திங்கள், 19 ஜூலை, 2010

'தேவன்': கண்ணன் கட்டுரை - 4

கண்ணன் கட்டுரை - 4

தேவன்

 ஒரு சின்னப் பையன் எழுதுவது போன்ற நடையில் பல அரிய விஷயங்களை  'சின்னக் கண்ணன்' என்ற புனைபெயரில் விகடனில் தேவன் எழுதி வந்தார். 'கண்ணன் கட்டுரை' என்ற தலைப்பில் வெளியான அவை 50-களில்  பலரைக் கவர்ந்தன. நூல் வடிவில் வெளியாகாத ‘தேவனின்’ கட்டுரைத் தொடர்களில் இது ஒரு மிகச் சிறந்த ஒன்று என்று நான் நினைக்கிறேன். கோபுலு அவர்களும் இதற்கு விசேஷமாகப் படங்கள் வரைந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

முதல் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி இங்கே :

கண்ணன் கட்டுரை


[ஒரு எழுத்தாளரின் சின்னப் பிள்ளை எழுதிப் பார்க்கிறான்]


ஒரே ஒரு சின்ன ஈ ஒரு பெரிய ஓட்டல் மேஜை மேலே இப்டி சுத்தி சுத்தி பறந்துட்டு, கடைசியிலே ஒரு இடத்தைப் பொறுக்கி உட்கார்ந்துது. அங்கேருந்து நாலாப் புறமும் கண்ணோட்டம் விட்ட போது ஒரு மைசூர் பாக் விள்ளல் திருஷ்டிலே விழுந்தது. அதை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கிறப்போ, அங்கே காபி சாப்பிட்டிண்டிருந்தான் ஒருவன். அவன் கையிலே வைச்சிருந்த பேப்பரைச் சுருட்டி, 'டப்'னு ஒரு அடி போட்டானே பார்க்கலாம், குறிபார்த்து! சின்ன ஈ முதுகிலே 'பளாச்'சுனு விழுந்தது அது. ஒரு கலங்கு கலங்கி, இறக்கையை உதறிண்டு, காலை நீட்டி சரி பண்ணிண்டு சின்ன ஈ விட்டது சவாரி! மேஜைக்குக் கீழே ஓடி, மேல் மூச்சு வாங்க, தாத்தா ஈ பக்கமா நின்னு, "தாத்தா, தாத்தா! இன்னிக்கு நான் ஒரு கண்டத்திலே தப்பிச்சேன்!'' அப்படின்னுது.

தாத்தா ஈ எல்லாத்தையும் கவனிச்சுண்டுதானே இருந்தது? சும்மா சிரிச்சுட்டு, "போடா! முட்டாள் பையா! ஒரு கண்டமும் இல்லை! அவன் உன்னை அடிச்சது நேத்து நியூஸ் பேப்பராலே! நாலே நாலு காயிதம்தானேடா அதிலே! உம்! என்ன காயம் பட்டுடப் போறது! முன் காலத்திலே எப்படி இருந்தது பேப்பர்னு கேளு, சொல்றேன்! 16, 24 பக்கம். அதனாலே ஒரு அடி வாங்கியிருந்தயானால்...'' என்று ஆரம்பிச்சுது.

அதுக்குள்ளே இன்னொரு பெரிய ஈ, "அதைச் சொல்றிங்களே, தாத்தா! அடிச்சானே, அந்த ஆளுக்கு உடம்பிலே திராணி இருக்குதா, பார்த்தியா? ஆறு அவுன்ஸ் ரேஷனிலே என்ன பண் ணிட முடியும் அவனாலே! இங்கே வந்து குடிக்கிறதோ காபிங்கிற வெறும் தண்ணி''னு சொல்லிச் சிரிச்சுது.

இதுக்குள்ளே சின்ன ஈ ஒடம்பைச் சரி பண்ணிண்டு, "கெடக்கிறது, தாத்தா! இதுக்கெல்லாம் பயந்து சாவலாமா? உசிரை லெச்சியம் பண்ணாம கௌம்பிட வேண்டியதுதான்''னுது.

தாத்தா ஈ வழுக்கைத் தலையைத் தடவிக்கொண்டு, "போடா பைத்தாரப் பையா! உசிரை எதுக்கடா லச்சியம் பண்ணப்படாது? அதோ கொண்டு வரானே, அந்தக் கோதுமை அல்வாவுக்காகவாடா? போடா! முன் காலம் மாதிரி வெண் பொங்கல், சேமியா-பேணி, பால் போளி என்று இருந்தால், உசிரு போனாலும் உட்கார்ந்து சாப்டோம் என்று இருக்கும். இதென்னடா, சோளத்தைப் போட்டு ஒபயோக மத்த பண்டங்கள்...''

சின்ன ஈ நேரே ஓடிப் போய், ஸர்வர் கையிலிருந்த சப்பாத்தியிலே உட்கார்ந்துண்டுது. சூடு பொறுக்காமல் எழுந்திருக்கிறதற்குள்ளே, 'டணார்'னு மண்டையிலே விழுந் தது ஒரு அடி! ஸர்வர் போட்டு விட்டான். சின்ன ஈக்கு ஸ்மரணையே தப்பிப் போச்சு! ஸர்வர் இப்போ அதைத் தட்டினது நியூஸ் பேப்பராலே இல்லை; இன்னொரு சப்பாத்தியாலேயாக்கும்! அதுதான் அப்படிக் கல்லு மாதிரி அதன் தலை மேலே விழுந்திருக்கு. ஸர்வர் ஒண்ணையும் கவனிக்கவே இல்லை. அவன் சப்பாத்தியைக் கொண்டு போய் மேஜை மேலே வச்சுட்டான்.

இதிலேருந்து நாம் தெரிஞ்சுக்கற நீதி என்ன தெரியுமா? ஆகாயத்திலே பறக்கிற இரண்டு ஈக்களைவிட, ஆகாரத்திலே அகப்பட்டிருக்கும் ஒரு ஈ எவ்வளவோ மேலானது!

[நன்றி: ஆனந்த விகடன்]

தொடர்புள்ள சில பதிவுகள்:

கண்ணன் கட்டுரை -1 

கண்ணன் கட்டுரை -2 

கண்ணன் கட்டுரை -3

தேவன்: படைப்புகள்

தேவன் நினைவுகள்

மிஸ்டர் ராஜாமணி : கதைகள்

தேவன்’: துப்பறியும் சாம்பு

2 கருத்துகள்:

Thangamani சொன்னது…

//நாலே நாலு காயிதம்தானேடா அதிலே! உம்! என்ன காயம் பட்டுடப் போறது! முன் காலத்திலே எப்படி இருந்தது பேப்பர்னு கேளு, சொல்றேன்! 16, 24 பக்கம்.//

ரேஷன்,அரிசிப் பஞ்சம்,பற்றிய செய்திகளுடன்,
செய்தித்தாள் பக்கங்கள் பற்றிய செய்தியும்
அறிகிறோம்.
தேவனின் கட்டுரைகளும் காலத்தால் வெல்ல முடியாதது.

அன்புடன்,
தங்கமணி.

Geetha Sambasivam சொன்னது…

இந்தக் கட்டுரை எல்லாம் படிச்சதில்லை. ரேஷன், அரிசிப் பஞ்சம் போன்ற விஷயங்களை எல்லாம் வெகு நாசூக்காகச் சொல்லிச் சென்றிருக்கிறார்.

தங்கமணி அம்மாவின் எழுத்தை இங்கே பார்க்கக் கிடைத்தது. அவர்கள் இப்போது இல்லை என்பதை இன்னமும் நம்ப முடியவில்லை! :(