புதன், 6 ஜனவரி, 2016

சங்கீத சங்கதிகள் - 66

என் குருநாதர்
எம்.எல்.வசந்தகுமாரி
 

ஜனவரி 6. ஜி.என்.பாலசுப்பிரமணியம் அவர்களின் பிறந்த நாள். 


1965-இல் எம்.எல்.வி அவர்கள் ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரை இதோ: 
=============

சுமார் இருபத்தாறு ஆண்டு காலமாக நானும் என் குடும்பத்தினரும் திரு. ஜி.என்.பாலசுப்பிரமணியம் அவர்களுடனும், அவரது குடும்பத்தினருடனும் நெருங்கிப் பழகி வந்திருக்கிறோம். காலஞ் சென்ற என் தந்தையும், திரு ஜி.என்.பி. அவர்களின் தந்தையும் தஞ்சை ஜில்லாவில் பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்கள். கடைசி வரை நெருங்கிய நண்பர்களாயிருந்தவர்கள். எனக்குச் சுமார் பத்து வயது இருக்கும்போது, என் தந்தை ஒரு நாள் என்னை ஜி.என்.பி. அவர்களின் வீட்டுக்கு அழைத் துச் சென்றார். அப்போது ஜி.என்.பி. திருவல்லிக்கேணி பெரிய தெரு வில் வசித்து வந்தார். ஜி.என்.பி. என்னைப் பாடச் சொல்லிக் கேட்டு ரொம்பவும் சந்தோஷப்பட்டார்.

[ நன்றி: விகடன் ] 

''ஐயா! குழந்தை ரொம்பவும் நன்றாகப் பாடுகிறாள். இவள் மிகவும் நல்ல நிலைமைக்கு வரப் போகிறாள். நீங்கள் அடிக்கடி இவ்விடம் அழைத்து வாருங்கள். என்னிடமிருந்து அவள் நிறையப் பாடம் செய்யட்டும்'' என்று மிக அன்புடன் சொன்னார். அதற்குப் பிறகு பத்து வருட காலம் அவரிடம் நூற்றுக்கணக்கான உருப்படிகள் பாடம் செய்தேன். நூற்றுக்கணக்கான அவருடைய கச்சேரிகளைக் கேட்டிருக்கிறேன். 

[நன்றி: விகடன் ]

திரு. ஜி.என்.பி. அவர்களுக்கு ஹிந்துஸ்தானி சங்கீதத்தைப் பற்றியும் நன்றாகத் தெரியும். தென்னாட்டிற்கு திருமதி ரோஷனாரா பேகம், படேகுலாம் அலிகான் இவர்களைப் போல ஹிந்துஸ்தானி பாடகர்கள் அறிமுகமாவதற்கு அவர்தான் காரணம். ஒரு சமயம், திரு. குலாம் அலிகான் 'காவதி' என்ற ராகம் பாடினார். அது ஒரு சிக்கலான ராகம். பாடுவது ரொம்ப சிரமம். ஆனால், நம் ஜி.என்.பி. அவர்கள் அடுத்த தினம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சபா கச்சேரியில் ராகமாலிகையாக சுலோகம் பாடும் போது, காவதி ராகத்தையும் பாடிக் காட்டினார்.
[நன்றி: விகடன் ] 

எதையும் எளிதில் கிரகிக்கக்கூடிய சக்தி அவருக்கு உண்டு. கீர்த்தனங்களை ரொம்பவும் சீக்கிரத்தில் ஸ்வரப்படுத்திவிடுவார்.

ஒரு தினம், யாரோ ஓர் ஆங்கிலேயர் ரேடியோவில் வயலின் வாசித்திருக்கிறார். அடுத்த தினம் ஜி.என்.பி. அவர்கள் ''வசந்தி! நேற்று ஓர் ஆங்கிலேயர் வயலின் வாசித்தார். அவர் வாசித்த டியூன் நம் சங்கராபரணத்தை ஒட்டி இருந்தது. அதில் எல்லா ஸ்வரங்களையும் வைத்துக் கொண்டு க்ரக பேதம் செய்தார். நான் எல்லாவற்றுக்கும் ஸ்வரம் எழுதி வைத்திருக்கிறேன், பார்'' என்று சொன்னார்.

சில்லறை ராகங்களாகிய தேவ மனோஹரி, ரஞ்சனி, மாளவி மாதிரி பல ராகங்களை விஸ்தாரமாகவும் ரக்தியாகவும் பாடுவார். கச்சேரிகளில் சின்னப் பல்லவியாகப் பாடுவார். பார்த்தால் ரொம்பவும் சுலபமாகவும் தோன்றும். ஆனால், அதே பல்லவிகளை நாம் கையாளும்போது, ரொம்பவும் கஷ்டமாக இருக்கும். 

திரு.ஜி.என்.பி. அவர்கள் சிறந்த கலா ரசிகர். எல்லாக் கலைகளையும் நன்கு ரசிப்பார். சாப்பாட்டு விஷயத்தில் பரம ரசிகர். ரொம்பவும் ருசியாக இருந்தால்தான் சாப்பிடுவார். வாசனை திரவியங்கள் அவருக்கு ரொம்பவும் பிரியம். ஆங்கிலத்திலும் சரி, தமிழிலும் சரி, மேடையில் நன்றாகப் பேசும் திறமை உள்ளவர் ஜி.என்.பி.

சம்ஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் அவருக்கு நல்ல பரிச்சயம் உண்டு. அவரது சிறந்த சங்கீத ஞானத்தாலும், ஸம்ஸ்கிருத தெலுங்கு பாஷை ஞானத்தாலும் பல அரிய கீர்த்தனங்களைச் சொந்தமாக இயற்றியுள்ளார். அவர் மறைந்துவிட்ட போதிலும் அவர் இயற்றிய கீர்த்தனைகள் இந்த உலகம் உள்ளவரை அழியாத செல்வங்களாகத் திகழும்.

[ நன்றி: விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:


கருத்துகள் இல்லை: