இப்போது
சந்தோஷப் படுவோம்" என்று அவர் இருந்துவிட்டாரா பாருங்கள்? "இதைவிட நன்றாய் அபிநயம் பிடிக்கக்கூடியவர்கள் இருக்கலாமல்லவா; ஆகையால் நன்றாயிருக்கிறது என்று சொல்லி நாம் அதிகமாய் சந்தோஷப்பட்டால் அசட்டுப்பட்டமல்லவா
கிடைக்கும்?" என்று சொல்லி எச்சரிக்கையுடனே நிதானத்தை
கைக் கொண்டார் அந்தக்குட்டி ஆர்ட்கிரிடிக்.
இன்னும் சிலரிடம் கிரிடிக் தன்மையும்
ரசிகத் தன்மையும் சேர்ந்திருந்து ஒன்றையொன்று மேலோங்குவதற்கு போரிடுவதுண்டு. இத்தகைய
நண்பர் ஒருவரும் டி.கே.சி. வீட்டுக் கச்சேரியில் இருந்தார். அன்று அவருடைய ரசிகத்தன்மை
நிச்சயமாக மேலோங்கி இருந்தது என்று காண்கிறது. தம்மையறியாமல் சில முறைகளில் சந்தோஷத்தை
தெரிவித்தார். ஆனால் அவருள்ளிருந்த கிரிடிக் தமது தோல்வியை ஒப்புக் கொள்ள விரும்பவில்லை.
ஆகவே இடையே கிரிடிக் சொல்கிறார்:-"ஸ்ரீமதி ஜயம்மாளைப்போல் பின்னால்
பாடுகிறவர் இருந்தால் நாட்டியம் ஏன் நன்றாயிராது?’
அதாவது "இந்த நாட்டியத்தை இவ்வளவு
அளவு கடந்து அனுபவித்து வருகிறோமே? மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?" என்று பயந்து மிஸ்டர் கிரிடிக் மேற்படி சமாதானத்தைச் சொல்ல முன்வந்தார்.
இவ்வாறு அன்று நான் பெரிதும் மதிக்கும்
அந்த நண்பரின் ரசிகத்தன்மை வெற்றி பெற்றுவிட்டது குறித்து மகிழ்ச்சியடைந்தேனாயினும், அதற்குப் பெரிதும் காரணமாயிருந்தவர்கள், ஸ்ரீமதிகள் ஜயம்மாளும் பாலஸரஸ்வதியுமே
என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை. எவ்வளவு கடினமான வைரம் பாய்ந்த ஆர்ட் கிரிடிக்காயிருந்தாலும்
சரி, அவருடைய ஹிருதயத்தில் அணுவளவேனும் ரசிகத் தன்மை இருக்கும்
பட்சத்தில் ஜயம்மாள் பாட்டுடன் பால ஸரஸ்வதி அபிநயம் பிடிக்கும்போது நிச்சயமாய் அது
மேலோங்குமென்பதில் ஐயமில்லை. நீலம்பரி ராகத்தில், "நீலமயில் வாகனனோ..."என்று தொடங்கும் பாட்டின் இனிமையிலும் அதற்குரிய அபிநயத்தின்
சிறப்பிலும் ஒருவருடைய உள்ளம் பரவசமடைய வில்லையென்றால் அவருக்குக் கதி மோட்சமே கிடையாது என்றே சொல்வேன்.
ஸ்ரீமதி பாலஸரஸ்வதியைப் பற்றி
இத்தகைய புகழுரைகளை யெல்லாம் படித்துவிட்டு அடுத்தமுறை.
அவருடைய நாட்டியக் கச்சேரிக்குச் செல்லும் நண்பர்கள் வீண் ஏமாற்றத்துக் காளாகாமல் இருக்கும்
பொருட்டு இரண்டு வித எச்சரிக்கைகள் செய்துவிட விரும்புகிறேன்.
(1) நூறு, இருநூறு பேருக்குட்பட்ட சின்ன சபைகளிலேதான்
பரத நாட்டியத்தை நன்கு ரசிக்க முடியுமென்பது என் அனுபவம். பரத நாட்டியத்தில் நர்த்தனம், அபிநயம், என்று இருபகுதிகள் உண்டு. இவைகளில்
நர்த்தனப் பகுதியும் சிறப்புடையதேயாயினும் அபிநயம்தான் பெரிதும் சிறப்புடையது என்பது
என்கருத்து. ஆனால் அன்று மியூஸிக் அகாடமி பந்தலில் சபையில் பெரும்பான்மையோர், நர்த்தனப் பகுதியைத்தான் அதிகமாய் ரசித்தார்கள். கரகோஷங் களெல்லாம் அந்தப் பகுதியில்தான்
ஏற்பட்டன. இது ஏன் ?
அபிநயத்தின் நயத்தை நன்கு அறிந்து அனுபவிப்பதற்கு
எந்தக் கருத்தை, பாவத்தைத் தழுவி அபிநயம் பிடிக்கப்படுகிறதென்று
தெரிந்திருக்க வேண்டும். இல்லாதவரையில் ஒன்றும் புரியாது. அதிலும் புதிதாய் பரதநாட்டியம்
பார்ப்பவர்களுக்கு ஏதோ ஊமை ஜாடை காட்டுவதுபோல் தோன்றக்கூடும்.
அன்று மியுஸிக் அகாடமி பந்தலில் மற்ற
எந்த நாளிலும் கூடாத பெருங்கூட்டம் கூடியிருந்தது. ஸ்ரீமதி ஜயம்மாளின் பாட்டு அவ்வளவு பெரிய பந்தலுக்கும்
அத்தனை பெரிய கூட்டத்துக்கும் எடுத்ததன்று. சபையோரில் முன்னால் உட்கார்ந்திருந்த கால்வாசிப்
பேருக்குத்தான் ஜயம்மாளின் பாட்டு காது கேட்டிருக்கக்கூடும். எனவே மற்றவர்கள் அபிநயப்
பகுதியில் அவ்வளவு உற்சாகம் காட்டாததில் ஆச்சரிய மில்லையல்லவா?
