புதன், 5 நவம்பர், 2014

முல்லைத் திணை வாசன் :கவிதை


முல்லைத் திணை வாசன்

பசுபதி

அம்மன் தரிசனம்’ 2005 தீபாவளி மலரிலும், ‘ ஷண்முக கவசம்’ 2014 மலரிலும் வந்த கவிதை. 
கண்ணன் புகழ்சொல்லிக் கும்மியடி! -- வளைக்
. கைகள் குலுங்கிடக் கும்மியடி !
வண்ண மயிலிற காடிவரும் -- அவன்
. மாண்பினைப் பாடியே கும்மியடி !பாரதம் போற்றிடும் ஏகனடி! -- அவன்
. பார்த்தனின் தேருக்குப் பாகனடி!
நாரண பூர்ணாவ தாரனடி! -- கோதை
. நாச்சியார் நெஞ்சுறை சோரனடி!        (கண்ணன்)

இருவர்க்குச் சேயான கண்ணனடி! -- கருணை
. ஈரக் கருமுகில் வண்ணனடி!
குருகுலப் பாண்டவர் நண்பனடி! --ஏழைக்
. குசேலர்க் கருள்செய்த பண்பனடி!        (கண்ணன்)

மாமலை தூக்கிய பாலனடி! -- தன்
. மாமன் கொடுமைக்குக் காலனடி!
நால்மூவர் பாடிய சீலனடி ! -- ஸ்ரீ
. நாதனடி அவன் போதனடி!              (கண்ணன்)

சங்கத் தமிழரின் மாயவன்டி! -- வேத
. சாரமாம் கீதையின் நாயகன்டி !
நங்கைநப் பின்னை மணாளனடி! -- கோபன்
. நந்தன் மனம்மகிழ் ஆயனடி!             (கண்ணன்)

முல்லைத் திணையதன் வாசனடி! -- அவன்
. மோகனப் புன்னகை ஈசனடி!
புல்லாங் குழலிசை கேசவன்டி! -- அவன்
. பூதேவி சீதேவி நேசனடி !              (கண்ணன்)


~*~o0O0o~*~

தொடர்புள்ள பதிவு :

கவிதைகள்

4 கருத்துகள்:

Ramani S சொன்னது…

மீண்டும் மீண்டும் படித்து
மயங்கினேன்
அற்புதமான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Pas Pasupathy சொன்னது…

நன்றி, ரமணி !

Yarlpavanan Kasirajalingam சொன்னது…

சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

bhuma krishnan சொன்னது…

Nice kummi song with nice sorkattu ,bhavam nd devotion

கருத்துரையிடுக