புதன், 10 பிப்ரவரி, 2021

1802. சாவி - 24

பல்டி பலராமன்
சாவி

[ ஓவியம்: நடனம் ]


பிப்ரவரி 9. 'சாவி' அவர்களின் நினைவு தினம்.
=====
"ஹல்லோ, சந்தர்! நான் யார் தெரிகிறதாடா?... என்னடா முழிக்கிறே? இடியட்! என்னைத் தெரியலேயா உனக்கு? நான்தாண்டா பலராம்!'-என் தோளைப் பிடித்து உலுக்கிக்கொண்டே ஏகவசனத்தில் தொடங்கிவிட்டான் அவன். என்பாடு சங்கடமாய்ப் போய்விட்டது.

என்னுடைய மனைவியுடன் அப்போதுதான் சினிமாவுக்குப் போய்க்கொண்டிருந்தேன். புறப்படும்போதே இப்படி ஒரு அபசகுனம்! அவனிடமிருந்து எப்படித் தப்புவது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவன் மேலும் ஆரம்பித்து விட்டான்.

"ஏண்டா, பழைய பிரண்டை இப்படியா மறந்துடறது? இது யாருடா? ஒய்பா? வெரிகுட்!...பலே ஆள்டா நீ; எப்படா கல்யாணம் ஆச்சு? ஏண்டா எனக்கு இன்விடேஷனே அனுப்பல்லே?”

"இரண்டு.மாசம் ஆச்சு, உன் அட்ரஸ்ஸே தெரியல்லே! அதனாலே அனுப்பல்லே...' என்று இழுத்தேன்.

 "என்னடா என் அட்ரஸ் தெரியல்லேங்கறே? எல். ஐ. சி. கட்டடத்திலே தானேடா இருக்கேன்! டாப் ப்ளோர்டா! நான் இப்ப ஓர் இன்ஷூரென்ஸ் ஏஜண்டு. போறது! கலியாணத்தைத்தான் ரகசியமா முடிச்சுட்டே, ஒரு பதினாயிரம் ரூபாய்க்கு இன்ஷூராவது செய்துகொள்ளேன்என்று டி போட்டான்.

"கட்டும் பார்க்கலாம். இப்ப நான் அவசரமா சினிமாவுக்குப் போயிண்டிருக்கேன். நாளேக்கு ஆபீஸ் பக்கம் வாயேன்: சாவகாசமாகப் பேசலாம்..என்று தட்டிக் கழித்தேன்.

"நாளைக்கா? எந்த ஆபீசுடா உனக்கு?" என்று கேட்டான்.

"நான் இப்போ ஆடிட்டரா இருக்கேன். ஆபீஸ் ஆர்மீனியன் ஸ்ட்ரீட்லே' என்று கூறி விலாசத்தைச் சொல்லி விட்டு அந்த விடாக்கண்டனிடமிருந்து ஒரு வழியாகத் தப்பினேன்.

அவன் அப்பால் போனதும் என் மனைவி, ” யார் இந்தப் பைத்தியம்? நாகரிகமில்லாமல் நடுத்தெருவிலே நிற்க வைத்துக்கொண்டு...என்றாள்.

"என் கிளாஸ்மேட் அவன் ஒரு டைப். ஆனால் கவடு சூது கிடையாது. எதையும் ஸ்டெடியாச் செய்யமாட்டான். ஒரு நாள் இன்ஷூரென்ஸ் ஏஜண்டுன்னுவான்; இன்னொரு நாளைக்கு டூரிங் சினிமா மானேஜர் என்பான். ஒரு நாளைக்குக் காரிலேயே பறப்பான். இன்னெரு நாளைக்கு நடந்தே சுற்றுவான் ஒரு நாளைக்கு இங்கிலீஷிலேயே பிளந்து கட்டுவான். இன்னெரு நாள் இந்தியிலே வெளுத்துக் கட்டுவான், ஒரு நாள் குபேரன்! மறுநாள் அன்னக்காவடி எதுவும் நிலை இல்லே என்றேன்.

- ஆறு மாதம் கழித்து மீண்டும் அவனைச் சந்தித்தேன், கூலிங் கிளாஸ். ஸில்க் ஜிப்பா. கையிலே ஒரு லெதர் பை. மூக்கின் கீழ் வண்டு போன்ற துண்டு மீசை; இம்மாதிரி அலங்காரங்களுடன் டாக்சியில் போய்க்கொண்டிருந்தான். என்னைக் கண்டுவிட்டு டாக்சியை நிறுத்திக் கணக்குத் தீர்த்து அனுப்பிவிட்டு, "ஹல்லோ சந்தர்!" என்று கத்திக் கொண்டே ஓடிவந்தான்.

- சரிதான் பத்தாயிரத்துக்கு ஒரு பாலிஸி எடுத்துக் கொண்டுவிட வேண்டியதுதான். காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது' என்று பயந்தபடியே அவன் முற்றுகைக்குத் தயாரானேன்.

- "என்ன பலராம்! எங்கே மறுநாள் வரேன்னு விலாசம் வாங்கிக்கொண்டு அப்புறம் வரவேயில்லையே?’ என்றேன்.

 "ஓ! அதுவா? அது என்னடா ஜாப்! ஸில்லி! எல்லாருக்கும் பல்லைக் காண்பித்துக்கொண்டு. நான்சென்ஸ்! அப்பவே அதை விட்டுட்டேன்!

"விட்டுட்டாயா? அப்படின்ன இப்ப என்ன செய்றே?"

"இப்ப ஒரு புரொட்யூசரைப் பிடிச்சு மாம்பலத்திலே ஹனிமூன் பிக்சர்ஸுன்னு ஒரு படக் கம்பெனி ஆரம்பிச்சிருக்கேன். அதுலே நான் ஒரு பார்ட்னர்; இங்கிலீஷ் மர்டர் "த்ரில்லரை தமிழிலே அருமையான சோஷல் லவ் ஸ்டோரியா மாத்திருக்கேன். ஒண்டர்புல் ஐடியாவெல்லாம் போட்டிருக்கேன். வரப்போறது பாரேன். உனக்கு ப்ரீ பாஸ் அனுப்பி வைக்கிறேன். ஒய்பையும் அழைச்சிண்டு வா!' என்றான்.

- "படம் எடுத்தாயிடுத்தா?”

"இல்லேடா; அடுத்த வாரம்தான் பூஜை போடப் போறோம் ஸ்டார் புக்கிங் நடந்துண்டிருக்கு. வாடா எல்லாம் சொல்றேன்...என்று கூறி என்னை ஏர்கண்டிஷன் ஒட்டல் ஒன்றுக்குள் அழைத்துச் சென்றான். ஒரே உற்சாகம்: லெதர்பாக்கில் கற்றை கற்றையாக நோட்டுகளைத் திணித்துக்கொண்டு உலகத்தையே விலைக்கு வாங்கிவிடுபவனைப் போன்ற பெருமிதத்துடன் காணப்பட்டான்.

"ஸாலட் சாப்பிடறயா!' என்றான்.

”வேண்டாம், காபி மட்டும் போதும்" என்றேன்.

"நீ ஒரு டல் பேர்வழிடா ஹாப்பியா இருக்க கத்துக்கணும்டா? லைப் ஈஸ் பார் லிவிங்டா, இடியட்! ஸர்வர்! இரண்டு ப்ரூட் ஸாலட் கொண்டு வா" என்று கூறிக் கொண்டே வில்ஸ் ஃபில்டர் சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டு எனக்கும் ஒன்று கொடுத்தான். -

மீண்டும் ஆறுமாதம் கழித்து வந்தான்.

"என்னப்பா, சந்தர்!என்று ஈன சுரத்தில் ஒலித்த பலராமன் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன்.

தாடியும் மீசையும் வளர்ந்து ஏதோ முற்றும் துறந்த முனிவர்போல் காட்சி அளித்தான். ஹல்லோவெல்லாம் போய் அப்பாவில் வந்துவிட்டது. கழுத்திலே துளசி மாலை : முகத்திலே வேதாந்தக் களை!

"என்ன பலராமா! இது என்ன வேஷம்? இப்ப எங்கே இருக்கே? உன் சினிமாக் கம்பெனி என்ன ஆச்சு?" என்று கேட்டேன்.

"அது அப்போதே திவால் சினிமா சுத்தப் பிராடுப்பா. இதெல்லாம் எனக்குச் சரிப்படலே. ரிஷிகேசம் போய் ஆறு மாசம் இருந்துட்டுப் போனவாரம்தான் வந்தேன், இப்போ சுவாமி துக்கானந்த தீர்த்திடம் சீடனாயிருக்கேன். ஆப்டர் ஆல் லைப் ஈஸ் நத்திங்: கீதையிலே கிருஷ்ண பரமாத்மா என்ன சொல்லியிருக்கிறார், பார்த்தாயா? அர்ஜுனா சோர்வடையாதே! சுற்றம் அது இது என்று பார்க்காதே! கர்மா தான் முக்கியம்னு சொல்றாரே. எனக்கு யார் இருக்கா? பெண்டாட்டியா? பிள்ளையா? ஒண்டிக்கட்டை ஏகாங்கி, எங்கே இருந்தா என்ன...சந்தர் ஒரு நாலணு இருந்தாக் கொடு. காலையிலிருந்து காப்பிகூடச் சாப்பிடல்லே!" என்றான்.

சமீபத்தில் ஒருநாள் மூர்மார்க்கெட் பக்கம் போய்க் கொண்டிருந்தேன்.
"கபர்குத் கபாஹை! அதாவது இப்போது இமாசல் பாபா என்ன சொல்கிறார் என்றால்...-" என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்க்கிறேன், நம்ப பலராமன்! விஷக்கடி மருந்து வியாபாரி ஹிந்தியில் சொல்லிக் கொண்டிருந்ததைத் தமிழில் அவன் அநாயாசமாக மொழி பெயர்த்துக்கொண்டிருந்தான்.


[ நன்றி: விகடன் ]


தொடர்புள்ள பதிவுகள்:

கருத்துகள் இல்லை: