செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

பி.ஜி. உட்ஹவுஸ்

கனிந்த சிரிப்பாம்பழம்! 
ஜே.எஸ்.ராகவன் 


பிப்ரவரி 14. பி.ஜி. உட்ஹவுஸின் ( P.G.Wodehouse ) நினைவு தினம்.

உட்ஹவுஸின் எல்லாப் படைப்புகளையும் கரைத்துக் குடித்து,  அவரைப் பற்றி எழுத முழுத் தகுதி உடையவர் , இன்றைய நகைச்சுவை எழுத்துலகில் சிம்ம நடை போடும் ஜே.எஸ். ராகவன் சார் ஒருவர் தான்!

உட் ஹவுஸின் அமர பாத்திரமான ஜீவ்ஸின் தமிழ்நாட்டு அவதாரமாய்ச் ‘சிவசாமி’யைப் படைத்து நம்மிடையே உலாவ விட்டவர் ராகவன். அவருடைய ‘சிவசாமியின் சபதம்’ நூலைப் படிக்காதவர்கள் இன்றே வாங்கிப் படிக்கவும்!

இதோ அவருடைய கட்டுரை!ண்டன் செயின்ட் பால்ஸ் கதீட்ரலின் குவிந்த கூரையை நினைவூட்டும் பளிங்குத் தலை, தீர்க்கமான மூக்கு.  ஜாடியின் கைப்பிடிகளாகத் துருத்தி நிற்கும் காதுகள். அரேபியக் கூடாரத் தையல்காரர் குத்துமதிப்பாகத் தைத்த ஃபாஷனில் தொளதொள உடை. கையில் புகை விடும் பைப் இருந்தும் உள்ளத்தில் இம்மி அளவும் புகைச்சல் இல்லை என்று சூடம் அடித்து சத்தியம் பண்ணிச் சிரிக்கும் கண்கள் கன்னங்கள், உதடுகள், ஜாலியான உருவம். தொண்ணுற்றி மூன்று வயது வரையிலும் சளைக்காமல் தமாஷா மில்க் ஷேக்கை மிக்ஸியில் அடித்து வாரி வழங்கிய பி.ஜி. உட்ஹவுஸ், ஆங்கில நகைச்சுவை எழுத்தாளர்களில் "ப்ளம் என்று அறியப் பட்ட ஒரு கனிந்த சுவையான சிரிப்பாம்பழம்!


டொப் என்ற சப்தத்துடன் கார்க் பாய்ந்து குதித்த உடனே, குபுகுபு என்று பொங்கி வரும் ஷாம்பெயினாக மிக உயர்ந்த நகைச்சுவையை வாரி வழங்கிய பிரிட்டிஷ் அமெரிக்க இரட்டைக் குடிமகனான உட்ஹவுஸின் மீது வழக்கமாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டு, பலரை அவர் நகைச்சுவைக் குடிமகன்களாக மாற்றி விட்டார் என்பதுதான். இதோ, இலவச சாம்பிளாக கொஞ்சம் சுவைத்துப் பாருங்களேன்!

*ஆஸ்பத்திரியில் ஒரு சர்ஜன் என்னோட உடம்பு மேலே பிராய்டரி வேலை செஞ்சிண்டு இருந்தார்!
*நரை முடிக்கு ஃபிரெஞ்சுக்காரர்கள் கண்டுபிடித்த ஒரே ஒரு வைத்தியம்தான் உண்டு. அதற்குப் பெயர் கில்லட்டின் (கில்லட்டின் என்பது ஃப்ரெஞ்சு புரட்சிக் காலத்து சிரச்சேத சாதனம்)
*பல கிளிகளே கிளி மாதிரி இருக்கமாட்டா; ஆனால் மார்ட்டிமர் கிளி மாதிரியே இருந்தார்.
*பார்த்த உடனேயே அவர் யாருக்கோ தாத்தாவாக, ஏன் கொள்ளுத் தாத்தாவாகக் கூட இருக்கலாம் என்று தோன்றியது. விருந்திலே பாடி முடித்த ஆபரா பாடகி கோரா பெலிஞ்சரின் தொண்டையைக் குறைத்து எடை போட முடியாது. கூரையிலிருந்து  காரை இன்னும் விழுந்துகொண்டு இருக்கிறது.  
* பொதுவாகவே இராண்டு சாரார்களுக்குக் கல்யாணம் செஞ்சுக்கிறதன்னா அலர்ஜி.  ஒண்ணு ஃபாஷன் போட்டோகிராபர்கள். வங்க அழகான பெண்களைப் பார்த்துப் பார்த்து அலுத்துப் போயிடறாங்க. இரண்டு பால்காரங்க. அவங்க பெண்களைத் தூங்கி எழுந்த கோலத்திலே பார்த்துப் பார்த்து அரண்டுடறாங்க! பி.ஜி.உட்ஹவுஸ் அவர்கள் பிரமாதீஸா ஆண்டு, புரட்டாசி மாதம் 31-ம் தேதி (15.10.1881) அன்று புனர்பூச நட்சத்திரத்தில் இங்கிலாந்தில் உள்ள கில்ஃபர்டில் நீதிபதி எர்னஸ்ட் உட்ஹவுஸுக்கும் திருமதி எலனார்க்கும் மூன்றா வது திருமகனாக அவதரித்தார் என்று நமுத்துப் போன பாணியில் குறிப்பிடுவது தகாது. பிறப்பு, இறப்பு மற்றும் அந்த இரண்டு மைல் கல்களுக்கு இடையே எழும் மெகா விசும்பல்கள், சொத சொத சென்டிமென்ட்டுகள் ஆகியவற்றைத் தன்னுடைய மனோரம்யமான படைப்புகளில் தலை யெடுக்க விடாமல் கண்குத்திப் பாம்பாகப் பார்த்துக் கொண்ட அவருக்கு இழைக்கப்படும் அநீதி யாகும்.

ராதா கல்யாண மகோத்ஸவ சிங்கிள் ரீடு ஆர்மோனியக்காரர் மாதிரி வாழ்க்கை முழுவதும் டைப்ரைட்டர் சமேதராகக் காட்சி அளித்த உட்ஹவுஸ், வாலிபப் பருவத்தில் ஹாங்காங் ஷாங்காய் வங்கியில் குமாஸ்தாவாக வேலையில் இருந்தபோது, புத்தம் புதிய லெட்ஜரின் முதல் பக்கத்தில், லெட்ஜர் திறப்பு விழாவைப் பற்றி நகைச்சுவைக் கட்டுரை ஒன்றை எழுதினார். லெட்ஜரின் அந்தத் தவறான என்ட்ரி அவருடைய வேலையைக் கிழித்து விடப் போகிறது என்ற அச்சத்தில் எழுதிய ஃபோலியோவைக் கிழித்து எறிந்து விட்டார்! ஆனால் ஆங்கில நகைச்சுவை என்ற கனக்கும் மெகா லெட்ஜரில் அவருடைய படைப்புகள் பொன்னெழுத்தில் பொறிக்கப்படப் போகின்றன என்று அவர் அப்போது அறிந்திருக்க நியாயமில்லை!

'பிரசுரத்துக்கு ஏற்றதில்லை' என்று தமக்கு வந்த ரிஜக்ஷன் ஸ்லிப்புகளா லேயே ஒரு பெரிய டைனிங் ஹாலுக்கு வால் பேப்பர் ஒட்டி இருக்க முடியும் என்று தம் ஆரம்ப கால முயற்சிகளைப் பற்றிக் கிண்டலடித்த உட்ஹவுஸ், ஒரு முறை லெட்ஜர் கணக்கு உதைத்த வெறுப்பின் உச்சத்தில் பேங்கிலிருந்து கற்றை காசோலைகளுடன் கிளம்பி அருகில் உள்ள தேம்ஸ் நதியில் கடாசினார் என்ற கதை ஒன்று அவரைப் பற்றி உண்டு. இது நிஜமா என்பது தேம்ஸுக்குத்தான் வெளிச்சம்!

வயதான காலத்தில் அவர் எழுதிய கடிதங்களை வீட்டு ஜன்னல் வழியாக வீசி எறிந்து விடுவார் என்றும், அக்கம் பக்கத்தினர் அவற்றைச் சேகரித்து தபாலாபீஸில் உள்ள பெட்டியில் கர்ம சிரத்தையுடன் போட்டு விடுவார்கள் என்றும்கூட ஒரு கதை அவரைப் பற்றி உண்டு.


இறுக்கமான சூழ்நிலையிலும் நகைச்சுவையைத் தேடிப் பிடித்துச் சிரிப்பால் அதைத் தளர்த்தும் ஆற்றல் படைத்திருந்த அவர், ஒரு சிக்கல் இல்லாத வண்ண உல்லன் நூல் கண்டு. தம்மைப் பற்றியே ஜோக் அடித்துத் தாழ்த்திக் கொண்டு அந்த நிலையையே ஒரு பாதுகாப்பு வளையமாக, ஒரு வியூகமாக அமைத்துக்கொண்ட உட்ஹவுஸின் எழுத்து, சுமார் எழுபத்தி ஐந்து வருஷங்கள் கழித்தும், ஜொலி ஜொலிப்பும், புதுத் தன்மையும் மாறாத ஒரு மாபெரும் சமஸ்தானத்துக்குச் சொந்தமான தங்கச் சிம்மாசனமாக இன்றும் பொலிவுடன் மிளிர்கின்றது.

லார்டு எம்ஸ்வொர்த், ட்யூக்ரிட்ஜ், ஆன்ட் அகாதா, முல்லினர், ஸ்மித் போன்ற நகைச்சுவை முலாம் பூசிய பாத்திரங்களைப் படைத்த உட்ஹவுஸை மிகவும் பிரபலமாக்கிய இரண்டு தங்கப் பாத்திரங்கள் பெர்டி ஊஸ்டரும், ஜீவ்ஸும்தான். ஷெர்லாக் ஹோம்ஸ் டாக்டர் வாட்ஸன் ஜோடியில் துப்பறியும் நிபுணர் ஹோம்ஸை அதி புத்திசாலி யாகவும், அவருடைய இணை பிரியா நண்பர் வாட்ஸனை வாயைப் பிளக்கும் ரசிகராகவும் ஆர்தர் கானன் டாயல் படைத்தார் என்றால், உட்ஹவுஸ் அதைத் தலை கீழ் திருப்பம் செய்து, பட்லர் ஜீவ்ஸை நாலும் தெரிந்த அடக்கி வாசிக்கும் அறிவு ஜீவியாகவும் அவருடைய எஜமானரான பெர்ட்டி ஊஸ்டரை ஏறக்குறைய "மேல் மாடி காலி லெவலுக்கு இறக்கியும் காமெடி காக்டெயில் பண்ணி இருக்கிறார்.

எக்கச்சக்க பணம், யாருக்கும் கைகட்டி வாழாமல், எந்த நிற டை கட்டி உடை அணிவது என்று தலையைச் சொறியும் மேல்மட்ட வாழ்க்கை, லண்டனில் வீடு. ட்ரோன்ஸ் கிளப்பில் மெம்பர். கல்யாணம் என்றால் கசப்பு. அத்தை அகாதா என்றால் உதைப்பு என்ற நிலையில் காலத்தை நம்மூர் பெரியபுரம் மைனர் பாணியில் கழித்தவன் ஊஸ்டர். அவனுடைய பட்லர் ஜீவ்ஸ், தன் எஜமானரைப் பல இன்னல் களிலிருந்து காப்பாற்றும் சூழ்நிலைகளை விவரிக்கும் பிளாட்டுகளை உட்ஹவுஸ் மாதிரி யாராலும் போட்டு யானை விலைக்கு விற்றிருக்க முடியாது.

ஷெர்லாக் ஹோம்ஸைக் கிண்டலடிக்கும் ஒரு ஜோக்.

"ஒன்டர்ஃபுல் மிஸ்டர் ஹோம்ஸ் மேஜர் மர்ஃபி உல்லன் அண்டர்வேர்தான் போட்டிருந்தார்னு எப்படிக் கண்டு பிடிச்சீங்க?"

'எலிமென்டரி, மை டியர் வாட்ஸன். அவர் அப்போ பேன்ட் போட்டுண்டு இல்லே."

இதை நினைவூட்டக் கூடிய ஊஸ்டர் - ஜீவ்ஸ் உரையாடல்.

ஊஸ்டர் :ஜீவ்ஸ், இந்தக் கட்டம் போட்ட சூட் நன்னா இல்லை.?

ஜீவ்ஸ் : என்னுடைய ஒபினியன்லே விசித்திரமா இருக்கு ஸார்.

ஊஸ்டர் : ம்? ரொம்ப பேர் இதைத் தைச்ச டெய்லர் யாருன்னு கேட்டாங்க.

ஜீவ்ஸ்: அவர்கிட்டேந்து தப்பிச்சிக்கிறதுக்காக கேட்டிருப்பாங்க ஸார்!
தொண்ணுற்றி மூன்று வயதிற்குள் தொண்ணூற்றி ஆறு புத்தகங்கள், நூற்றுக் கணக்கான சிறு கதைகள், பதினாறு நாடகங்கள், ஹாலிவுட் படங்களுக்கு ஸ்க்ரிப்ட்டுகள், பாடல்கள் என்று எழுதிக் குவித்த அவருடைய ரசிகர்களில், ராணி எலிஸபெத் மட்டுமின்றி ருட்யார்டு  கிப்ளிங், டி.எஸ்.எலியட், ஹிலாய்ர் பெலாக், டாரதி பார்க்கர், சல்மான் ருஷ்டி போன்ற இலக்கியப் பெருசுகளும் அடக்கம். எலிஸபெத்தின்  அம்மா ஒரு முறை உட்ஹவுஸின் புத்தகங்கள் எல்லாவற்றிலும் ஒரு காப்பியை படிப்பதற்காக அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டாராம்.


 நகைச்சுவை வெல்வெட் பிடியிலிருந்து தன்னுடைய புத்தக முன்னுரைகளையும் அவர் விட்டு வைக்கவில்லை.

'தி ஹார்ட் ஆஃப் எ கூஃப்" என்ற நாவலின் சமர்ப்பணம் இவ்வாறு அமைந்திருக்கிறது:

என்னுடைய மகள் லெனோராவுக்குச் சமர்ப்பணம். இவளுடைய இடைவிடாத அனுதாபமும், ஊக்கமும் மட்டும் இல்லாதிருந்தால் இந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்ட பாதி நேரத்திலேயே முடித்திருப்பேன்!
 சம்மர் லைட்னிங் நாவலின் முன்னுரையில் தன்னுடைய விமர்சகர்களை இவ்வாறு ஒரு பிடி பிடிக்கிறார்:

ஒரு விமர்சகர் (அப்படி சில பேர் இருப்பதுதான் சோகம்) நான் எழுதிய கடைசி நாவலில் என்னுடைய பழைய கேரக்டர்களே புதி பெயரில் வருகிறார்கள் என்ற ஒரு அருவருப்பான பழியை அபாண்டமாகச் சுமத்தி இருக்கிறார். இந்தத் தெய்வ குற்றத்துக்காக அவரை ஏற்கெனவே கரடிகள் தின்று இருக்கும். ஒரு வேளை அவர் உயிரோடு இருந்தால், இந்த நாவலைப் பற்றி அதே ரீதியில் என்னைக் கொத்த முடியாது. ஏனென்றால், இதில் என்னுடைய பழை கேரக்டர்களை அவர்களின் பழைய பெயர்களிலேயே கொண்டு வந்திருக்கிறேன்/

ம் நாட்டில் ஆங்கிலத்திலும் தமிழிலும் நகைச்சுவை எழுதும் முக்காலே மூணு வீசம் எழுத்தாளர்களுக்கு உட்ஹவுஸ் ஓர் அரிச்சுவடி. பின்னர் கடைந்து விட்டு உற்சாகம் தரும் மத்து. இருபது வயதிலேயே எழுத ஆரம்பித்து நாற்பத்து நாலு வயதுக்குள் இமாலய சாதனை புரிந்து, சிரஞ்சீவி கேரக்டர்களை உலவவிட்டு மறைந்த தேவனின் எழுத்துகளில் உட்ஹவுஸின் தாக்கம் சில இடங்களில் இருந்ததாகச் சொல்லலாம்.

தேவனின் மைதிலியில் ஒரு காட்சி:

'கோபால சாஸ்திரியின் மனைவி தன் கையிலிருந்த குடம் ஜலத்தையும் செடிகளின் பக்கமாக வீசி விட்டுப் போனாள். (செடிகளில் பூனையாக மறைந்து இருந்த) செல்வமணி ஒரு பொட்டு விடாமல் அதைத்தன் தேகத்துக்குள் வாங்கிக் கொண்டான்.

"அந்தச் செடியிலே பாக்கி ஜலம் ஒட்டிக் கொண்டிருக்கிறதா? நீங்களே பூராவையும் வாங்கிக் கொண்டீர்களா?’ மைதிலி கலகலவென்று சிரிப்பது கேட்டது.

ஜீவ்ஸ் இன் த ஆஃபிங்கில் உட்ஹவுஸின் வார்த்தை ஜாலம்:

நான் வீசி எறிந்த டீ ஆப்ரேயின் நிஜாரை தாராள மாக நனைத்து, நிஜாரை விட அவர் டீயையே அணிந்த மாதிரி எனக்குத் தெரிந்தது.

தேவனின் மல்லாரி ராவ் கதைகளைப் படிக்கும் போது உட்ஹவுஸின் முல்லினர் கதைகள் போன தீபாவளியில் சுவைத்த ரோஸ் ஜாங்கிரி மாதிரி ஞாபகத்துக்கு வரும்.

ஒரு மகாராஜாவுடன் தங்கி இந்தியாவைச் சுற்றிப் பார்க்கலாம். யானை, ஒட்டக சவாரி செய்யலாம். வேட்டை ஆடலாம் என்று மனைவி எதெல் அவரை அழைத்த போதிலும், இந்தியாவிலே இருக்கிற தாஜ்மகாலை விட, பெருமையாக சொல்லிக்க ஒண்ணுமில்லாத டிராய்ட்விக் கிராமமே எனக்குச் சொர்க்கம் என்று உட்ஹவுஸ் மூட்டை கட்ட மறுத்து விட்டார். உட்ஹவுஸின் இந்திய உறவு என்று பார்த்தால், எதல், மைசூர் அருகில் சுரங்க இன்ஜினியராக இருந்த தன் கணவனை இழந்து, உட்ஹவுஸை மறுமணம் செய்து கொண்ட பெண். உட்ஹவுஸின் அண்ணா ஆர்மைன் சென்னை அடையாறுக்கு வந்தி ருக்கிறார். தியோசாபிகல் சொஸைடியில் ஈடுபாடு கொண்டிருந்த அவர், பூனா டெக்கான் கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்தபோது அவரிடம் பயின்ற  வி.ஐ.பி. (வெரி இம்பார்டன்டு ஃபிலாஸபர்) மாணவர் ஜே.கிருஷ்ணமூர்த்தி!

அமெரிக்காவில் உட்ஹவுஸின் 80-வது பிறந்த நாளை முன்னிட்டு
1960-ல் நியூயார்க் டைம்ஸில் வெளி வந்த இரண்டு - பத்தி விளம்பரம்:

அதாவது பி.ஜி.உட்ஹவுஸ்"க்கு நாளைக்கு எண்பது வயது நிறைவடைகிறது என்கிறபடியாலும், நாம் யாரும் அவருடைய எண்து புத்தகங்களில் சிலவற்றையாவது பரவசத்துடன் படிக்காமல் முதிர்ச்சி அடைந்ததில்லை என்ற காரணத்தாலும், உட்ஹவுஸ் ஒரு சர்வதேச நகைச்சுவை நிறுவனம் மட்டும் அன்றி ஒரு கைதேர்ந்த நகைச்சுவையாளர் என்பதாலும், கீழே கையொப்பமிட்டுள்ள நாங்கள் அவரை அன்புடனும், நன்றியுடனும் வணங்குகிறோம்."

விளம்பரத்தின் கீழே இடம் பெற்ற எண்பது இலக்கிய மணம் பரப்பும் பெரிய தலைகளில் சில: ஜான் அப்டைக், ஜேம்ஸ் தர்பர், எவலின் வா. கிரஹாம் க்ரீன். ஆக்டன் நாஷ், போதுமா?

நம்மூர் போஸ்டர்களில்வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்வாசகத்தை நினைவூட்டுகிறது இல்லையா?

குறித்த நேரத்தில் தவறாது கையெழுத்து பிரதிகளைப் பிரசுரத்துக்குத் தந்து வந்த உட்ஹவுஸ் தன்னுடைய தொண்ணூறாவது வயதில் இருதய நோயாலும், பின்னர் சரும உபாதையாலும் பாதிக்கப்பட்டார் என்றாலும் அந்த நிலையிலும் விடாது எழுதிக் கொண்டிருந்தார்.
"ஸர் பட்டம் கொடுத்து லண்டனில் என்னுடைய மெழுகுச் சிலையையும் வைத்து விட்டார்கள். சாதிக்க எனக்கு இன்னும் என் இருக்கிறது?’ என்று கேட்ட உட்ஹவுஸ், தாம்டன் ஆஸ்பத்திரியில் இருக்கும்போதும் முடிவு பெறாத நாவலின் கையெழுத்துப் பிரதியைச்
சரி பார்த்துக் கொண்டிருந்தார்.

பிப்ரவரி 14-ஆம் தேதி இரவு எட்டு மணிக்கு டாக்டர் பெர்னார்டு அவரைச் சோதிக்க வந்தார். உட்ஹவுஸ் சாய்வு நாற்காலியில் அமைதியாகச் சாய்ந்து படுத்து இருந்தார். கண்கள் மூடியிருந்தன. அருகில் வேண்டிய 'பிளான்டிங்கில் சூரிய அஸ்தமனம்நாவல். கைகளில் புகையிலைப் பை. மற்றும் பைப்.

பைப்பிலிருந்து புகை மறைந்து போயிருந்தது.


நகைச்சுவை மீது நாயகி - நாயக பாவத்துடன் மீளாக் காதல் கொண்டு, அந்தக் காதல் நோயைப் பல எழுத்தாளர்களிடமும் பல்லாயிரக் கணக்கான வாசகர்களிடமும் பளிச்சிடும் சூரிய வெளிச்சமாகப் பரவ விட்ட சிரிப்புச் சக்கரவர்த்தி மறைந்த தினம் சாதாரண நாள் அல்ல. வாலன்டைன்ஸ் டே எனக் கொண்டாடப்படும் காதலர் தினமாகும்! 

[ நன்றி : கல்கி ] 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக