சனி, 15 செப்டம்பர், 2012

பாரதி மணிமண்டபம் - 5

பாரதி பற்றி ராஜாஜி

முந்தைய பகுதிகள்:


பா.ம-1 , பா.ம -2 , பா.ம -3, பா. ம -4 




( தொடர்ச்சி)


ராஜாஜியின் பேச்சில் மூன்று விஷயங்கள் முக்கியமானவை என்கிறார் கல்கி. அவை: 1) பாரதியாரைப் பற்றிய ராஜாஜியின் சொந்த அனுபவங்கள் 2) பாரதியின் கவிதைச் சிறப்பு 3) பாரதியைப் போற்ற வேண்டிய முறை.

கல்கியின் எழுத்திலேயே  முதல் விஷயத்தில் சில பகுதிகளைப் பார்க்கலாம்:

இந்நாளில் பலர் பாரதியாரைப் பற்றித் தங்களுடைய சொந்த அனுபவங்களையும் ஞாபகங்களையும் சொல்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் விடப் பாரதியாரை எனக்கு அதிகமாய்த் தெரியும்; அதிக காலமாயும் தெரியும். இதற்குக் காரணம் என்னவென்றால், அவர்கள் எல்லோரையும் விட எனக்கு வயது அதிகம் .( சிரிப்பு). அவருடைய மாமாவைத் தவிரச் சொல்லுகிறேன். வயது அதிகமானதினாலேயே சில விஷயங்களில் அனுபவமும் அதிகமாய்த் தானே இருக்கவேணும்?

1906-ம்  வருஷத்திலேயே பாரதியாரை எனக்குத் தெரியும்.அவரும் நானும் கல்கத்தா காங்கிரஸுக்கும் அடுத்த வருஷம் சூரத் காங்கிரஸுக்கும் போனோம். பாரதியார் தீவிரவாதி. நானும் அப்போது அப்படித்தான். அந்தக் காலத்தில் தீவிரவாதம் என்றால் சாதாரண விஷயமல்ல. சூரத் காங்கிரஸில் நாற்காலிகள் வீசி எறியப்பட்டன.செருப்புகளும் பறந்தன. ஆனால் இந்த அமர்க்களமெல்லாம் நடந்து கொண்டிருந்தபோது பாரதியார் தூரத்தில் போய் ஸ்ரீ ஜி.ஏ.நடேசனுடன் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கவிஞராகையால் அப்படிச் செய்தார். கவிகள் சாதாரண மனிதர்கள் போல் காரியங்களில் இறங்கிவிட்டால் அவர்கள் கவிகளாயிருக்க முடியாது.

. . . // . . .

(பாரதியார்)  தமக்காக ஒரு பாட்டும் பாடிக் கொடுத்தார் என்று ராஜாஜி சொன்னார். அந்தக் காலத்திலேயே பௌதிக நூல்களைத் தமிழ்ப்படுத்த வேண்டும் என்ற முயற்சி சேலத்தில் ராஜாஜியினால் தொடங்கப் பட்டிருந்தது. தமது இயக்கத்துக்குச் சாதகமாகப் பாரதியாரை ஒரு பாடல் பாடித்தரும்படி கேட்டுக்கொண்டார். அதன் பேரில்தான் ‘ஆதிசிவன் பெற்றுவிட்டான்’ என்ற பாடலைப் பாரதியார் பாடினார். அந்தப் பாட்டினால் பௌதிக சாஸ்திரத்தைத் தமிழிலே சொல்ல முடியாது என்று எண்ணுகிறவர்களைக் குறித்து , ‘என்றந்தப் பேதை உரைத்தான்’ என்று காரசாரமாகப் பாரதியார் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.

. . . // . . .

ஒத்துழையாமை இயக்கத்தை முன்னிட்டு ராஜாஜி வக்கீல் தொழிலை விட்டபோது, பாரதியார் , “வக்கீல் தொழிலை விடுவதாவது! பைத்தியக்காரத்தனம்! உனக்குப் பணம் வேண்டாமென்றால் சம்பாதித்து என்னிடம் கொடு!” என்று சொன்னதைக் குறிப்பிட்டு, பிற்பாடு பாரதியார் தமது கருத்தை மாற்றிக் கொண்டதையும் தெரிவித்தார்.

பாரதியார் திலகர் கோஷ்டியைச் சேர்ந்தவர். முதலில் அவருக்கு மகாத்மாகாந்தியின் இயக்கத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால் அந்த இயக்கம் தேசத்தில் பலமாகத் திரண்டு எழுந்ததைக் கண்டதும் தமது கருத்தை மாற்றிக் கொண்டார். மகாத்மாவைப் பற்றிப் பாடலும் பாடினார் “ என்று குறிப்பிட்டார்.


1935-இல் எழுந்த “பாரதி மகாகவியா? இல்லையா” என்ற விவாதம் ராஜாஜிக்கு மனத்தில் தோன்றியிருக்க வேண்டும். அதைப் பற்றி நேரிடையாகக் குறிப்பிடாமல், சில வார்த்தைகள் சொன்னார்:

‘கல்கி’யின் சொற்களில், ராஜாஜி சொன்னது :

...... ரோஜாப் புஷ்பம் உயர்வானதா, மல்லிகைப் புஷ்பம் உயர்வானதா என்பது போன்ற வீண் விவாதங்களும் செய்யக் கூடாது.  நமக்கு ரோஜா, மல்லிகை எல்லாம் வேண்டியதுதான்.சிலர் குழந்தைகளைப் பார்த்து ‘உனக்கு அப்பா வேண்டுமா? அம்மா வேண்டுமா?’ என்று கேட்பதுண்டு. அப்படிக் கேட்கிறவர்களைக் கன்னத்தில் அறையலாம் என்று எனக்குத் தோன்றும். அதுபோலவே, கவிகளில் எந்தக் கவி உயர்ந்தவர் என்று விவாதிப்பதும் தவறு. ‘கம்பர் உயர்ந்தவரா? பாரதி உயர்ந்தவரா? என்றெல்லாம் விவாதிக்கக்  கூடாது. நமக்குக் கம்பரும் வேண்டும்; பாரதியும் வேண்டும். உண்மைக் கவி எது என்று தெரிந்துகொண்டு எல்லாவற்றையும் அநுபவிப்பதற்கு முயற்சிக்க வேண்டும். “


இறுதியில் கல்கி வந்தனோபசாரம் கூற எழுந்தார்:   அவருக்கே உரித்தான நகைச்சுவையுடன் ,

பல வருஷ காலமாக எந்தக் காரியத்திலும் ராஜாஜியை ஆதரிப்பது எனக்கு வழக்கமாய்ப் போயிருக்கிறது. இன்றைக்கு ஒரு நாளாவது அவரை மறுத்துப் பேசும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ராஜாஜி இந்தப் பாரதி ஞாபகச் சின்ன விஷயமாக நான் செய்த முயற்சியைக் குறித்து ஏதாவது பாராட்டிப் பேசுவார் என்றும், அதை நான் மறுத்து, “அப்படி ஒன்றும் நான் பிரமாதமாய்ச் செய்துவிடவில்லை’ என்று தெரியப் படுத்தலாம் என்றும் நினைத்திருந்தேன். ஆனால் ராஜாஜி நான் எதிர்பார்த்தபடி சொல்லவில்லை. ‘கல்கி’ என்ன பிரமாதமாய்ச் செய்துவிட்டார்? ஒன்றும் இல்லை; பாரதியார் பாடல்களுக்காக அல்லவா பணம் வந்தது ‘ என்று கூறினார். எனவே, இது விஷயத்திலும் ராஜாஜியை நான் ஆதரிக்க வேண்டியே வந்திருக்கிறது”

என்று தொடங்கி, பலருக்கும் நன்றி சொல்ல,  விழா இனிதே முடிந்தது.

இது வரை ‘கல்கி’ எழுதிய ‘மணிமண்டப அஸ்திவாரம் நாட்டு விழா’வைப் பற்றிய கட்டுரையின் சில பகுதிகளைப் பார்த்தோம்.

அதே விழாவைப் பற்றி ‘ஆனந்த விகடன்’ என்ன சொன்னது என்று பார்க்க வேண்டாமா? அதுவும் படங்களுடன்?

( தொடரும் )

அடுத்த பகுதி

பாரதி மணிமண்டபம்: மற்ற கட்டுரைகள் 

'கல்கி’ கட்டுரைகள் 

2 கருத்துகள்:

  1. Sir,
    May I have your permission to reproduce this in my blog, with due acknowledgement and thanks to you?

    I request a reply.
    Regards,
    Innamburan
    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    பதிலளிநீக்கு