செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

காதலர் தினக் கும்மி : கவிதை

காதலர் தினக் கும்மி
பசுபதி




காதலர் நாளும்பி றந்ததடி -- நம்
. . கண்ணியம் பண்பாடி றந்ததடி!
மேதினி போகுமிவ் வேதனையை, -- பார்த்து
. . வெட்கியே வானம் சிவக்குமடி! (1)

ஆண்டுக்கோர் நாள்தானோ காதலுக்கு,  --அது
. . அன்றாட வாழ்விலோர் அங்கமடி!
வேண்டாப் பொருள்களை அங்காடிகள் -- சேர்ந்து
. . விற்கவே செய்திடும் சூழ்ச்சியடி!  (2)

காதல் கடைச்சரக் கானதடி ! -- பணங்
. . காசெனும் மீன்பிடி தூண்டிலடி!
காதலே ஓர்பரி சென்றிடுவார் ! -- அந்தக்
. . காதல் பரிசால் கிடைத்திடுமோ?  (3)

பண்டையில் காம தகனம்;இன்றோ -- பரிசுப்
. . பண்டத்தில் காசை எரித்திடுவர் !
வண்ண மலர்க்கொத்து வாங்குகிறார் -- தினம்
. . மாலையில் மல்லிக்கே ஈடாமோ?    (4)

பாதி உடையிலே ஈசுகிறார் -- நடைப்
. . பாதை, கடற்கரை, வண்டியிலே !
காதலின் உச்சமோ 'பச்சை'யடி! -- அதைக்
. . கட்டிலொன் றேகாண வேண்டுமடி!  (5)

நேர்மை இலாதது காதலன்று -- வெறும்
. . நேரம் கழிப்பது காதலன்று !
ஈர்க்கும் உடையும், உடற்பசியும் -- பருவ
. . ஏக்க விளைவுகள் காதலன்று !     (6)

கொச்சைப் படுத்துதல் காதலன்று -- பூங்காக்
. . கொட்டம் அடிப்பது  காதலன்று !
இச்சை உணர்வைப் புனிதஞ்செய்து -- பின்
. . ஈருயிர்ச் சங்கமம் காதலடி !      (7)

( இது ‘திண்ணை’ மின்னிதழில் பிப்ரவரி 23, 2003 -இல்  வெளியானது )



தொடர்புள்ள பதிவுகள்:

கவிதைகள்

5 கருத்துகள்:

Ananda Ganesh V சொன்னது…

தமிழர்தம் மரபுப்படி காமவேள் தினம்/ ஹோலி பண்டிகைதான் காதலர் தினம். மேற்கத்திய கார்ப்பரேட்டுகள் திணிக்கும் இந்த நுகர்வுமய நாள்போய் காதலர் தினம் ஆகுமா ? :(

KAVIYOGI VEDHAM சொன்னது…

நல்ல அறிவுரையோடு நச் என்று மண்டையில் உரைக்கும்வண்ணம் செய்த கவிதை,
யோகியார்

ELANDHAI சொன்னது…

மிக அருமையான பாடல்

பெயரில்லா சொன்னது…

அருமை அருமை ஐயா!

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி, இமையவரம்பன்.