திங்கள், 17 மே, 2021

1875. பெ.சு.மணி - 1

'தி ரிபப்ளிக்':சர்மாஜியைக் கவர்ந்த நூல்

பெ.சு.மணி 


27 ஏப்ரல், 2021 அன்று மறைந்த தமிழறிஞர் பெ.சு.மணிக்கு அஞ்சலியாய் 'தினமணி' யில் அவர் எழுதிய ஒரு கட்டுரையை இங்கே இடுகிறேன். 

==== 

 அரசியல் தமிழ் இலக்கியத்துறையின் முன்னோடி அமரர் வெங்களத்தூர் சாமிநாத சர்மா (1895 - 1978) பல வேறுபட்ட இவருடைய 78 நூல்களுள் 'பிளாட்டோவின் அரசியல்' தலைசிறந்தது. இவ்வுண்மையை அவரே என்னிடம் நேரில் குறிப்பிட்டுளார். சாக்ரடீஸ் (கி.மு. 470 - 399), பிளாட்டோ (கி.மு. 427 - 347) இணைப்பில் உருவான உலகப் புகழ் பெற்ற நூல் 'ரிபப்ளிக்' என்றழைக்கப்படும் 'பிளாட்டோவின் அரசியல்'.. பிளாட்டோவின் 26 நூல்களில் "இதுவே மணிமகுடம். என்னை அதிகமாக வசீகரித்ததும் 'ரிபப்ளிக்' நூல்தான்" என்று சர்மாஜியே கூறியுளார்.

 'பிளாட்டோவின் அரசியல்' வாசக உள்ளங்களை வென்று வாகை சூடியதற்கு முதற்காரணம் சர்மாஜியின் மொழிபெயர்ப்புச் சிறப்பு. மொழிபெயர்ப்பு கலையின் திட்ப - நுட்பங்களைத் தேர்ந்து தெளிந்தவர் அவர்.

  'பிளாட்டோவின் அரசியல்' நூலைப் படித்த டாக்டர் மு.வ., பிளாட்டோவும் சாக்ரடீஸும் தமிழிலேயே உரையாடியிருப்பார்களோ என்று தோன்றியதாக சர்மாஜியிடம் வியப்புடன் கூறினாராம். இதை சர்மாஜி என்னிடம் நினைவு கூர்ந்தார். 'பிரபஞ்சசோதி பிரசுராலயம்' இந்த நூலின் பல பதிப்புகளை வெளியிட்டது. நான்காம் பதிப்பில் 'பிளாட்டோவும் நானும்' எனும் தலைப்பில் சர்மாஜி எழுதினார். அதில் பிளாட்டோவிடம் தாம் கொண்ட ஈடுபாடு திரு.வி.க.வின் தேசபக்தன் நாளேட்டிலேயே தொடங்கியது என்று சுட்டிக்காட்டி அதன்  வளர்ச்சியை விவரித்துள்ளார். 'பிளாட்டோவின் அரசியல்' என் நெஞ்சை அள்ளியதற்கு மற்றொரு காரணம் சிந்தனைச் செம்மல் சாக்ரடீசின் நவில்தோறும் நயம் தரும் புதுமைகள். இவை சிந்தனைக் கருவூலத்துக் கலைச் செல்வங்களாகும். சாக்ரடீஸ் எதையும் எழுதவில்லை . அவர் இளம் வயதில் கற்சிலை வடிக்கும் சிற்பியாக மட்டுமே அரும்பினார். பிற்காலத்தில் சிந்தனைகளைச் செதுக்கி சொல்லோவியங்களைப் படைத்த நாவுக்கரசராய் மலர்ந்துவிட்டார். இந்த புத்தெழுச்சிக்கு மூலகர்த்தா, அவருடைய அருமைச் சீடர் பிளாட்டோ, குருநாதரின் உடையாடல் கலையில் விளைந்த கருத்துகளுக்கு எழுத்து வடிவம் அளித்தவர் பிளாட்டோ.

 'பிளாட்டோவின் அரசியல்' பத்து புத்தகங்களை, அதாவது பத்து அத்தியாயங்களைக் கொண்டது. உரையாடல் பாங்கில் அமைந்தது. உடையாடல் கலையின் நுட்பங்களையெல்லாம் இந்த நூலில் கற்றுத் தெளிவு பெறலாம். தனி மனிதனுடைய அறவாழ்க்கை , சமூதாயத்தின் அரசியல் வாழ்க்கை இரண்டையும் இயைபுப்படுத்திக் காட்டுகிறார் பிளாட்டோ.

 இந்த நூலின் மூலதத்துவம், "எல்லாவற்றிற்கும் மூலமாய் உள்ளது நீதி அல்லது தருமம் என்பதாகும். பிளாட்டோ கற்பிக்கிற அரசின் பல்வேறு இலட்சியங்கள், சமூக அமைப்புகள், தத்துவங்கள், கலைப்பயிற்சிகள், இலக்கியக் கோட்பாடுகள் முதலானவையெல்லாம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை இந்த நூல் விரித்துரைகின்றது.

 நீதி (அ) தருமம் என்பது அறிவு, வீரம், தன்னடக்கத்தின் கூட்டுக் கலவையாகும் என்று விளக்கப்பட்டுள்ளது. இலக்கியத்தில் பொய் இலக்கியம், மெய் இலக்கியம் என்ற இருவகைகளைக் குறித்து உரையாடியபொழுது சாக்ரடீஸ் உலக மகாகவி ஹோமரைப் (கி.மு. 11-ஆம் நூற்றாண்டு) பற்றியும் கிரேக்கத்தின் மற்றொரு மகா கவிஞரான ஹெசியாட்டையும் (கி.மு. 8-ஆம் நூற்றாண்டு) விமர்சனம் செய்துள்ளார்.

"அழகில்லாத பொய்களை இவர்கள் தங்கள் கதைகளில் நுழைத்திருக்கிறார்கள். விபரீதமான குற்றங்களைச் செய்கிற கடவுளர்களைச் சிருஷ்டித்து, அந்தக் கடவுளர்களின் கதைகளைச் சிறுவர்களுக்குச் சொல்லிக் கொடுப்போமானால் அவர்கள் என்ன நினைப்பார்கள் தெரியுமா?கடவுளர்களே பல குற்றங்கள் செய்கிறபொழுது நாமும் செய்தால் என்ன என்று கருதி அதே மாதிரி செய்யத் தொடங்கிவிடுவார்கள். எனவே அவர்களுக்கு இந்தமாதிரியான கதைகளைச் சொல்லிக் கொடுக்கக் கூடாது. தவிர, ஒரு தெய்வத்திற்கு எதிராக மற்றொரு தெய்வம் சதி செய்வதாகவோ அல்லது யுத்தம் செய்வதாகவோ உள்ள கதைகளையும் நாம் சொல்லலாகாது. ராட்சதர்களோ அல்லது தேவர்களோ ஒருவருக்கொருவர் போராட்டங்கள் நடத்தியதாகவும் நாம் உபதேசிக்கலாகாது. மனிதர்கள் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டுமென்றும் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் நீதிகளைப் புகட்டுகிற கதைகளையே சொல்ல வேண்டும்.

 ஞானிகளே ஆட்சி செய்ய வேண்டும். ஆள்வோருக்கும் பாதுகாவலர்களுக்கும் தனிச்சொத்துரிமை கூடாது. ராஜ்யத்தில் கவிஞர்களை வெளியேற்ற வேண்டும். ஆத்மாவின் பரமார்த்திகத் தன்மையை வளர்த்து அதன் மூலம் ஆத்மாவைச் சுற்றிலும் இருக்கிற உலக பந்தங்களையெல்லாம் அப்புறப்படுத்த வேண்டும். அளவுக்கு மீறிய துர்ப்பழக்கங்களைப் பற்றிச் சொல்கிற வரலாறு, காமக் குரோத உணர்ச்சிகளை உண்டுபண்ணக் கூடிய கதைகளையும் ஆடம்பர வாழ்க்கையில் மோகங்கொள்ளத் தக்க நிகழ்ச்சிகளையும் நமது இளைஞர்களின் போதனா முறையில் இருந்து அகற்றிவிட வேண்டும்".

'பிளாட்டோவின் அரசியல்' இது போன்ற பல கருத்துகளை வினா - விடைப் பாங்கில் விளக்கும் இலக்கிய உத்தி வாசகர்கள் பலரையும் கவர்ந்திருக்கிறது.

'தெளிவு பெற அறிந்திடுதல், தெளிவு பெற மொழிந்திடுதல்' என்ற பாரதி வாக்கை சர்மாஜி இந்த நூலில் சாதித்துக் காட்டியுள்ளார்

=== 

[ நன்றி: தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:

 பெ.சு.மணி 

பெ. சு. மணி: விக்கிப்பீடியா

பி.கு.  I have now switched to a new service , follow.it  which will deliver my blog-updates to your e-mail regularly. If you like what you have read and the contents of my blog and would like to be a follower of my blog, please enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog. If you are already a Follower of my blog , thanks for reading! 


கருத்துகள் இல்லை: