வியாழன், 23 நவம்பர், 2017

913. மு.அருணாசலம் - 1

அறிஞர்களின் அறிஞர் மு.அருணாசலம்
முனைவர் தெ.ஞானசுந்தரம்


நவம்பர் 23. மு.அருணாசலம் அவர்களின் நினைவு தினம்.
===
ஒரு பல்கலைக்கழகத்தில் பலதுறை அறிஞர்கள் இருப்பதைக் காணலாம். ஆனால் அறிஞர் ஒருவர்க்குள்ளே ஒரு பல்கலைக்கழகமே இருந்தது உண்டா? அப்படி அறிஞர் ஒருவர் இருந்தார் என்றால் நம்ப முடிகிறதா? உண்மையில் அப்படி இருந்தவர்தான் மு.அருணாசலம்.

  நாகை மாவட்டத்தில் திருச்சிற்றம்பலம் என்னும் சிற்றூரில் 1909-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி முத்தையா பிள்ளைக்கும்-கௌரியம்மாளுக்கும் மூத்த மகனாய்ப் பிறந்தார் மு.அருணாசலம்.

  அவரிடம் தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மும்மொழிப் புலமை, இலக்கிய, இலக்கண தத்துவ ஆராய்ச்சி, ஓலைச்சுவடிகளைத் தேடிச் சேகரிக்கும் ஆர்வம், கல்வெட்டுகளைப் படிப்பதில் தேர்ச்சி, தம் காலத்திய அரசியல் தலைவர்களோடும் தமிழறிஞர்களோடும் நெருக்கமான பழக்கம், பத்திரிகை ஆசிரியப்பணி, கல்வி நிலையங்களை நிறுவிப் பராமரிக்கும் திறமை, தேசியப் பற்று, பிறசமயக் காழ்ப்பற்ற சைவப்பற்று இவையெல்லாம் குடிகொண்டிருந்தன.

  தொடக்கத்தில் திருச்சிற்றம்பலத்தில் திண்ணைப் பள்ளிக்கூடத்திலும் அடுத்து, குத்தாலம் (திருத்துருத்தி) உயர்நிலைப் பள்ளியிலும் அதன்பின் சிதம்பரம் மீனாட்சிக் கல்லூரியிலும் கல்வி கற்று, கணிதத்தில் பட்டம் பெற்றார். சென்னையில் அரசு ஊழியராகப் பணிபுரிந்து, அதனை விடுத்து, காசி இந்துப் பல்கலைக்கழகத்தில் ஈராண்டுகள் தத்துவப் பேராசிரியராகவும், ராஜாசர் முத்தையா செட்டியார் அமைத்த தமிழ்-வடமொழி நிறுவனத்தின் இயக்குநராகவும் நிறைவாக தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அகராதித்துறையின் தலைவராகவும் பணியாற்றினார்.

  கணக்குப் படித்த இவர், தமிழாராய்ச்சியில் தடம்மாறியதால் தமிழுக்குக் கணக்கில்லா ஆராய்ச்சி முடிபுகளைக் கொண்ட தரமான நூல்கள் கிடைத்தன. அறிஞர்கள் கா.சு.பிள்ளை, தஞ்சை சீனிவாசபிள்ளை ஆகியோர் எழுதிய தமிழிலக்கிய வரலாற்று நூல்களே அத்துறையில் முன்னோடி நூல்களாகும். ஆனால் 9-ஆம் நூற்றாண்டு முதல் 17-ஆம் நூற்றாண்டு வரையிலான இலக்கிய வரலாற்றை மிக விளக்கமாக ஆராய்ந்து பதினான்கு தொகுதிகளாக வெளியிட்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றுத் துறையில் முத்திரை பதித்த வரலாறு, அறிஞர் மு.அருணாசலத்தின் வரலாறு. அந்தத் தொகுதிகள் எல்லாம் தகவல் களஞ்சியங்கள்! பலருக்கும் பெயர்கூடத் தெரியாத நூல்களைப் பற்றியும் புலவர்களைப் பற்றியும் பல தகவல்களைக் காணலாம்.


  ""எமது இலக்கிய வரலாற்று நூல்கள் அனைத்திலும் காணும் அட்டவணைகள் எல்லாவற்றையும் ஒருங்கு தொகுத்துத் தந்தால் அதுவே இலக்கிய வரலாற்றைச் சுருக்கி உணர்த்தவல்ல ஒரு கருவிநூலாக அமையும்'' என்னும் நூலாசிரியர் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை.

  ""எப்படி இவ்வளவு தூரம் கைவலிக்க எழுதினீர்கள்?'' என்று கேட்ட பொழுது அவர், ""நான் கையெழுத்து நன்றாக இருப்பவரைக் கொண்டு எல்லாவற்றையும் சொல்லிச் சொல்லி எழுதச்செய்து பின்னர் பிழைகள் இருந்தால் திருத்துவேன். கைப்பட எழுதுவது குறைவு'' என்றார். கி.வா.ஜ.வும் மு.வ.வும் கூட இப்படித்தான் நூல்களை எழுதியுள்ளார்கள் என்பது சிலரே அறிந்த உண்மை.

  மு.அருணாசலனார் தமிழ்த்தாத்தா உ.வே.சா, வையாபுரிப்பிள்ளை ஆகியவர்களோடு நெருங்கிப் பழகியதால் தமிழ்படித்து எம்.ஏ. பட்டம் பெற்றார். திரு.வி.க., ரசிகமணி டி.கே.சி, வெ.சாமிநாத சர்மா, கல்கி, வ.ரா., கருத்திருமன் போன்றவர்களோடும் தொடர்பு வைத்திருந்தார். காசிப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது தத்துவ மேதை ராதாகிருஷ்ணனோடும் பழகி இருக்கிறார்.

  இவரைப் பற்றித் திரு.வி.க. தம் வாழ்க்கைக் குறிப்பில் ""அருணாசலனாரின் நீண்ட வடிவம் மலர்ந்த முகமும் தண்மை நோக்கும் எனக்குப் புலனாகும் போதெல்லாம் என் உள்ளம் குளிரும்...அருணாசலனார் தமிழ்நடை இக்காலத்துக்கு உரியது. அஃது இக்காலத் தமிழ்த் தாள்களில் இடம் பெறப் பெற, தமிழ் விடுதலையடைந்து ஆக்கம் பெறும் என்பது எனது உட்கிடக்கை'' என்று எழுதியுள்ளார்.


  . தம் பட்டறிவால் பழத்தோட்டம், பூந்தோட்டம், வாழைத்தோட்டம், வீட்டுத்தோட்டம், காய்கறித்தோட்டம் போன்ற நூல்களையும், படிப்பறிவால் இலக்கிய வரலாறு, புத்தகமும் வித்தகமும், திவாகரர் போன்ற நூல்களையும் இலக்கிய ஆர்வத்தால் காற்றிலே மிதந்த கவிதை, தாலாட்டு இலக்கியம் போன்ற நாட்டுப்புற இலக்கியத் தொகுப்பு நூல்களையும், சாத்திரப் புலமையால் தத்துவப்பிரகாசம் உரை, திருக்களிற்றுப்படியார் உரை போன்ற உரைநூல்களையும் தந்துள்ளார். அவற்றுள் காய்கறித்தோட்டம் தமிழக அரசின் பரிசு பெற்றது. கர்நாடக இசை என்பது பழந்தமிழ் இசையே என்பதனைக் காட்டிச் சீர்காழி மூவரை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய பெருமையும் அவரைச் சாரும்.

  வையாபுரிப்பிள்ளையோடு பழகியதன் விளைவாக அரிய ஆய்வுக்குறிப்பு ஒன்றைத் தெரிவித்தார். ""சிந்தாமணியை உ.வே.சா. முதன்முதலில் வெளியிட்டபோது, சீர் பிரிக்காமலேயே வெளியிட்டார். அதற்குக் காரணம் அதில் வரும் ஒருவகை யாப்பின் அமைப்பு விளங்கவில்லை. அந்த யாப்பு அடிதோறும் 14 எழுத்துகளைக் கொண்ட 4 அடிகளால் ஆகிய காப்பியக் கலித்துறை என்பதாகும். அது பெரும்பாலும், மா மா கனி மா மா என்னும் வாய்பாட்டில் அமைந்த அடிகளைக் கொண்டதாக அமையும். இதனை முதலில் கண்டறிந்தவர் வையாபுரிப்பிள்ளை ஆவார். அதனையொட்டியே பின்வந்த பதிப்புகளில் சீர் பிரித்துப் பதிப்பிக்கப்பட்டது'' என்றார்.

  தமிழ்த் தாத்தாவோடு பழகியதால் ஏடு சேகரிக்கும் பழக்கமும் அவருக்கு இருந்தது. அதன் விளைவாக 11-ஆம் திருமுறையில் இடம்பெற்றுள்ள ஈங்கோய்மலை எழுபது நூல் முழுமையடைந்தது. உ.வே.சா.வால் குறிஞ்சிப்பாட்டு முழுமையாகக் கிடைத்ததுபோல் மு.அருணாசலத்தால் ஈங்கோய்மலை எழுபது முழுமையாகக் கிடைத்தது. அவர் சேகரித்த சுவடிகளில் "திருத்துருத்தி ஆபத்தோத்தாரணன் என்பவரால் எழுதப்பட்டது' என்னும் குறிப்போடு கூடிய அழகிய சுவடி, இன்றைய கையடக்கப் பதிப்பினும் சிறிதாக அமைவதாகும்.

  காந்தியடிகளின் ஆதாரக் கல்வி, கிராம நிர்மாணத் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு 1946-இல் வார்தா சேவா கிராமத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார். அங்கு வினோபாபாவே, ஜே.சி.குமரப்பா, ஜே.பி.கிருபளானி ஆகியவர்களின் நட்புக் கிடைத்தது. அதன் விளைவாகத் தம் சொந்த ஊரில், தம் சொந்த முயற்சியால் காந்தி வித்யாலயம் என்னும் கல்வி நிறுவனத்தை அமைத்தார். அவர் தம் ஊரில் ஏற்படுத்திய ஆரம்பப் பள்ளி, மகளிர் உயர்நிலைப் பள்ளி, ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, அனாதைக் குழந்தைகள் விடுதி ஆகியவை அவரது தொண்டுள்ளத்திற்குச் சான்றுகளாகும். அவர் நடத்திய ஆசிரிய ஆதாரப் பயிற்சிப் பள்ளி, பிரிவுபடாத தஞ்சை மாவட்டத்தில் அந்நாளில் எட்டாம் வகுப்புக்கு மேல் கல்வியைத் தொடர முடியாத ஏழை மாணவர்களுக்குத் தளர்ந்தார் ஸ்தாபனமாய் அமைந்தது. ஒரு காசுகூடப் பெறாமல் மாணவர்களைச் சேர்த்துவந்தார்.

  தம் பகுதியில் அமைந்திருக்கும் தருமை, திருப்பனந்தாள், திருவாவடுதுறை ஆகிய மூன்று திருமடங்களோடும் இணக்கமான தொடர்பு கொண்டிருந்தார் மு.அருணாசலம். தருமை ஆதீனத்தைத் தோற்றுவித்த குருஞானசம்பந்தரின் வாழ்க்கை குறித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் எழுதிய நூல் ஆதீனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

  சைவ சித்தாந்த சமாஜம் (இன்று சைவ சித்தாந்தப் பெருமன்றம்) நடத்திவரும் சிந்தாந்தம் தமிழ் - ஆங்கில இதழ்களின் ஆசிரியராக இருந்து பல சமயக்கட்டுரைகளை எழுதியுள்ளார்.

  அவர் பதவியைத் தேடிச் சென்றதில்லை. அவை அவரைத் தேடி வந்தன. அவர் அறிஞர்கள் போற்றும் அறிஞர். அண்மையில் முதுபெரும் தமிழறிஞர் ம.ரா.போ.குருசாமியைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த போது அவரிடம் ஒருவர் மு.அருணாசலம் எழுதியுள்ள "திருவாசகக் குறிப்புக்கள்' என்னும் நூலைக் கொண்டுவந்து கொடுத்தார். அவர் அருகில் இருந்த ஒருவர் ""இந்நூலுக்கே ஒரு "டாக்டர்' பட்டம் கொடுக்கலாம்?'' என்றார். அதைக் கேட்ட ம.ரா.போ.குருசாமி, ""அவர் செய்திருக்கும் வேலைக்கு எத்தனை டாக்டர் பட்டம் கொடுப்பது?'' என்றார்.

  வாழ்நாள் முழுவதும் "அருணாசலம் எம்.ஏ.' என்னும் பெயருடனேயே எழுதிக்கொண்டிருந்த அப்பெருந்தகைக்கு டாக்டர் பட்டம் வீடுதேடி வந்தது. தமிழ்ப் பல்கலைக்கழகம் 1991 டிசம்பரில் மதிப்புறு முதுமுனைவர் பட்டம் அளித்தது.

  மு.அருணாசலம் 1992-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார். அவர் இவ்வுலகிலிருந்து மறைந்த போதிலும் தமிழிருக்கும்வரை மறக்க முடியாத தமிழ்த்தொண்டும் ஆற்றியவர் என்பது மறுக்க இயலாத உண்மை.

தொடர்புள்ள பதிவுகள்:
மு. அருணாசலம் : விக்கிப்பீடியா 

1 கருத்து:

Vassan சொன்னது…

மிக்க நன்றி.