வெள்ளி, 6 மே, 2011

கவிதை இயற்றிக் கலக்கு - 6

’ கவிதை இயற்றிக் கலக்கு!’ நூலைப் பற்றிச் சில மதிப்புரைகள்:

1) ‘அமுதசுரபி’ ஆசிரியர் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் ஏப்ரல் 2011 ‘அமுதசுரபி’ இதழில் எழுதிய நூல் விமரிசனம்:2)   கவிமாமணி இலந்தை சு. இராமசாமியின் அணிந்துரையிலிருந்து சில பகுதிகள் :

. . . பேராசிரியர் பசுபதி ”கவிதை இயற்றிக் கலக்கு” என்னும் தலைப்பில் பாடம் நடத்தி மாணவர்கள் தெளிவாய் அறிந்து கொண்டு கவிதைகள் எழுதி, பாடங்களின் செழுமையையும் பாடம் நடத்தியவரின் திறமையையும் நிரூபித்திருக்கிறார்கள். அவர் நடத்திய பாடங்கள், அதன் பின் பலத்த ஆராய்ச்சியின் விளைவாக அவர் எழுதிய கட்டுரைகள் ஆகியவற்றின் தொகுதியாக இந்நூல் வெளிவருகிறது. நானறிந்த வரையில் இது ஆறாண்டு கால உழைப்பின் தொகுப்பு . . . . கவிதை இலக்கணம் பற்றி என்னென்ன நூல்களெல்லாம் எழுதப்பட்டிருக்கின்றனவோ அவற்றையெல்லாம் அலசி ஆராய்ந்து தனது ஆய்வின் பயனாகக் காலப்போக்கில் நிகழ்ந்துள்ள மாறுபாடுகளுக்கேற்ப யாப்பிலக்கண ஆய்வு நூலாக இதை அளித்திருப்பதுதான் இதன் சிறப்பு. . . . . பசுபதி அவர்கள் பேராசிரியராக இருக்கிற காரணத்தால் இதைப் பயில்வோருக்கு என்னென்ன ஐயங்கள் வரலாம் என்பதை முன் கூட்டியே ஆராய்ந்து அவ்வையங்களைத் தானே எழுப்பி விளக்கம் அளித்துவிடுகிறார். . . . அசை விருத்தங்கள், சந்த விருத்தங்கள், வண்ணம் ஆகியவற்றின் வேறுபாடுகளை இவ்வளவு விளக்கமாக நான் வேறு எந்த நூலிலும் கண்டதில்லை. அவற்றைப் பற்றிய எல்லா நூல்களையும் அலசி ஆராய்ந்து அவற்றிற்கான சரியான எடுத்துக்காட்டுகளுடன் அவர் விளக்கியிருப்பது பாராட்டிற்குரியது. . . இந்நூல் தமிழ் பேசும் இடங்களில் உள்ள எல்லாப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும், நூலகங்களிலும் இருக்க வேண்டிய ஒன்று.

3) பேராசிரியர் வே.ச. அனந்தநாராயணனின் நட்புரையிலிருந்து சில பகுதிகள்:

. . . அடிப்படைத் தமிழறிவுடன் முறையாகக் கவிதை எழுதுவதில் ஆர்வங் கொண்டவர்களோடு தோழமை கொண்டாடி அவர்கள் உள்ளப் பாங்கிற்கேற்பத் தற்கால அணுகு முறைகளைப் பின்பற்றி அமைக்கப்பட்ட இந்நூல் இவ்வகையில் ஒரு திசை திருப்பம் என்று கூறலாம். . . ஒரு நூலுக்குப் பெருமை தருவது அதன் கருப்பொருள் மட்டுமன்றி அதற்கான உண்மையானதும் தெளிவானதுமான விளக்கத்தைக் கூறும் நூலாசிரியனின் திறனும் ஆகும். பல்கலைக் கழக ஆசிரியராகப் பணியாற்றிய தமது அனுபவத்தின் முழுப்பயனையும் இந்த நூலில் பசுபதி தர முயன்றிருக்கிறார். அதன் விளைவாக, நூலாசிரியரே மாணவனாக மாறிக் கற்போரின் உள்ளத்தை அறிந்து எழுதும் அரிய நிகழ்ச்சியை நாம் நூலின் எல்லாப் பகுதிகளிலும் தெளிவாகக் காண்கிறோம். . . . நூலின் பிற்பகுதியில் விரிவாகத் தரப்பட்டுள்ள சந்தப்பாக்கள், வண்ணப் பாக்கள் பற்றிய இலக்கண விளக்கம் எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தந்த ஒன்று. இயற்றமிழை இசை, நாடகத் தமிழோடு இணைப்பது எழுத்துச் சேர்க்கைகளின் காலஅளவு ஆகும். குரு, லகு என்னும் கால அளவு கொண்ட குறிப்புகள் கொண்ட இப்பாவடிவங்கள் பற்றி எழுதப்பட்டுள்ள பண்டைய நூல்களைப் போல அன்றி, பசுபதி தமக்கே உரிய எளிய, ஆயின் கருத்துச் செறிந்த நடையில் தமது விளக்கங்களை அமைத்த விதம் மிகவும் அருமையானது. . . மற்ற யாப்பிலக்கண நூல்களில் காண இயலாத இந்தப் பயிற்சிப் பகுதியை இந்த நூலின் மிகச் சிறந்த தகுதிகளில் ஒன்றாக நான் கருதுகிறேன். தரப்பட்டுள்ள பயிற்சிகளின் பரப்பும் ஆழமும் அவற்றைத் தேர்ந்தெடுக்க ஆசிரியர் மேற்கொண்ட ஆய்வின் தீவிரத்தைக் காட்டுகின்றன. . . . இறுதியாக, இலக்கண நூல்கள் எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்கின்றது பேராசிரியர் பசுபதியின் ‘கவிதை இயற்றிக் கலக்கு’. யாப்பிலக்கணத்தை எளிதில் படித்துத் தேர்ச்சியடைந்து தரமான கவிதைகள் படைக்க விரும்பும் யாவருக்கும் இந்நூல் ஒரு வரப்பிரசாதம்.

தொடர்புள்ள பதிவுகள் :

கவிதை இயற்றிக் கலக்கு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக