வெள்ளி, 29 மே, 2015

கவிஞர் சுரபி - 2

பரீட்சை முடிஞ்சு போச்சுதப்பா மூட்டெ கட்டுங்க!  

‘சுரபி’ 



கவிஞர் சுரபியும் கவிஞர் கொத்தமங்கலம் சுப்புவும் மாறி மாறி விகடனில் கவிதைகளைப் பொழிந்த காலம் உண்டு. சிலசமயம் சுரபியின் கவிதையைப் படித்தால், சுப்பு அவர்களின் ஒரு பாடல் அவர் மனத்தில் ஓடினதோ என்று தோன்றும். உதாரணமாக, சுப்பு சாரின் பிரபல பாடல் ஒன்று

 : “வேட்டை முடிஞ்சு போச்சு தம்பி வீட்டுக்கு வாங்க”

என்று தொடங்கும். இதை என் வலைப்பூவிலும் இட்டிருக்கிறேன் இங்கே . இந்த மெட்டின் தாக்கத்திலே தான் சுரபி இந்தப்  பாட்டு எழுதினாரோ என்று எனக்குத் தோன்றும்!

இதோ அந்தப் பாட்டு: ( ஓவியம்: ராஜு )




இந்தப் பாடல் 7-4-1946 இதழில் வந்தது என்கிறது 

பரீட்சை முடிஞ்சு போச்சுதப்பா மூட்டெ கட்டுங்க!

சுரபி
படிச்ச படிப்பு போதுந் தம்பி மடிச்சு வையுங்க
பரீட்சை முடிஞ்சு போச்சுதப்பா மூட்டெ கட்டுங்க
போட்டி போட்டுப் பொஸ்தகத்தெப் பொரட்டி வந்தீங்க
பொஸ்தகமா நாளைக்கெல்லாம் பொதி சொமந்தீங்க
நோட்டு நோட்டா எழுதிக் கையும் நொந்து போனீங்க
நூறு வருஷம் எரிக்க ஒதவும் மூட்டெ கட்டுங்க
கப்பு கப்பா டீ குடிச்சுக் கண்முழிச்சீங்க
கணக்கு சயின்ஸ் இஸ்டரிண்ணு கடமும்போட்டீங்க
குப்பி குப்பி யாக்கெரஸின் கொளுத்திப்புட்டீங்க
கும்பிருட்டாப் போச்சுதப்பா மூட்டெ கட்டுங்க
கடியாரத்தெத் திருப்பிவச்சிக் கனவுகண்டீங்க
கதறியெழுந்து கண்ணெநிமிட்டிக் கர்ம மிண்ணீங்க
விடிய விடியத் தூங்கிவழிஞ்சி வெறுத்துப்புட்டீங்க
விடிவு காலம் வந்ததப்பா மூட்டெகட்டுங்க
மாலையெல்லாங் கோயிலிலே மண்டி போட்டீங்க
வழக்கமில்லா வழக்கமாக வலமும் வந்தீங்க
பாலை வாங்கிக் கொட்டிக் கொட்டிப் பழிகெடந்தீங்க
பார்த்துக்கலாம் பலனையெல்லாம் மூட்டெ கட்டுங்க
அருத்தமில்லா எழுத்தெக் கரைச்சிக் குடிச்சிப்புட்டீங்க
அப்பாவோட ஆஸ்தியெல்லாங் கரைச்சிப்புட்டீங்க
கருத்து தெரிஞ்ச நாள்மொதலா கஷ்டப்பட்டீங்க
கவைக்கொதவாப் படிப்பு தம்பி மூட்டெ கட்டுங்க
கோட்டு சூட்டு பூட்டு ஹாட்டு மாட்டிக்கிட்டீங்க
கோலெரிட்ஜு மில்ட னின்னு கொளறிப்புட்டீங்க
ஏட்டுச் சொரையே நம்பி அடுப்பெ மூட்டிப்புட்டீங்க
ஏளனமாப் போச்சுதப்பா மூட்டெ கட்டுங்க
பிரஞ்சு நாட்டு அரசியலெ அலசிப்புட்டீங்க
பின்லந்தோட குளிரையெல்லாம் அளந்துபுட்டீங்க
பொறந்த நாட்டெ மறந்துப் பேசப்புகுந்துபுட்டீங்க
போதுமப்பா படிச்ச படிப்பு மூட்டெ கட்டுங்க
ஒரஞ்செய்த க்ளைவை கர்ம வீரனாயாக்கி
ஒலகக் கொள்ளைக் கார ட்ரேக்கை உத்தமனாக்கி
மாரதத்தின் சிங்கந்தன்னை மலை எலியாக்கி
மானங்கெட்டது போதுமப்பா மூட்டெ கட்டுங்க
பண்டெக்காலப் படிப்புமில்லே அலட்சியமாச்சு
பரதேசத்துப் படிப்புமில்லே அரைகொறையாச்சு
ரெண்டு ஆட்டெ ஊட்டி வளர்ந்த குட்டியாயாச்சு
ரேஷன் படிப்பு போதுமப்பா மூட்டெ கட்டுங்க
அடிமெ வாழ்வு தீருங் காலம் வந்திருக்குது
ஆத்திரமா தேசமெல்லாங் காத்திருக்குது
புதுமெ வெள்ளம் பொரண்டு வரக் காத்திருக்குது
போதுமப்பா பழையபடிப்பு மூட்டெ கட்டுங்க.

தொடர்புள்ள பதிவுகள்:

2 கருத்துகள்:

Los Angeles Swaminathan சொன்னது…

படிக்கப் படிக்கச் சிரிப்பு வருதுங்க
படமா மாட்டி வைக்கத் தோணுதுங்க !
இன்னிக் காலத்துக்கும் இதெல்லாம் பொருந்துமுங்க
என்னிக்கும் நாமிதை மறக்கக் கூடாதுங்க !
பகிர்வுக்கு நன்றி !

Soundar சொன்னது…

அங்க இங்க படித்த தெல்லாம் அள்ளித் தராங்க
. . அற்புதமா எடுத்துச் சொல்லி அலசித் தராங்க
எங்க ஊரு பெற்ற பேறு இவரு தானுங்க
. . இணையத்துல இவரைப்போல யாருமில்லீங்க!