வியாழன், 7 ஆகஸ்ட், 2014

தென்னாட்டுச் செல்வங்கள் - 12

கங்கை கொண்ட சோழபுரம் -2 

’தென்னாட்டுச் செல்வங்கள்’ தொடரில் ‘சில்பி’ ஆறு கட்டுரைகளில்  கங்கை கொண்ட சோழபுரத்தில் தான் கண்ட சிறப்பான சிற்பங்களை ஓவியப் பொக்கிஷங்களாய்த் தந்திருக்கிறார்.


இதோ இரண்டாவது கட்டுரை, சில்பியின் சித்திரங்களுடன் !  ‘ தேவனின்’ விளக்கம் சிவ-விஷ்ணு’ ஒருமையை மட்டுமன்றி,  சங்கர நாராயண உருவத்திற்கும், அர்த்த நாரீச்வர உருவத்திற்கும் உள்ள ஒற்றுமையையும் சுருக்கமாகச் சுட்டுகிறது. கூடவே, திருச்செங்கோட்டில் உள்ள அழகான ’உமையொரு பாக’னின் உருவத்தையும், பிருங்கி முனியின் கதையையும் நமக்கு நினைவூட்டுகிறது.

122. சமரசத்திற்கு இரண்டு சாட்சி 
[ நன்றி : விகடன் ]

தேவன்’ திருச்செங்கோட்டில் உள்ள அழகான அர்த்த நாரீச்வர வடிவத்தைப் பற்றி இந்தக் கட்டுரையில் எழுதியிருப்பது சில நினைவுகளைக் கிளறுகிறது.

விகடனிலிருந்து கல்கிக்குத் தாவுவோம்!

’கல்கி’ ஜனவரி 3, 1954 இதழில், தமிழறிஞர் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்  ” ஒன்றரைக் கண்ணன் “ என்ற ஓர் அருமையான கட்டுரை எழுதியிருந்தார். அதில் அப்பரின் பிரபலமான பாடலும் வரும். இடப்பாகத்தை உமைக்குக் கொடுத்தபின், மீதி இருக்கும் ஒன்றரைக் கண்கள் தாமே சிவனுக்குச்  சொந்தம் என்கிறார் அப்பர் வேடிக்கையாக.

இன்று அரைக்கண் உடையார் எங்கும் இல்லை, இமயம் என்னும் 
குன்றரைக் கண்ணன் குலமகள் பாவைக்குக் கூறு இட்ட அந்நாள்
அன்று அரைக் கண்ணும் கொடுத்து உமையாளையும் பாகம் வைத்த
ஒன்றரைக் கண்ணன் கண்டீர் ஒற்றியூர் உறை உத்தமனே!  (4.86.7)

( எளிதாக விளங்கும் பொருள் தான்; ஆனால் குன்றரைக் கண்ணன் என்ற ஓர் இடம் சிறிது ‘உதைக்கலாம்’ ... ”இமயம் என்னும் குன்றர் ஐக்கு அண் நல் குலமகள் பாவைக்கு என்று பிரித்தால் - இமயம் (பனிமலை) என்று  சிறப்பாகச் சொல்லப்படும் குன்றருடைய (ஐ) தலைவனுக்குத் தோன்றாமல் வந்து கிடைத்த நல்ல மேன்மையுடைய உமாதேவியார்க்கு “ என்று பொருள் சொல்கிறது ஓர் உரை. )

அந்தக் கட்டுரையில் தமிழ்நாட்டில் உள்ள பல அர்த்த நாரீச்வர வடிவங்களைக் குறிப்பிடும் தொ.மு. பா. அவர்கள் திருச்செங்கோட்டில் உள்ள வடிவத்தையும் குறிப்பிடுகிறார். பிருங்கி முனிவரின் கதையையும் சொல்கிறார். அந்த அழகுக் கட்டுரைக்கு மேலும் அழகு சேர்த்தது அந்தக் ‘கல்கி’ இதழின் அட்டையில் வந்த ‘மணியம்’ அவர்களின் ஓர் ஓவியம். ( இதற்காகவே திருச்செங்கோட்டிற்கு ‘மணியம்’ அவர்களை அனுப்பியிருப்பார் பேராசிரியர் கல்கி என்று தோன்றுகிறது )

திருச்செங்கோட்டில் உள்ள உற்சவ மூர்த்தியின் படம் அது! அதைப் பார்த்து மயங்கிய நான். அடுத்த ஆண்டில்(1955)  ஒரு விடுமுறையின் போது அதைப் பார்த்து வரைந்த படம் இதோ கீழே! ’மணியம்’ அவர்களுக்கு இன்னுமொரு கோடி வணக்கம்!தொடர்புள்ள பதிவுகள்: 
’சில்பி’யின் ”தென்னாட்டுச் செல்வங்கள்”

2 கருத்துகள்:

வே.நடனசபாபதி சொன்னது…

அர்த்தநாரீஸ்வரர் படம் அருமை. வாழ்த்துக்கள்!

Yarlpavanan Kasirajalingam சொன்னது…

சிறந்த பதிவு
தொடருங்கள்

பாபுனையும் ஆற்றல் இருப்பின் போட்டிக்கு வாரும்!
http://paapunaya.blogspot.com/2014/08/blog-post.html

கருத்துரையிடுக