ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

உ.வே.சா - 5

மூன்று மகாமகங்களும், கும்பகோண புராணமும் 

உ.வே.சாமிநாதய்யர்


”என் சரித்திர”த்தில் மூன்று மகாமகங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் உ.வே.சா.  “மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின்  சரித்திர” த்திலும் ஒரு சிறிய பகுதி உள்ளது.  அக்காலப் பழக்க வழக்கங்களை அறிய அப்பகுதிகளை இங்கிடுகிறேன்.

[ சில்பி; மகாமகம் 1945 ]


1873 

[ ஆங்கிரஸ வருஷம் (1873). உ.வே.சா. பெரிய புராணத்தில் கண்ணப்ப நாயனார் புராணத்தைப் பாடம் கேட்டு வருகையில், அவருக்குப் பெரியம்மை பூட்டி விடுகிறது. அதனால் உ.வே.சா தன் அம்மானின் ஊராகிய சூரியமூலைக்கு ( திருவாவடுதுறைக்கு வடக்கே உள்ள ஊர்)  சென்றுவிடுகிறார்.   அந்த வருடம் நடந்த மகா மகத்தைப் பற்றி இப்படி “என் சரித்திரத்”தில் எழுதுகிறார். ]


அந்த வருஷம் (1873) மகாமக வருஷம். மகாமக காலத்தில்
கும்பகோணத்திற் பெருங்கூட்டம் கூடுமென்றும் பல வித்வத்சபைகள்
நடைபெறும் என்றும் கேள்வியுற்றிருந்தேன். ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் தம்
பரிவாரங்களுடன் சென்று தங்குவாரென்றும், பல வித்துவான்கள் அவர் முன்
கூடுவார்களென்றும், பிள்ளையவர்களும் அவருடன் போய்த் தங்குவாரென்றும் அறிந்தேன். “நம்முடைய துரதிர்ஷ்டம் எவ்வளவு கொடியது! பன்னிரண்டு வருஷங்களுக்கு ஒருமுறை வரும் இவ்விசேஷத்துக்குப் போய் வர நமக்கு முடியவில்லையே! பிள்ளையவர்களைச் சார்ந்தும் அவர்களோடு சேர்ந்து இப்புண்ணிய காலத்தில் நடக்கும் விசேஷங்களைக் கண்டு களிக்க முடியாமல் அசௌக்கியம் நேர்ந்து விட்டதே!” என்றெல்லாம் நினைந்து நினைந்து வாடினேன்.

சூரிய மூலையிலிருந்து சிலர் மகா மகத்துக்குப் போய் வந்தனர். அங்கே
சுப்பிரமணிய தேசிகரும் பிள்ளையவர்களும் வந்திருந்தார்களென்றும் * பல பல விசேஷங்கள் நடைபெற்றனவென்றும் அவர்கள் வந்து சொல்ல எனக்கும்
இயல்பாகவே இருந்த வருத்தம் பின்னும் அதிகமாயிற்று.



( *  இந்த விசேஷங்கள் என்ன  என்பதை உ.வே.சா.  “மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரத்”தில் சிறிது சொல்கிறார்.   “ தமிழ்நாட்டின் பல பாகங்களிலுள்ள ஜமீந்தார்களும் மிட்டாதார்களும் பிரபுக்களும் சிஷ்யகோடிகளும் வித்துவான்களும் அங்கு வந்து தேசிகரைத் தரிசித்து மகிழ்வடைந்தார்கள்; அந்த நகரிலுள்ள சைவப் பிரபுக்களிற் பலர் மகேசுர பூஜையும், பட்டணப் பிரவேசமும் மிகவும் சிறப்பாக நடத்தி வைத்தார்கள். சுப்பிரமணிய தேசிகர் ஒரு பெரிய சபை கூட்டி வித்துவான்களுக்கெல்லாம் ஏற்றபடி ஸம்மானம் செய்தனர். வந்தவர்களில் தமிழ்ப் பாஷையில் அபிமானமுள்ள பெரும்பாலோர் இவரைப் ( பிள்ளையவர்களைப்)  பார்த்து இவரின் வாக்கின் பெருமையையும் அருமையையும் பாராட்டித் தங்களுடைய இடத்திற்கு வந்து சிறப்பிக்க வேண்டுமென்று இவரைக் கேட்டுக்கொண்டு சென்றனர். “  ) 

1885

தாருண வருஷம் மாசி மாதம் (1885 மார்ச்சு) மகாமகம் வந்தது.
அப்போது கும்பகோணத்தில் அளவற்ற ஜனங்கள் கூடினர். தியாகராச
செட்டியாரும் வந்திருந்தார். திருவாவடுதுறையிலிருந்து ஸ்ரீ சுப்பிரமணியதேசிகர் பரிவாரத்துடன் விஜயம் செய்து கும்பகோணம் பேட்டைத் தெருவிலுள்ள தங்கள் மடத்தில் தங்கியிருந்தனர். பல கனவான்களும் வித்துவான்களும் வந்து அவரைக் கண்டு பேசி இன்புற்றுச் சென்றனர். அக்காலத்திலெல்லாம் நான் தேசிகருடனே இருந்து வந்தேன். அதனால் பல புதிய மனிதர்களை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது.

மடத்தின் ஆதரவில் வளர்ந்த எனக்கு என் உத்தியோக
வருவாயிலிருந்து தக்க சமயத்தில் ஏதேனும் ஒரு தர்மம் மடத்தில் நடத்த
வேண்டுமென்று ஓர் எண்ணம் இருந்தது. அதனை மகாமக காலத்தில்
நிறைவேற்றினேன். சுப்பிரமணிய தேசிகரிடம் நூறு ரூபாய் கொடுத்து,
“மடத்தில் மகேசுவர பூஜையில் ஒரு பாகத்துக்கு வைத்துக்கொள்ள வேண்டும்” என்று சொன்னேன். தேசிகர் மிகவும் மகிழ்ந்து. “மடத்துப் பிள்ளையாகிய நீங்கள் இப்படிச் செய்ய வேண்டியது அவசியமில்லையே” என்றார். நான் உசிதமாக விடை அளித்தேன். மகாமக விழா முடிந்தபின் திருவாவடுதுறைக்குத் திரும்புகையில் என் தந்தையாருக்கும் எனக்கும் பீதாம்பரங்களும், என் குமாரன் சிரஞ்சீவி கல்யாணசுந்தரத்திற்குச் சந்திரஹாரமென்னும் பொன்னாபரணமொன்றும் அளித்தார்.

1897

உத்தம சம்பாவனை

1897-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் மகாமகம் நடந்தது. அப்போது
கும்பகோணத்திற் கூடிய கூட்டம் கணக்கில் அடங்காது. திருவாவடுதுறை
ஆதீனகர்த்தராக விளங்கிய அம்பலவாண தேசிகர் தம்முடைய
பரிவாரங்களுடன் கும்பகோணம் பேட்டைத் தெருவிலுள்ள மடத்தில் விஜயம்
செய்திருந்தார். பல தேசங்களிலிருந்தும் பிரபுக்களும் வித்துவான்களும் வந்து
கூடினர்.

அப்போது தினந்தோறும் அம்பலவாண தேசிகருடைய முன்னிலையில்
வித்துவான்களுடைய உபந்நியாசங்களும் சல்லாபங்களும் நடைபெற்றன. ஒரு நாள் மிகச்சிறந்த வித்துவான்களைப் பூசித்து உத்தம சம்பாவனை செய்வதாக ஏற்பாடாகியிருந்தது. அம்பலவாண தேசிகர் ஆறு ஆசனங்களைப் போடச் சொல்லிப் பிரசித்தமான ஸம்ஸ்கிருத வித்துவான்கள் ஐவரை ஐந்து ஆசனங்களில் அமரச் செய்தார். அவர்கள் அமர்ந்த பிறகு என்னை நோக்கி “அந்த ஆசனத்தில் இருக்க வேண்டும்” என்று ஆறாவது ஆசனத்தைக் காட்டினார்.

எனக்குத் துணுக்கென்றது. வாழ்நாள் முழுவதும் சாஸ்திரப் பயிற்சியிலே
ஈடுபட்டு எழுத்தெண்ணிப் படித்துத் தாம் கற்ற வித்தைக்கே ஒளியை
உண்டாக்கிய அந்தப் பெரியவர்கள் எங்கே! நான் எங்கே? நான்
யோசனைசெய்து நிற்பதை அறிந்த தேசிகர், “என்ன யோசிக்கிறீர்கள்?
அப்படியே இருக்க வேண்டும்” என்றார். “இவர்களுக்குச் சமானமாக இருக்க
எனக்குத் தகுதி இல்லையே” என்றேன். தேசிகர், “தகுதி உண்டென்பதை இந்த
உலகம் அறியும். இவர்களைப் போன்ற மகா வித்துவான்கள் இந்த நாட்டில்
தேடிப்பார்த்தால் ஒருவேளை கிடைத்தாலும் கிடைப்பார்கள். தங்களைப் போல ஒருவர் அகப்படுவது அரிது” என்று அன்பொழுகக் கூறி வற்புறுத்தவே அந்த மகா மேதாவிகளுடைய வரிசையிலே பணிவோடு அமர்ந்தேன். இரட்டைச் சால்வையும் சம்மானமும் பெற்றேன். மணிமேகலையில் மேற்கொண்ட உழைப்பே அந்தப் பெருமைக்குக் காரணமென்று நான் எண்ணி இறைவன் திருவருளை வாழ்த்தினேன்.

கும்பகோண புராணம் 

கும்பகோண புராணத்தைப் பிள்ளையவர்கள் 1865-இல் இயற்றத் தொடங்கினார்; 1866-இல் அந்நூல் அச்சிடப் பட்டது. அதைத் “திருக்குடந்தைப் புராணம்” என்றும் சொல்வர்.

அதில் சிவபெருமான் அமுதகும்பத்தில் தோன்றியதைப் பற்றிக் கூறும் அழகான செய்யுள்களில் ஒன்று;

மேடமூர் மதலை கடகமென் மலர்க்கை 
. . விளங்கருஞ் சிங்கமென் மருங்குல் 
ஆடக மகரக் குழைச்செவி மீனம் 
. . அடுவிழி படைத்துலாங் கன்னி 
மாடமர் தரவ விருச்சிக மிதுனம் 
. . மரூஉந்தனு வதுவென வடியார்க் 
கூடவோ  ரிடபந் தோன்றிடும் பொருளோர் 
. . கும்பத்துத் தோன்றிய தன்றே  

[ மாடு அமர்தர அவிர் உச்சி கம் மிதுனம் மரூஉம் தனுவதுவென; கம் மிதுனம் மரூஉம் தனுவதுவென - மேகத்தையும் மிதுன ராசியையும் பொருந்தும் உயர்ச்சியையுடைய வில்லாகிய மேருமலையைப் போல,
இச்செய்யுளில் பன்னிரண்டு இராசிகளின் பெயர்களும் தொனித்தல் காண்க. ]
                          [  “மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் “ ] 





===========

தொடர்புள்ள பதிவுகள்: 

உ.வே.சா


மகாமகம் - 1945,1956

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

இன்று காலையில் இத்தமிழமுதம் பருகும்கால் வழக்கமாகப் பருகும் காஃபி ஆறிப்போனது. அமிழ்திற்குப்பிறகு நஞ்சு வேண்டாவென அதைக் கவிழ்த்தேன்

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி, கணேசன் ஸ்ரீநிவாசன்.