வியாழன், 30 ஏப்ரல், 2015

சங்கீத சங்கதிகள் - 52

ஜி.என்.பி , மதுரை மணி  சந்தித்தால் ?  
மே 1. ஜி.என்.பியின்  நினைவு நாள். ( இந்த வருடம் 50-ஆவது நினைவு நாள்) இதோ அவர் நினைவில் சில ‘சங்கதி’கள் !

முதல் சங்கதி:
இசை விமர்சகர் சுப்புடு ஜி.என்.பி.யைப் பற்றி ஒரு கட்டுரையில் எழுதியது.

ஐம்பது வருடங்களுக்கு முன்பு இசை வானிலே ‘ஜி.என்.பி’ தோன்றியபோது இசைப் பழம்புள்ளிகளெல்லாம் பெரிதும் கலங்கினார்கள். ஏனெனில் ஜி.என்.பி. மேதா விலாசம் படைத்தவர். குறுகிய நோக்கம் அவரிடம் அறவே கிடையாது. பழைய பல்லவியைப் பாடாமல், இருபதே கீர்த்தனைகளை வைத்துக் கொண்டு காலம் தள்ளாமல், ராகங்களையும் கீர்த்தனைகளையும் எழில் நோக்குடன் கண்டு, இசை உலகில் ஒரு புரட்சியையே உண்டு பண்ணினார். நாதஸ்வரத்தை ஒத்த சாரீரம். நாலு ஸ்தாயிகளை எட்டும் சாரீரம். நினைத்ததையெல்லாம் பேசும் சாரீரம். 

அவர் ஒரு இசை வள்ளல். அண்டியவர்க்கெல்லாம் இசையை அள்ளி அள்ளி வழங்கினவர். அவருடைய சீடர்கள் அனந்த கோடி. வேறு எந்த மகா வித்வான்களுக்குள்ளும் இந்த மனப் பான்மையோ பாங்கோ அறவே கிடையாது. இதற்கு சாட்சி தேவையில்லை. இது அப்பட்டமான உண்மை. ”

இரண்டாம் சங்கதி:

ஆதௌ கீர்த்தனாரம்பத்தில் ... ‘ஆனந்த விகட’னில் 22.7.56-இல் ஒரு புதிய நகைச்சுவைத் தொடர் தொடங்கியது. “இவர்கள் சந்தித்தால்’ என்பது அதன் தலைப்பு.

முதலில் இந்தத் தொடரைப் பற்றி எழுத்தாளர் ஸ்ரீதர் ( பரணிதரன், மெரினா) , அமரர்  ‘கோபுலு’ இருவரும் என்ன சொன்னார்கள்  என்று  பார்ப்போம்.


அக்காலத்தில் ‘இவர்கள் சந்தித்தால்” என்ற பகுதியைப் படிக்காதவர்களே  இல்லை எனலாம். பத்திரிகை உலகிற்கே புது இலக்கணம் படைத்த எவரெஸ்ட் சட்டயர் அது. நான்கைந்து பேரை எழுதச் சொல்லி, அவற்றை அடித்துத் திருத்தி, செதுக்கிச் செப்பனிட்டு, இணைத்துப் பிணைத்து, ஒரு கட்டுரையைக் கடைந்தெடுக்கும் ஆசிரியரின் (வாசனின்) செப்பிடு வித்தையைக் கண்டு நான் வியந்து போனேன்.
                -- ஸ்ரீதர், ”விகடனில் நான்”,விகடன் பவழ விழா மலர் ---

அந்தக் கால கட்டம் விகடனுக்கு ஒரு லேசான இறங்குமுகமாக இருந்தது. அந்த சமயத்தில் வாசன், விகடனுக்குப் புதிய பொலிவு ஊட்டும் நோக்கத்துடன் தானே நேரடியாக விகடன் சம்பந்தப்பட்ட பணிகளைக் கவனிக்கத் தொடங்கினார். தினமும் விகடன் ஆபீசுக்கு வந்து, ஆசிரியர் இலாகாவினருடன் மீட்டிங் நடத்துவார். விகடனை இம்ப்ரூவ் பண்ண ஆலோசனைகள் சொல்லுவார். அனைவரிடம் ஆலோசனைகள் கேட்பார். அப்போது உதித்தது தான் ‘இவர்கள் சந்தித்தால்’ என்ற ஐடியா. இந்த வரிசையில் எழுதப் பட்ட கட்டுரைகளில் ராஜாஜி, ஈ.வே.ரா.வில் தொடங்கி பல இரு துருவ முக்கிய பிரமுகர்கள் சந்தித்துக் கொண்டால் என்ன நடக்கும்? என்ன பேசுவார்கள்? என்று சுவைபட விவரிக்கும் கற்பனைச் சந்திப்புகள் இடம்பெற்றன. அவை வாசகர்கள் மத்தியில் பரபரப்பான வரவேற்பினைப் பெற்றன. ‘
      --கோபுலு, “சித்திரம் பேசுதடி”,  தொடர், அமுதசுரபி, டிசம்பர் 2007.

( என் குறிப்பு:  

முதல் கட்டுரை ஈ.வே.ரா - ஆசார்ய வினோபாவுடன்  தான் தொடங்கியது. பிறகு ராஜாஜி-காமராஜர் , அண்ணாதுரை - ஸ்ரீபிரகாசா, சிவாஜி கணேசன் -எம்.ஜி.ஆர் என்ற பல சந்திப்புக் கட்டுரைகள் வந்தன.   தோராயமாக  20 கட்டுரைகள் வந்தன என்று நினைவு. ) 

முதல் கட்டுரைத் தொடர்புள்ள ஒரு படம் கீழே! )

அந்தத் தொடரில் அவ்வப்போது சங்கீதம், நடனம்  தொடர்புள்ள  சில கட்டுரைகள் வந்தன. அவற்றில் ஜி.என்.பி. தொடர்புள்ள ஒன்றை இங்கே இடுகிறேன்.  அவருடைய நண்பர் மதுரை மணிக்கும் இது ஓர் அஞ்சலி தான்!

இந்தக் கட்டுரைக்குப் போனஸ் அமரர் கோபுலு வின் ஓவியங்கள் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா? ( சில ஓவியங்களில் ‘மாலி’யின் பழைய சித்திரங்களின் சாயல் தெரியவில்லை? )[ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

ஜி.என்.பி.

மதுரை மணி 

சங்கீத சங்கதிகள் : மற்ற பதிவுகள்

2 கருத்துகள்:

Geetha Sambasivam சொன்னது…

நன்றி. அப்போதைய விகடன் ஓர் வரலாற்றுப் பெட்டகம்.

UK Sharma சொன்னது…

இந்தத் தொடர் கட்டுரைகளை அக்காலத்தில் நான் சிறுவனாகப் படித்திருக்கிறேன். மறந்து போய்விட்டது. நினைவூட்டியமைக்கு நன்றி.

கருத்துரையிடுக