திங்கள், 4 மே, 2015

தேவன் -20: யுத்த டயரி

யுத்த டயரி 
தேவன் 
மே 5. தேவனின் நினைவு தினம்.


இந்த வருடம் (2015)  இரண்டாம் உலகப் போர் முடிந்த 70-ஆவது ஆண்டு. உலகின் பல இடங்களிலும் அதை நினைவு கூரும் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்தத் தருணத்தில் ஆனந்த விகடனில்  வாரம்தோறும் தேவன் எழுதிய “யுத்த டயரி” என்ற பத்தியிலிருந்து சில துளிகளைப் பார்க்கலாம்.

இதை பற்றி அசோகமித்திரன் சொல்கிறார்:

தேவன் பலவிதமான துறைகளில் எழுதியிருக்கிறார்.... சிறுகதை, நாவல், பயணக் கட்டுரை, நிருபரின் அறிவிக்கைகள்,  செய்திகளை அலசல்  என்று. இரண்டாம் உலகப் போரின் போது தேவன் ”யுத்த டயரி”  என்ற கட்டுரைத் தொடர் மூலம் செய்திகளை அற்புதமாக அலசிக் கொடுத்தார்.   இது விகடனை போர்த் தகவல்களை அறிய  மிகச் சிறந்த இடமாய் ஆக்கியது “

                 - அசோகமித்திரன், செப்டெம்பர் 2008
http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/article1435655.ece

என்னிடம் உள்ள யுத்தம் பற்றிய சில பகுதிகளை இங்கு இடுகிறேன்.

முதலில் 1936/37-இல்    (யுத்தம் தொடங்குமுன் ) எழுதப்பட்ட ஒரு குறிப்பு:

1. ஜெர்மனி 

இங்கே பழைய ஆசாமி ஒருவர் - அவர் பேர் ஹிட்லர் - அட்டகாசம் பண்ணிக் கொண்டு திரிகிறார். இவர் தன்னைப் பற்றியே ஒரு சுய சரிதம் எழுதி விட்டாராம். சுய சரிதத்தின் படியே தம் வாழ்க்கையையும் நடத்தப் போவதாய் சொல்லிக் கொண்டிருக்கிறார். இவர் கிராப்பு சரியாக வாரி விட்டுக் கொள்வது கிடையாது. ஆனால் உலகத்தையே வாரிக் கொண்டு விடலாமென்று பார்க்கிறார். சமீபத்தில் இவர், ஜப்பானுடன் சிநேக உடன்படிக்கை செய்து கொண்டாராம். கள்ளனும் குள்ளனும் ஒன்று சேர்ந்தால் உலகத்துக்கு அனர்த்தம்தான்!

யுத்த டயரியிலிருந்து  சில துளிகள். .2.  24-10-39 - விகடனில் 


சண்டையில் ஈடுபட்டிருக்கும் எந்தத் தேச நீர்முழ்கிக் கப்பல்களும் அமெரிக்காவின் கடற் பிரதேசத்தில் 300 மைலுக்குள் வரக் கூடாதென்று ரூஸ்வெல்ட் உத்தரவிட்டிருக்கிறார்.


ஹிட்லருக்கு இப்பொழுது ஒரு புது யோசனை தோன்றியிருக்கிறது. 'முதலில் பிரிட்டிஷ் கப்பல் படையை நூற்றுக்கணக்கான விமானங்களாலும், நீர்முழ்கிக் கப்பல்களாலும் தாக்கி நாசம் செய்து விட வேண்டியது. அப்புறந்தான் ஸிக்பிரீட் அரணில் யுத்தத்துக்கு ஆரம்பிக்க வேண்டியது' என்று தீர்மானித்திருக்கிறார். நடுவில் பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் ஒற்றுமை குலையும்படி விஷமப் பிரசாரம் செய்துகொண்டிருக்கப் போகிறார்.


3. ஸ்பெயின் யுத்தம் 

ரிடயர்ட் ரிஜிஸ்ட்ரார் ரிக்வேத சாஸ்திரிகள் 

அவங்களுக்கு என்னடா குறைச்சல்? ஸ்பெயின் காரனுக்கு இதாலி ஒத்தாசை பண்றான். ஆளைக் கொடுத்துக் கொல்ல, ருஷ்யாவிலே கடன் கொடுத்து, வெடிமருந்து வாங்கிச் சுட்டுக் கொல்லச் சொல்றான். அவர்கள் ஒத்தனை ஒத்தன் கொன்று கொள்கிறதுக்கு நான், நீ என்று போட்டுக் கொண்டு எல்லா ராஜ்யங்களும் ஒத்தாசை பண்ண வறதுகள்; நடக்கட்டும், நடக்கட்டும், இது எவ்வளவு தூரம்தான் போகிறதுன்னு பார்த்து விட்டு விடுவோம்.

4.ஜாவா 

ஜாவாவை ஜப்பானிய விமானங்கள் தாக்க வரும்போது, நம்மைத் தூக்கி வாரிப் போடும் செய்திகளைக் கேட்க நேரலாம். அந்தச் செய்திகள்:

மதுரையின் மீது விமானப் படையெடுப்பு” 

குண்டூரில் பலத்த குண்டு வீச்சு”   என்பவைதான்.

இந்தப் பயங்கரச் செய்திகளைக் கேட்டு நாம் அப்படியே விலவிலத்துப் போக வேண்டாம்.

ஜாவாவின் பக்கத்திலே மதுரை என்ற தீவும், ஜாவாவிலேயே குண்டூர் என்ற இடமும் தாக்கப்படலாம் என்பதைத்தான் நாம் குறிப்பிட்டோம்.


5. 1944-இல்  ( பிப்ரவரி 44 என்று நினைக்கிறேன்.) எழுதப் பட்ட ஒரு ”யுத்த டயரி”ப் பக்கம்:


ஹிட்லரின் வீழ்ச்சியைப் பற்றி  1944 -இல்  'யுத்த டயரி'யில் வெளியான ஒரு குறிப்பு.

6. ஹிட்லர் எங்கே?


எங்கு பார்த்தாலும் இவ்வாரம் ஹிட்லரைப் பற்றிய பேச்சாகவே இருக்கிறது. அவர் இப்போது ஜெர்மனியில் இல்லை என்பதற்கு அனுசரணையான காரணங்களாகப் பலவற்றை அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள். தவிர, அவருக்கு ரொம்ப உடம்பு அசௌக்கியம் என்றும், புத்தியே பேதலித்து விட்டது என்றும், தொண்டையில் ஆபரேஷன் ஆகியிருக்கிறதென்றும், இன்னும் இம்மாதிரி பலவிதமான ஹேஷ்யங்கள் தினம் தோறும் வந்து கொண்டிருந்தன. எல்லாவற்றையும் விட அதிக நம்பகமான தகவலை ஒரு டச்சு ஸ்திரீ சொல்லுகிறாள். ஹிட்லரும் கோயரிங்குமாக ஜப்பானுக்குப் போய்விட்டார்களாம். ஜப்பானை முடுக்கிவிட்டு, அதை ரஷ்யாமீது பாயும்படி செய்வதுதான் இந்த அவசர விஜயத்தின் நோக்கமாம்.

[ நன்றி: விகடன் ]


தொடர்புள்ள பதிவுகள்; 

தேவன் படைப்புகள்

1 கருத்து:

Nagarajan Seshadri சொன்னது…

Sir, I happened to visit ur blog today. Very nice. Your interests in early tamil novelists like Devan etc are shared by me. I am a retired person living in chennai but right now in the usa upto November 2015. Can u send ur email id for contacting u in getting information abt tamil novels etc. My id is snrajan2006 in gmail. Kindly email me with ur details. By the way I am also from CEG having passed in 1975 in EEE branch and worked in a PSU. S.Nagarajan

கருத்துரையிடுக