செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

உ.வே.சா -1

என் சரித்திரம் : சில துளிகள் 

பிப்ரவரி 19, 1855. உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த தினம்.

டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் எழுதிய ‘என் சரித்திரம்’ 1940 -ஆம் ஆண்டு ஜனவரியில் ’விகடனின்’ புத்தாண்டு இதழில் தொடங்கி 1942 மே மாதம் வரை  122 வாரங்கள் வெளிவந்தது.  தற்காலத்தில் பலரும் அந்த ‘விகடன்’ மூலப் பக்கங்கள் எப்படி இருந்திருக்கும் என்பதைப் பார்த்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்! அதனால், இரண்டு அத்தியாயங்களின் முதல் பக்கங்களின் படங்களை இங்கே இடுகிறேன். 





அருமையான படம் இல்லையா? ஏ. எஸ். மேனன்’ என்பவர் வரைந்ததாகத் தெரிகிறது. ( இவர் ஜெமினியில் தான் அதிகம் வரைந்தார், எனினும் விகடனிலும் அவ்வப்போது வரைந்தார் என்று தெரிகிறது.  ”அந்தக் காலத்தில்”  ஓவியரே தான் படத்தில் வரும் சொற்களையும் வரைவார். அதன்படி, இந்த ஓவியத்திலும் பார்க்கலாம்! மேனன் “ சுவாமிநாத ஐயர் “ என்று ...அவருக்கு விகடன் நிர்வாகத்தினர் சொன்னபடியோ, அவருக்குத் தோன்றியபடியோ -- வரைந்திருப்பார் என்று நினைக்கிறேன்! ஆனால், பொதுவில் உ.வே.சா.வின்  கட்டுரைகளில்  “ சுவாமிநாதையர் “ அல்லது “ சுவாமிநாதய்யர்”  என்று தான் பார்ப்போம்! 

இப்படி இன்னும் சில “ஓவியங்களில் “ சில  சொற்பிழைகள் வருவதுண்டு! ஒரு “மணியம்” சித்திரத்தில்  இருந்த ஒரு சொற்புணர்ச்சித் தவற்றைக் ‘கல்கி’ அற்புதமாய்த் தன் சித்திர விளக்கத்தில் சமாளித்திருக்கிறார்!  ஒரு சித்திரம் வரைந்தபின் , பிறகு அதன் சொற்களை மாற்றச் சித்திரத்தையே அல்லவா மீண்டும் வரையச் சொல்ல வேண்டும்! அதனால் இதை அந்தக் காலத்தில் தவிர்த்து விடுவார்கள்!   )  

முதல் அத்தியாயத்தை உ.வே.சா எப்போது எழுதினார் தெரியுமா? 
அவ்வப்போது தான் அத்தியாயங்களை எழுதுவது அவர் வழக்கம் என்று தெரிகிறது . 15-12-1939 அன்று தான் முதல் அத்தியாயத்தைக் ‘கல்கி’ அவர்களிடம் கொடுத்தார் உ.வே.சா. உடனே புத்தாண்டு இதழிலிருந்து ‘என் சரித்திரம்’ தொடங்கியது! 

அவருடைய ஊரான உத்தமதானபுரத்தைப் பற்றி அவர் முதல் அத்தியாயத்தில் எழுதினதிலிருந்து ஒரு துளி :  

” ....இதுதான் எங்கள் ஊர். இப்போது உள்ள உத்தமதானபுரத்துக்கும், 'எங்கள் ஊர்' என்று பெருமையோடு நான் எண்ணும் உத்தமதானபுரத்துக்கும் எவ்வளவோ வேறுபாடு உண்டு. என் இளமைக் காலத்தில் இருந்த எங்கள் ஊர்தான் என் மனத்தில் இடங்கொண்டிருக்கிறது. இந்தக் காலத்தில் உள்ள பல சௌகரியமான அமைப்புக்கள் அந்தக் காலத்தில் இல்லை. ரோடுகள் இல்லை; கடைகள் இல்லை; உத்தியோகஸ்தர்கள் இல்லை; ரயிலின் சப்தம் இல்லை. ஆனாலும், அழகு இருந்தது; அமைதி இருந்தது. ஜனங்களிடத்தில் திருப்தி இருந்தது; பக்தி இருந்தது. அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி நிலவியது; வீடுகளில் லக்ஷ்மீகரம் விளங்கியது.



இவ்வளவு ரூபாயென்று கணக்கிட்டுச் சொல்லும் ஆஸ்தி அந்தக் காலத்து உத்தமதானபுரவாசிகளிடம் இல்லை; ஆயினும் நீரும் நிழலும் தானியங்களும் இருந்தன. அவர்களுடைய வாழ்க்கையில் வேகம் இருக்கவில்லை; அதனால் ஒரு குறைவும் வந்துவிடவில்லை. அவர்களுடைய உள்ளத்தில் ஒரு சாந்தி இருந்தது. இப்போதோ அந்தச் சாந்தியை எங்கேயோ போக்கிவிட்டு வெகு வேகமாகத் தேடிக்கொண்டே இருக்கிறோம். நம்முடைய வேகம் அதிகரிக்க அதிகரிக்க, அந்தச் சாந்திக்கும் நமக்கும் இடையிலுள்ள தூரம் அதிகமாகின்றதே யொழியக் குறையவில்லை. “ 

பி.கு. 

அது சரி ... நான் இட்ட இந்த ‘என் சரித்திர’ப் பக்கங்களின் பின் பக்கங்களில் என்ன இருந்தன என்பதை அறிய ஆவலா? சரி, அந்தக் கால ‘விக’டனில் என்ன தான் வெளிவந்தன என்பதைத் தான் தெரிந்து கொள்ளுங்களேன்! இதோ! 



இது ஓவியர் ‘ரவி’ வரைந்தது. ( அவரைப் பற்றி சங்கீத சங்கதிகள் -23 என்ற பதிவில் எழுதியுள்ளேன்). “சித்திரக் குறும்பு” என்ற அவர் தொடர் அக்காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது. 

இன்னொரு ‘பின் பக்கம்’ ”மாலி” எடுத்த புகைப்படம்! மாலி போட்டோ எடுப்பதிலேயே தன் சம்பளத்தில் பெரும்பங்கைச் செலவழித்தார் என்கிறார் கோபுலு! 


[ நன்றி : விகடன் ] 

தொடர்புள்ள பதிவுகள்: 

உ.வே.சா

9 கருத்துகள்:

Sri சொன்னது…

Nandri Pasupathy sir. I have shared this on FB. Pls do let the readers aware of the tamil audio book on En Sarithiram _ 24 hours. http://www.emagaz.in/catalog/index.php?cPath=32_62. Also on.google play store and itunes. Nandri sir

shantha சொன்னது…

How apt it is in today's world! Felt like someone had echoed the present senior citizens' emotions way back in the 1st half of the last century.
K V Shantha.

R.V.RAJU சொன்னது…

'​என் சரித்திர'த்துக்கு​ ரவி படம் போட்டதாக என் ஞாபகம். ச்cரட்ச் பொஅர்ட்ல் போடும் ஸ்டைலில் ஹாட்ச் செய்து வரைவது அவர் பாணி. அந்தப்படத்தில் இருக்கிற எழுத்தே சொல்கிறது. நீங்கள் கீழே காட்டியிருக்கிற சித்திரக்குறும்பு படங்களிலும் பின்னால் அந்த ச்cர் பாணியில் பல படங்கள் வரைந்திருக்கிறார். குமுத்த்துக்கு வந்த பிறகு முழுக்க முழுக்க அந்த ஹாட்ச் பாணிக்கே வந்து விட்டார். 'தில்லானா மோகனாம்பாளு'க்கு கோபுலு சோபை சேர்த்த மாதிரி எஸ்.ஏ.பி.யின் தொடர்கதைகளுக்கு ரவியின் படங்கள்.

நீங்கள் குறிப்பிடுகிற ஏ.எஸ்.மேனன் அதிகமாக ஜெமினியின் விளம்பரப்படங்களில் ஈடுபட்டார். அவருடைய அவ்வையார் போஸ்டர்களும், கே.ஜே.மஹாதேவனின் 'அவள் யார்' போஸ்டர்களும் இன்னும் கண்களில் நிற்கின்றன.

ஆர்.வி.ராஜு

Pas S. Pasupathy சொன்னது…

@ஆர்.வி.ராஜு. உங்கள் நினைவுகளைப் பங்கிட்டதற்கு மிக்க நன்றி. ( உ.வே.சா படத்தை 2,3 மடங்கு பெரிது செய்தால், அடியில் “மேனன்” என்றிருப்பது தெரியும். அதனால் தான் அப்படி எழுதினேன்.) நிற்க. ரவியின் 14 படங்களை ‘தேவ’னின் மாலதி நாவலில் உள்ளன; அவற்றை என் பதிவுகளில் நீங்கள் பார்த்து மகிழலாம். ‘ரவி’ எஸ்.ஏ.பி யின் தொடர்களுக்கு வரைந்த ஓவியங்கள் நினைவில் உள்ளன. ஆனால் கைவசம் இல்லை. இருந்தால் அவரைப் பற்றி இன்னொரு பதிவில் எழுதுவேன்! குமுதம் முதல் இதழில் அட்டைப்படம் போட்டவர் அவர்தான்!

SAMPATH சொன்னது…

very relwvant even to day

Unknown சொன்னது…

True, I felt the same when read the lines

UK Sharma சொன்னது…

மிக அரிதான விகடன் பக்கங்களையும் அக்கால நகைச்சுவையையும் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

Angarai Vadyar சொன்னது…

Dear PP: You have been and still are making unbelievable contributions to Tamil and Tamilians by posting nostalgic gems. I am glad I came to know about you and your marvelous work. May God bless you with a very happy and productive longevity. I thought I was a "komban", but you are a 'Komberi mookkan"!

Brzee சொன்னது…

Thanks for posting about U.Ve.Sa. I believe: the following will be true with every one of us and our own' native villages:
.இதுதான் எங்கள் ஊர். இப்போது உள்ள உத்தமதானபுரத்துக்கும், 'எங்கள் ஊர்' என்று பெருமையோடு நான் எண்ணும் உத்தமதானபுரத்துக்கும் எவ்வளவோ வேறுபாடு உண்டு. என் இளமைக் காலத்தில் இருந்த எங்கள் ஊர்தான் என் மனத்தில் இடங்கொண்டிருக்கிறது. இந்தக் காலத்தில் உள்ள பல சௌகரியமான அமைப்புக்கள் அந்தக் காலத்தில் இல்லை. ரோடுகள் இல்லை; கடைகள் இல்லை; உத்தியோகஸ்தர்கள் இல்லை; ரயிலின் சப்தம் இல்லை. ஆனாலும், அழகு இருந்தது; அமைதி இருந்தது. ஜனங்களிடத்தில் திருப்தி இருந்தது; பக்தி இருந்தது. அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி நிலவியது; வீடுகளில் லக்ஷ்மீகரம் விளங்கியது.