திங்கள், 5 பிப்ரவரி, 2018

980. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 5

மகாகனம் சீனிவாச சாஸ்திரியார் -2 
அ.ச.ஞானசம்பந்தன்

தான் படிக்கும்போது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராய் இருந்த சாஸ்திரியாரைப் பற்றி அறிஞர் அ.ச.ஞா அவர்கள் எழுதிய கட்டுரையின் இன்னொரு பகுதி !  தன்னுடைய கலப்புத் திருமண நிகழ்ச்சியைச் சுவைபட விவரிக்கிறார் அ.ச.ஞா!  பலரும் அறிந்திராத தகவல்கள் உள்ள கட்டுரை!
====

இனிச் சொல்லப்போகின்றது எனக்கு அவர் செய்த பேருபகாரம் ஆகும்.

1940இல் எம்.ஏ. (M.A.) பரீட்சைக்குப் பணம் ரூபாய் அறுபது கட்ட வேண்டும். அதற்கு முன்னரே பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி வகுப்பில் படித்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணை விரும்பி அவளைத் திருமணம் செய்துகொள்வதாகவும் முடிவு செய்துவிட்டேன். என்னுடைய சாதியைச் சேராத அப்பெண்ணைக் கலப்புமணம் செய்துகொள்வது என்பது அந்நாளில் மிகப் பெரிய புரட்சியாகும். இச்செய்தியறிந்த என் தந்தையார் பரீட்சைக்குக் கட்டுவதற்குரிய பணத்தை அனுப்ப மறுத்துவிட்டார். பணத்தை அபராதத் தொகையுடன் சேர்த்துக் கட்டவேண்டிய கடைசி நாளாகும் அது. குடும்ப நண்பராகிய நாட்டார் ஐயா அவர்களும் தந்தையாரின் கோபத்திற்கு அஞ்சிப் பணம் தர மறுத்துவிட்டார்.

 வேறு வழியே இல்லாமல் என் காதலியின் இரண்டு ஜோடி தங்க வளையல்களைப் பெற்றுக்கொண்டு சிதம்பரத்திலுள்ள இந்தியன் வங்கிக்குக் சென்றேன். எடை முதலியன பார்த்தபிறகு 60 ரூபாய் கொடுக்கச் சம்மதித்து விட்டார்கள். விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யும் போது, முகவரி என்ற பகுதியில், “93, கிழக்கு வளாகம், மாணவர் விடுதி, அண்ணாமலை நகர்” என்று எழுதினேன். இதைப் பார்த்த வங்கி அதிகாரி, “கொஞ்சம் இருங்கள்” என்று சொல்லிவிட்டுக் காவல் நிலையத்திற்கு போன் செய்துவிட்டார். ஒரு காவலர் வந்து “மாணவர் விடுதியில் தங்கியுள்ள உனக்கு நான்கு வளையல்கள் எப்படிக் கிடைத்தன? காவல் நிலையத்திற்கு வா” என்றார். நல்ல வேளையாக என்னுடைய புத்தி அப்போது நன்கு பணி செய்தது. தொலைபேசியில் துணைவேந்தரை அழைத்து, நடந்தவற்றைக் கூறினேன். வழக்கம்போலக் "கம்மனாட்டி! எங்கிட்ட வந்து கேட்காமல் எதற்காக ராஜம்மாவின் வளையல்களை வாங்கினாய்?" என்று திட்டிவிட்டு, அதே தொலைபேசியில் வங்கி மேலாளரை அழைத்து, “உடனே உங்களுடைய காரில் அவனை என் வீட்டுக்கு அனுப்புங்கள்” என்றார். காவல் நிலையம் போகாமல் துணைவேந்தர் இல்லத்திற்குச் சென்றேன். உடனே, அவர் பணத்தைக் கொடுத்துப் பல்கலைக்கழக அலுவலகத்தில் கட்டுமாறு பணித்தார். இது அந்த மாமனிதரின் மற்றொரு பகுதி.

சென்னைக்கு வந்து வேலை பார்க்கத் தொடங்கினேன். தங்கசாலைத் தெருவில், டாக்டர் தருமாம்பாள் அம்மாள் வீட்டின் பக்கத்தில் ஒரு சிறு பகுதியில் குடியிருந்தேன். 1940 செப்டம்பர் 13ஆம் தேதி, ஆவணி கடைசி நாளுக்கு இரண்டு நாள் முற்பட்ட நாள் என்பதறிந்தேன். 15க்குள் (ஆவணி 30க்குள்) திருமணம் நடைபெறாவிட்டால் தந்தையார் தடுத்துவிடுவார் என்ற அச்சம் மிகுந்திருந்தது. சின்னையா ( திருவிக) அவர்களிடம் சென்று இராஜம்மாளை அழைத்துக்கொண்டு வந்து திருமணம் செய்துகொள்ளப் போவதைச் சொல்லிவிட்டு அண்ணாமலை நகர் விரைந்தேன். மகளிர் விடுதியில் தங்கியிருந்த இராஜம்மாளை அழைத்துச் செல்ல எனக்கு எவ்வித உரிமையும் இல்லை. விடுதித் தலைவரும் என் சொற்களை நம்பவில்லை. வழக்கம்போல் துணைவேந்தரிடம் வந்து நடந்தவற்றைக் கூறி, இன்று அவள் என்னுடன் வராவிட்டால் திருமணம் நடைபெறாது என்பதை அறிவித்தேன்.

என்னை நன்கு அறிந்திருந்த துணைவேந்தர் மகளிர் விடுதிக் காப்பாளரைத் தொலைபேசியில் அழைத்து “மங்களம்! (விடுதிக்காப்பாளர்) இராஜம்மாளை இவனுடன் அனுப்பிவிடு. திருமணத்தை முடித்துக்கொண்டு ஒரு வாரத்தில் கொண்டுவந்து விட்டுவிடுவான். இது என்னுடைய ஆணை” என்று கூறினார். அன்று இரவே அவளை அழைத்துக்கொண்டு வந்து 1940 செப்டம்பர் 15 அன்று தமிழ் முறைப்படி திருமணம் செய்துகொண்டேன். அக்கினி வளர்த்து, வேயுறு தோளிபங்கன், மண்ணில் நல்ல வண்ணம் என்ற இரு பதிகங்களையும் யார் பாடினார் என்று நினைக்கிறீர்கள்? இசையரசு எம்.எம்.தண்டபாணி தேசிகர் அவர்களே இப்பதிகங்களைப் பாடினார்கள். அரைப் பவுனில் 'ஓம்' என்ற எழுத்துக்களுடன் புது முறையில் தாலி செய்து அதனை அணிவித்தேன்.

1942 செப்டம்பரில் என் மனைவியையும் பிறந்த ஏழுமாதமாகிய முதற் குழந்தையையும் அழைத்துக் கொண்டு மகாகனம் சாஸ்திரியார் அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றேன். குழந்தையை அவர் திருவடிகளில் போட்டு இருவரும் வணங்கினோம். அதோடு அவர் எனக்குத் தந்திருந்த அறுபது ரூபாயையும் மேசைமேல் வைத்தேன். மாபெரும் அறிவாளியாகிய அவர் தாம் அன்போடு என்னை அழைக்கும் 'கம்மனாட்டி என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. மனைவியோடும் குழந்தையோடும் வந்திருந்த என்னைப் பார்த்து இந்த சொல்லைச் சொல்வது சரியன்று என்று நினைத்தார்போலும். ‘என்னடா, நல்லா இருக்கியா' என்று தொடங்கினார். நான் எதற்காக மேசைமேல் பணத்தை வைத்தேன் என்று புரிந்துகொண்ட அவர், பெருத்த சிரிப்புடன் அந்தப் பணத்தை எடுத்து, குழந்தையின் கையில் திணித்து விட்டார். உடனே எங்களைப் பார்த்து ” இந்தப் பணம் உங்களுக்குச் சொந்தமில்லை. இது நான் குழந்தைக்குக் கொடுத்தது. இதை அவன் பெயரில் போட்டு வையுங்கள்”  என்று ஆசி வழங்கினார். அந்த மகானின் ஆசியால் அன்று குழந்தையாய் இருந்த மகன் மெய்கண்டானோடு அனைவரும் நன்றாக இருக்கிறோம். .

மகாகனம் சீனிவாச சாஸ்திரியார் அவர்கள் என்பால் கொண்ட அன்பிற்கும் நம்பிக்கைக்கும் என் திருமணமே சான்று. அறுபது ஆண்டுகள் கழித்தும் அந்த மாமனிதர் எனக்குச் செய்த உபகாரத்தை நன்றியுடன் நினைவு கூர்கிறேன். இதனை இவ்வளவு விரிவாக எழுதுவதற்கு ஒரு காரணமுண்டு. உலகம் முழுவதும் நன்கறிந்த மகாகனம் சீனிவாச சாஸ்திரியார் மாணவர்களோடு சேர்ந்து கொட்டமடிப்பதும், மகாத்மா காந்திக்குக் கடிதம் எழுதியதும், என்போன்ற ஏழைச் சிறுவன் ஒருவனுக்குப் பரீட்சைக்குப் பணம் கட்ட உதவியதும், பின்னர் என் திருமணம் நடைபெற உதவியதும் இன்றுவரை உலகம் அறிந்திராத அப்பெருமகனின் செயல்களாகும்.

[ நன்றி: “நான் கண்ட பெரியார்கள்” அ.ச.ஞா ] 

தொடர்புள்ள பதிவுகள் :

1 கருத்து:

RV சொன்னது…

https://siliconshelf.wordpress.com/2017/04/19/அ-ச-ஞானசம்பந்தன்-எழுதிய-ந/

கருத்துரையிடுக