சனி, 20 ஏப்ரல், 2019

1271. பாடலும் படமும் - 60

ஐம்பூதத் தலங்கள்  - 4
திருக்காளத்தி 
எஸ்.ராஜம்


[ ஓவியம்: எஸ்.ராஜம் ] 

ஸ்ரீ( சீ) - சிலந்தி; காளம்- பாம்பு ; அத்தி - யானை. சிலந்தியும் பாம்பும் யானையும் சிவபெருமானை வழிபட்ட தலம் திருக்காளத்தி.  ஐம்பூதத் தலங்களில் வாயுத் தலம்.
தென்கயிலை என்று பிரசித்தி பெற்றது. “ கயிலை பாதி, காளத்தி பாதி” என்று நக்கீரர் அந்தாதி பாடி முத்தி பெற்ற வரலாற்றை நாம் அறிவோம். மூவர் தேவாரமும் பெற்ற தலம். காளத்தியப்பருக்குப் பக்கத்திலேயே கண்ணப்ப நாயனாரும் உள்ளார். 

அருணகிரிநாதர் கண்ணப்பரைப் பற்றிச் சில திருப்புகழ்களில் பாடியுள்ளார்.
ஒரு பாடற் பகுதி இதோ:

பொக்க ணத்து நீற்றை யிட்டொ ருத்த னார்க்கு
     புத்தி மெத்த காட்டு ...... புனவேடன்

பச்சி லைக்கும் வாய்க்கு ளெச்சி லுக்கும் வீக்கு
     பைச்சி லைக்கு மாட்கொ ...... ளரன்வாழ்வே   ( மச்ச மெச்சு - சிதம்பரம் ) 

என்று காளத்தி முருகனை அழைக்கிறார் அருணகிரி.

[  விபூதிப் பையிலிருக்கும் திரு நீற்றை (நெற்றியில்) இட்டு விளங்கிய ஒப்பற்ற (சிவகோசரியார் என்னும்) அந்தணனுக்கு  உண்மை அறிவை நன்கு காட்டிய மலைக் கொல்லைக் காட்டு வேடன் (கண்ணப்பன்) தந்த 
 பச்சிலைப் பூஜைக்கும், அவன் வாயில் இருந்து உமிழ்ந்த எச்சிலாகிய அபிஷேகத்துக்கும்,  (அவன்) தோளில் கட்டியிருந்த வலிய வில்லுக்கும் வெகுவாக உகந்து அவனை ஆட்கொண்டருளிய சிவபெருமானுடைய செல்வக் குமரனே !  ]

இன்னொரு பாடல்:
”காளத்திநாதன்பால்     வைத்த   அன்பினால்  தன்  கண்ணையும் பெயர்த்தெடுத்த  கண்ணப்பன்  பெருமை   தமிழ்  நாடெங்கும்  பரவி நின்றது.     எல்லையற்ற    அன்பிற்கு    அவ்வேடர்   பெருமானே எடுத்துக் காட்டாயினார்.

“கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி
வண்ணப்ப ணித்தென்னை வாவென்ற வான்கருணைச்
கண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ”

என்று    வண்டை  நோக்கிப்  பாடும்   பான்மையில்  கண்ணப்பனது எல்லையற்ற   அன்பின்    திறத்தினை   மாணிக்க   வாசகர்   நன்கு விளக்கியுள்ளார். “  
( ரா.பி.சேதுப்பிள்ளை )

பாடலுக்குப் பதப் பொருள்:
கோத்தும்பீ - அரச வண்டே! கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு - கண்ணப்பருடைய அன்புக்கு ஒப்பான அன்பு, இன்மை கண்டபின் - என்னிடத்தில் இல்லாமை அறிந்தும், என் அப்பன் - என் தந்தை, என் ஒப்பில் - எதனோடும் ஒப்பில்லாத, என்னையும் ஆட்கொண்டருளி - என்னையும் அடிமையாகக் கொண்டருளி, வண்ணம் பணித்து - யான் ஒழுக வேண்டிய வகையைத் தெரிவித்து, என்னை வாவென்ற - என்னைத் தில்லைக்கு வருக என்று அருளிய, வான் கருணை - மேலாகிய கருணையையுடைய, சுண்ணம் - பொடியாகிய, பொன் நீற்றற்கே - அழகிய திருநீற்றையணிந்தவனிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக )

தொடர்புள்ள பதிவுகள்:
பாடலும், படமும்


காஞ்சிபுரம்

திருவானைக்கா

திருவண்ணாமலை

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக