ஞாயிறு, 1 ஜனவரி, 2023

2391. உ.வே.சா. - 15

எங்கள் தமிழ் ஆசிரியர்

ரிஷியூர் எஸ். வேங்கடராமையர்










கலைமகளில் 1955-இல் அவருடைய நூற்றாண்டு விழாக் காலத்தில் வந்த ஒரு கட்டுரை இதோ.

====

எங்கள் காலத்தில் தமிழ் வாத்தியார் என்றாலே எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் பையன்களுக்கு வேடிக்கையும் விளையாட்டுமாக இருக்கும்.  அவரிடம் மதிப்பு உண்டாவது இல்லை.  பாடம் நடக்கும்பொழுது கூச்சல் ஓயாது.  சில வாத்தியார்கள் கடுமையாகக் கண்டிப்பார்கள்.  ஆனால் பையன்கள் பயப்படாமல் சிரித்து, நையாண்டி செய்வார்கள்.  சிலர் அழாத குறையாகக் கெஞ்சுவார்கள்.  இவர்களைப் பையன்கள் படுத்தி அழவே வைத்துவிடுவார்கள்.  வேறு சிலர் தலைவரிடம் புகார் சொல்லுவதாகப் பயமுறுத்துவார்கள்.  அதுவும் பலிக்காது.  அந்தோ! அவர்கள் கதி பரிதாபம்!  அத்தகைய குழாத்தில் தனிச் சிறப்புடன் விளங்கி, மாணாக்கர்களின் மதிப்பு, மரியாதை, கவனம், பயம், அபிமானம், நன்றி முதலிய எல்லாக் காணிக்கைகளையும் ஒருங்கே அடைந்தவர் எங்கள் குருமணியாகிய மகாமகோபாத்தியாயர்.

மெதுவாக நடந்து, புன்சிரிப்புடன் வகுப்பில் பிரவேசித்து மேடையிலேறி ஆசனத்தில் அமர்வார்.  பையன்கள் கப்சிப் என்று வாயை மூடிக்கொண்டு எழுந்து நிற்பார்கள்.  அவர்களை உட்காரும்படி கையமர்த்திவிட்டு வகுப்பு முழுவதையும் நிதானமாக அன்பு சொரிய ஒரு சுற்றுப் பார்ப்பார்.  வருஷ ஆரம்பத்தில் சட்டாம்பிள்ளை என்று பையன்களில் ஒருவனை நியமித்துவிடுவார்.  அவன், பெயரேட்டை வாசிப்பான்.  பையன்கள், 'ஆஜர்' சொல்லுவார்கள்.  இது முடிந்தவுடன் பெயரேட்டில் கையொப்பமிட்டுவிட்டுப் பாடம் நடத்தப் புத்தகத்தைத் திறந்து வைத்துக்கொள்வார்.  செய்யுட்களை இசையுடன் வாசிக்க வேண்டும் என்பது அவர் கொள்கையும் விருப்பமும் ஆகும்.  முக்கியமாக, சஹானா, சுருட்டி, மோகனம், ஆநந்தபைரவி ஆகிய ராகங்களில் அவருக்கு விருப்பம் அதிகம்.

முதல் நாள் நான் அவர் வகுப்புக்குப் போனவுடன், பாடமாக வந்திருந்த கம்பராமாயணச் செய்யுள் ஒன்றை இசையுடன் படிக்கச் சொன்னார்.  "எனக்குச் சாரீரம் இல்லை" என்று தெரிவித்தேன்.  "உன் பிதாமகர், மாதாமகர் இருவரும் நன்றாகப் பாடுவார்கள்.  காவேரி தீரத்தில் தோன்றிய உனக்குச் சாரீர சம்பத்து இல்லையா?" என்று அங்கலாய்த்தார்.

சீகாழி ரங்காச்சாரியார் என்பவர் என் வகுப்பில் நல்ல சாரீரமுள்ள மாணாக்கர்.  அவர்தாம் இனிமையாகப் பாட்டை ஒரு தடவை முதலில் வாசிப்பார்.  செய்யுளின் பொருளைச் சொல்லிவிட்டு, அதில் குறிப்பிட்டுள்ள பூர்வநிகழ்ச்சிகளை விளக்க, ஆசிரியர் ஆரம்பிப்பார்.  ஆதார விவகாரங்களுடன் சுலபமான தமிழ் நடையில் சொல்லிக்கொண்டு போகும்பொழுது ஒவ்வொருவர் மனமும் அதில் ஈடுபடும்.  நாழிகை செல்வதே தெரியாது.  ஹாஸ்யச் சுவை ததும்பப் பேசுவார்.  அடிக்கடி உண்டாகும் கொல்லென்ற சிரிப்பைத் தவிர, வகுப்பு நிசப்தமாக இருக்கும்.

ஒவ்வொரு வகுப்பிலும் பாடத்தில் கவனம் செலுத்தாமல் விஷமமும் விளையாட்டும் மிகுந்த பையன்கள் உண்டல்லவா?  அவர்களை வழிக்குக் கொண்டுவருவதற்கு எங்கள் தமிழாசிரியர் கையாண்ட முறை அவருக்கே உரிய தனிப்பட்ட முறை.  கொஞ்சங்கூடக் கடுமை காட்டாமல், பரிகாசத்துடன் கலந்த புகழ்ச்சி முதலிய மார்க்கங்களால் அவர்களை அடக்கிவிடுவார்.  அவர் கோபித்துக்கொண்டே நான் பார்த்ததில்லை.  எப். ஏ. யில் இரண்டாம் வகுப்பு.  கம்பராமாயண கிஷ்கிந்தா காண்டத்தில் பாடம் நடந்துகொண்டிருக்கிறது.  அந்தச் சமயத்தில் கும்பகோணம் காலேஜில் மகாமகோபாத்தியாயரிடம் படித்தவரும், மைசூர் சிவில் ஸர்விஸில் உயர்ந்த பதவி வகித்துக்கொண்டிருந்தவருமான ஒரு கனவான் ஆசிரியரைப் பார்க்க வந்தார்.  வந்தவர், "பாடத்தை நிறுத்த வேண்டாம்.  நெடுநாளுக்கு முன் கேட்ட நான் இன்னொரு தடவை பாடம் கேட்க விரும்புகிறேன்" என்று சொல்லிக்கொண்டு பையன்களுடன் பெஞ்சியில் உட்கார்ந்துகொண்டார்.  வந்தவரை ஆசிரியர் எங்களுக்கு அறிமுகப்படுத்திய விதம் வேடிக்கையானது. எங்களுடன் கிரிக்கட்டு, ஹாக்கி என்ற விளையாட்டுகளில் நிகரற்றவர் எனப் புகழ்பெற்ற முதலியார் ஒருவர் மாணாக்கராக இருந்தார்.  பாடங்களைக் கவனிக்காமல் அடிக்கடி வகுப்பிலிருந்து அவர் நழுவி விடுவார்.  எப். ஏ. பரீட்சையில் ஒரு தடவை தவறிப்போய் மறுமுறை படித்துக்கொண்டிருந்தார்.  இவரைத் திருத்த இந்தச் சந்தர்ப்பத்தை ஆசிரியர் உபயோகப்படுத்தினார்.




"மாணாக்கர்களே, இப்பொழுது இங்கு விஜயம் செய்திருப்பவர் தற்காலம் பங்களூரில் பெரிய உத்தியோகம் வகிக்கிறார்.  இருபது வருஷங்களுக்கு முன்பு, கும்பகோணம் காலேஜில் உங்கள் மாதிரி என்னிடம் மாணாக்கராக இருந்தார்.  விஷமம் செய்வதில் இவருக்கு நிகர் ஒருவரும் இல்லை.  வகுப்பில் இருப்பார்.  பாடம் நடக்கும்.  திடீரென்று காவேரியாற்றில் ஒருவர் குதித்த மாதிரி சத்தம் கேட்கும்.  யார் என்று விசாரித்தால் நம் சிநேகிதர், மரத்தில் ஏறி நதியில் குதித்து அக்கரைக்கு நீந்திப் போய்க்கொண்டிருப்பதாகப் பையன்கள் சொல்லுவார்கள்.  நீந்தும் போட்டியில் காலேஜுக்கே இவர்தாம் முதல்.  இதே போல் படிப்பிலும் முதலாக இருந்தார்.  பி. ஏ. யில் முதல் வகுப்பில் தேறி எம். ஏ. பட்டமும் பெற்று ஸிவில் ஸர்விஸ் போட்டிப் பரீட்சையிலும் தேறிப் பெரிய பதவிக்கு வந்தவர்.  முதலியாரே, நீரும் இவர் மாதிரி விளையாட்டு, படிப்பு இரண்டிலும் மேம்பாடு அடைய வேண்டும் என்பது என் விருப்பம்" என்று முடித்ததும், வகுப்பிலுள்ளவர்களும் வந்த கனவானும் அடைந்த மகிழ்ச்சியை அளவிட முடியாது.

தமிழ் வகுப்பு நடந்த அறைக்கு அடுத்த அறையில் காலேஜ் இலக்கிய சங்கத்தின் வாசகசாலை (Literary Society Reading Room) இருந்தது.  இவ்விடத்தில் விளையாட்டில் பிரியமும் தேர்ச்சியுமுள்ள பையன்கள் ஓய்வு நேரங்களில் கூடிப் பேசுவதும், அட்டகாசம் செய்வதும், சிகரெட் பிடிப்பதுமாகச் சில வேளை ஆசிரியரவர்கள் பாடம் நடத்த முடியாமல் செய்து விடுவார்கள்.  சடையன் என்ற பெயருள்ள சேவகன், ஆசிரியரவர்களுக்கும் இலக்கிய சங்கத்திற்கும் பொதுவான வேலைக்காரன்.  இவனைச் சங்கத்தில் கூடும் பையன்களைக் கூச்சல் போடாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள ஆசிரியரவர்கள் அனுப்பினால், அந்தப் பையன்கள் இவனைச் சிகரெட்டு வெற்றிலை பாக்கு வாங்கி வரும்படி கடைக்கு அனுப்பிவிடுவார்கள்.

ஒரு நாள் சந்தடியும் சப்தமும் பொறுக்காமல் போகவே, ஆசிரியரவர்கள் மெதுவாக நடந்து போய் அந்தக் கோஷ்டியின் மத்தியில் உட்கார்ந்து கொண்டுவிட்டார்.  அப்பொழுது கால்பந்து விளையாட்டில் `கோல் கீப்பரா' க இருப்பதில் இணையற்றவர் என்று பெயர் வாங்கிய டி. பி. கைலாசம் (*இவர் பிற்காலத்தில் கன்னட பாஷையில் பல நாடகங்களை எழுதிக் கீர்த்தி பெற்றவர்*) ஐந்து ஆறு தோழர்களை வைத்துக்கொண்டு ஆங்கிலப் பாட்டு ஒன்றைப் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் இருந்தார்.  தம்மைக் கண்டு தலை குனிந்து நின்ற அனைவரையும் ஆசிரியரவர்கள் வகுப்புக்கு வரும்படி சொல்லி அழைத்து வந்து உட்காரச் செய்தபின், கைலாசத்தைப் பார்த்து, "கைலாசம், நீர் உங்கள் சிநேகிதர்களுக்கு மட்டும் செய்து காட்டிக் கொண்டிருந்த அபூர்வ நடனத்தை இவ்விடத்தில் நடத்திக் காட்டினால் எனக்கும் பையன்களுக்கும் மிகவும் பயன்படும்.  கிஷ்கிந்தையில் சுக்கிரீவன் முன்னால் நடந்த நாட்டியங்களைக் கம்பர் பாடியிருக்கிறார்.  நீர் அதை நன்றாக நடித்துக் காட்டினால் எங்களுக்கு நன்றாக விளங்கும்" என்று சொன்னவுடன் வகுப்பு முழுவதும் சிரிப்பு அமளி எழுந்து அடங்க வெகுநேரம் சென்றது.  அதற்குப் பின் பக்கத்து அறையில் ஒரு நாளும் சத்தமோ கூச்சலோ இருந்ததில்லை.

இளம் பிராயத்தில் தென்னாட்டில் மிகவும் கீர்த்தி பெற்ற பேராசிரியர்களிடம் பாடம் கேட்கும் பாக்கியம் பெற்றேன்.  வி. எஸ். ஸ்ரீனிவாச சாஸ்திரிகள், கே. நடேசையர், கே. ராமுண்ணி மேனன், ஆலன் துரை, ஸி. ராமலிங்க ரெட்டி ஆகிய பெரியவர்கள் இவர்களில் முக்கியமானவர்கள்.  இவர்கள் எல்லாம் பாடத்தைப் பொறுத்த வரையில் நன்றாகப் போதிப்பவர்களே.  ஆனால் தமிழாசிரியராகிய மகாமகோபாத்தியாய ஐயரவர்களின் முறையே வேறு.  ஒவ்வொரு பையனையும் அருகில் அழைத்து அவன் ஊர், குலம், பெற்றோர், தங்கியிருக்கும் ஜாகை ஒவ்வொன்றையும் பற்றி விசாரித்துத், தகப்பனாரைப் போல் அக்கறை காட்டித், தெருவில் எங்கே கண்டாலும் நின்று நாலு வார்த்தை பேசி, மாணாக்கனுடைய மனத்தை அன்பினால் கட்டிவிடுவார்.  அவர் தாய்மொழியில் பாடம் சொன்னபடியாலும் நம் நாட்டுப் புராண காவிய இதிகாசங்களை விளக்கியபடியாலும் மாணாக்கர்களுக்குத் தனியான உணர்ச்சியும் கவர்ச்சியும் உண்டாயின.

எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய களங்கமற்ற வாழ்வே வெற்றிக்குக் காரணம்.  "பகவத் கீதையின் வழிப்படி யாராகிலும் உலகில் வாழ்ந்தவர் உண்டா?" என்று கேட்டால், "பீஷ்மர் ஒருவர் உண்டு" என்று சொல்வார்கள்.  அதே போல் திருக்குறள் வாக்கியமான,

"அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
 இழுக்கா இயன்றது அறம்"

என்ற முறைப்படி அறத்தை நடத்திக் காட்டியவர் உண்டா என்றால், "எங்கள் ஆசிரியரான உ. வே. சாமிநாதையர் ஒருவர் உண்டு" என்று அவர் மாணாக்கர்கள் சொல்வார்கள்.

[ நன்றி: வெண்பா விரும்பி ]

தொடர்புள்ள பதிவுகள்: 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

கருத்துகள் இல்லை: