சனி, 6 ஜூலை, 2019

1319. பாடலும் படமும் - 70

இராமாவதாரம் 

[ ஓவியம்: எஸ்.ராஜம் ]
அருணகிரிநாதர்  இராமாயணக் குறிப்புகள் கொடுக்கும் பற்பல பாடல்களில் இருந்து ஒரு காட்டு :

ஆலகாலம்” என்று தொடங்கும் திருப்புகழில் இராமாயணச் சுருக்கத்தையே கொடுக்கிறார்.

மேலை வானொரு ரைத்தச ரற்கொரு
     பால னாகியு தித்தொர்மு நிக்கொரு
          வேள்வி காவல்ந டத்திய கற்குரு ...... அடியாலே

மேவி யேமிதி லைச்சிலை செற்றுமின்
     மாது தோள்தழு விப்பதி புக்கிட
          வேறு தாயட விக்குள்வி டுத்தபி ...... னவனோடே

ஞால மாதொடு புக்கவ னத்தினில்
     வாழும் வாலிப டக்கணை தொட்டவ
          னாடி ராவண னைச்செகு வித்தவன்

மேலை வானொர் உரைத் தசரற்கு ஒரு பாலனாகி உதித்து
ஒர் முநிக்கு ஒரு வேள்வி காவல் நடத்தி அ(க்) கற்கு உரு
அடியாலே மேவியே ... மேல் உலகத்தில் உள்ள தேவர்கள் புகழ்ந்த
தசரதற்கு ஒரு குழந்தையாகப் பிறந்து, ஒப்பற்ற விசுவாமித்திர
முனிவருக்கு ஒரு யாகத்தில் காவல் புரிந்து, அந்த கல்லைத்
திருவடியினால் (மிதித்துப்) பழைய வடிவத்தை (அகலிகை)
எய்தும்படிச் செய்து,

மிதிலைச் சிலை செற்று மின் மாது தோள் தழுவிப் பதி
புக்கிட வேறு தாய் அடவிக்குள் விடுத்த பின்னவனோடே
ஞால மாதொடு புக்கு ... மிதிலையில் சனகர் முன் (சிவதனுசு என்ற)
வில்லை முறித்து ஒளி பொருந்திய சீதையை மணம் புரிந்து அயோத்தி
நகருக்குத் திரும்பி வந்து, மாற்றாந் தாயாகிய கைகேயி காட்டுக்குள்
போகும்படிச் செய்ய, தம்பியாகிய இலக்குவனுடன் பூதேவி மகளாம்
சீதையோடு சென்று,

அ(வ்)வனத்தினில் வாழும் வாலி படக் கணை தொட்டவன்
நாடி ராவணனைச் செகுவித்தவன் ... அந்தக்
காட்டில் வாழ்ந்த வாலி இறக்கும்படி அம்பைச் செலுத்தியவனும்,
தேடிச் சென்று இராவணனை அழித்தவனுமாகிய ராமன்


திருமங்கை ஆழ்வாரின் பாசுரம் இதோ:

வைய மெல்லா முடன்வணங்க 
  வணங்கா மன்ன னாய்த்தோன்றி,
வெய்ய சீற்றக் கடியிலங்கை 
  குடிகொண் டோட வெஞ்சமத்து,
செய்த வெம்போர் நம்பரனைச் 
  செழுந்தண் கானல் மணநாறும்,
கைதை வேலிக் கண்ணபுரத்து 
  அடியேன் கண்டு கொண்டேனே.


உரை:


உலகமெல்லாம் ஒருமைப்பட்டு திருவடிகளில் விழுந்துவணங்க
தான் ஒருவரையும் வணங்க வேண்டும்படியிராத ராஜாதிராஜனாய் (இராமபிரானாய்) திருவவதரித்து கடுமையான சீற்றத்தையுடையதும்
அரண்களையுடையதுமான இலங்காபுரியிலுள்ளவர்கள்
குடும்பத்தோடும் (யமலோகத்திற்கு) ஓடிச் செல்லும்படியாக
வெவ்விய போர்க்களத்தில் கடுமையான யுத்தத்தை நடத்தின
எம்பெருமானை,அழகிய குளிர்ந்த நெய்தல் நிலத்தையுடையதும்
பரிமளம்மிக்க தாழைகளை வேலியாகவுடையதுமான
திருக்கண்ணபுரத்திலே அடியேன் கண்டுகொண்டேன்.


தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

கருத்துகள் இல்லை: