வியாழன், 7 ஜூன், 2012

‘தேவன்’ : மாலதி - 1

 மாலதி - 1
' தேவன்’

                             

         1942-ஆம் ஆண்டில், இரண்டாம் உலகப் போர் காரணத்தால், சென்னையில் காகிதப் பஞ்சம் இருந்தது. அப்போது, தேவன் ஒவ்வொரு வாரமும் விகடனில் ஒரே ஒரு பக்கம் வெளியாகும் ‘நாவல்’ ஒன்றை எழுதினார். " அந்த நாவலின் ஒரு பக்க அத்தியாயம் ஒவ்வொன்றிலும் நகைச்சுவை, பரபரப்பூட்டும் சம்பவம் எல்லாம் நிறைந்திருந்தன " என்கிறார் தம்பி ஸ்ரீநிவாசன்.

பதினான்கு வாரங்கள் வந்த அந்த ’நாவ’லின் முதல் ஏழு அத்தியாயங்கள் இதோ.

[ நன்றி: விகடன், சித்திரம் : ரவி ]

                                                                         மாலதி

                                                                       தேவன்





அத்தியாயம்-1


ஸென்ட்ரல் ஸ்டேஷன். சரியாக ஒன்பது மணி. பங்களூர் மெயிலைப் பிடித்துக்கொண்டு பிளாட்பாரத்தில் நின்ற மகாஜனங்கள் தங்கள் கைகளை எடுத்தார்கள். அதற்காகவே காத்துக் கொண்டிருந்ததுபோல், அந்த வண்டித் தொடர் நகர்ந்தது. இதுவரை பிளாட்பாரத்தையே பார்த் துக்கொண்டிருந்த சந்துரு, ஒரு பெருமூச்சுடன் திரும்பி உட்கார்ந்துகொண்டான். அவன் பிறந்து 23 வருஷத்தில் - ஏழு வருஷம் பத்திரிகாலயம் ஒன்றில் உத்தியோகம் செய்த பிறகு - இப்போது தான் விச்ராந்தியாயிருக்க அவனுக்கு ஒரு வார அவகாசம் கிடைத்தது.


அவன் கண்கள் எதிரிலிருந்த ஒரு நாரீமணியின் மீது சற்றுத் தயங்கி நின்றன. பூர்ண சந்திரனுக்கு ஒப்பான அந்த வதனம் அவனை அந்த க்ஷணமே கொள்ளை கொண்டுவிட்டது!

அம்மெல்லியலாள் தன் விசாலமான நயனங்களை அவன் மீது வீசினாள். சந்துரு தலையைக் குனிந்துகொண்டான். ஆனாலும் அவனையும் மீறிப் பலமுறை அவன் திருஷ்டி அவளை நோக்கியே திரும்பிற்று. அவளுடைய வசீகரமான தேகக் கட்டு அவனை ஆகர்ஷித்தது. அவள் காலடியில் 'மாலதி, பி.ஏ.' என்ற பெயருடன் கிடந்த ஸுட்கேஸையும் நோக்கினான். 

'மாலதி... மாலதி! என்ன அழகான பெயர்! எவ்வளவு பொருத்தம்!' என்று எண்ணினான். அவன் எத்தனையோ கதைகளில் வர்ணித்திருக்கும் கதாநாயகிகள் இந்தச் சௌந்தர்யத்தை எட்டிப் பிடித்திருப்பார்களா என்று அவன் சிந்தனை ஓடியது.

மின்னல் கொடி போல் தோன்றி மறையப் போகிறாள் இந்த வனிதை. பின்பு அவளை ஆயுளில் சந்திப்பானோ? அவன் மனதில் ஒரு வேதனை புகுந்துகொண்டது. சந்துருவின் கனவையும் அவளே கைப்பற்றிக்கொண்டாள்!

விடியற்காலை ஐந்தரை மணி. பங்களூர் ஸ்டேஷன் வந்துவிட்டது. திடுக்கிட்டு விழித்தான் சந்துரு. வண்டியிலிருந்து எல்லாரும் இறங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த ரூபவதி இருந்த இடத்தை அவசரமாகப் பார்த்தான். அது காலியாக இருந்தது. இருதயத்தில் ஏக்கத்துடன் இறங்கினான். ஆனால், வெகு விரைவில் அவளை அவன் சற்றும் எதிர்பாராத இடத்தில் சந்திக்க நேரும் என்பதை அவன் அப்போது எப்படி அறிவான்?


அத்தியாயம் 2

பங்களூரில் தமது பங்களாவின் முன் ஹாலில் காமேசுவர அய்யர் ஒரு ஈஸி சேரில் சாய்ந்து, எதிரில் நாற்காலியில் இருந்த மிஸ்டர் சேகரனுடன் பேசிக்கொண்டிருந்தார்.



"மிஸ்டர் சேகரன்! உங்களை நான் தந்தியடித்துத் தருவித்ததற்குக் காரணம் சொல்லி விடுகிறேன். நம் வீட்டில் இரண்டு நாளாக யாரோ எதையோ கவர்ந்து செல்ல முயற்சிக்கிறான் என்று எனக்கு ஸ்பஷ்டமாகத் தெரிகிறது. இதுவரை ஒன்றும் காணாமல் போகவில்லை. போலீஸில் இருக்கும் நம் சேகரன் இந்தச் சமயம் கூட இருந்தால் உதவியாக இருக்குமே என்று நினைத்தேன். உடனே..."


இப்படிச் சொல்லிக்கொண்டிருந்தபோதுதான் சந்துரு வந்து தனது 'விஸிட்டிங் கார்டை' அவரிடம் நீட்டினான்.


 காமேசுவரய்யர் அதைப் பார்த்ததுமே, "வாருங்கள், மிஸ்டர் சந்திரன்! ரொம்ப சந்தோஷம்! உங்களை நேரில் பார்த்ததில்லை. ஆனால், உங்கள் கதைகளை என் தமையனார் பெண் முன்பெல்லாம் அடிக்கடி படித்துச் சொல்லுவாள். அவள்கூட இன்று இங்கே வந்திருக்கிறாள்" என்றார்.

"கொஞ்ச நாள் இந்த ஊரில் தங்கிவிட்டுப் போகலாம் என்று வந்தேன். எங்கள் முதலாளி தங்களையும் பார்த்துவிட்டு வரச் சொன்னார். நான் 'ஹோட்டல் டைஜெஷ'னில் தங்கியிருக்கிறேன்..."

"நன்றாய்ச் சொன்னீர்கள்! ஹோட்டலிலா தங்குவது? நம் பங்களாவில் தங்குங்கள். ஒரு அசௌகரியமும் இராது. மிஸ்டர் சேகரன் கூட இருக்கிறார். உங்களுக்கு இவரைச் சென்னைப் பட்டணத்தில் தெரிந்திருக்கலாமே? உடனே போய்ப் பெட்டி படுக்கை களை எடுத்து வாருங்கள்!"

காமேசுவரய்யருடைய அழைப்பை அவன் மறுக்கவில்லை; எனினும், அவ்வளவாக அப்போது அதைப் பொருட்படுத்தவில்லை. சற்று நேரம் பேசிக்கொண்டுஇருந்துவிட்டுத் திரும்பி னான்.

வெளியே வரும்போது பங்களாவின் கேட்டுக்குச் சற்று தூரத்தில் ஓர் இளைஞன் சைக்கிளில் பாய்ந்து வேகமாய்ச் சென்றதை அவன் கவனித்தான். அந்த இடத்தை அடைந்தபோது ஒரு பெண்மணி மறைந்துகொள்ள முயன்றதைக் கண்டான். அந்தப் பெண் மாலதிதான் என்று கண்டு திடுக்கிட்டான்.


'இந்த மாலதி யார்? அவள் எதற்கு இங்கே வந்தாள்? அந்த இளைஞன் யார்?' என்றெல்லாம் அவன் மனம் குழம்பிற்று. அன்றே தன் பெட்டி படுக்கைகளுடன் பங்களாவுக்கு வந்துவிடுவதென்று முடிவு செய்தான்.


அத்தியாயம்-3




சுமார் ஐம்பது வயதான காமேசுவரய்யர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மனைவியை இழந்திருந்தார். தோட்டக்காரன் கண்ணுசாமியும், சமையற்காரன் நாராயணனுமே பங்களாவில் இருந்தார்கள். சென்னைப் பட்டணத்தில், அவருடைய காலஞ்சென்ற தமையனாரின் புதல்வன் கிருஷ்ணனையும் புதல்வி மாலதியையும் தம்முடன் வந்திருக்கும்படி அவர் அழைப்பதுண்டு. மாலதி ஓரொரு சமயங்களில் தன் சித்தப்பா வீட்டிற்கு வருகிறதும் வழக்கம்தான். எனினும், அவள் சகோதரன் கிருஷ்ணன் வந்து செல்வது அபூர்வமாகவே இருக்கும். அதற்குக் காரணம், காமேசுவரய்யருடைய சம்பாத்திய முறைகள் அவனுடைய பரந்த நோக்கத்துக்கு ஏற்றதாக இல்லாததுதான். தோட்டக்காரக் கண்ணுசாமிதான் சந்துருவுக்கு இத்தனை விவரங்களையும் சொன்னவன். மாலதி மணமாகாதவள் என்ற செய்தி சந்துருவின் உள்ளத்திலி ருந்து ஒரு பெரிய பாரத்தை நீக்கியது.

அன்று இரவு படுக்கப்போகும் போது மிஸ்டர் சேகரன் பொதுவாக, "ஊரில் திருட்டு அதிகமாக இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். ராத்திரி வேளையில் வாசல் கதவைத் திறக்கவேண்டியிருந்தால், வேறு யாருக்காவது தெரிவித்து விட்டுப் போகவேண்டும்" என்றார். அப்போது சந்துருவின் கண்கள் அவனையும் அறியாமல் மாலதியை நோக்கின. ஒருவிநாடிப் பொழுது அவள் கண்களில் சஞ்சலத்தின் சாயை தோன்றி மறைந்தது, அவன் திருஷ்டிக்குத் தப்பவில்லை.

எங்கேயோ கடியாரத்தில் ஒரு மணி அடித்தது. சந்துரு படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கவ னித்தான். மெதுவாக வாசற் கதவு திறக்கப்படுவது போன்ற சப்தம் கேட்டது. ஜன்னலைத் திறந்து வெளியே நோக்கினான். மங்கிய நிலவொளியில் மாலதி இறங்கி, நடையில் மெள்ளப் போவது தெரிந்தது. சந்துருவும் அரை நிமிஷத்தில் பங்களாவுக்கு வெளியே வந்துவிட்டான். ஆனால், அவன் பத்தடி செல்வதற்குள் எதிரில் மாலதி திரும்பி வந்தாள்.

சந்துருவுக்கு அந்தக் கணமே மறைந்துகொள்ள வேண்டிய நிர்பந்தம்! இந்த மர்மங்கள் ஒன்றும் விளங்காதவனாகத் தன் மறைவிடத்திலிருந்து அவன் கிளம்பி வந்து பார்த்தபோது, வாசற் கதவு தாழ் போடப்பட்டிருந்தது!


அத்தியாயம்: 4

பங்களாவைச் சுற்றிலும் இருந்த சிறு நந்தவனமும் வெண்மையான காம்பவுண்டுச் சுவரும் நிலவொளியில் பிரகாசமாகத் தோன்றின. உள்ளே நுழைய வாசற் கதவு இடம் கொடுக்கவில்லை என்று கண்ட சந்துரு, வராந்தாவிலிருந்து மெள்ள இறங்கிச் சுவரோரமாகவே தன் அறைக்கு நேரே வந்தான். வராந்தாவில் படுத்திருந்த தோட்டக்காரக் கண்ணுசாமியின் குறட்டையைத் தவிர எங்கும் நிசப்தமாகவே இருந்தது. சந்துரு தன் அறை ஜன்னலின் பக்கம் வந்ததும், வீட்டிற்குள் தடதடவென்று நடமாடுவது போன்ற அரவம் கேட்டுத் திடுக்கிட்டு நின்றான். திடீரென்று காமேசுவரய்யரின் குரல், "திருடன்! திருடன்!" என்று எழுந்தது. அதே கணம் வாசற் கதவு வேகமாகத் திறந்த சப்தமும் கேட்டது.

வீட்டின் பக்கவாட்டில் சந்துரு இருந்ததால், வாசலில் நடப்பதுஎன்னவென்று அறிய முடியாமல் திகைத்தான். இந்தச் சமயத்தில் தன்னைத் தாண்டிக்கொண்டு யாரோ ஒருவன் புழக்கடைப் பக்கம் ஓடுவதைச் சந்துரு உணர்ந்தான். மறுகணம் சந்துரு அவனைத் துரத்திக் கொண்டிருந்தான்!


பங்களாவின் பின்புறத்தை அடைந்ததும் அந்த மனிதன் காம்பவுண்டுச் சுவரேறிக் குதிக்கும் தறுவாயில், சந்துரு அவனைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டான். மேகங்களிலிருந்து விடுபட்ட சந்திரனுடைய ஒளியில், தான் பிடித்த மனிதன், அன்று காலை மாலதியுடன் பேசிவிட்டு ஸைகிளில் சென்ற இளைஞன்தான் என்பது சந்துருவுக்கு உடனே விளங்கிற்று. அவன் ஒரு குரல் கொடுத்து வீட்டிலுள்ளவர்களை அழைக்கச் சித்தமாகும்போதே, புழக்கடைக் கதவு எதிர்பாராத விதமாகத் திறந்து கொண்டது. அளவற்ற ஆச்சரியம் அழகிய வதனத்தில் தோன்ற, மாலதி அங்கே நின்றாள்!

"மிஸ்டர் சந்திரன்! அவனை விடுங்கள். அவன் நிரபராதி" என்றாள் மாலதி.


சந்துரு சற்றுத் தயங்கினான். அவள் மீண்டும், "அவன் என் சகோதரன்!" என்றாள். சந்துருவுக்கு மனதிலிருந்து ஒரு பெரும் பாரம் நீங்கியது போல் பிரமை உண்டாகியது. பிடியைத் தளர்த்தினன். அடுத்த கணம் அந்த இளைஞன் தப்பித்துக்கொண்டான்! மாலதியின் கண்களில் நன்றி சுரந்தது.


சந்துரு திரும்பி வந்தபோது காமேசுவர அய்யர், "ஐயோ! வைரக் கம்மல்கள் போய் விட்டனவே!" என்று அலறிக் கொண்டிருந்தார்.



அத்தியாயம்: 5


பங்களாவின் உள் ஹாலில் எல்லாரும் கூடியிருந்தார்கள். முகத்தில் ஏக்கம் தோன்றக் காமே சுவரய்யர் நாற்காலியில் சாய்ந்திருந்தார். தாம் போலீஸ் உத்தியோகஸ்தர் என்ற முறையில், சேகரன் கேள்விகள் கேட்கத் தொடங்கினார்.


முதலில் சமையற்காரன், ''எனக்கு இருந்த அலுப்பிலே, திருடன் என் மேலே ஏறித் துவைத்திருந்தால் கூடத் தெரிந்திராது'' என்று கூறிவிட்டான்.


அடுத்தாற்போல் கண்ணுசாமி, ''நான் படுத்தேனுங்களா... உடனே என்னைத் துரத்து துரத்துனு துரத்திக்கிட்டே போயி...'' என்று ஆரம்பித்தான்.


''யார் அது அப்படித் துரத்தியது?''

''அதுதான் தெரியலீங்க. நான் கூரை மேலெல்லாம் ஓடி, பலமெல்லாம் போயி, களைத்துச் சாய்ஞ்சேனா...''

''இதெல்லாம் நிஜமாக நடந்ததா?''


''சொப்பனங்க, எசமான்! நிசமா நடந்திருந்தா, நான் இத்தினி நாளி உசிரோட இருந்திருப்பேனுங்களா?''


மாலதி சிரித்து, ''சொப்பனம் எல்லாம் போய் ஐயா கிட்டச் சொல்லலாமாடா?'' என்று கேட்டாள்.


சேகரன் இடைமறித்து, ''சொன்னவரைக்கும் சரிதான்! வேடிக்கையாக இருக்கிறது இவன் சொப்பனம்'' என்றார்.


மாலதி உடனே தானாகவே, ''நேற்று நான் ரயிலில் கண் விழித் துக்கொண்டு வந்த அசதியில் எனக்கு நல்ல தூக்கம். எல்லாரும் எழுந்த பிறகுதான் நான் கண் விழித்தேன்'' என்றாள். அடுத்தபடியாகச் சேகரன் தன்னை ஏதாவது கேட்பார் என்று சந்துரு ஆவலுடன் எதிர்பார்த்தான். ஆனால் அவர் ஒரு கேள்வியும் கேட்கவில்லை; அவன் பக்கம் கூடத் திரும்பவில்லை.


காமேசுவரய்யரைப் பார்த்து, ''சரி, இருக்கட்டும்... இதை நான் கவனிக்கிறேன். உங்கள் கம்மல்களை வரவழைப்பது இனி என் பொறுப்பு. இப்போது எல்லாரும் படுக்கப் போங்கள். மணி இரண்டு ஆகிறது'' என்றார். கண்களில் நன்றி ததும்பச் சந்துருவைப் பார்த்துவிட்டு மாலதி சென் றாள்.


சந்துரு தன் அறைக்குப் போய் ஒரு நிமிஷம்தான் ஆகியிருக்கும்... மெள்ளக் கதவைத் திறந்து கொண்டு சேகரன் வந்தார். ''மிஸ்டர் சந்துரு! என்னிடம் இப்போது மறைக்காமல் சொல்லுங்கள். திருட்டு நடந்தபோது நீங்கள் ஏன் பங்களாவுக்கு வெளியில் இருந்தீர்கள்?'' என்றார்.


அத்தியாயம்: 6


சேகரனைப் பார்த்து முதலில் திடுக்கிட்டான் சந்துரு. பிறகு நிதானித்து, அவருக்குத் தன்னைப் பற்றி எவ்வளவு தூரம் தெரியும் என்பதை அறிய எண்ணி, வெகு ஜாக்கிரதையாகவே பதில் சொன்னான்... ''மிஸ்டர் சேகரன்! நான் திருட்டில் சம்பந்தப்பட்டவன் என்று நினைத்தால், அதை அப்போதே சொல்லியிருக்க லாமே?''


சேகரன் இந்தப் பதிலை எதிர் பாக்கவில்லை. ஆகவே, சிறிது தணிவான குரலில், ''மிஸ்டர் சந்துரு! அப்படி நான் சந்தேகித்திருந்தால் உடனே வெளிப்படுத்தி யிருப்பேன். 'திருடன்' என்ற குரல் கேட்டதும், நான்தான் முதலில் விழித்துக்கொண்டவன். உமது அறையைத் தாண்டி வந்தபோது, நீர் உள்ளே இல்லை!'' என்றார்.


சந்துருவுக்கு ஒரு விஷயம் நிச்சயமாயிற்று. சேகரன், மாலதியைப் பற்றிய விஷயங்களைக் கவனித்திருக்க முடியாது என்பதே அது. அந்தத் தைரியத்துடன், ''மிஸ்டர் சேகரன்! நீங்கள் என் மீது வைக்கும் நம்பிக்கைக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஏதோ சப்தம் கேட்டது போல் இருந்தது; கதவும் திறந்திருக்கவே, நான் வெளியே போனேன். திரும்புவதற்குள் வீட்டிற்குள் கூக்குரல் எழும்பிவிட்டது. இதில் என்னாலான எந்த உதவியும் செய்யச் சித்தமாக இருக்கிறேன்'' என்றான்.


''அவ்வளவுதான் நான் வேண்டியதும்! சரி, மாலதியைப் பற்றி உமக்கு என்ன தெரியும்? சொல்லுங்கள்.''


''மாலதியைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் அவளுக்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் இருப்பதாக யாராவது நினைத்தால், அது சுத்த...'' என்று ஆரம்பித்தான்.


''அவசரப்பட வேண்டாம், சந்துரு ஸார்! ஒருவர் அழகாக இருந்துவிட்டால் மட்டும் எதையும் நம்புவதற்கில்லை. நீர் இனி என்னிடம் அவ்வப்போது உண்மையை மட்டும் சொல்லி வந்தால், என் வேலை லகுவாகும்'' என்று கூறிவிட்டுச் சென்றார் சேகரன்.


அவரது பேச்சு சிநேக பாவத்தில் இருந்ததெனினும், அவர் எதையோ மறைத்துப் பேசுகிறார் என்றும், எச்சரிக்கை செய்கிறார் என்றும் சந்துரு உணர்ந்தான். அதைப் பற்றி அவன் சிந்தித்துக் கொண்டிருந்தபோதே, மறுபடி அறைக் கதவு இரண்டாம் முறையாகத் திறந்துகொள்ள, மாலதி பிரவேசித்தாள்.


மெல்லிய குரலில், ''எனக்கும் உங்களால் ஒரு காரியம் ஆக வேண்டும்!'' என்றாள்.



அத்தியாயம்:7


மாலதி சந்துருவிடம் அன்று என்னென்ன பேசினாள் என்று இப்போது கேட்டால் அவனுக்குச் சொல்லத் தெரியாது. அவன் முன் மகா ரூபவதியான ஒரு நாரீமணி நிற்பதாக உணர்ந்தான். அவளுடைய காதுகளிலிருந்த வைரங்கள் ஜாஜ்வல்யமான வர்ண விசித்திரங்களை வாரிச் சொரிந்தன. ஆனால், அவைகூட அவளுடைய கண்களின் ஒளியில் மங்கி வெட்கித்தான் போயின. 'இந்த அழகுத் தெய்வம் ஒரு தகாத காரியத்தைச் செய்யச் சொன்னாலும் நாம் ஏன் செய்யக்கூடாது' என்று நினைத்தான்.


''மிஸ்டர் சந்துரு! உங்களிடம் சொல்லலாமென்று என்னவோ தோன்றுகிறது. நீங்கள் எனக்கு இந்த உதவி செய்வீர்களென்று என் உள்ளத்துக்குள் ஏதோ சொல்கிறது. நான் உங்களுக்கு எவ்வளவோ விஷயங்கள் சொல்ல வேண்டியிருந்தும், இப்போது அவைகளை விவரிக்கச் சந்தர்ப்பம் இல்லை. சில மணி நேரங்களுக்கு முன் திருட்டுப்போன வைரக் கம்மல்கள், இப்போது ராவ்சாகிப் கோபாலசாமி சர்மாவின் புத்திரர் ஸ்ரீமான் கோவிந்தனின் கோட்டுப் பையில் இருக்கின்றன. அவர் வீட்டை 'எக்ஸ்டென்ஷ'னில் லகுவாய்ப் பார்த்துக்கொள்ளலாம். அதைக் கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வீர்களா?'' என்றாள் மாலதி.



''கோவிந்தனா! அட, என்னுடன் படித்தவனாயிற்றே அவன்!''

''ரொம்ப சௌகரியமாகப் போயிற்று! ஆனால் கம்மல் எப்படி அவனிடம் வந்ததென்றும், எனக்கு எப்படித் தெரியுமென்றும் இப்போது கேட்காதீர்கள் - தயவுசெய்து! எவ்வளவு நாசுக்காக அவைகளைக் கொண்டு வருகிறீர்களோ, அவ்வளவுக்கு நல்லது. உங்களை நம்பலாமா?'' என்று கேட்டாள் மாலதி.


மாலதி விடைபெற்றுப் போன போது, சந்துருவின் சம்மதத்துடனே சென்றாள். அவள் போன பிறகுதான், ''ஏது! இந்தப் பெண்ணின் கட்டளை ரொம்பக் கடுமையாக இருக்கும் போலிருக்கிறதே!'' என்று அவனுக்குக் கவலை பிடித்துக்கொண்டது. ஆனால் சரியாக ஏழாவது மணி, சந்துரு மேற்படி கோவிந்தனை அவன் வீட்டிலி ருந்து ரயில்வே ஸ்டேஷன் வரை பின்தொடர்ந்து கொண்டிருந்தான். எப்படிக் காரியத்தைச் சாதித்துக்கொள்வது என்று அறியாமல் ஸ்டேஷனில் அவன் கலங்கி நின்றபோது, எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.



-(தொடரும்)

தொடர்ந்து படியுங்கள்: 

மாலதி - 2
தேவன்: படைப்புகள்


4 கருத்துகள்:

Unknown சொன்னது…

மிகவும் சிறப்பான பக்கம்.இன்று தான் அறிந்தேன் ,மகிழ்ச்சி.

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி, நண்பரே. மற்ற பதிவுகளையும் படிக்க வேண்டுகிறேன்.

Dr.Rajan Ramaswami சொன்னது…

Arumai. Naan padikkath thavaRiya kadhayai en kaN mun koNarndhu padikka vaiththadhaRku mikka nanRi. MeedhamuLLadhaiyum thayavu seidhu padhivu seyyavum.

UK Sharma சொன்னது…

அடுத்த ஏழு பக்கங்களும் எப்போ வரும்?