திங்கள், 30 ஜூலை, 2018

1130. சசி -15: மீண்ட காதல்

மீண்ட காதல்
சசி 


''நான் செய்ததெல்லாம் தப்பிதம்! மன்னித்துவிடுங்கோ! உங்களுக்கு என் மேலே அவ்வளவு அன்பு இருக்கும்னு தெரிஞ்சு கொள்ளாதது என்னுடைய பிசகுதான்! எழுந்திருங்கோ! காபி ஆறிப் போகிறது. பாதாம் ஹல்வா பண்ணியிருக்கேன். சீக்கிரமா வந்து சாப்பிட்டாத்தான், உங்களுக்கு என் மேலே கோபம் இல்லேன்னு அர்த்தம். அப்பத்தான் என் மனசு திருப்தி அடையும்'' என்று கூறியவாறு, என் மனைவி ஒரு காதல் பார்வையை என் மீது செலுத்திவிட்டுச் சடக்கென்று என் கையை கெட்டியாகப் பிடித்துச் சமையலறைக்கு இழுத்துக் கொண்டு போனாள்.

எனக்கு ஒரே ஆச்சரியம்! அன்று காலையில் எங்களுக்குள் நடந்த சண்டையை நீங்கள் அறி வீர்களானால், உங்களுக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

புது வருஷம் பிறக்கப் போகிறதே, குடும்ப சம்பந்தமாக ஏதாவது ஒரு நல்ல தீர்மானமாகச் செய்துகொண்டு, அதன்படி நடக்க முயற்சிக்கலாமே என்ற உத்தேசத்துடன், மங்களத்தைக் கூப்பிட்டு, ''இந்த வருஷம் புதிதாக என்ன தீர்மானம் செய்து கொள்ளலாம்?'' என்று கேட் டேன். ''என்ன தீர்மானம் செய்து கொண்டால் என்ன? அதன்படி ஒரு தடவையாவது நீங்கள் நடந்து கொண்டதுண்டோ?'' என்று என்னையே திருப்பிக் கேட்டாள்.

''போனதை விட்டுத் தள்ளு! இந்த வருஷம் சிக்கனமாக இருக்கலாமென்று பார்க்கிறேன்...''

''என்னைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பி விடுங்களேன்! செலவு எல்லாம் என்னால்தானே? நான் தொலைந்தால், எல்லாப் பணமுமே உங்களுக்கு மிச்சம்!''

இதற்கு நான் பதில் சொல்ல, அதற்கு அவள் பதில் சொல்ல, கடைசியில் அவள் தன் தலையில் படார், படார் என்று போட்டுக் கொண்டு சமையலறைக்குப் போய்விட்டாள். நான் என் அறைக்குப் போய்விட்டேன்.

சாதாரணமாக, எங்களுக்குள் சண்டை ஏற்பட்டால், குறைந்தது ஒரு வாரமாவது நீடித்திருக்கும். ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள மாட்டோம். அப்படி இருக்க, சண்டை நடந்த தினமே அவள் மேற்கூறியவாறு என்னிடம் மன்னிப்புக் கேட்டு வந்தால், ஆச்சரி யமாக இருக்காதா?

ஆனால், என் ஆச்சரியமெல்லாம் சிறிது நேரத்திற்குள்ளாகவே பறந்துபோய்விட்டது. ஆமாம், அவளுக்கும் பக்கத்து வீட்டுக்காரிக்கும் நடந்த சம்பாஷணையை நான் ஒட்டுக்கேட்டுவிட்டேன்!

''இவ்வளவு சீக்கிரமாகவா உங்களுக்குள்ளே சமாதானம் ஏற்பட்டுவிட்டது?'' என்று பக்கத்து வீட்டுக்காரி ஜன்னல் வழியாக என் சம்சாரத்தைக் கேட்டாள். அதற்கு என் சம்சாரம், ''உனக்காக நான் என் உயிரையும் விடத் தயார்! நான் செய்ததெல்லாம் தப்பிதம். மன்னித்துவிடு!' அப்படின்னு என் புருஷர் ரொம்பக் கேட்டுக்கொண்டார். 'சரி'ன்னு நானும் சமாதானமாகி விட்டேன்'' என்று பதில் சொன்னாள்.

அப்போதுதான் எனக்கு விஷயமே புரிந்தது. நான் கோபித்துக் கொண்டு என் அறைக்குப் போனதும், 'மனைவியை வெல்வது எப்படி?' என்ற புஸ்தகத்தை எடுத்துப் படித்துக்கொண்டிருந்தேன். ''எப்படிப்பட்ட சண்டையாக இருந்தாலும், 'உனக்காக நான் உயிரையும் விடத் தயார்! நான் செய்ததெல்லாம் தப்பிதம்! மன்னித்து விடு!' என்று மனைவியிடம் சொல்லிவிட்டால், அவள் கோபம் தணிந்து, மீண்டும் காதலுடன் நடந்துகொள்வாள்'' என்று அதில் போட்டிருந்தது.

அதைப் படித்தபோது எனக்கு ஆத்திரமே உண்டாயிற்று. ''உனக்காக என் உயிரையும் விடத் தயார்! நான் செய்ததெல்லாம் தப்பிதம்! மன்னித்து விடு!'' என்ற வாக்கியத்தை ஆத்திரமாகவும் பரிகாசமாகவும் பல தடவை உரக்கச் சொல்லிச் சிரித்தேன்.

என் மனைவி அதை அறைக்கு வெளியேயிருந்து ஒட்டுக்கேட்டிருக்கிறாள். உண்மையிலேயே நான் அவ்வாறு மன்னிப்புக் கேட்டுப் புலம்புகிறேன் என்று தீர்மானித்துக்கொண்டு, என்னிடம் அன்போடு பேச வந்திருக் கிறாள், தன் கோபத்தையெல்லாம் மறந்து!

[நன்றி: விகடன்]

தொடர்புள்ள பதிவுகள்:

சசி: மற்ற சிறுகதைகள்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக