முருக வழிபாட்டு நெறியின் முன்னோடி
பசுபதி
( இது அம்மன் தரிசனம் 2017 தீபாவளி மலரில் வந்த கட்டுரை.)
===
முருக வழிபாடு மிகப் பழமையான வழிபாடு. உலகில் முதலில் மலைகள் தாம் இருந்தன என்பர் அறிவியலார். மலையும், மலை சார்ந்த பகுதியையும் ‘குறிஞ்சி’த் திணை என்று அழைத்தனர் சங்க காலத் தமிழர். அந்தக் குறிஞ்சிக்கு முருகனே தெய்வம் என்றும் கூறினர்.
இன்றோ, முருகன் சிறுவருக்குப் பாலகுமாரனாய், இளையோருக்கு மயிலேறும் கந்தனாய், அறிஞருக்கு அறுசமயப் பொருளான ஆறுமுகனாய், வீர்ர்களுக்குத் தேவ சேனாபதியாய், பக்தருக்குச் சிவகுருநாதனாய், தம்பதிகளுக்கு வள்ளி மணாளனாய், தவசிகளுக்குப் பழனியாண்டியாய்ப் பல கோலங்களில் பிரகாசித்து மகிழ்விக்கிறான். மேலும், திருமால் மருகனும், சிவகுமாரனும் ஆன முருகன் இந்து மதத்தினருக்கொரு சைவ -
வைணவப்
பாலமாய்த் திகழ்கிறான்.
உலகெங்கும் வாழும் தமிழர்கள் இன்று வணங்கும் ஒரு தெய்வம் முருகன். எங்கே புதிதாய்க் கோவில் கட்டினாலும் அதில் முருகனுக்கொரு சன்னிதி இருப்பதைக் காண்கிறோம். இந்தியாவிற்கு விடுமுறைக்கு வரும் புலம்பெயர்ந்த தமிழர்கள் ‘ஆறுபடை வீடுக’ளுக்குச் சென்று ஷண்முகனைத் தரிசித்து மனநிறைவு பெறுகிறார்கள். இசை வழிபாடு செய்பவர்களும் ‘ஆறுபடை வீடு’களைப் பற்றி அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ்ப் பாடல்களைப் பாடி முருகனை வழிபடுகிறார்கள்.
இப்படிப்பட்ட ‘ஆறுபடை’ வீடுகள் சார்ந்த முருக வழிபாட்டு நெறியை நமக்கு முதலில் அறிவுறுத்தியவர் யார்?
‘திருமுருகாற்றுப்படை’ என்ற நூலை இயற்றிய ’மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரர் .
அவர் பெயரில் முன்னுள்ள ‘ந’ என்ற எழுத்தே அவர் பெருமையை நமக்குச் சுட்டுகிறது. ‘ந’ என்பது சிறப்பைக் குறிக்கும் அடைமொழி. சங்கப் புலவர்களுள் நச்செள்ளையார், நக்கண்ணையார், நத்தத்தனார், நம்பூதனார், நப்பசலையார் என்பவர்களும் இத்தகைய தனிச் சிறப்புள்ளவர்கள் தான். திருமுருகாற்றுப் படையின் பெருமை, வழிபாட்டில், சமயநூல்களில் அந்நூலின் தாக்கம் போன்றவற்றை இங்குக் காண்போம்.
நூலின் பயனைச் சொல்கிறது ஒரு பழம் வெண்பா.
நக்கீரர் தாமுரைத்த நன்முருகாற்
றுப்படையைத்
தற்கோல நாள்தோறும் சாற்றினால் -
முற்கோல
மாமுருகன் வந்து மனக்கவலை
தீர்த்தருளித்
தான்நினைத்த எல்லாம் தரும்
[ தற்கோல – தன்னைக் காப்பாற்றிக் கொள்ள; முன் – பாராயணம் செய்பவனுக்கு முன், கோலம் – அழகு ]
முன்காலத்தில் இந்நூல் கவசம் போல் பாராயணம் செய்யப்பட்ட நூல், அத்தகைய பாராயணமே பூஜை என்பதைச் சொல்கிறது இன்னொரு வெண்பா.
பரங்குன்றில்
பன்னிருகைக் கோமான்தன் பாதம்
கரங்கூப்பிக் கண்குளிரக் கண்டு - சுருங்காமல்
ஆசையால், நெஞ்சே, அணிமுருகாற் றுப்படையைப்
பூசையாக் கொண்டே புகல்
ஆறு என்றால்
வழி. ஆற்றுப்படுத்துதல்’ என்றால் ‘ வழிகாட்டுதல்’. 'ஆற்றுப்படை' என்பது
தமிழ்க் கவிதை வகைகளில் ஒன்று. ஒரு வள்ளலிடம் பரிசுகள் பல பெற்றுத் தன் வறுமையைப் போக்கிக்கொண்ட
ஒருவன், வறுமையில் வாடும் இன்னொருவனை அந்த வள்ளல் இருக்கும் இடம், போகும் வழி, வள்ளலின்
ஊர், பெயர், அவன் குணங்கள் யாவற்றையும் சொல்லி, "அங்கே போய் உன் வறுமையை நீக்கிக்கொள்"
என்று ஆற்றுப்படுத்துவது இப்பாடல் வகையின் இலக்கணம். இந்தப் பாடல்வகையே தமிழரின் பெருந்தன்மையைக்
காட்டுகிறது. தனக்குக்
கிட்டிய செல்வம் மற்றவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் தெரிகிறது.
திருமுருகாற்றுப்படை என்ற நூலில் முருகன் இருக்கும் ஆறு தலங்களின் பெருமைகளைக்
கூறிப் புலவனுக்கு வழிகாட்டுகிறார் நூலாசிரியர் நக்கீரர். ஆற்றுப் படையில்
சொல்லப்பட்ட ”ஆறு ஆற்றுப்படை
வீடுகள் ”என்ற வழக்கு மாறி, பின்பு படை வீடு, ஆறுபடை வீடு என்று பேச்சு வழக்கிலும், நூல்களிலும் வரத் தொடங்கின என்பது தணிகைமணி செங்கல்வராய பிள்ளை போன்ற அறிஞர்களின் கருத்து.
“ திருப்புகழிலும் பிற பழைய நூல்களிலும் 'ஆறு படை வீடு' என எங்கும் கூறப்படவில்லை. 'ஆறு திருப்பதி 'அறுபத நிலை' 'ஆறு நிலை' என்றே கூறப் பட்டிருக்கின்றன. பிற்கால ஆட்சியில் தான் 'ஆறு படை வீடு' என இத்தலங்கள் ஆறும் வழங்கப்
பட்டுள்ளன." என்கிறார் செங்கல்வராய பிள்ளை. குமரகுருபரர் கூட ஆறு படை வீடு என்று சொல்லவில்லை. ('ஆறு திருப்பதி கண்டாறெழுத்தும் அன்பினுடன் கூறுமவர் சிந்தை குடிகொண்டோனே -- கந்தர் கலிவெண்பா). குமரகுருபரர் 17-ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்.
அதனால்... ஆறு படை வீடுகள் என்ற தொடர் கடந்த 400-ஆண்டுகளில் வந்த ஒரு சொற்றொடர் என்பது தெளிவாகிறது.
பொதுவில், யார் பயன் பெற முயல்கிறார்களோ அவர்கள் பெயரை ஆற்றுப்படை நூலுக்கு வைப்பது வழக்கம். காட்டு: பாணனுக்கு வழிகாட்டினால், பாணாற்றுப்படை. நக்கீரரோ, ஒரு புதுமையாய், முருகனைப் பாட்டுடைத் தலைவனாய் வைத்தார். அதனால், இந்த நூலுக்கு முதலில் இருந்த ‘புலவராற்றுப்படை’ என்ற பெயர் வழக்கொழிந்து, ‘திருமுருகாற்றுப்படை’ என்றே பெயர் நிலைத்து விட்டது. தமிழ்க் கடவுள் என்று போற்றப்படும் முருகனைப் பற்றிய நூல் என்பதால், சங்க நூல்களில் பத்துப்பாட்டில் முதல் நூலாக, காப்பு நூலாக ‘ திருமுருகாற்றுப்படையை’ வைத்தனர் சான்றோர். மேலும், சைவ மறைகளான பன்னிரு திருமுறையில் , திருமுருகாற்றுப்படை 11-ஆம் திருமுறையிலும் உள்ளது. இப்படி, சங்க நூல்களிலும், பன்னிரு திருமுறையிலும் காணப்படும் ஒரே நூல் , இதுதான் என்னும்போது, இதன் பெருமை இரட்டிப்பாகிறது இல்லையா?
நக்கீரனார் எழுதிய 317 அடிகள் கொண்ட நூலான திருமுருகாற்றுப்படை. ஆசிரியப்பா என்ற செய்யுள் வகையில் இயற்றப் பட்டது . இந்நூலில் போற்றப்படும் ஆறு வீடுகள் : திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் ( திருச்செந்தூர் ), திருவாவினன்குடி , திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை. பெரும்பாலானோர், திருவாவினன்குடி பழனி என்றும், திருவேரகம் என்பது சுவாமிமலை, பழமுதிர்சோலை அழகர் கோவில் என்றே நம்புகின்றனர். மேலும், நாம் இப்போது ஐந்தாவது படைவீடு என்று திருத்தணியைக் குறித்தாலும், ஐந்தாம் படைவீடு நக்கீரர் சொன்ன 'குன்றுதோறாடல்'தான். முருகன் இருக்கும் எல்லாக் குன்றுகளும் இதில் அடக்கம். . ( ஆறு திருப்பதிகளின்
தியானச் சிறப்பை கந்தர் அந்தாதியின் முதற் பாட்டில் கண்டு களிக்கலாம் )
திருமுருகாற்றுப்படையின் முதல் பகுதியில் முருகனின் உருவ அழகு, சூரர மகளிர் விளையாட்டு, பேய்மகள் துணங்கை, சூரசங்காரம், மதுரையின் பெருமை, பரங்குன்றத்தின் இயற்கை வளம் சொல்லப்படுகிறது.
இரண்டாம் பகுதியில் முருகனின் வாகனத்தின் சிறப்பு, ஆறு முகங்களின் செயல்கள், அவனுடைய பன்னிரு கரங்களின் செய்கை, திருச்சீரலைவாய்க்கு அவன் எழுந்தருளுதல் போன்றவை விவரிக்கப் படுகின்றன.
மூன்றாம் பகுதியில், முருகனை வழிபடும் முனிவர்களின் இயல்பு, தரிசிக்க வரும் தேவரின் நிலை, கந்தருவர் காட்சி உள்ளன.
நான்காம் பகுதியில், முருகனை வழிபடும் அந்தணரின் இயல்பு வர்ணிக்கப் படுகிறது.
ஐந்தாம் பகுதியில், குன்றிலுள்ளார் ஆடும் குரவை, முருகன் தேவ மகளிரொடு ஆடுதல் போன்றவை கூறப்படுகின்றன..
கடைசிப் பகுதியில், முருகன் எழுந்தருளியிருக்கும் இடங்கள், குறமகள் செய்யும் பூசை, முருகனிடம் சென்று வழிபடும் முறை, அவனைத் துதிக்கும் வகை, அவன் ஏவலர் இயல்பு, அவன் அருள் செய்யும் விதம், பழமுதிர்சோலையின் இயற்கை வளம் போன்றவற்றைக் காண்கிறோம்.
இந்நூலில் இலக்கிய நயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ‘உலகம்’ என்ற மங்கலச் சொல்லில் தொடங்குகிறது நூல். நீலக்கடலின் மேல் உதிக்கும் சூரியனைபோல், நீல மயிலேறும் முருகனும் ஒளி வீசி உதிக்கின்றான்’ என்று கற்பனையும், சொல்லாட்சியும், உவமையும் சுடர்விடத் தன் நூலைத் தொடங்குகிறார்
நக்கீரர். சூரியன் புறவிருளை நீக்குவதைப் போல், முருகன் அகவிருளை அகற்றுவான்
என்று சொல்லாமல் சொல்லுகிறார் நக்கீரர்.
” கார்கோள் முகந்த கமஞ்சூழ் மாமழை “ என்று நூலில் நக்கீரர் சொல்வது அவர் சொல்லாட்சிக்கு ஒரு காட்டு. கார்கோள் என்றால் கடல். கடலை முகந்த நிறைந்த கர்ப்பத்தை உடைய கரிய மேகம்' என்பது இதன் பொருள். கடலில் இருந்து கார் (மேகம்) நீரைக் கொள்வதால், இந்தக் காரணப் பெயரைக் கடலுக்கு முதலில் பயன்படுத்தியவர்
நக்கீரரே. அறிவியலும் பெயரில் இழையோடுகிறது.
பிற்காலத்தில், நக்கீரர் பெருமையைச் சிறப்பாக எடுத்தோதியவர் அருணகிரிநாதர்.
"வளவாய்மை சொற் ப்ரபந்த முள கீரனுக்கு உவந்து
மலர்வாய் இலக்கணங்கள் இயல்பு ஓதி
அடிமோனை சொற்கிணங்க **உலகம் உவப்ப**
என்று அருளால் அளிக்கும் கந்தப் பெரியோனே
"
"நக்கீரர் ஓதிய வளமை சேர் தமிழுக்காக
நீடிய கரவோனே"
"கீதவிசை கூட்டி வேதமொழி சூட்டி
கீரரிசை கேட்ட கிருபையோனே “
என்றெல்லாம் நக்கீரரை மனம்குளிரப் போற்றுகிறார் அருணகிரிநாதர். நக்கீரர் காட்டிய வழியில் பாடிய அருணகிரிநாதர்
கௌமார நெறிக்கு இன்னொரு மூல இலக்கியகர்த்தாவாகத் திகழ்கிறார்.
முருகனின் ஆறுமுகங்களைப் பற்றிய ஆற்றுப்படை நூற்பகுதி
மிக அழகுடையது.
மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன் றொருமுகம் ஒருமுகம்
ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக்
காதலின் உ வந்து வரங்கொடுத் தன்றே ஒருமுகம்
மந்திர விதியின் மரபுளி வழா அ
அந்தணர் வேள்வியோர்க் கும்மே ஒருமுகம்
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்
திங்கள் போலத் திசைவிளக் கும்மே ஒருமுகம்
செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்
கருவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே
ஒருமுகம்
குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே ”
பொருள்: “பெரிய இருளையுடைய உலகம் குற்றம் இன்றி விளங்கும் படியாகப் பல வகையான கதிர்கள் விரிந்தது
ஒருமுகம். பக்தர்கள் போற்றிப் புகழ, அவர்களுக்கு ஏற்கும்படியாகப் பொருந்தி இனிதாகச் சென்று விருப்பத்தோடு மகிழ்ந்து
வரத்தைக் கொடுத்தது இன்னொரு முகம். வேத மந்திர விதியின்படியே சம்பிராயதத்தினின்றும் வழுவாமல் செய்கின்ற வேள்விகளை
யாதோர் இடையூறும் இன்றி நிறைவேற்றத் திருவுள்ளங் கொண்டு ஆவன செய்யும் தொழிலை, முருகனுடைய மூன்றாம் முகம் புரிகிறது. ஒரு முகம், நூல்களாலும் ஆசிரியர்களாலும் விளக்கம் உறாமல் எஞ்சி நின்ற பொருள்களை , அவற்றை உணரும் வேட்கையுள்ள முருகனடியார்கள் இன்பம் அடையும்படியாக ஆராய்ந்து சந்திரனைப்
போல அவர்கள் கேட்ட துறையின் பகுதிகளையெல்லாம் விளங்கும்படி செய்யும். ஒருமுகம். போர்செய்யும் பகைவர்களை அடியோடு அழித்து
, வருகின்ற போர்களை ஒழித்துச் சினம் கொண்ட நெஞ்சத்தோடு வெற்றிக்கு
அறிகுறியாகக் களவேள்வியைச் செய்கிறது. ஒருமுகம், குறவருடைய மடமகள் கொடிபோன்ற இடையையுடைய மெல்லியளாள் வள்ளியோடு சேர்ந்து புன்முறுவலை விரும்பிச்
செய்கிறது.
இப்படி ஆறு முகங்கள் பற்றி நக்கீரர் சொன்னதைப் பின்பற்றி, அருணகிரியும் ( “’ ஏறுமயிலேறி “ ) குமரகுருபரரும் ( “வெவ்வசுரர் போற்றிசைக்கும்” ) அவரவர் வழியில் நயம்படப் பாடியுள்ளனர்.
கடைசியாக, நக்கீரரின் ஒரு பரிந்துரையை முன்வைப்போம்:
” செவ்வேற் சேஎய்,-
சேவடி படரும் செம்மல் உள்ளமொடு
நலம்புரி கொள்கைப் புலம்புரிந் துறையும்
செலவுநீ நயந்தனை யாயின், பலவுடன்
நன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப
இன்னே பெறுதிநீ முன்னிய வினையே “
பொருள்: ” சிவந்த வேலையுடைய செந்நிறத் தெய்வமான
முருகனின் செம்மைத் திருவடியை சென்று அடையும் பெருமை கொண்ட உள்ளத்தோடு நன்மையைச் செய்கின்ற
சங்கற்பத்தைக் கொண்டு உன்நாட்டைப் பிரிந்து , தங்குவதற்குரிய பயணத்தை நீ விரும்பினால், நல்ல மனத்தில் எண்ணிய இனிய விருப்பங்கள்
யாவும் ஒருங்கே நிறைவேற, நீ நினைத்த காரியம் இப்போதே கைகூடப் பெறுவாய் ”.
நாமும் ஆனந்தக் களிப்புடன் பாடுவோம்:
ஆறு முகன்புகழ் பாடு! --முரு
. . காற்றுப் படையென்ற நூலினை நாடு!
கீரனின் நூல்தமிழ்ச் சாறு -- கந்தன்
. . கீர்த்தியைத் தேக்கிடும் வீடுகள்
ஆறு !
================
தொடர்புள்ள பதிவுகள்: