சில சங்கீத சமாசாரங்கள்
ரா.கி.ரங்கராஜன்
சங்கீத கலாநிதி அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் சஷ்டியப்த
பூர்த்தி நடைபெற்றபோது, அந்த விழாவுக்காகப்
பல சங்கீத வித்வான்கள் வந்து இசை நிகழ்ச்சி நடத்தினார்கள். புல்லாங்குழல் மேதை பல்லடம்
சஞ்சீவி ராவ் மேடை ஏறினார். குழல் வாசித்துக் கொண்டிருக்கும்போது அரியக்குடியிடம்.
'உங்களுக்கு ஏதாவது
தர வேண்டும் என்று நினைக்கிறேன். என்னிடம் சில்லறை இல்லை. 'நோட்டாகத் தருகிறேன்,' என்று கூறியவர், சங்கராபரண ராகத்தின் 'நோட்' வாசித்தார்.
சங்கீத வித்வான்களுள்
மிக மிக தெய்வ பக்தியும் ஆசார அனுஷ்டானமும் உள்ளவராகத் திகழ்ந்தவர் செம்பை வைத்தியநாத
பாகவதர். ஒரு முறை கள்ளிக் கோட்டையில் அவருடைய கச்சேரி இருந்தது. நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு
சற்று முன்னால் திடீரென்று அவருக்குத் தொண்டை கட்டிக் கொண்டது. பாடுவது கஷ்டம் என்று
உணர்ந்தார். நாள்பூரா நன்றாயிருந்த குரல் திடீரென்று ஏன் இப்படி ஆயிற்று என்று திகைத்த
செம்பை, 'இன்று என்ன திதி?'
என்று விசாரித்தார். கார்த்திகை
மாதம் சுக்ல பட்ச ஏகாதசி என்று பஞ்சாங்கத்தைப் பார்த்து சொன்னார்கள். பிறகு
தான் செம்பைக்குப் புரிந்தது. கார்த்திகை மாத சுக்ல பட்ச ஏகாதசியன்று குருவாயூர் சன்னதியில்
பாடுவதை விரதமாகக் கொண்டிருந்தவர் அவர். அன்று அதை மறந்ததை நினைத்து வருந்தி,
கச்சேரி ஏற்பாடு செய்தவரிடம் அனுமதி
பெற்று, காரில் குருவாயூருக்குப்
போனார். சுவாமி சன்னதியில் பாடிய போது சாரீரம் சரியாகிவிட்டது.
வெகு நேரம் பாடினார். மறுநாள் கள்ளிக் கோட்டைக்குத் திரும்பி வந்து கச்சேரி செய்தார்.
இத்தகைய சங்கீதத் துணுக்குகளைப்
படித்துக் கொண்டிருந்த சமயம் நண்பர் நாராயண விசுவநாத் தான் நடத்தி வரும் 'ஸரிகமபதநி' என்ற மாத இதழை நாராயண விசுவநாத்
தான் அனுப்பி வைத்தார். எம்.எஸ். சுப்புலட்சுமி சிறப்பிதழ். அட்டையில் உள்ள வண்ணப்
படம் கண்ணாடி போட்டு வைக்கும் அளவுக்குப்
பளீரென்று இருக்கிறது. உள்ளே உள்ள கறுப்பு வெளுப்புப் படங்கள் சரியான மங்கல்.
எம்.எஸ்.ஸைப் பற்றி
சமீப காலத்தில் ஏராளமான பாராட்டுக்களும் புகழுரைகளும் வாழ்க்கைக் குறிப்புக்களும் வெளி
வந்துவிட்டன. ஆகவே இந்த 'ஸ்பெஷல்' இதழில் வித்தியாசமாக என்ன இருக்கப்
போகிறது என்று நினைத்துப் புரட்டிப் பார்த்தேன். இரண்டொரு விஷயங்கள் புதிதாயிருந்தன.(ஒரு
வேளை நீங்கள் ஏற்கெனவே கேள்விப்பட்டதாகவோ படித்ததாகவோ இருக்கலாம்.)
1. வீட்டில் செல்லப் பெயர்
குஞ்சம்மாள். அன்னை ஷண்முகவடிவு புகழ்பெற்ற வீணைக் கலைஞர். மதுரை சேதுபதி உயர்நிலைப்
பள்ளியின் அரங்கில் ஷண்முகவடிவு அவர்களின் வீணைக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. திடீ
ரென்று வீணை வாசிப்பதை நிறுத்திவிட்டு, அருகில் அமர்ந்திருந்த எட்டு வயது சிறுமி குஞ்சம்மாளைப் பார்த்து.
'எங்கே, அந்த ஆனந்த ஜா பாட்டைப் பாடு'
என்றார் அன்னை. அவர் சொன்னதுதான்
தாமதம், துளியும் சபைச் கூச்சமின்றி,
கணீரென்று பாட ஆரம்பித்தாள் சிறுமி.
சற்று முன்னால் வரை விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென மேடை யேறி ஹிந்துஸ்தானி
மெட்டில் அமைந்த மராத்தியப் பாடலான 'ஆனந்த ஜா' வைப் பாடியது அனைவரையும்
பிரமிப்பில் ஆழ்த்தியது. இதுதான் எம்.எஸ்.ஸின் அரங்கேற்றக் கச்சேரி.
2. இசை உலகில் மகளுக்குக்
கிடைத்த ஆதரவையும் வளர்ச்சியையும் மனத்தில் கொண்டு மதுரையிலிருந்து சென்னைக்குக் குடி
பெயர்ந்தார் ஷண்முகவடிவு. சென்னை புரசைவாக்கம் தாணாத் தெருவில் ஜாகை. (ஆ! 'என்னோட' புரசை வாக்கத்துக்கு மேலும் ஒரு பெருமை!)
3. கஸ்தூரி பா நினைவு
நிதிக்காகப் பல கச்சேரிகள் செய்தார் எம்.எஸ். இதைப் பாராட்டி, காந்தியடிகள் ஆங்கிலத்தில் தன்
கைப்படக் கடிதம் எழுதி, தமிழிலே கையொப்பமிட்டு
அனுப்பினார். அது: 'அன்புள்ள சுப்புலட்சுமி,
உங்களது தெய்வீகமான இசையைப் பயன்படுத்தி,
கஸ்தூரி பா நினைவு நிதிக்காக நீங்கள்
செய்துள்ள ஆத்மார்த்தமான தொண்டின் முழு விவரங்களையும் ராஜாஜி என்னிடம் கூறினார். ஆண்டவனின்
பரிபூரண அருட்கடாட்சம் உங்களுக்குக் கிட்டட்டும். உங்கள் மோ. க. காந்தி'.
4. 'சகுந்தலை' படத்தில் 'மல்லிகைப் பூங்கொடி பாங்கி இதோ
பார்' என்ற பாடலை டி.ஏ. மதுரத்துடன்
இணைந்து பாடியிருக்கிறார் எம்.எஸ்.
5. புழுதி நிறைந்த அந்த
சாலையில் ஒரு ஜட்கா வண்டி போய்க் கொண்டிருந்தது. உள்ளே அமர்ந்திருந்தவர் ஒரு சாது.
வண்டியின் கம்பியைப் பிடித்தபடி பினினாலேயே ஓடி வந்து கொண்டிருந்தார் ஓர் இளைஞர். தேசத்
தொண்டில் தானும் பங்கேற்க வேண்டுமென்று மூச்சு இரைக்கக் கேட்டுக் கொண்டிருந்தார் அவர்.
'உயிரையும் கொடுப்பாயா?'
என்று சாது கேட்க, 'கொடுப்பேன் ஐயா' என்று அந்த இளைஞர் உறுதி கூற,
'சுண்ணாம்புக்காரத் தெரு பதினெட்டாம்
நம்பர் வீட்டுக்கு வந்து பார்' என்றார் சாது. அவர்
தொழுநோயின் நடுவில் 'வந்தே மாதரம்'
என்று கோஷம் கொடுத்த தேச பக்தர்
சுப்பிரமணிய சிவா. இளைஞர் எம்.எஸ்.ஸின் கணவர் கல்கி சதாசிவம். 1921ம் வருடம் இந்த சந்திப்பு நடந்த
இடம் கும்பகோணம்.(ஆ! மறுபடியும் 'என்னோட' கும்பகோணம்!)
6. சுப்புடுவின் கட்டுரையிலிருந்து
ஒரு பகுதி:( 1) (இதை சுப்புடு எப்போது எழுதினார் என்று தெரியவில்லை). இசையைத் தவிர எம்.எஸ்.
ஸுக்கு வேறு ஒன்றுமே தெரியாது. எந்த இடத்தில் கச்சேரி என்பது கூட அவர் தெரிந்து வைத்துக்
கொள்வதில்லை. அதெல்லாம் சதாசிவத்தின் இலாகா.
வங்காளிப் பாட்டுக்கள்
கற்றுக் கொள்ளும்போது எம்.எஸ். பல அல்லல்களுக்கு ஆளாகியுள்ளார். 'அந்தகார'வை 'ஒந்தகார' என்றும் 'விரஹ' என்பதை 'பீரோ ஹொ' என்றும் உச்சரிக்க,
வாயைக் கிழக்கு மேற்காக அசை போட்டு.
நுனி நாக்கு அண்ணாவியைத் தொட்டு, பரம வேதனையைப் பட்டால்தான்
வங்காளம் வெளியேவரும். துளி உச்சரிப்பு விலகினால் கூட வங்காளம் வேதாளமாகிவிடும்.
டிசம்பர் சீசன் போது
எத்தனை வித்வான்கள் பாடினார்கள், என்னென்ன ராகங்களைக்
கையாண்டார்கள்,
பல்லவிக்கு எடுத்துக்
கொண்ட ராகங்கள் எவை யெவை என்பதைக் கேட்டறிந்து. அலசி, எம்.எஸ்.ஸின் கச்சேரிக்கு சதாசிவம் தான் நிரல் தயாரிப்பார்.
இவ்வளவு நேரம் படித்து
சலித்திருந்தவர்களுக்கு ஒரு ஜோக்:
டி. ராஜேந்தர் ஒரு
கச்சேரிக்குப் போனார். எப்படி இருந்தது என்று கேட்டார்கள். 'தாகத்துக்குக் காவேரி ராகத்துக்கு சாவேரி' என்றார் டி.ராஜேந்தர்.
தொடர்புள்ள பதிவுகள்:
(1) சுப்புடுவின் கட்டுரை அடுத்த ‘சங்கதி’யில் வரும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக