திங்கள், 16 மே, 2022

2114. ரா.வீழிநாதன் - 1

மொழி இணைப்புப் பாலம் அமைத்த ரா.வீழிநாதன்

செங்கோட்டை ஸ்ரீராம்


மே 15. ரா.வீழிநாதனின் பிறந்த நாள். 

==== 

தமிழ் மொழிபெயர்ப்பு இலக்கிய உலகில் தனி இடம் பெற்றவர் ரா.வீழிநாதன். சிறந்த படைப்பாளி. இலக்கியவாதிகள், வாசகர்கள் மத்தியில் மிகப் பிரபலமான பெயர். தமிழில் இருநூறுக்கும் அதிகமான சிறுகதைகள், கட்டுரைகள், புதினங்களைப் படைத்தவர். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியப்பணி புரிந்தவர். இதற்காக அவர் கற்றவை மிக அதிகம். கல்கி வார இதழில் உதவி ஆசிரியராக வெகுகாலம் பணி செய்த இவர், பின்னாளில் காஞ்சி மகாபெரியவர் ஆசியுடன் வெளிவந்த “அமரபாரதி’ மாத இதழின் நிறுவன ஆசிரியரானார். மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர். இந்தியிலிருந்து தமிழில் இவர் மொழிபெயர்த்துள்ளவை மிக அதிகம். குஜராத்தி, மராத்தி, உருது, பெங்காலி ஆகிய மொழிகளிலும் தேர்ந்தவர்.

 1920-ஆம் ஆண்டு மே 15-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் பூந்தோட்டத்துக்கு அருகில் உள்ள விஷ்ணுபுரம் என்ற கிராமத்தில் பிறந்தார். காவிரியின் கிளை நதியான அரசலாற்றின் கரையில் உள்ள திருவீழிமிழலை இறைவன் பெயரையே பெற்றோர் இவருக்குச் சூட்டினர்.

 அடிப்படைப் படிப்பறிவே ஆடம்பரமாகக் கருதப்பட்ட அந்தக் காலத்தில், ரா.வீ.க்கு ஹிந்தி உள்ளிட்ட வேற்று மொழிகளும் படிக்க ஆசை. அந்தக் கிராமத்திலேயே வசித்த வி.கே.சுப்பிரமணிய ஐயர் இவரைத் தன் மகன்போல் நேசித்து, எந்தவித குருதட்சிணையும் இன்றி ஹிந்தி கற்றுக் கொடுத்தாராம். தொடர்ந்து சம்ஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளும் கற்றார் ரா.வீ.


 இவருக்கு 14 வயது இருக்கும்போது, தவளாம்பாள் என்ற பெண்ணை மணம் செய்து வைத்தனர். அவரே ரா.வீ.யின் மூச்சுக்கும் பேச்சுக்கும் காரண சக்தியாக விளங்கினார். பெரும்பாலானோர், குடும்பம் ஓர் இம்சை என்று கருதும் நிலையில், ரா.வீ.யின் எழுதும் இச்சைக்கு உயிரூட்டியவர் மனைவி தவளாம்பாளே. இதை பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார் ரா.வீ.


 காந்தியின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டார். இந்தி ராஷ்டிரபாஷா தேர்வில் தென்னாட்டிலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து இந்தி பிரசார சபைகளிலும், திருச்சி ஜோசப் கல்லூரி, தேசியக் கல்லூரி, ஹோலி கிராஸ் கல்லூரிகளில் இந்தி விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். பிரசார சபை நடத்தி வந்த “இந்தி பத்ரிகா’ இதழிலும் பங்காற்றியுள்ளார். சென்னையில் இந்தி பிரசார சபா வெள்ளிவிழாவுக்கு காந்திஜி வருகை தந்தபோது, அவருடன் இணைந்து பங்காற்றிய பெருமை ரா.வீழிநாதனுக்கு உண்டு.


 வீழிநாதனின் முதல் சிறுகதை “ரயில் பிரயாணம்’ 1942-இல் “கலைமகள்’ இதழில் வெளியானது. தொடர்ந்து “காவேரி’ இதழில் இவர் படைப்புகள் வெளிவரலாயின. அடுத்து, “கல்கி’ இவரைப் பெரிதும் ஆட்கொண்டது. கல்கியில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். கூடவே, இந்தியில் தயாரான “மீரா’ படத்துக்கு வசன மேற்பார்வையும், அதில் நடித்த எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு இந்தி கற்றுக்கொடுக்கும் பணியும் சேர்ந்தே நடந்தது.

 “கல்கி’ கிருஷ்ணமூர்த்தியே வீழிநாதனை சம்ஸ்கிருத, இந்திக் கதைகள், படைப்புகளை தமிழில் மொழிபெயர்க்கத் தூண்டுகோலாக இருந்தார். தனது கதைகள், நாவல்களை இந்தியில் மொழிபெயர்க்கச் சொன்னார். சோலைமலை ராஜகுமாரி, பார்த்திபன் கனவு, அலையோசை ஆகியவை இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டன. அலையோசை, “லஹரான் கி ஆவாஜ்’ என இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டது இவருக்கு சிறந்த மொழிபெயர்ப்பு விருதைப் பெற்றுத் தந்தது. அதன் மூலம் ரா.வீழிநாதன் பெயர் தமிழ்-இந்தி இலக்கிய இதழியல் உலகில் மிகப் பிரபலமடைந்தது. இவைதவிர, சிறுகதைகள், கட்டுரைகள், துணுக்குகள் போன்றவற்றை அதிகம் எழுதியுள்ளார். காவேரி, கல்கி, நவயுவன், கலைவாணி, சக்தி, கலைமகள், ஆனந்தபோதினி, பிரசண்ட விகடன், நவசக்தி, நாடோடி, தென்றல், மாலதி, திரைஒலி, சிவாஜி, ஹிந்துஸ்தான், நல்ல மாணவர், அணுவிரதம், தமிழ்நாடு, குமுதம், விகடன், சாவி, இதயம் பேசுகிறது, முத்தாரம், மஞ்சரி, விஜயபாரதம், கோகுலம், பூந்தளிர், சுதேசமித்திரன், தினமணி, தினமணி கதிர் என அந்தக் காலத்தைய அனைத்து பத்திரிகைகளிலும் இவரின் படைப்புகள் வெளியாகியுள்ளன.

 குறும்பன், அட்சயம், ஆங்கிலம், மாரீசன், ராமயோகி, ராமகுமார், கிருத்திவாஸ், ராவீ, விஷ்ணு என்றெல்லாம் புனைபெயர் வைத்துக்கொண்டு எழுதினார் ரா.வீழிநாதன். “காசி யாத்திரை’ என்ற நூல் இவரின் எழுத்துலக அனுபவத்துக்குச் சான்று. விசும்பரநாத் கெüசிக் எழுதிய பிகாரினி (பிச்சைக்காரி) நாவலை இவர் யசோதரா என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். இதில் சாண்டில்யனின் முன்னுரை, நூலின் சிறப்பை உணர்த்தும்.

 குறிப்பாக, ஜெகசிற்பியனின் ஜீவகீதம் நாவல், “பஹர் க அத்மி’ என்ற பெயரில் மொழிபெயர்ப்பானது. ஜெயகாந்தனின் ஜெய ஜெய சங்கர, ராஜாஜியின் பஜகோவிந்தம், நவீன உத்தரகாண்டம் ஆகியவை இதே பெயர்களில் இவரால் இந்திக்குச் சென்றன. நா.பா.வின் சமுதாய வீதி, தி.ஜா.வின் வடிவேலு வாத்தியார், பி.எஸ்.ராமையாவின் பதச்சோறு, என்.சிதம்பர சுப்ரமணியத்தின் இதயகீதம் உள்ளிட்ட மேலும் பல நூல்கள் இந்தி இலக்கிய உலகில் இடம்பிடிக்கக் காரணமாக அமைந்தவர் ரா.வீ.

 1980 பிப்ரவரி முதல் இவர் நிறுவன ஆசிரியராக இருந்து நடத்திய “அமரபாரதி’ பத்திரிகையை குடும்பப் பத்திரிகை என்றே சொல்வார் ரா.வீ. பத்திரிகைப் பணிகளில் குடும்ப உறுப்பினர்கள் எல்லோருமே உதவி செய்ததால் அவ்வாறு கூறுவதாகச் சொல்வார் ரா.வீ.

 “”எழுதுவது அற்புதமான கலை. சக்தி வாய்ந்தது. அதற்கு நல்ல கல்வியறிவும், விஷயங்களைப் புரிந்துகொண்டு வெளிப்படுத்தும் திறனும் மிகத் தேவை. நல்ல மொழியறிவு அவசியம். இவையெல்லாம் இருந்தால்தான் எழுத்தின் மூலம் நல்ல கருத்துகளை, சொல்ல வருவதை மிகத் தெளிவாக அழகாக வாசகரிடம் கொண்டு சேர்க்க முடியும்” – இது ரா.வீழிநாதன் அடிக்கடி சொல்லும் விஷயம்.

 சிறிய துண்டுத் தாளில்கூட குறிப்புகளை எழுதுவார். துணுக்குகள் படைப்பார். தம் 75-ஆம் வயதில் அவர் மறையும் வரை, துணுக்குகள் எழுதுவதைக்கூட அவர் கைவிடவேயில்லை. “என்னதான் இலக்கியவாதியாக இருந்தாலும், மொழிபெயர்ப்பு இலக்கியத் துறையில் ஈடுபடுபவரை இரண்டாம்தரக் குடிமகனாகக் கருதும் போக்கு வருந்தத்தக்கது’ என்பதை அவரே ஓரிடத்தில் பதிவு செய்திருக்கிறார்.

 மஞ்சரி இதழில் ரா.வீ.யின் எழுத்துகள் அதிகம் இடம்பெற்றன. மொழி பெயர்ப்புக் கலை குறித்த இவருடைய சிறு சிறு கட்டுரைகள், தமிழ்ப் படைப்புகள் உலகை ஆக்கிரமிக்க வழி சொல்லுபவை. மொழிபெயர்ப்பு இலக்கிய உலகில் தனித்துவம் பெற்ற இதழாளர். நவீன உலகில் தமிழின் ஆளுமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும் ஒவ்வொருவரும் அடையாளமாகக் கொள்ள வேண்டியவரும்கூட!

[ நன்றி:dhinasari.com ]

தொடர்புள்ள பதிவுகள்:


[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

கருத்துகள் இல்லை: