வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

கவிதை இயற்றிக் கலக்கு - 9

 கவிதை இயற்றிக் கலக்கு” 

என்ற நூலைப் பற்றிய தகவல்கள், 
  

நூலின் பொருளடக்கம்

நூலைப் பற்றிச் சில அறிஞர்களின்  கருத்துகள்


அந்நூலில் உள்ள என்னுரை  நூலின் பின்புலத்தை விளக்கும் என்று நம்புகிறேன்.

என்னுரை
           
இணைய மடற்குழுக்களில் பங்கேற்கும் பல தமிழ் அன்பர்களின் ஆர்வமே இந்நூல் வெளிவர முக்கியக் காரணம். கவிதை இலக்கணத்தை முறையாக இணையம் வழியாகக் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற பலரின் விருப்பத்தை நிறைவேற்றப் பல கட்டுரைகளை ‘மரபிலக்கியம்’, ‘சந்தவசந்தம்போன்ற மடற்குழுக்களிலும், மன்றமையத்தின் (Forumhub) மையம்( Hub Magazine)  என்ற இணைய மின்னிதழிலும் எழுதத் துணிந்தேன். டொராண்டோவில் கவிதை இலக்கணத்தைப்  பற்றிச் சில பயிலரங்கங்களும் நடத்தினேன். கட்டுரைகளைப் படித்து, பயிற்சிகளை முனைந்து செய்த பலர் எழுப்பிய ஐயங்களும்  என் கல்விப் பயணத்தில் மிகவும் துணையாக இருந்தன. ஒரு கல்லூரியில் பாடம் நடத்துவது போன்ற அனுபவத்தையே மடலாடற் குழுக்கள் எனக்கு அளித்தன! இவற்றின் மூலம் , என் கட்டுரைகள் கீழ்க்கண்டவற்றில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்பது தெளிவாகத் தெரிந்தது.

1) கட்டுரைகள் தொடக்க நிலை மாணவர்க்கும், அதே சமயம் கவிதை இலக்கணம் சிறிது தெரிந்தோர்க்கும் பயனுள்ளவையாக இருக்கவேண்டும்.

2) முடிந்தவரை, ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் பல பயிற்சிகள் வேண்டும். முக்கியமாக, இலக்கணப் பகுதிகளிலாவது இவை கட்டாயம் இருக்கவேண்டும். [ என் சில கேள்விகளுக்கு விடை தேடத் திருக்குறள் முழுவதையும் படித்த மாணவ, மாணவிகள் உண்டு!]

3) பல இலக்கண நூல்களில் இல்லாத விருத்தங்கள், சந்தப் பாக்கள், வண்ணப் பாக்கள், சிந்துகள்  பற்றிய விவரமான விளக்கங்கள் இக் கட்டுரைகளில் இருக்கவேண்டும். 

எனக்கு உதவ அச்சில் இருக்கும் பல கவிதை இலக்கண நூல்களை வாங்கினேன். ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு வகையில் மிக அருமையாக இருந்தது. ஆனால், எந்த நூலும் இணைய வாசகர்கள் கேட்கும் எல்லா விஷயங்களையும் கொண்டதாக இல்லை. அதனால், நானே என்னறிவுக்குப் புலப்பட்ட வகையில்  இக் கட்டுரைகளைக் கடந்த ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்து, மாதமொரு கட்டுரையாக, எழுதி வந்தேன். அவற்றை, இப்போது நூலுக்காக, பல திருத்தங்கள் செய்து, புதிய முறையில் கோத்து, மேலும் பல பயிற்சிகள், சில விடைகள் இவற்றைச் சேர்த்து உங்களுக்கு அளிக்கிறேன். கட்டுரைகளை எழுதும்போது, மேலும் சில விஷயங்கள் என் கவனத்தைக் கவர்ந்தன.

4) முன்னோர்களின் பல பாடல்கள் முன்மாதிரிக் காட்டுகளாகக் கொடுக்கப் படவேண்டும்.  ( இவற்றுடன், என்னுடைய சில முயற்சிகளையும் சேர்த்திருக்கிறேன். ‘ஆர்வக் கோளாறுஎன்று இதை மன்னிக்கக் கோருகிறேன்!) புலவர் குழந்தையின் “தொடை அதிகாரம் இந்தப் பணியை அற்புதமாய்ச் செய்யும் ஒரு மாபெரும் பாடற் களஞ்சியம். முனைவர் சோ.ந.கந்தசாமியின் “தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும்என்ற நூல்களும் எனக்குப் பெரும் பொக்கிடமாக உதவின. இந்நூலில் முடிந்தவரை நான் பாரதி, கவிமணி, பாரதிதாசன்  போன்ற அண்மைக் காலக் கவிஞர்களின்  பாடல்களையும்,  பக்தி, காப்பியக் கால இலக்கியப் பாடல்களையும் பயன்படுத்தி உள்ளேன். கூடவே, யாப்பிலக்கண உதாரணச் செய்யுள்கள் நிறைந்த குமரகுருபரரின் 'சிதம்பரச் செய்யுட் கோவையையும், பாம்பன் சுவாமிகளின் “ திருவலங்கற்றிரட்டையும், யாப்பருங்கலத்தையும் பயன்படுத்தி உள்ளேன்.  
5) யாப்பிலக்கணம், பாக்கள், பாவினங்கள் என்று பல இலக்கண நூல்கள் கையாளும் வழக்கமான வரிசையை விட, எளிமையான, சில சீர்களே உள்ள பாடல்களிலிருந்து படிப்படியாக முன்னேறிக்  கடினமான, அதிக சீர்கள் கொண்ட பாடல் வடிவங்களைப் பின்பு கற்பது நலம் என்பது என் கருத்து.  முனைவர் இரா.திருமுருகனின் “ பாவலர் பண்ணையும், புலவர் குழந்தையின் “தொடை அதிகாரமும்  பெரும்பாலும் இந்நோக்கத்தை ஆதரித்தது போல் அமைந்திருந்தது  என் முயற்சிக்கு ஊக்கம் அளித்தது.

6) வெண்பா வடிவத்தில் இணைய அன்பர்களுக்கு இருந்த அளவுகடந்த ஆர்வத்தையும் நான் மிக விரைவில் உணர்ந்தேன்.  ( என் முதல் கட்டுரைக்குப் பின்னரே, “எப்போது வெண்பாப் பற்றி விவரமாக எழுதுவீர்கள்?என்று பலரும் கேட்டனர்.) வெண்டளை வெண்பாவில் மட்டும் இன்றி, விருத்தங்கள் முதல் சிந்துகள் வரை பற்பல பாடல் வகைகளிலும் இருப்பதைக் கவனித்தேன். அதனால், இவற்றை  மனத்தில் வைத்து நூலில் என் கருத்துகளையும் , இயல்களின் வரிசையையும் இணையக் கட்டுரைத் தொடர் வரிசையிலிருந்து மாற்றி அமைத்தேன். பல கட்டுரைகள், பயிற்சிகள் நூலுக்காகப் புதிதாக எழுதப் பட்டன. தளைக் கட்டுப்பாடுடன் சிறு சிறு வாக்கியங்கள், சொற்றொடர்கள் இயற்றும் பயிற்சிகளை நான் நூலின் ஆரம்ப இயல்களிலேயே தருவதற்கும் இது வழி வகுத்தது. கவிதை எழுதுவதற்கு மோனை, எதுகை, தளை இவை உள்ள உரைநடைப் பயிற்சிகள் அமைப்பதற்கும் இது உதவியது.


7) பெரும்பான்மை யாப்பிலக்கண நூல்கள் சந்தப் பாடல் இலக்கணத்தையோ, வண்ணப் பா இலக்கணத்தையோ விரிவாகச் சொல்வதில்லை என்பதைக் கவனித்தேன். அதனால், இவை யாவையும் என் நூலுக்குள் சேர்த்திருக்கிறேன்; ஆனால்,  வாசகர்கள் எல்லா இலக்கணத்தையும் முதலிலேயே படித்துச் சோர்வடையாமல் இருக்க, யாப்பிலக்கணத்தையும், பெரும்பாலும் ‘சந்தமற்றபாடல் வடிவங்களையும் முதல் பகுதியிலும், சந்த இலக்கணம், வண்ணப் பா இலக்கணம், சந்தப் பாடல்கள், சிந்துகள் போன்ற இசைப்பாக்கள் ஆகியவற்றை இரண்டாம் பகுதியிலும் அமைத்தேன். ( என் அமைப்பினால், சில சமயங்களில் நான் “கூறியது கூறல்என்ற குற்றத்திற்கு  ஆளாகி உள்ளேன் என்பதை அறிவேன். இதைப் பெரும்பான்மை  வாசகர்கள் மன்னிப்பர் என்றும் நம்புகிறேன்!)

நூலில் குற்றங்கள், குறைகள் இருப்பின், அவற்றைத் தயைசெய்து  எனக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன். யாவருக்கும் பயன்படும்படி பிழைதிருத்தங்களை  என் வலைப்பூவில் இடுவேன். புதிய பயிற்சிகளையும், வினாக்களையும் அங்கே இடவும் ஒரு வாய்ப்பு உள்ளது. 

கட்டுரைத் தொகுப்பைக் கூர்ந்து படித்துப் பல திருத்தங்களையும், நூலின் அமைப்புப் பற்றிப் பல முக்கியமான யோசனைகளையும்  கூறிய  கவிமாமணி இலந்தை சு. இராமசாமிக்கும் பேராசிரியர், டாக்டர்,  கவிஞர் வே.ச.அனந்தநாராயணனுக்கும் என் மனமார்ந்த நன்றி. 

வையவலையில் தமிழ்க்கவிதைக்கென்றே சந்தவசந்தம்என்ற ஒரு தனிக் குழுமத்தை நடத்திவரும் இலந்தை சு. இராமசாமி  சென்னைப் பாரதி கலைக் கழகத்தின்  கவிமாமணி பட்டமும், ‘சந்தத் தமிழ்க்கடல்’, ‘பாரதி பணிச்செல்வர்போன்ற பட்டங்களும் பெற்றவர்;  பேராசிரியர் அ.சீனிவாசராகவனின் மாணவர்.  இவருடைய சந்தப்பாக்கள் சந்தப் பாடல்களுக்கு ஓர் இலக்கணம் . விருத்தங்கள், சிந்துகள் இவற்றைப் பற்றிப் பல ஆய்வுகள் செய்தவர். ‘பொருனை வெள்ளம் சந்தவசந்தம்’, ‘வள்ளுவ வாயில்  போன்ற பல கவிதை நூல்களின் ஆசிரியர்.  என் நூலுக்குச் சிறந்த  அணிந்துரை வழங்கிய அவருக்கு என் மனமார்ந்த நன்றி.

பேராசிரியர் டாக்டர் அனந்தநாராயணன் மதுரையில் வித்துவான் மீ.கந்தசாமிப் புலவரிடம் தமிழ் கற்றவர். ஹாமில்டன் நகரிலுள்ள மக்மாஸ்டர் பல்கலைக் கழகத்தில் உயிர்வேதியியல் துறையில் பேராசிரியராக இருந்து அண்மையில் ஓய்வுபெற்றுள்ளார். பல்வகைக் கவிதைகளை இயற்றும் ஆற்றல் கொண்ட சிறந்த கவிஞர். கவிதை இலக்கணத்திலும், தமிழ் இலக்கியத்திலும் பெரும் ஆர்வம் கொண்டவர். இவருடைய கவிதைகள் பல தமிழிதழ்களிலும், இணைய மின்னிதழ்களிலும் வெளிவந்துள்ளன. இந்நூலுக்கு ஒரு சிறந்த நட்புரையை வழங்கிய இவருக்கு என் அன்பார்ந்த நன்றி. மனமுவந்து அவர் இந்நூலுக்கு ஒரு ‘சாற்றுக் கவிதையையும் வழங்கியுள்ளார்.     

நூல் வெளிவரப் பல உதவிகள் புரிந்த நண்பர் கவிமாமணி, கவியோகி வேதம் அவர்களுக்கும், நூலை அழகாகப் பதிப்பித்த திரு கார்த்திகேயன் அவர்களுக்கும் என் நன்றி.

 இந்நூல் சிலரையாவது தமிழ்க் கவிதை இலக்கணத்திலும், இலக்கியத்திலும் ஆர்வம் கொள்ள வைத்து, கவிதைகள் புனைய வைத்தால் அதுவே இந்நூலின் வெற்றி என்று கருதுவேன்.

============== 

முக்கியமான சில பிழைதிருத்தங்கள் 
-இல் உள்ளன. 

கூடிய விரைவில் நூலில் இடம்பெற முடியாத சில தகவல்களையும் இங்கே அவ்வப்போது எழுத எண்ணியிருக்கிறேன். 

தொடர்புள்ள பதிவுகள் :

கவிதை இயற்றிக் கலக்கு!

நூல் விவரங்கள்


LKM Publication
10, Ramachandra Street,
T.Nagar , Chennai - 600017
தொலைபேசி: 044_2814 2241
கைபேசி : 99406 82929.
கவிதை இயற்றிக் கலக்கு 
பக்கங்கள்: 384 விலை: Rs.180.00


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக