செவ்வாய், 14 ஏப்ரல், 2015

தமிழன்னை : கவிதை

 தமிழன்னை
      
[  மூலம்; மணியம் ]


யாவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! 

கீழே உள்ள கவிதை கோபுர தரிசனம் 2005 தீபாவளி மலரில் வந்த கவிதை

பரமனின்  பாட்டில் பிழைதனைக் கண்டு 
. . பகர்ந்தது யாருடைச் சொல்? -- தமிழ் 
மரபணு என்னும் மகிமைப்  பிரணவ 
. . மந்திர நாயகி சொல்  (1). 

தந்திரச் சூரனைப் பண்டைச் சமர்தனில்

. . தாக்கிய தாருடை வேல்? -- திருச் 
செந்திலின் செல்வனைப் பத்தர்க் கருளிய 
. . செந்தமிழ் அன்னையின் வேல்.  (2)

தாவத் தவித்திடும்   முல்லைக்குத்  தேரினைத் 

. . தந்த தெவருடைக் கை? -- மொழிக் 
காவலர் காமுறும் தொன்மை இலக்கணக் 
. . காப்பிய நாயகி கை.  (3) 

அன்பும் இறையும் இரண்டிலை ஒன்றென 

. . ஆய்வுகள் செய்தவர் யார் ? -- திரு 
மந்திரம் ஓதிய  மாமுனி முத்தமிழ் 
. . மாதவள் செல்வ  மகன்.   (4) 

கறையான் அரித்த சுவடிகள் தேடிக் 

. . களைத்த தெவருடைக் கால்? -- நான் 
மறையென மாண்புறு முப்பால் வழங்கிய  
. . வண்டமிழ் அன்னையின் கால்.  (5) 

பண்ணிசை கூத்தியல் யாப்பியல்  நல்கிப் 

. . பகுத்தது யார் அறிவு? -- எந்த 
மண்ணும் அறிந்திடாச் சந்தம்  நிறைதமிழ்
. . மாதாவின் கூர் அறிவு.  (6) 

யாவரும் எம்மவர் யாதுமே நம்நகர் 

. . என்றசொல் யாருடைச் சொல்? -- சங்கப்
பாவலர் பாட்டிசைப் பாணரைப் பெற்றவள் 
. . பைந்தமிழ்  அன்னையின் சொல். (7) 






தொடர்புள்ள பதிவுகள்:

6 கருத்துகள்:

Unknown சொன்னது…

இப்பதிவினில் பதிந்த செந்தமிழ்க் கவிதையில்
செப்பிய வரிகளை தந்ததவர் யாரெனச் சொல்
பசுபதியோடு உமையாள் தந்தவ ளெனச்சொல்
மதுவிரி கோதை மனமகிழ்வோடுதந்த திந்தச்சொல்

Unknown சொன்னது…

சந்தமிகுச் செந்தமிழ்ச் செய்யுளில் நல்லபல
சிந்தனை சீருடன் செப்பிய இப்புலவன்
எந்தனை ஈர்த்த வழியென்கோ ஈசன்மகன்
கந்தனருள் காதலால் கண்டு!

Unknown சொன்னது…

யாருடை, எவருடை சரியா?

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி. எவருடை.... வெண்டளை தட்டும்.

Raveenthiran சொன்னது…

மாதவள் என்று பெண்பால் பெயர் வராதே. அது மாதவி மாதவை என்றோ இருபதன்றோ சரி.

Pas S. Pasupathy சொன்னது…

மாது + அவள் என்று எழுதினேன்.