2. பாட்டு காது கேட்டால் மட்டும் போதாது.
அதன் விஷயம் இன்னதென்று விளங்க வேண்டும். எனவே தமிழ் மக்கள் அடங்கிய சபைகளில் பாட்டுக்களும்
தமிழில்தான் இருக்க வேண்டுமென்று சொல்ல வேண்டியதில்லை.
இந்த விஷயத்தில் இப்போது சங்கீத உலகில்
ஒரு பெரிய புரட்சியே உண்டாகிவிட்டது என்பதை நேயர்கள் அறிவார்கள். அதிசீக்கிரத்தில்
யாரும் எதிர்பாராத அளவு வேகத்தில் இந்த மகத்தான சீர்திருத்தம் அமுலுக்கு வந்து கொண்டிருக்கும்
ஆச்சரியத்தைப்பற்றி மற்றொரு சமயம் கவனிக்கலாம். இங்கே சங்கீத உலகத்தில் முக்கியமானவர்கள்
அனை வரும் தமிழ்ப்பாட்டுகள் பாடவேண்டியதின் அவசியத்தை உணர்ந்துவிட்டார்கள் என்று சொன்னால்
போதுமானது.
ஆனால் மேற்சொன்ன சீர்திருத்தத்தை நிறை
வேற்றும் விஷயத்தில் மற்ற யாருக்கும் இல்லாத பெரிய செளகர்யம் ஸ்ரீமதி பாலஸரஸ்வதிக்கு இருக்கிறது. அவளுடைய தாயார் ஸ்ரீமதி ஜயம்மாள் வேறு மொழி பாட்டுக்களே கலக்காமல், தமிழ்ப் பதங்களே எவ்வளவு நேரம் பாடிக்கொண்டிருக்க முடியுமென்பதற்கு வரை யறை கண்டுபிடிக்க
முடியவில்லை. முடிவு என்பதே இல்லாமல் அவர் தமிழ்ப் பாட்டுக்கள் பாடிக் கொண்டே இருக்கக்கூடுமென்று
தோன்றுகிறது. இத்துடன் பிழை சிறிதுமின்றி சுத்தமான உச்சரிப்புடன் அவர் பாடக்கூடியவராயிருப்பது
பெரிய விசேஷமாகும.
எனவே பாலஸரஸ்வதியின் நாட்டியத்தை அதன்
முழுச் சிறப்புடன் அனுபவிக்க விரும்பும் நண்பர்கள் பாட்டு நன்றாய்க் காது கேட்கும்
அளவுக்கு சமீபத்தில் அமர்ந்திருந்தாலும், அபிநயப் பகுதியில் பெரும்பாலும் தமிழ்ப்பதங்கள்
பாடப்பெறுமாறு கவனித்துக் கொள்ளுதல் அவசியமாகும்.
. அலங்கார சாஸ்திர மாணாக்கர் சொல்கிறார்:"பாலஸரஸ்வதியின்
பரத நாட்டியத்தைப் பற்றி இவ்வளவு பரவசமடைகிறீர்களே? அபிநயக்கலையில் அவருக்குத் தெரிந்தது
மிகவும் சொற்பமேயல்லவா? இன்னும் எவ்வளவோ இருக்கிறதே?"
இது உண்மையானால் என்னைவிட சந்தோஷங்
கொள்பவர்கள் வேறு யாரும் இருக்கமாட்டார்கள். ஏனெனில் இதனால் பாலஸரஸ்வதிக்கு எவ்விதக்
குறைவுமில்லை, பரதநாட்டியக்கலைக்குத்தானே சிறப்பு
அதிகம் !
ஆரம்பத்திலே நான் குறிப்பிட்ட கலாசாலை
ஆசிரியரும் ஸ்ரீமான்கள் பி.ஸ்ரீ.ஆச்சாரியார், R.V. சாஸ்திரி போன்ற நண்பர்களும் என்னைப்போல்
புதிதாகப் பரத நாட்டியம் பார்ப்பவர்கள் அல்லர். வெகு காலத்துக்கு முன்பிருந்து பிரசித்திபெற்ற
பலருடைய நாட்டியங்களைப் பார்த்தவர்கள். ஆயினும் மேற்படி கலையின் செளந்தர்யத்தை பாலஸரஸ்வதியின்
நாட்டியத்தில் பார்த்த அளவில் வேறு யாரிடமும் காணவில்லையென்று சொல்கிறார்கள்.
ஆகவே அலங்கார சாஸ்திரத்தில் உள்ளதில்
சொற்ப அளவே பாலஸரஸ்வதி அறிந்தது என்று ஏற்படும் பட்சத்தில் பரத நாட்டியக்கலையின் சிறப்பு
பதின்மடங்கு அதிகமாகிறதல்லவா? அத்தகைய கலைச்செல்வத்தைப் பாதுகாக்கவேண்டுமென்பதில்
அபிப்பிராய பேதம் என்ன இருக்க முடியும்?
ஆனந்த விகடன்,
20-1–34
[ நன்றி : விகடன் ]
தொடர்புள்ள பதிவுகள்:
கல்கியைப் பற்றி . . .
Bala (1976) - Satyajit Ray Documentary on T. Balasaraswati
Balasaraswati – the queen of abhinaya
Bala (1976) - Satyajit Ray Documentary on T. Balasaraswati
Balasaraswati – the queen of abhinaya
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக