ஞாயிறு, 30 நவம்பர், 2014

சாவி -11: 'அப்பச்சி' அருணாசலம்

'அப்பச்சி' அருணாசலம்
சாவி



'யாருங்கறேன் அது? கானாடுகாத்தான் கருப்பய்யாச் செட்டியாரா? வாங்க, இருங்க. மெட்ராசுக்கு எப்ப வந்தீக? உங்க அப்பச்சி எப்படி இருக்காக? பானா, மூனா, லேனா, சோனா லெச்சுமணஞ் செட்டியார் மகனுக்குப் போன மாசம் கோட்டையூர்லே கல்யாணம் நடந்துதாமில்லே? ஏங்கறேன்... என்ன செலவாகியிருக்கும்? வாணத்தைக் கொளுத்தி வானத்திலே விட்டாகளாமே!


ஊம்... பையனைச் சீமைக்கு அனுப்பி படிக்க வெச்சாகளாம். அவன் திரும்பி வந்து சிகரெட்டு புடிக்கிறானாம். ஏங்கறேன்... இதைக் கத்துக்க சீமைக்கா போகணும்?

காத்துலே பறக்குமே, அதென்னங்கறேன், ஏரோப்ளான்! அந்த வண்டியிலேதானாமில்லே போய் வந்தானாம்? ஏம் போக மாட்டாக? அவுக பரம்பரையா மலேயாவிலே வட்டி வியாபாரம் செஞ்சு, லெச்சம் லெச்சமாகக் குவிச்சு வெச்சிருக்காக. நமக்கு முடியுமாங்கறேன்? என்ன ஆனா மூனா கானா, ஏம் பேசாம இருக்கீக? நீங்க சொல்லுங்க, நமக்கு எதுக்கு இந்தப் பட்டண வாசமெல்லாம்? அதைச் சொன்னா நம்ம மகன் கேக்கறானில்லே...''

அப்பச்சி அருணாசலம் செட்டியார் தமது கைக் கோலால் தரையைத் தட்டிக் கொண்டே, அந்த பங்களாவின் வராந்தாவிலுள்ள ஊஞ்சலில் உட்கார்ந்தபடி, வருகிறவர்கள் போகிறவர்களிடமெல்லாம் தம் மகனைப் பற்றி இப்படி ஏதாவது குறை கூறிக்கொண்டிருப்பார்.

''ஏன்? உங்க மகனுக்கென்ன? நல்லாத்தானே பிசினஸூ பண் ணிக்கிட்டிருக்காக?'' என்பார் ஆனா மூனா கானா.

''என்னங்கறேன் நீங்க ஒண்ணு! உங்களுக்குத் தெரியாதா? தேவ கோட்டையிலே கப்பலாச்சும் வீடு. இருக்கிற சொத்தை வெச்சு இன்னும் நாலு தலைமுறைக்கு கால் மேலே கால் போட்டுச் சாப்பிடலாம். இந்த மெட்ராசுலே நமக்கு என்னய்யா வேலை? கேட்டா பிசுனஸூ பண்ணிக்கிட் டிருக்கேங்கறான். வீட்டிலே தங்கறானா? இவனுக்கெதுக்குங்கறேன் இந்த வேலையெல்லாம்?

ஒரு லெச்சம் செலவளிச்சு இந்த பங்களாவைக் கட்டியிருக்கான். நமக்கெதுக்கு இந்தப் பட்டணத்திலே பங்களாவும் காரும்? ஊரிலே கோட்டை மாதிரி வீட்டைப் பூட்டி வெச்சிருக்கோம். கட்டி அணைக்க முடியாதுங்கறேன் ஒவ்வொரு கம்பமும். என்னங்கறேன்... உங்களுக்குத் தெரியாததா?

அதையெல்லாம் விட்டுப் போட்டு மெட்ராசுலே பிசுனஸூ பண்றானாம்! சரி, பண்ணட்டும். இந்த நாயை எதுக்குங்கறேன் நானூறு ரூபாய் கொடுத்து வாங்கணும்? அது இருந்தாத்தான் பங்களாவுக்கு அளகாம்! அது சும்மாவா இருக்குது? ரொட்டியைக் கொண்டாங்குது! மட்டனைக் கொண்டாங்குது! சும்மா இருக்குற நேரத்துலே என்னைப் பார்த்து உர் உர்ருங்குது. சரி, போவட்டும்; இவ்வளவு பெரிய தோட்டம் எதுக்குங்கறேன்? தோட்டம்னா சும்மாவா? தோட்டக்காரனுவ நாலு பேரு. இவனுக என்ன பண்றானுவ? ஒரு கத்திரிச் செடி உண்டா? ஒரு வெண்டைச் செடி உண்டா? எல்லாம் இங்கிலீசு பூ இல்லே பூக்குது. ஏங்கறேன்? அந்தப் பூ எதுக்கு ஒதவும்? சொல்லுங்கறேன்.

என்ன, ஆனா மூனா கானா? என்ன பேசாம இருக்கீக? குளந்தைகளுக்கு ஒரு திருவாசகம், ஒரு தேவாரம் தெரியுமா? எல்லாம் இங்கிலீசு படிப்பில்லே படிக்கிறாக. அதாங்கறேன், கான்வென்ட்டாமில்லே கான்வென்ட்டு... நூறு நூறாப் பணத்தைப் பறிக்கிறாகளே. அந்த ஸ்கோல்லே படிக்கிறாகளய்யா! நீங்களும் நானும் அந்தக் காலத்திலே கான்வென்ட்டா படிச்சோம்? அதனாலே இப்ப என்னங்கறேன், கெட்டாப் போயிட்டோம்? இதைச் சொல்லப்போனா 'இந்தக் கௌத்துக்கு என்ன வேலை? போட்டதைச் சாப்பிட்டுட்டுப் பேசாமே ஊஞ்சல்லே விளுந்து கிடக்கிறதுதானே'ம்பாக இல்லையா?''

[ நன்றி : விகடன், ஓவியம்: கோபுலு ]

பின் குறிப்பு: சாவியின் ‘ கேரக்டர்’ நூலில் இந்தக் கட்டுரை இல்லை என்று நினைக்கிறேன்.

தொடர்புள்ள பதிவுகள்:
சாவி: படைப்புகள்
'

1 கருத்து:

Uma Shankari சொன்னது…

சுவாரசியமாக உள்ளது.