புதன், 7 ஜூன், 2017

741. காந்தி - 8

1. லண்டன் மார்க்கம்
’கல்கி’


 ‘கல்கி’ யின் ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ (  பாகம் -2) என்ற நூலில் வந்த முதல் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  

[ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. கல்கி இதழில் மொத்தம் 106 அத்தியாயங்கள் - 48/50 -இல்  வந்தன. இரண்டு பாகங்கள் வந்தன. ” மேலும் மூன்று பாகங்களாவது வந்திருக்கும் “ என்கிறார் “சுந்தா”. ஆனால் கல்கி மூன்றாம் பாகத்தைத் தொடங்கவில்லை.

பின்னர் கல்கியின் மறைவுக்குப் பின்  இத்தொடரை மங்கள நூலகம் இரண்டு பாகங்களாய் வெளியிட்டது. முதல் பாகத்தில்  65 அத்தியாயங்கள் இருந்தன. " காந்தி தென்னாப்பிரிக்காவில் நடத்திய மகத்தான சத்தியப் போர் இத்துடன் முடிவடைந்தது"  என்று அந்தக் கடைசி அத்தியாயத்தில் சொல்கிறார் கல்கி.

பிறகு வந்த மங்கள நூலகத்தின் இரண்டாம் பாகத்திலும் , 56-இல் வந்த இந்த நூலிலும் கடைசியாய்க் 'கல்கி' இதழில் வந்த  41 அத்தியாயங்களே உள்ளன. அந்த நூலில் உள்ளதை மதுரைத் திட்டம் வெளியிட்டுள்ளது.  அவற்றை இங்கே மணியத்தின் அமர சித்திரங்களுடன் சேர்த்து வெளியிடுகிறேன்.   ]
===




தாய் நாட்டுக்குப் போகிற வழியில் லண்டனில் ஸ்ரீகோகலேயைச் சந்தித்துப் பேசுவதற்காக மகாத்மா காந்தி இங்கிலாந்துக்குப் பயணமானார். அவருடன் ஸ்ரீமதி கஸ்தூரிபாயும் மிஸ்டர் காலன்பாக் என்னும் ஜெர்மன் நண்பரும் பிரயாணப் பட்டார்கள்.

1914-ஆம் வருஷம் ஜூலை மாதத்தில் மகாத்மா கப்பல் ஏறி ஆகஸ்டு மாதம் 5 - ஆம் தேதி லண்டனை அடைந்தார். அதற்கு முதல்நாள் ஆகஸ்டு மாதம் 4 - ஆம் தேதி முதலாவது உலக மகா யுத்தம் ஆரம்பமாகி விட்டது.

லண்டன் நகரை அடைந்ததும் மகாத்மா ஸ்ரீகோகலேயைப் பற்றி விசாரித்தார். கோகலே பாரிஸுக்குப் போயிருக்கிறார் என்றும் யுத்தம் தொடங்கி விட்டபடியால் திரும்பி வருவதற்குத் தாமதப்படலாம் என்றும் தெரிந்தது. இந்தியாவில் தாம் செய்யவேண்டிய தேசத் தொண்டைக் குறித்து ஸ்ரீ கோகலேயிடம் மகாத்மா பேச விரும்பினார். கோகலேவைப் பாராமல் இந்தியாவுக்குப் போக விரும்பவில்லை. ஆகையால் அவர் திரும்பி வரும் வரையில் லண்டனிலேயே தங்கி யிருக்கத் தீர்மானித்தார்.

லண்டனிலிருந்தபோது யுத்தம் சம்மந்தமாகத் தம்முடைய கடமை என்னவென்ற யோசனை ஏற்பட்டது. தென்னாப்ரிக்காவில் போயர் யுத்தத்தின் போது செய்தது போல இந்த யுத்தத்திலும் பிரிட்டனுக்கு உதவி செய்வது இந்தியர்களுடைய கடமை என்று மகாத்மா தீர்மானித்தார். எனவே அச்சமயம் இங்கிலாந்தில் படிப்பதற்காக வந்திருந்த இந்திய மாணவர்களையும் மற்ற இந்தியர்களையும் திரட்டி அவர்களிடம் தமது அபிப்பிராயத்தைத் தெரிவித்தார். "ஆங்கில மாணாக்கர்கள் யுத்த சேவையில் எவ்வளவு ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள், பார்த்தீர்களா? அதுபோல இந்திய மாணாக்கர்களும் யுத்த சேவை செய்வதற்கு முன் வர வேண்டும்" என்று சொன்னார்.

இந்தியர்களில் சிலர் அதை ஆட்சேபித்தார்கள் "ஆங்கிலேயர் சுதந்திர புருஷர்கள்; ஆளும் சாதியினர்; ஆகையால் சாம்ராஜ்யத்தைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் யுத்தம் செய்தாக வேண்டும். சுதந்திரம் இல்லாத அடிமை இந்தியர்கள் எதற்காக யுத்த சேவையில் ஈடுபட வேண்டும்? ஆங்கிலேயரக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை நமக்குச் சாதகமாக உபயோகித்துக் கொள்வதல்லவா நம்முடைய கடமை" என்றார்கள். இந்த வாதத்தை மகாத்மா ஒப்புக்கொள்ளவில்லை.

"இங்கிலாந்துக்கு ஏற்பட்டுள்ள கஷ்டத்தை நம்முடைய சந்தர்ப்பமாக உபயோகித்துக் கொள்வது நியாயம் அல்ல. யுத்தம் நடக்கும் வரையில் நம்முடைய கோரிக்கைகளை வற்புறுத்தக் கூடாது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பாதுகாப்பை நாம் பெற்று வருகிறோம். ஆகையால் யுத்தத்தில் பிரிட்டனுக்கு உதவி செய்ய வேண்டும்" என்று வற்புறுத்தினார்.

மகாத்மாவின் யோசனையை இந்தியர்கள் பலர் ஒப்புக் கொண்டார்கள். யுத்த சேவைக்காக வாலண்டியர் படையில் சேர்வதாகத் தங்கள் பெயர்களையும் கொடுத்தார்கள். இவர்களில் இந்தியாவின் எல்லா மாகாணத்தினரும் எல்லா மதத்தினரும் இருந்தார்கள்.

இதனால் திருப்தி யடைந்த மகாத்மா அச்சமயம் இந்தியா மந்திரி பதவி வகித்த லார்ட் குரூவுக்குக் கடிதம் எழுதினார்.தாமும் தம்மைச் சேரந்த இந்தியர்களும் சைன்ய சேவையில் ஈடுபட விரும்புவதாகவும் அதற்கு வேண்டிய பயிற்சி பெறத் தயாரா யிருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவித்தார். லார்ட் குரூ முதலில் சிறிது தயங்கி விட்டுப் பிறகு மகாத்மா எழுதிய வண்ணம் இந்தியர்களின் சைன்ய சேவையை ஒப்புக் கொள்வதாகப் பதில் எழுதினார்.


முதலில் டாக்டர் காண்ட்லி என்பவரின் கீழ் பிரதம சிகிச்சை முறையில் பயிற்சி அளிக்கப்பட்டது. எண்பது இந்தியர்கள் பயிற்சி பெற்றார்கள். ஆறுவாரத்துக்கெல்லாம் நடந்த பரீட்சையில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் தேறினார்கள்.

இந்த நாட்களில் காந்திஜிக்குப் பழக்கமான பல இந்தியர்களில் ஒருவர் டாக்டர் ஜீவராஜ் மேத்தா. அப்போது இவர்இங்கிலாந்தில் வைத்தியப் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தார். மகாத்மாவின் தலைமையில் சைன்ய சேவைப் படையில் சேர்ந்தார். பிற்காலத்தில் டாக்டர் ஜீவராஜ் மேத்தா காந்தி மகாத்மாவுக்கு உடல்நோய் ஏற்பட்ட காலங்களிலும் காந்திஜி உண்ணாவிரதம் இருந்த காலங்களிலும் அவருடைய நம்பிக்கைக்கு உரிய வைத்தியராய் விளங்கினார். தற்சமயம் டாக்டர் ஜீவராஜ் மேத்தா பரோடா சமஸ்தான பிரதம மந்திரி பதவி வகித்துப் பரோடாவைப் பம்பாய் மாகாணத்தில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

அக்காலத்திலேதான் மகாத்மா காந்தி முதன் முதலாக ஸ்ரீமதி சரோஜனி தேவியையும் சந்தித்தார். போர் வீரர்களுக்கு உடுப்புக்களும் காயம் பட்டவர்களுக்குக் கட்டுகள் போடும் துணிகளும் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்ட பெண்மணிகளின் சங்கம் ஒன்று லண்டனில் இருந்தது. அந்தச் சங்கத்தில் ஸ்ரீமதி சரோஜினி தேவி அங்கத்தினர். ஒருசமயம் போர் வீரர்களின் உடுப்புக்காக வெட்டப் பட்டிருந்த ஒரு குவியல் துணிகளை மகாத்மா காந்தியிடம் ஸ்ரீமதி சரோஜினி தேவி கொடுத்து அவற்றை உடைகளாகத் தைத்துக்கொண்டு வரும்படி சொன்னாராம். மகாத்மா அவ்விதமே தைத்துக்கொடுத்தாராம்.

பிற்காலத்தில் இந்தியாவில் மகாத்மா ஆரம்பித்து நடத்திய இயக்கங்களில் ஸ்ரீமதி சரோஜினி தேவி எவ்வளவு ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.மகாத்மாவிடம் ஸ்ரீமதி சரோஜினி தேவி கொண்டிருந்த பக்தி அளவற்றது. பாதகன் கோட்ஸேயினால் மகாத்மா சுடப்பட்டு இறந்த சம்பவம் ஸ்ரீமதி சரோஜினியின் இருதயத்தைப் பெரிதும் பாதித்துப் பலவீனப் படுத்திவிட்டது. காந்திமகான் காலமாகி ஒரு வருஷத்துக்கெல்லாம் ஸ்ரீமதி சரோஜினி தேவியும் அவரைத்தொடரந்து விண்ணுலகம் சென்றார் அன்றோ?

பிரதம சிகிச்சையில் பயிற்சி பெற்றுப் பரீட்சையிலும் தேறியவர்களுக்கு இராணுவ டிரில் பயிற்சி அளிக்குமாறு கர்னல் பேக்கர் என்பவர் நியமிக்கப் பட்டார். இவர் தேவைக்கு அதிகமாகவே இந்தியர்கள் மீது அதிகாரம் செலுத்தத் தொடங்கினார்.தென்னாப்பிரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்கு வந்து பாரிஸ்டர் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்த ஸ்ரீ ஸோராப்ஜி அதாஜானியா என்பவர் இது விஷயமாக மகாத்தமாவுக்கு ஆரம்பத்திலேயே எச்சரிக்கை செய்தார். "இந்த அதிகாரி நம்மீது தர்பார் நடத்தப் பார்க்கிறார். அர்த்தமற்ற உத்தரவுகளைப் போடுகிறார். இவர் செலுத்தும் தர்பார் ஒருபுறமிருக்க, இவர் தமக்கு உதவியாக நியமித்துக்கொண்டிருக்கும் ஆங்கில இளைஞர்களும் தங்களை எஜமானர்கள் என்று எண்ணிக்கொண்டு நம்மைக் கேவலமாக நடத்துகிறார்கள். இந்த அதிகார தட புடலை எங்களால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது!" என்று சொன்னார். ஆயினும் அவரைப் பொறுமையாக இருக்கும்படியும் கர்னல் பேக்கரிடம் நம்பிக்கை வைக்கும்படியும் காந்தி மகாத்மா கேட்டுக் கொண்டார்.

"இப்படித்தான் நீங்கள் நம்பிக்கை வைத்து வைத்து ஏமாந்துபோகிறீர்கள். இதனால் உங்களுக்கும் எங்களுக்கும் கஷ்டத்தைத் தேடித்தருகிறீர்கள்!" என்றார் அதாஜானியா. அவர் சொன்னது உண்மை என்று சீக்கிரத்தில் ஏற்பட்டு விட்டது. கர்னல் பேக்கரின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகமாகி வந்தது. அவர் 'கார்ப்போரல்'களாக நியமித்திருந்த ஆக்ஸ்போர்டு மாணாக்கர்களும் போட்டி போட்டுக்கொண்டு அதிகாரம் செலுத்தினார்கள். இந்தியர்களுடைய சுய மரியாதைக்குப் பங்கம் நேரும் நிலைமை ஏற்பட்டு விட்டது.

இதன் பேரில் மகாத்மா மேற்படி தலைமை அதிகாரியிடம் போய் இந்தியர்களுடைய கருத்தைத் தெரிநவித்தார்.
"என்னிடம் நேரே நீங்கள் வந்து புகார் சோல்லக்கூடாது. நான் நியமித்திருக்கும் 'கார்ப்போரல்'களிடம் முதலில் புகார் சொல்லவேண்டும். அதுவும் அவரவர்களே புகார் சொல்ல வேண்டுமே தவிர, நீங்கள் மற்றவர்களுக்காகப் பேசக்கூடாது" என்றார் கர்னல் பேக்கர்.

மகாத்மா திடுக்கிட்டார். எனினும் நிதானமாகத் தமது கட்சியை எடுத்துரைத்தார். "இந்தியர்களைச் சைன்ய சேவைக் காகத் திரட்டியவன் நான்தான். ஆகையால் அவர்களுக்காக நான் பேசுவதற்கு அநுமதி கொடுக்கவேண்டும். எங்களுடைய சம்மதம் கேட்காமல் 'கார்ப்போரல்'களை நீங்கள் நியமித்திருக்கிறீர்கள். இது சரியல்ல. அவர்களை அனுப்பிவிட்டு எங்களுக்குள்ளேயே சில படைத் தலைவர்களை நியமிப்பது தான் முறை" என்று கூறினார்.

கர்னல் பேக்கருக்கு மகாத்மாவின் யோசனை பிடிக்கவில்லை. அவருக்குக் கோபம் வந்து விட்டது. "நான் நியமித்த 'கார்ப்போரல்'களை விலக்க வேண்டும் என்றா சொல்கிறீர்?" அது இராணுவக் கட்டுப்பாட்டுக்கு விரோதம்!" என்று கடுமையாகப் பேசினார்.

காந்திஜி தமது தென்னாப்பிரிக்கா அநுபவத்தைச் சுட்டிக் காட்டினார். அங்கே இந்தியப்படைக்குத் தாமே தலைவராயிருந்ததை எடுத்துச் சொன்னார். அது ஒன்றும் கர்னல் பேக்கரின் காதில் ஏறவில்லை.

இதன்பேரில் இந்தியர்கள் கூட்டம் போட்டுச் சைன்ய சேவையிலிருந்து விலகிக்கொன்வது என்று தீர்மானித்தார்கள். இது இராணுவக் கட்டுப்பாட்டுக்கு விரோதமான காரியமாதலால்அதன் பலாபலன்களை மகாத்மா நன்கு எடுத்துச் சொன்னார். இந்த விஷயமாகச் சத்தியாக்கிரஹம் செய்யவேண்டியிருக்கும் என்றும் இராணுவத் தண்டனைக்கு உள்ளாக வேண்டியிருக்கும் என்றும் கூறினார். அதற்கெல்லாம் தாங்கள் தயார் என்று இந்தியர்கள் சொன்னார்கள்.

பின்னர் காந்திஜி தமது வழக்கமான முறையை அநுசரித்து இந்தியா மந்திரி லார்ட் குரூவுக்குக் கடிதம் எழுதினார். அதற்கு லார்ட் குரூ எழுதிய பதில் வழவழ முறையில் அமைந்திருந்தது.

"தென்னாப்பிரிக்கா நிலைமைக்கும் இவ்விடத்து நிலைமைக்கும் வித்தியாசம் உண்டு. படைப் பிரிவுத் தலைவர்களை மேலதிகாரிதான் நியமிக்க வேண்டும். ஆயினும் இனிமேல் படைத் தலைவர்களை நியமிக்கும்போது உங்களைக் கலந்து கொண்டு நியமிக்கும்படி செய்கிறேன் " என்று இந்தியா மந்திரி தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் மகாத்மா காந்தி பாரிச வாயுவினால் பீடிக்கப்பட்டுப் படுத்த படுக்கையானார். அவர் படுத்திருந்த சமயத்தில் இந்திய சைன்ய சேவைப் படையில் பிளவு ஏற்பட்டு விட்டது. ஒரு பகுதியினர் அதிகாரிகளுடன் சண்டை போடுவதில் பயனில்லை என்று தீர்மானித்துச் சைன்ய சேவை செய்ய இணங்கினார்கள். அச்சமயத்திலா நெட்லி என்னும் இடத்திற்குக் காயமடைந்த போர்வீரர்கள் ஏராளமாக வந்திருந்தார்கள். அவர்களுக்குச் சேவை புரிய ஆள் தேவையாயிருந்தது. சேவை செய்ய இணங்கிய இந்தியர்கள் அந்த இடத்துக்கு அனுப்பப் பட்டார்கள்.

நோயாளியாகப் படுத்திருந்த காந்திஜியைப் பார்ப்பதற்கு உதவி இந்தியா மந்திரி ராபர்ட்ஸ் பலமுறை வந்தார். சேவைக்குப் போகாமல் பின்தங்கிய இந்தியர்களையும் சேவை செய்யப் போகச் சொல்லும்படி காந்திஜியைக் கேட்டுக் கொண்டார். அவர்களுடைய சுயமரியாதைக்குப் பங்கம் எதுவும் நேராது என்று உறுதி கூறினார். அதன் பேரில் காந்திஜி பின் தங்கியவர்களையும் சேவைக்குப் போகும்படி சொன்னார். அவர்களையும் நெட்டிலிக்குப் போனார்கள். ஆனால் மகாத்மா மட்டும் உடல் நோய் காரணமாகப் போக முடியவில்லை.

( தொடரும் )
====

தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி

'கல்கி’ கட்டுரைகள்
[  நன்றி: : http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0385_01.html  ]

கருத்துகள் இல்லை: