"தமிழ்க்கடல்" இராய.சொக்கலிங்கனார்
சென்னையிலிருந்து காரைக்குடிக்கு வந்த புகைவண்டியில் இருந்து பலர் இறங்கி நடந்தனர். அவர்களுள் சிலர்,காரைக்குடி கம்பன் விழாவுக்கு வந்த ஒருவர்,"இந்த ஊர்ப்பக்கம் கடல் இருக்கிறதா?" என்று, தம்முடன் வந்த புலவர் ஒருவரிடம் கேட்டார்.
"இருக்கிறதே! அதோ அங்கே வண்டியிலிருந்து இறங்கி நடக்கிறதே! என்றவர், திகைத்து நின்ற நண்பரிடம்" ஆமாம்! அவர்தாம் தமிழ்க்கடல் இராய. சொ.! காரைக்குடியைச் சேர்ந்த கடல் அவரேதாம்! என்று பதில் உரைத்தார்" என்று மூத்த பத்திரிகையாளர் விக்கிரமனால், அறிமுகப்படுத்தப்பட்ட"தமிழ்க்கடல்" சிவமணி" "சிவம்பெருக்கும் சீலர்" முதலியபட்டத்துக்குரிய இராய.சொக்கலிங்கனாரின் பெருமைகளை இக்கால இளைய தலைமுறை அறிந்துகொண்டு,பயன்பெற வேண்டும்.
செட்டிநாடு,தமிழகத்துக்கு அளித்த பெருங்கொடைகளாகிய தமிழ்ப் பெரும்புலவர்கள் சிலருள், தலையாயவர் "தமிழ்க்கடல்" இராய.சொ.
காரைக்குடிக்கு அருகிலுள்ள அமராவதிபுதூரில்,நாட்டுக்கோட்டை செட்டியார் மரபில்,1898ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி இராயப்ப செட்டியார் - அழகம்மை ஆச்சி தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.
இளமையில்,காரைக்குடியில் சுப்பையா என்ற ஆசிரியரிடம் அரிச்சுவடியும், ஐந்தொகைக்கணக்கும் கற்றுக் கொண்டார்.தம் தந்தையார் கடைவைத்து வாணிகம் புரிந்த பாலக்காட்டில் தம் ஒன்பதாம் வயது வரையிலும் மலையாளத்துடன், தமிழையும் கற்றார்.
பதின்மூன்றாம் வயதில் பெற்றோருடன் பர்மாவுக்குச் சென்ற அவர், அங்கு "பிலாப்பம்" என்ற ஊரில் கடையில் பணிபுரிந்து பர்மிய மொழியுடன், ஆங்கிலத்தையும் கற்றுக் கொண்டார். தம் பதினேழாம் வயதில் காரைக்குடி திரும்பிய அவர், இருபதாம் வயது வரை பண்டித ஐயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களை முறையாகக் கற்றுக்கொண்டார்.
1918ஆம் ஆண்டு பள்ளத்தூரில், உமையாள் ஆச்சி என்பவரை மணந்து இல்லற வாழ்க்கையைத் தொடங்கினார். தமக்கு மகப்பேறு வாய்க்காத போதும், இராயவரம் குழந்தையன் செட்டியாரைத் தம் மைந்தனாகவும், அவர் மகள் சீதையைத் தம் பெயர்த்தியாகவும் கருதி மகிழ்ந்தார்.
1960ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி அவர் தம் மனைவியார் சிவபதம் பெற்றார். அதன்பிறகு,தாம் வாழ்ந்த அமராவதிபுதூர் வீட்டில் தனித்து வாழ விரும்பாமல் காரைக்குடி சிவன்கோயிலில் திருப்பணிகள் புரிந்தும்,சமய இலக்கிய விரிவுரைகள் ஆற்றியும் இறைச்சூழல்,தமிழ் இலக்கியம் மற்றும் நட்புச் சூழலில் மனஅமைதியை நாடினார்.
1917ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி சொ.முருகப்பாவுடன் இணைந்து "காரைக்குடி இந்துமதாபிமான சங்க"த்தை உருவாக்கினார்.
மகாகவி பாரதியார், அந்த இந்துமதாபிமான சங்கத்துக்கு வந்திருந்து காலத்தால் அழியாத ஏழு கவிதைகளை இயற்றி அச்சங்கத்தைப் போற்றினார். காரைக்குடி இந்துமதாபிமான சங்கம் ஒன்றே பாரதியாரின் பாடல்பெற்ற சங்கம் ஆகும்.
இராய.சொ.,வ.உ.சிதம்பரனார்,பாரதியார்,சுப்பிரமணிய சிவா, வ.வே.சு.ஐயர் முதலிய தேசியவாதிகளுடனும் மற்றும் பல தமிழறிஞர்களுடனும் நட்பும், அன்பும் பாராட்டி உறவாடினார். இந்துமதாபிமான சங்கத்தில் விவேகானந்தர் நூலகத்தை உருவாக்கி, அன்றாட உலக அரசியல் நிகழ்வுகளை அறிந்துகொள்ளும் வகையில் படிப்பகம் ஒன்றையும் நிறுவினார்.
1938ஆம் ஆண்டு முதல் 1941ஆம் ஆண்டுவரை காரைக்குடி நகரசபைத் தலைவராகப் பதவியேற்ற இராய.சொ. நான்காக இருந்த நகரசபை ஆரம்பப்பள்ளிகளை,பதினேழு பள்ளிகளாக விரிவாக்கம் செய்தார். தெருவிளக்குகளை நீலரச விளக்குகளாக மாற்றி நகருக்கே ஒளியூட்டினார்.
நகரசபையில்,"காந்தி மாளிகை" என்ற பெயரில் நகராட்சி அலுவலகக் கட்டடம் அவர் காலத்தில் தான் உருவாகி வளர்ந்தது.
பிரபந்தங்களுள் ஒன்றான "மடல்" என்ற சிற்றிலக்கிய வடிவில், பிழைகள் மலிந்து கிடந்த "வருணகுலாத்தித்தன் மடல்",என்ற நூலைப் பிழைநீக்கித் திருத்தமுறப் பதிப்பித்து, தம் தமிழ்ப்பணியை இராய.சொ.தொடங்கினார்.
1947ஆம் ஆண்டு திருக்குறள் - காமத்துப்பால் கருத்துகளைச் சிறப்புற விளக்கி, "வள்ளுவர் தந்த இன்பம்",என்ற நூலாக வெளியிட்டார். "தேனும் - பாலும்", என்ற திருவாசக விளக்கம், "காதற்பாட்டு",என்ற அகத்திணை விளக்கம்,"திருக்காரைப்பேர் மாலை",என்ற காளையார்கோயில் திருமுறை,"இராகவன் இசைமாலை",என்ற கம்பரின் பாடல்கள்,"மீனாட்சி திருமணம்" என்ற பெயரில் பரஞ்ஜோதியார் பாடல்கள், "சீதை திருமணப்பாடல்கள்",என்ற பெயரில் கம்பரின் பாடல்கள், "ஆழ்வார் அமுது", என்ற பெயரில் 400 பாசுரங்கள், "பிள்ளைத்தமிழ்"ப் பாடல்கள், "திருமணப்பாட்டு" என்ற பெயரில் திருமண நிகழ்ச்சிகள் பற்றிய பாடல்கள்,"தெய்வப் பாமாலை" என்ற பெயரில் தெய்வங்களுடன் பாரத மாதாவையும் போற்றிய பாடல்கள்,"அங்கங்களின் பயன்" என்ற பெயரில் உடலுறுப்புகளால் இறைவழிபாடு செய்தல் குறித்த பாட ல்கள்,"தேவாரமணி",என்ற பெயரில் மூவரின் முந்நூறு பாடல்கள், "திருப்பாவைப்பாட்டு", என்ற பெயரில் திருப்பாவை - திருவெம்பாவைப் பாடல்கள் ஆகிய தொகுப்பு நூல்களை, அவ்வப்போது உருவாக்கி வழங்கினார்.
தேசிய விடுதலைப் போரில் தாம் பெற்ற சிறைத் தண்டனையை பெரும் பரிசாகக் கருதி, காந்தியடிகளைப் பற்றிய 30 பகுதிகள் கொண்ட பாடல்களையும், தனித்தனியே பாடிய 8 பகுதிகள் கொண்ட பாடல்களையும் சேர்த்து, "காந்திய கவிதை" என்ற தாமே படைத்த தமிழ்ச் செய்யுள் நூலை வழங்கினார்.
இவற்றுடன், பல திருத்தலங்களுக்கும் பயணம் செய்ததன் பயனாக "திருத்தலப் பயணம்",என்ற உரைநடை நூலையும் இயற்றினார். இத்தலங்களுள்,ஒன்றாக காந்தியடிகள் பிறந்த "போர்பந்தர்" என்ற ஊரையும் இணைத்துப் போற்றியது இவர்தம் காந்தியப்பற்றைப் புலப்படுத்தும். எழுத்தால் மட்டுமல்லாமல் பேச்சாலும் பெரும்பணி புரிந்தவர் இராய.சொ.
நாட்டில் கம்பன் கழகங்கள் பலவற்றிலும், சமய மாநாடுகளிலும், விரிவுரையாற்றியதோடு,பட்டிமன்ற நடுவராய் விளங்கி ஆய்வு நோக்கில் தமிழ்ப்பாடல் நயங்களை நாட்டோர் மகிழக்காட்டினார். ஆயிரக்கணக்கான பாடல்களை கடல்மடை திறந்தாற்போல் மேடைகளில் கூறும் திறத்தைப்பாராட்டியே அவருக்குக் காரைக்குடி இந்துமதாபிமான சங்கம் "தமிழ்க்கடல்" என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தது.
1930ஆம் ஆண்டில் மலேயா - 1935,1936ஆம் ஆண்டுகளில் பர்மா, மலேயா, இலங்கை, சுமத்ரா, இந்தோனேஷியா -1961ஆம் ஆண்டு பர்மா -1963 கோலாலம்பூர் ஆகிய உலகின் பல பகுதிகளுக்குச் சென்று சமய விரிவுரை நிகழ்த்தினார். இரங்கூன் தர்மபரிபாலன சபை "சிவமணி" என்ற பட்டத்தையும், கோலாலம்பூர் அருள்நெறித் திருக்கூட்டம் "சிவம்பெருக்கும் சீலர்" என்ற பட்டத்தையும் வழங்கின.
காரைக்குடி இந்துமதாபிமான சங்கத்தின் மேல்தளத்தில் தம் சொந்தச் செலவில் ஓர் அரங்கத்தைக் கட்டி, அதற்கு தம் மனைவியின் பெயரால், "உமையாள் மண்டபம்" என்ற பெயரைச்சூட்டிச் சங்கத்துக்கு வழங்கினார்.
"தனவைசிய ஊழியன்" என்ற பெயருடன் விளங்கிய பத்திரிகையின் ஆசிரியப்பணி ஏற்ற இராய.சொ. அதை "ஊழியன்" என்று பெயர்மாற்றம் செய்து காங்கிரஸ் கொள்கைவிளக்க ஏடாக்கினார். பத்திரிகை உலகின் முன்னோடிகளான வ.ரா, தி.ஜ.ர, புதுமைப்பித்தன், ஆகியோரைத் துணை ஆசிரியர்களாக்கினார். கொத்தமங்கலம் சுப்பு ஊழியனில் ஊழியம் புரிந்தார். எஸ்.எஸ்.வாசன் அந்தப் பத்திரிகையின் சென்னை விளம்பர முகவராகி பணி புரிந்தார்.
அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் ஆராய்ச்சித்துறை கெளரவத் தலைவராகப் பணியேற்ற இராய.சொ. தாம் அரிதின் முயன்று சேகரித்த அனைத்து நூல்களையும் பல்கலைக்கழகத்துக்கே வழங்கிவிட்டார்.
கவிஞராய், இதழாசிரியராய், சொற்பொழிவாளராய், தொகுப்பாசிரியராய், நூலாசிரியராய், நினைவுக் கலைஞராய், சமுதாயத் தொண்டராய், அரசியல் போர்வீரராய் பன்முகப்பரிமாணம் கொண்ட வைரம் போன்ற இராய.சொ. நூற்றாண்டை 1998ஆம் ஆண்டு காரைக்குடி இந்து மதாபிமான சங்கம் கொண்டாடியது. நாடெங்கும் உள்ள கம்பன் கழகங்களும், சமய மன்றங்களும் கொண்டாடி மகிழ்ந்தன.
ஏறத்தாழ,எழுபத்தாறாண்டுகள் வாழ்ந்து,1974ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி இறையடி சேர்ந்தார்.
இராய.சொ. தம்பாட்டாலும், பேச்சாலும், தொண்டாலும் தமிழ் உலகுக்கே பெருமை சேர்த்தவர்."தமிழ்க்கடல்" என்ற பட்டத்துக்கு முழுக்க முழுக்க சொந்தக்காரரான இராய.சொ.தம் நூல்களிலும், அனைவர் எண்ணங்களிலும் இன்றும் வாழ்கிறார்.
[ நன்றி:- தினமணி ]