சனி, 21 ஜூலை, 2018

1123. காந்தி -36

30. சிறைகள் நிரம்பின
கல்கி

கல்கி’ யின் ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ என்ற நூலில்  30-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
===

பம்பாய்க் கலகங்கள் மகாத்மாவுக்கு ஆத்ம வேதனையை உண்டு பண்ணியிருந்தன. ஆனால் அந்தக் கலகங்கள் நிறுத்தப் பட்ட விதம் அவருக்குத் திருப்தியை அளித்தது. போலீஸ் முயற்சியினாலும் இராணுவ நடவடிக்கைகளினாலும் கலகம் அடக்கப்பட்டிருந்தால் அதில் மகாத்மாவுக்குச் சிறிதும் திருப்தி ஏற்பட்டிராது. ஆனால் சமூகத் தலைவர்களின் முயற்சிகளினாலேயே கலகங்கள் நின்று அமைதி ஏற்பட்ட படியால் மகாத்மாவுக்கு மீண்டும் சாத்வீகச் சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்தலாம் என்ற நம்பிக்கை பிறந்தது. ஆனாலும் அதற்கு முன்னால் சில முன் ஜாக்கிரதையான ஏற்பாடுகள் செய்ய வேண்டியது அவசியம் என்பதைக் கண்டார். நவம்பர் 23-ஆம் தேதி பம்பாயிலே கூடிய காரியக் கமிட்டியாரிடம் அந்த ஏற்பாடுகளைப் பற்றிச் சொன்னார்.

முந்தைய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் மாகாணங்களுக்குப் பொதுஜனச் சட்ட மறுப்புத் தொடங்கும் உரிமை கொடுத்திருந்தது அல்லவா? அந்த உரிமையை எந்த மாகாணமும் உபயோகிக்க வேண்டாம் என்று காரியக் கமிட்டி தீர்மானம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பர்தோலியில் தாம் இயக்கம் தொடங்கும்போது தேசத்தில் மற்ற இடங்களில் எல்லாம் அமைதியைப் பாதுகாத்து வந்தால் அதுவே தமக்குப் பெரிய உதவியாயிருக்கும் என்று கேட்டுக் கொண்டார்.

இன்னொரு முக்கியமான திட்டத்தையும் காரியக் கமிட்டியின் முன்பு மகாத்மா பிரேரேபித்தார். அதாவது தேசமெங்கும் பல தொண்டர்படை ஸ்தாபனங்கள் அப்போது இருந்தன. அந்த ஸ்தாபனங்களை யெல்லாம் ஒரே அமைப்பின்கீழ் கொண்டு வரவேண்டும். காங்கிரஸ் தொண்டர்கள், கிலாபத் தொண்டர்கள், கால்ஸா (சீக்கியத்) தொண்டர்கள் என்று தனித்தனி அமைப்பாயிராமல் ஒரே அகில இந்தியத் தேசீய தொண்டர் படை ஸ்தாபனம் ஆக்க வேண்டும். இதில் சேர்த்துக்கொள்ளப்படும் ஒவ்வொரு தொண்டரிடமும் குறிப்பிட்ட சில வாக்குறுதிகள் வாங்கிக்கொள்ள வேண்டும். அந்த வாக்குறுதிகளில் முக்கியமானவை :

1. "தொண்டர் படைத் தலைவர்களின் கட்டளைக்குத் தயங்காமல் கீழ்ப்படிந்து நடப்பேன்.
2. சொல்லிலும் செயலிலும் அஹிம்சா தர்மத்தைப் பாது காப்பேன்.
3. அமைதியைப் பாதுகாக்கும் கடமையைச் செய்வதில் ஏற்படும் அபாயங்களுக்குத் தயங்காமல் உட்படுவேன்."

இந்தமாதிரி வாக்குறுதி கொடுத்த தொண்டர்களைக் கொண்ட படைகளை நாடெங்கும் அமைத்து விட்டால், பம்பாயில் நடந்தது போன்ற கலவரம் வேறெங்கும் உண்டாகாமல் தடுக்கலாம் என்றும், அப்படி ஏற்பட்டாலும் உயிர்ச் சேதமில்லாமல் உடனே அமைதியை நிலை நாட்டி விடலாம் என்றும் மகாத்மா தெரிவித்தார். இதை ஒப்புக்கொண்டு காங்கிரஸ் காரியக் கமிட்டியார் அவ்விதமே தீர்மானம் செய்தார்கள்.

இந்தக் காரியக் கமிட்டிக் கூட்டத்துக்கு வந்திருந்தவர்களில் சிலருக்குப் பொது ஜனச் சட்ட மறுப்பை ஒத்திப் போடுவதில் அதிருப்தி இருந்தது. முக்கியமாக, தேசபந்து தாஸும், ஸ்ரீ வி ஜே. படேலும் பொதுஜனச் சட்ட மறுப்பைத் தள்ளிப் போடுவதை ஆட்சேபித்தார்கள். லாலா லஜபதிராயும் பண்டித மோதிலால் நேருவுங் கூடத் தங்கள் கட்சியை எடுத்துச் சொன்னதின் பேரில் ஸ்ரீ வி. ஜே. படேலைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் ஒப்புக்கொண்டார்கள்.

பம்பாயில் காரியக் கமிட்டிக் கூட்டம் முடிந்த பிறகு மகாத்மா சபர்மதி ஆசிரமத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். ஆசிரமத்திலும் அதிருப்தி கொண்ட ஒரு கூட்டத்தார் மகாத்மாவின் வரவுக்காகக் காத்திருந்தார்கள். அவர்கள் சூரத் ஜில்லாவைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும் ஊழியர்களுந்தான். அந்த ஜில்லாவில் பர்தோலி ஆனந்த் தாலூகாக்களில் நவம்பர் 23-ஆம் தேதியன்று பொதுஜனச் சட்ட மறுப்பு ஆரம்பிப்பதாக இருந்தது. பம்பாய்க் கலவரம் காரணமாக மகாத்மா அதை ஒத்திப் போட்டுவிட்டார். "பம்பாயின் குற்றம் காரணமாக எங்களைத் தண்டிப்பானேன்?" என்று சூரத் ஜில்லாக்காரர்கள் கேட்டார்கள். மகாத்மா பழையபடி அவர்களுக்குத் தம் கொள்கைகளை விளக்கிச் சொன்னார்.

"சுயராஜ்யம் சூரத் ஜில்லாவுக்கு மட்டும் நாம் கோர வில்லையே? இந்தியா தேசத்துக்கே கேட்கிறோமல்லவா? ஆகையால் இந்தியா தேசமெங்கும் அஹிம்சை பாதுகாக்கப் பட்டால்தான் பர்தோலியில் நான் இயக்கம் நடத்த முடியும்" என்றார். அவ்விதம் இந்தியா தேச மெங்கும் அமைதியை நிலை நாட்டுவதற்காகத் தேசீயத் தொண்டர் படை திரட்டும் திட்டம் போட்டிருப்பதைப் பற்றியும் கூறினார். "அந்த வேலை நடக்கிறபடி நடக்கட்டும். அதற்கிடையில் பர்தோலி தாலூக்காவுக்கு நான் வந்து சுற்றிப் பார்க்கிறேன். பொது ஜனச் சட்ட மறுப்பு ஆரம்பிப்பதற்கு வேண்டிய எல்லா நிபந்தனைகளையும் பூர்த்தி செய்திருக் கிறார்களா என்று தெரிந்து கொள்கிறேன்" என்றார்.

மகாத்மா வருவதாகச் சொன்னதே சூரத் ஜில்லாக்காரர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. மகாத்மாவும் பர்தோலிக்குச் சென்று சில தினங்கள் சுற்றுப் பிரயாணம் செய்தார். கிராமம் கிராமமாகப் போய்ப் பார்த்தார். அங்கங்கே பார்த்ததும் கேட்டதும் மகாத்மாவுக்குத் திருப்தி அளித்தது. சட்ட மறுப்புப் போருக்கு அவர் கூறிய நிபந்தனைகள் பெரும்பாலும் நிறைவேறி யிருந்தன.

பர்தோலி தாலூகாவில் சகல ஜனங்களும் கதர் உடுத்தியிருப்பதை மகாத்மா கண்டு மகிழ்ந்தார். ஒரு கிராமத்திலாவது சர்க்கார் பள்ளிக்கூடம் நடைபெறவில்லை யென்றும், தேசீய பாடசாலைகளுக்கே எல்லாப் பிள்ளைகளும் போகிறார்கள் என்றும் அறிந்தார். தாலூகாவில் ஒரு கள்ளுக்கடை கூடக் கிடையாது. எல்லாவற்றையும் அடியோடு மூடியாகி விட்டது. சர்க்கார் கோர்ட்டுகளுக்கு யாருமே போவதில்லை. தகராறுகளைப் பஞ்சாயத்துக்களின் மூலமாகவே தீர்த்துக்கொண்டார்கள். இவையெல்லாம் காந்திஜிக்கு மிக்க உற்சாகத்தை அளித்தது. பிரயாணத்தின் போது அங்கங்கே கண்ட சில குறைபாடுகளையும் நிவர்த்தி செய்யும்பாடி மகாத்மா எச்சரித்தார்.

உதாரணமாக ஒரு கிராமத்தில் சாதி ஹிந்துக்கள் ஒரு பக்கமாகவும் தீண்டாதார் இன்னொரு பக்கமாகவும் நின்றிருந்தார்கள். மகாத்மா இதைக்குறிப்பிட்டுக் காட்டியதும் எல்லாரும் ஒரே இடத்தில் கலந்து உட்கார்ந்து கொண்டார்கள்.

பர்தோலி சுற்றுப் பிராயணத்தினால் மொத்தத்தில் மிகவும் உற்சாகத்தை அடைந்து மகாத்மா சபர்மதி ஆசிரமத்துக்கு திரும்பி வந்தார். தேசமெங்கும் அமைதி காக்கத் தகுந்த தேசீயத் தொண்டர் படைகள் அமைக்கப் பட்டவுடனே பர்தோலியில் இயக்கம் ஆரம்பித்து விடலாம் என்ற நம்பிக்கை அவருடைய உள்ளத்தில் ஏற்பட்டது.


ஆனால் சபர்மதி ஆசிரமத்துக்கு மகாத்மா காந்தி திரும்பி வந்தாரோ இல்லையோ, தேசமெங்கும் சிறிதும் எதிர்பாராத புதிய நிலைமை ஒன்று ஏற்பட்டிருந்ததாகத் தெரியவந்தது. அந்த நிலைமையும் மகிழ்ச்சி தரத்தக்க நிலைமைதான். தேசமெங்கும் தொண்டர் படை அமைப்பதற்குச் செய்த ஏற்பாட்டின் காரணமாக அந்த விசே ஷ நிலைமை உண்டாயிற்று. லார்ட் ரெடிங் சர்காரின் ஆத்திர புத்தியினாலும் அந்தப் புதிய நிலைமை ஏற்பட்டது. பம்பாயில் வேல்ஸ் இளவரசர் வந்து இறங்கிய அன்றைக்கு ஆரம்பித்த கலவரம் மகாத்மாவின் மனதைப் புண்பாடுத்தியதல்லவா? அதைக் காட்டிலும் அதிகமாக அந்தக் கலவரத்தின் பூர்வாங்கமான பாரிபூரண ஹர்த்தால் லார்ட் ரெடிங்கின் மனதைப் புண்பாடுத்தியது. பம்பாயில் மட்டுமல்ல; அதற்குப் பிறகு வேல்ஸ் இளவரசர் சென்ற பெரிய நகரங்களில் எல்லாம் பரிபூரண ஹர்த்தால் நடைபெற்றது. நல்ல வேளையாக அங்கெல்லாம் கலவரங்கள் ஒன்றும் விளயவில்லை. மகாத்மாவின் உண்ணாவிரதமே எச்சரிக்கையா யிருந்து மற்ற இடங்களில் கலவரம் நடைபெறாமல் காப்பாற்றியது.

ஆனால் பம்பாய்க் கலவரத்தைப் பற்றி லார்ட் ரெடிங் அவ்வளவாகக் கவலைப்படவில்லை. பம்பாயில் ஹர்த்தால் பரிபூரணமாக நடந்ததையும் இன்னும் மற்ற இடங்களில் நடந்து வருவதைப் பற்றியுந்தான் அவருக்கு ஆத்திரம் உண்டாயிற்று. "வேல்ஸ் இளவரசரை இப்போது வரவழைக்க வேண்டாம்!" என்று சிலர் யோசனை கூறியதற்கு மாறாக, லார்ட் ரெடிங் வேல்ஸ் இளவரசரைப் பிடிவாதமாக வரச் செய்திருந்தார். வேல்ஸ் இளவரசர் விஜயம் செய்யும்போது இந்தியப் பொதுமக்களிடையே அமுங்கியுள்ள இராஜ பக்தி பொங்கி எழுந்து ததும்பும் என்றும், அதன் பயனாக மகாத்மாவின் ஒத்துழையாமை இயக்கம் பறந்து போய்விடும் என்றும் அப்பாவி லார்ட் ரெடிங் நம்பியிருந்தார்! அந்த நம்பிக்கை அடியோடு பொய்த்துப் போகும்படி தேசத்தில் காரியங்கள் நடந்து வந்தபடியால் லார்ட் ரெடிங்கின் ஆத்திரம் பொங்கிற்று. அந்த ஆத்திரத்தை எப்படிக் காட்டுவது, மகாத்மாவின் வளர்ந்து வரும் சக்தியை எந்த இடத்திலே தாக்குவது என்று லார்ட் ரெடிங் துடிதுடித்துக் கொண்டிருந்தார். அதற்கு ஒரு வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

பம்பாயில் நடந்தது போல் நடந்து விடாமல் தேசமெங்கும் அமைதியைப் பாதுகாப்பதற்காகத் தேசீயத் தொண்டர் படைகளை அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் காரியக் கமிட்டி தீர்மானித்த தல்லவா? அதன்படி தேசத்தின் பல பாகங்களிலும் தொண்டர் படைகள் அமைக்கத் தொடங்கினார்கள்.

"தொண்டர் படைகளை அமைப்பது சட்ட விரோதமான காரியம்" என்று லார்ட் ரெடிங்கின் சர்க்கார் ஒரு பெரிய வெடி குண்டைத் தூக்கிப் போட்டார்கள். அமைதியைக் காப்பதற்காகத் தொண்டர் படைகள் ஏற்படுகின்றன என்பதை அதிகார வர்க்கத்தார் ஒப்புக்கொள்ளவில்லை. சர்க்காரை எதிர்க்கவும் சட்ட மறுப்பு இயக்கத்தைப் பலப் படுத்தவுமே தொண்டர் படைகள் அமைக்கப்படுவதாக அதிகார வர்க்கத்தார் சொல்லி, தொண்டர் படைகளைச் சட்ட விரோத ஸ்தாபனங்கள் ஆக்கினர்.

அதே சமயத்தில் வேறு சில அடக்குமுறை பாணங்களும் அதிகார வர்க்கத்தின் தூணியிலே யிருந்து வெளிவந்தன. 'இராஜத்வே ஷக் கூட்டச் சட்டம்' என்று ஒரு சட்டம் இருந்தது. அதன்படி இராஜாங்கத்துக்கு விரோதமான பொதுக் கூட்டங்களைக் கூட்டக் கூடாதென்று தடுக்கலாம்.. மீறிக் கூட்டம் போட்டால் பலாத்தாரமாய்க் கலைக்கலாம். அல்லது கைது செய்யலாம். இதைத் தவிர, பழைய 144-வது பிரிவும் இருந்தது. தனிப்பட்ட தலைவர்கள் மீது வாய்ப்பூட்டு உத்திரவு போட இது உதவிற்று. இவ்விதமாக அந்தப் பிரசித்தி பெற்ற 1921-ஆம் வருஷத்து டிசம்பர் மாத ஆரம்பத்தில் இந்தியா தேசமெங்கும் எல்லாவித அடக்குமுறைச் சட்டங்களையும் அதிகார வர்க்கம் பிரயோகித்தது. இவ்விதம் ஏற்பட்டுள்ள புதிய நிலைமையில் என்ன செய்வது என்று நாட்டின் எல்லாப் பாகங்களிலிருந்தும் யோசனை கோரி மகாத்மாவுக்குத் தந்திகள் வந்தன.

அதிகார வர்க்கத்தாரின் அடக்குமுறையை எதிர்க்க வேண்டியதுதான் என்று காந்திஜி யோசனை கூறினார். பொது ஜனச் சட்ட மறுப்பு ஆரம்பிக்கும் விஷயம் வேறு; அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையை எதிர்க்கும் விஷயம் வேறு. முன்னது இந்தியா தேசத்தின் சுதந்திரத்துக்காக; இரண்டாவது ஜீவாதார உரிமையை நிலைநாட்டுவதற்காக. அங்கங்கே அமைதிக்குப் பங்கம் நேரும் என்ற பயம் இல்லாவிட்டால் தனிப் பட்ட தலைவர்களும் தொண்டர்களும் அநியாய உத்தரவுகளை மீறலாம் என்று மகாத்மா தெரிவித்தார். அவ்வளவுதான். தேசமெங்கும் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது. சில நாளைக்குள் அந்தப் புத்துணர்ச்சி பொங்கிப் பெருகி அலைமோதிப் பரவியது.

பம்பாய்க் கலவரம் காரணமாகப் பர்தோலி இயக்கத்தை மகாத்மா நிறுத்தி வைத்ததால் தேசத்தில் உண்டான மனத் தளர்ச்சி பறந்து போய்விட்டது.

டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி காந்தி மகாத்மா பர்தோலியிலிருந்து சபர்மதி ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தார். அவர் வந்ததும் லாகூரில் டிசம்பர் 4-ஆம் தேதி லாலா லஜபதி ராய் கைது செய்யப்பட்ட செய்தி வந்து சேர்ந்தது. லாலாஜியுடன் பண்டித சந்தானம், டாக்டர் கோபிசந்த் ஆகியவர்களும் கைது செய்யப்பட்டதாகத் தெரிந்தது. லாலாஜிக்குப் பதிலாக ஜனாப் ஆகா ஸப்தார் பஞ்சாப் மாகாண காங்கிரஸ் கமிட்டி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், வேலைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் லாகூரிலிருந்து வந்த செய்தி கூறியது. எல்லாவற்றிலும் முக்கியமாக லாகூரில் ஒருவித கலவரமோ, குழப்பமோ ஏற்படவில்லை.

இதைப்பற்றி மகாத்மா தமது சகாக்களிடம் சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருந்தபோது, லக்ஷ்மணபுரியிலிருந்து ஒரு செய்தி வந்தது. அங்கே பண்டித ஹரகர்நாத மிஸ்ரா, மௌலானா ஸலாமதுல்லா, சௌதரி கலிகுஸூமான் ஆகியவர்கள் கைதியானார்கள். லக்ஷ்மணபுரியிலும் அமைதி நிலவியது.

மறுநாள் 7-ஆம் தேதியன்று கல்கத்தாவில் ஸ்ரீ ஜிஜேந்திர லால் பானர்ஜியும், அஸ்ஸாமில் ஸ்ரீ பூக்கர்ன, ஸ்ரீ பர்தொலாய் ஆகியவர்களும் கைது செய்யப்பட்டார்கள் என்று செய்தி கிடைத்தது. 7-ஆம் தேதி இரவு மகாத்மா ஆசிரமவாசிகளுடன் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தார். பர்தோலியில் பிரயாணம் செய்தது போல் ஆனந்த் தாலுகாவில் 12-ஆம் தேதி பிரயாணம் தொடங்கப் போவதாகத் தெரிவித்தார். பிறகு எல்லாரும் தூங்கப் போனார்கள்.

இரவு 11 மணிக்கு "தந்தி!" "தந்தி!" என்ற கூக்குரல் எல்லாரையும் எழுப்பிவிட்டது. காந்தி மகானும் விழித்துக் கொண்டார். இரண்டு தந்திகள் அலகாபாத்திலிருந்து வந்திருந்தன. பண்டித மோதிலால் நேரு, பண்டித ஜவாஹர்லால் நேரு, பண்டித சாமலால் நேரு, ஸ்ரீ ஜார்ஜ் ஜோசப் ஆகியவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், உடனே மகாத்மாவின் குமாரர் ஸ்ரீ தேவதாஸ் காந்தியை அனுப்பவேண்டுமென்றும் ஸ்ரீ மகா தேவதேஸாய் தந்தி அடித்திருந்தார்.

இந்த முக்கியமான செய்திக்குப் பிறகு தூக்கம் ஏது? பண்டித மோதிலால் ஐக்கிய மாகாணத்தில் இணையில்லாத செல்வாக்கு வாய்த்திருந்தவர். அதிகார வர்க்கத்தாரும் அவரிடம் பெருமதிப்பு வைத்திருந்தார்கள். ஆகவே பண்டித மோதிலால் நேருவைக் கைது செய்தது சாதாரண விஷயம் அல்ல.பண்டித மோதிலாலைக் கைது செய்தார்கள் என்றால் பிரிட்டிஷ் சர்க்கார் தீவிர அடக்குமுறையைக் கையாளத் தீர்மானித்து விட்டார்கள் என்றுதான் அர்த்தம். ஆகையால், அடுத்தாற்போல் தேசபந்து தாஸையும் கைது செய்யலாம். ஏன்? மகாத்மா காந்தியைக் கைது செய்வதும் சாத்தியமேயாகும்.

இந்த எண்ணங்கள் எல்லாம் மகாத்மாவின் மனதில் மின்னல்போலத் தோன்றின. உடனே காந்திஜி என்ன செய்தார் தெரியுமா? ஸ்ரீ தேவதாஸ் காந்தியை அழைத்து உடனே அலகாபாத்துக்குப் புறப்படச் சொன்னார். பிறகு "எங் இந்தியா" வுக்குக் கட்டுரை எழுத உட்கார்ந்தார். அந்த கட்டுரையின் தலைப்பு "அன்பு-பகைமை அல்ல" என்பது. அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை ஆயுதத்துக்கு நம்முடைய பதில் ஆயுதம் அன்புதானே தவிர, பகைமை அல்ல என்ற கருத்துடன் மகாத்மா "எங் இந்தியா" வுக்குக் கட்டுரை எழுதினார். ஒருவேளை, தம்மைக் கைது செய்துவிட்டாலும் இந்தியப் பொது மக்கள் அன்பு நெறியையே கடைப்பிடிக்கவேண்டும் என்று அதில் குறிப்பாகத் தெரிவித்தார்.
-----------------------------------------------------------
( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக