|
[ ஓவியம்: நடனம் ] |
அவளுடைய கறுத்த
மேனிக்கு அந்த வெள்ளை கவுன் 'பளிச்' சென்று இருக்கும். தலையைப் பின்னி, கொண்டையாக வளைத்துக் கட்டி, நர்ஸூகளுக்குரிய பட்டை வெள்ளைத் துணியை அதன் மீது செருகியிருப்பாள்.
இரு கைகளையும் அடிக்கடி கவுன் பாக்கெட்டுகளில்
விட்டுக் கொண்டு, வார்டு பாய்களை விரட்டியபடியே 'டக் டக்'கென்று நடந்து
செல்வாள். ஆங்கிலமும் கொச்சைத் தமிழும் கலந்த மணிப் பிரவாள நடையில் கீச்சுக்
கீச் சென்று கத்தி, வார்டையே அதிரச் செய்வாள்.
''ஏ, முன்சாமி! இத்தினி நேரம் எங்கே போயிருந்துச்சு? நீ வர வர கெட்டுப் போச்சு. வராண்டா கிளீன் பண்லே... ஏழாம்
நெம்பர் பெட் மாத்லே... இரு இரு, டாக்டர் கிட்டே
சொல்லி உன்கு பய்ன் போடுது. அப்பத்தான் புத்தி வரும் உன்கு. போய் அந்த 'சிரிஞ்சு' எடுத்துக்கிட்டு
வா! டயம் என்ன ஆச்சு தெரியுமா.. டாக்டர் வந்தா யாரு டோஸ் வாங்குறது? உன்கு மூளை இல்லே?!''
''நர்ஸியம்மா...'' - நோயாளி ஒருவருடைய குரல் இது.
''யாருது கூப்டறது? பிராக்சர் கேஸா? இன்னா ஓணும்
உன்கு?''
''தண்ணி
வேணும்மா...''
''தண்ணி இல்லே.
சும்மா சும்மா தண்ணி குடிக்காதே. 'ஸெப்டிக்' ஆயிடும்.''
''அம்மா...''
''யாரு? ஸ்டமக் ஆபரேஷனா? ஒனுக்கு இன்னா
ஓணும்?''
''வீட்லருந்து
பலாப்பழம் வந்து ருக்குது. சாப்பிடலாமாம்மா?''
|
[ ஓவியம்: கோபுலு } |
''நல்ல ஆலு நீ...
பலாப்பளம் துன்றே? ஜாக் புரூட்! டாக்டர் வரட்டும் சொல்றேன். வயித்து
வலிக்கு ஆப்ரேஷன் பண்ணிகிட்டு பலாப்பளம் துன்றியா? உன்னை டிஸ்சார்ஜ்
பண்ணிடறேன் பாரு! எங்கே அந்த பலாப்பளம்? எடு இப்டி!
பாய்..! இந்தா, இதைக் கொண்டு போய் என் டேபிள் மேலே வை. நீ
துன்னுப்புடாதே! வார்டு பூரா குப்பை! வாட்டர் புடிச்சு வெக்கலே; பேஸின் கொண் டாந்து வெக்கலே! போய் சீக்கிரம் கொண்டா மேன்!
டிவென்டி த்ரீ பெட்டுக்கு 'பெட் பேன்' ஓணு மாம்; அட்ச்சுக்குது
பார், ஓடு!''
நர்ஸ் நாகமணி, வார்டுக்குள்
வருகிறாள் என்றாலே எல்லாருக்கும் பயம்தான். எல்லோரையும்
விரட்டிக்கொண்டேயிருப்பாள்.ரூல் என்றால் ரூல்தான். ரூலுக்கு விரோதமாக எதுவும்
நடக்கக் கூடாது அவளுக்கு. நோயாளி யாக இருந்தாலும் சரி, விசிட்டர்களாயிருந்தாலும் சரி, வார்டு பாயாக இருந்தா லும் சரி... எல்லாரிடமும் ஒரே
கண்டிப்புதான்.
''நர்ஸம்மா
அப்படித்தான் பேசும். ஆனால், நல்ல மாதிரி'' என்பான் வார்டு பாய்.
டியூட்டிக்கு வரும்போது இருக்கும் அதட்டலும்
உருட்டலும், பணி முடிந்து வெளியே போகும்போது அடியோடு
மாறிவிடும். காலையில் நெருப்பு மாதிரி சீறிக்கொண்டு இருந்தவளா இப்போது இப்படிப்
பச்சை வாழைப்பட்டையாக மாறி விட்டாள் என்று அதிசயிக்கத் தோன்றும்.
''என்ன
செவன்ட்டீன்! நான் வரட்டுமா? நல்லாத்
தூங்கணும்; மருந்து குடிக்கணும். இந்த நாகமணி வார்டுக்கு வர
பேஷன்ட்டுங்க நல்லபடியாத்தான் திரும்பிப் போவாங்க'' என்று ஒவ்வொரு
நோயாளியிடமும் பெருமையாகச் சொல்லிவிட்டுப் போவாள். விசிட்டர்கள் யாராவது
அவளுக்கு இனாம் கொடுக்க முன்வந்தால், ரொம்பக் கோபம்
வந்துவிடும் அவளுக்கு. ''இந்த நாகமணி யார் கிட்டேயும் காசு வாங்கமாட்டா.
அந்த வார்டுபாய்கிட்டே கொடுங்க. பாவம், புள்ளை
குட்டிக்காரன்'' என்பாள்.
ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் சர்ச்; பகலில் தூக்கம். மாலையில் சினிமா; மறுபடியும் டியூட்டி! இதுதான் நாகமணியின் வாழ்க்கை.
[ நன்றி : விகடன் ]
|
1 கருத்து:
உங்கள் பதிவுகளை நான் விரும்பிப் படிக்கிறேன். பல அரிய தகவல்களைத் தருகிறீர்கள். நன்றி
கருத்துரையிடுக