ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020

1474. கதம்பம் - 6

சிவகவிமணி, சி. கே., சுப்பிரமணிய முதலியார். (சம்பந்த சரணாலயர்)
முனைவர் மு, பழனியப்பன்



பிப்ரவரி 20சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பிறந்த நாள்.
===========

தெய்வச் சேக்கிழார் தந்த திருத்தொண்டர் புராணத்திற்கு( பெரிய புராணத்திற்கு) மிக விரிவான உரையைத் தந்தவர். இவருடைய உரை ஏழு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. ஒவ்வொரு தொகுதியும் கடல் போல் கருத்துக்கள் நிரம்பியன. வேறு எந்த இந்திய மொழிகளில் இத்துணைப் பெரிய விரிவுரை இதுவரை வெளியாகவில்லை என்பதே இவரின் உரைக்குக் கிடைத்த பெருமையாகும். பெரியபுராணத்தினை பெருங்காப்பியம் என்று அரிதியிட்டு உரைத்தவர். பெரியபுராணத்தின் கதைத்தலைவர் சுந்தரர் என்றும், கதைத் தலைவியர் பரவையார், சங்கிலியார் என்றும் முதன் முதலாகத் தம் உரைநூலில் தக்க சான்றுகளோடு குறித்தவர். திருத்தொண்டர் புராணத்தைத் தன் வாழ்க்கை நூலாகக் கொண்டவர். அடிப்படையில் இவர் ஒரு வழக்கறிஞர். வழக்கு மன்றப் பணிகளோடு சைவப் பணிகளையும் தமிழ்ப் பணிகளையும் அயாராது ஆற்றி வந்தவர். இவரது உரையின் சிறப்பு அது தற்கால நடைமுறைக்கு ஏற்றவகையில் அமைக்கப் பெற்றிருப்பது தான். இந்த நூலைத் தவிர பல நூல்களையும் இவர்¢ படைத்தளித்துள்ளார். சைவ இலக்கியங்களுக்கு தகுந்த உரையாசிரியர் அமையவில்லை என்ற குறை இவரால் நீங்கியது.

வாழ்க்கை
சுப்பிரமணிய முதலியார் ஆயிரத்து எண்ணூற்று எழுபத்தெட்டாம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் இருபதாம் நாள் பிறந்தவர். இவருடைய பெற்றோர் பன்னூலாசிரியர் வித்வான் கந்தசாமி முதலியாரும், வடிவம்மையும் ஆவர். இவர் தொண்டை மண்டல மாங்காட்டிலிருந்து குடியேறிய கொண்டல் கட்டிக் குடியில் நெல்விளையார் மரபினைச் சார்ந்தவர்.

இவர் தனது கல்வியை கோயம்புத்தூரைச் சார்ந்த பகுதிகளில் தன் தொடக்கக் கல்விகளைக் கற்றுள்ளார். கோவைக் கல்லூரி வழியாக எப். ஏ, (F.A) பட்டத்தைப் பெற்றார். இதனையடுத்து பி.ஏ., (B.A), பி. எல்(B.L) ஆகிய பட்டங்களைச் சென்னையில் கற்றுப் பெற்றுள்ளார். பி.ஏ பட்டப்படிப்பில் தமிழ்ப் பாடத்தில் மாநில முதன்மையாராகத் தேர்வு பெற்றுத் தங்கப் பதக்கம் பெற்றார். இப்பொற்பதக்கத்தை இவர் திருப்பேரூர் கோயிலில் சேக்கிழாரின் ஐம்பொன் சிலை செய்து வைக்க விழைந்தபோது அச்சிலையில் தங்கம் சேர்க்கப் பெற வேண்டும் என்ற நிலை வந்தபோது அதற்காக அளித்துவிட்டார். இதன்வழி இவரின் பொருளை மிஞ்சிய சைவப் பணி தெரியவருகிறது.

இதன்பின் வழக்கறிஞராகக் கோயம்புத்தூரில் பணியாற்றினார். வழக்கறிஞர் பணியிலும் இவர் சிறந்து விளங்கினார். விடுதலைப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரம் பிள்ளையின் சிறைக் கொடுமைகளை நீதிமன்றத்தில் தக்கவகையில் எடுத்துரைத்து அவரின் வழக்கை விசாரணைக்குக் கொண்டு வந்த பெருமை இவருக்கு உரியது. இந்தச் செயல் காரணமாக வ. உ. சிதம்பரம் பிள்ளை தன் மகனுக்கும் மகளுக்கும் இவர் பெயரையும் இவரின் மனைவி பெயரையும் இட்டார். இது போன்று பல வழக்குகளில் உண்மை நிலைக்க இவர் வாதாடினார்.

முறையாகக் கல்வி பயிலும் காலத்திலேயே இவருக்கு பெரியபுராணக் கல்வியும் வாய்த்துள்ளது. இவர் தன் பதினாறாம் வயதில் சு. திருச்சிற்றம்பலம் என்ற தமிழாசிரியர் வாயிலாகப் பெரியபுராணக் கல்வியைப் பெற்றார். அதன்பின் கயப்பாக்கம் சாதாசிவ செட்டியாரிடம் இவரது பெரியபுராணக் கல்வி வளர்ந்தது. கயப்பாக்கம் சாதாசிவ செட்டியார் கோயம்புத்தூரில் சில காலம் தங்கிப் பெரியபுராண உரை ஆற்றியபோது அவருக்குக் கையேடு படிக்கும்படியான ஒரு பணி சுப்பிரமணிய முதலியாருக்குக் கிடைத்தது. இது அன்னாரின் பெரியபுராண ஆர்வத்தை மேலும் தூண்டியது. இதன் தொடர்வாய் சுப்பிரமணிய முதலியார் நாள்தோறும் பன்னிருதிருமுறைப் பாராயணம் செய்து வரும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். இவ்வழக்கத்தின் காரணமாக பெரியபுராண செய்திகளையும், திருமுறைச் செய்திகளையும் இணைத்து அவர் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது.

மேலும் அக்காலத்தில் வாழ்ந்த சைவச் சான்றோர்களான திருப்பாதிரிப்புலியூர் சண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரியார், பண்டிதமணி கதிரேசன் செட்டியார், ந. மு. வேங்கடசாமி நாட்டார் முதலியவர்களுடன் கலந்து பழகும் வாய்ப்¢பும் அவர்களின் பெரியபுராண உரைகளைக் கேட்கும் வாய்ப்பும் இவருக்கு ஏற்பட்டது. இவை பிற்காலத்தில் பெரியபுராண உரை எழுதப் புகுந்தபோது இவருக்குப் பேருதவி புரிந்தன.

இவரின் தமிழ்ப் பணி இவரின் வாழ்வோடு என்றும் கலந்தே வந்துள்ளது. இவர் கோவைத் தமிழ்ச் சங்கம் கண்டவர். தேவாரப் பாடசாலை வைத்து நடத்தியவர். சேக்கிழார் திருக்கூட்டம் என்ற அமைப்பினையும் ஏற்படுத்தியவர். சென்னைப் பல்கலைக் கழக தமிழ் மொழி ஆணையராகப் பணியாற்றியவர். பல தமிழ் நூல்களைத் தந்தவர். மேலும் இவர் சமுதாயப் பணிகளையும் செய்து வந்தார். கோயம்புத்தூர்¢ நகர சபையின் உறுப்பினாராக அமைந்தும் இவர் சிறந்துள்ளார்.

இவரின் நூல்கள்
கவிதை நூல்கள்
 அவிநாசி கருணாம்பிகை பிள்ளைத்தமி¢ழ்
 கந்தபுராணப் போற்றிக் கலிவெண்பா
 திருப்பேரூர் இரட்டை மணிமாலை
உரைநடை நூல்கள்
 மாணிக்கவாசகர் (அ) நீத்தார் பெருமை
 வாகீசர் (அ) மெய்யுணர்தல்
 கருவூர்த்தேவர்
 சேக்கிழாரும் சேயிழையார்களும்
 சேக்கிழார்
 செம்மணித்திரள்
 அர்த்த நாரீஸ்வரர் (அ) மாதிருக்கும் பாதியான்
 தி¢ருத்தொண்டர் புராணத்துள் முருகன்
உரை நூல்
 திருத்தொண்டர் புராணத்திற்கான விரிவான உரை

பெற்ற பட்டங்கள்
இவருக்குச் சிவகவிமணி என்ற பட்டத்தை சென்னை மாகாண தமிழ்ச் சங்கம் அளித்தது. திருமறை ஞான பானு என்ற பட்டம் மதுரை ஆதினத்தாரால் வழங்கப் பெற்றது.
இல்லறம்
இவருக்கு இரு மனைவியர். ஒரு மனைவி பெயர் மீனாட்சி. மற்றவர் பெயர் அறியமுடியவில்லை. இவருக்கு ஒரு மகளார் உள்ளார். அவரும் அவர் கணவரும் தற்போது கோவைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் இவரின் உரைகளை மறுபதிப்பு செய்துள்ளனர். இல்லற வாழ்வின் வெற்றி விழாக்களாக தன் அறுபதாண்டு நிறைவு விழா, எழுபதாண்டு நிறைவு விழா ஆகியவற்றை முறையே திருக்கடவூர், திருப்பேரூர் ஆகிய இடங்களில் நடத்தினார்.

துறவறம்
இல்லற வாழ்வின் போதே சைவ நெறிக்கு ஏற்ப இவர் சிதம்பரம் முத்துக் குமாரக் குருக்களிடம் சிவ தீக்கை பெற்றார். இல்லற வாழ்வின் பிற்காலத்தில் இவர் அகத்துறவியாக வாழ்ந்தார். வாழ்வின் நிறைநிலையில் மதுரை ஆதீனத்தின் வழியாகப் புறத்துறவும் ஏற்றார். துறவு வாழ்வு மேற்கொண்டதும் இவர் சம்பந்த சரணாலயத் தம்பிரான் என்று ஞானப் பெயர் பெற்றார். 24. 01.1961ல் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

இவரின் பெரியபுராண உரைச் சிறப்புகள்
பெரியபுராண உரை வரலாறு
பெரியபுராணத்திற்கு முதலில் வசனம் எழுதுதல், அதனைத் தொடர்ந்து குறிப்புரை சூசனம் எழுதுதல், பொழிப்புரை எழுதுதல் என்ற படிநிலைகளைக் கடந்தே விரிவான உரை தோற்றம் பெற்றுது. தொழுவூர் வேலாயுதம் முதலியார், ஆறுமுகநாவலர், திரு, வி. கல்யாண சுந்தரனார் முதலானோர் மேற்சொன்ன முயற்சிகளில் முறையே ஈடுபட்ட குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இதன் முடிநிலையாகச் சுப்பிரமணிய முதலியாரின் உரை அமைகிறது.

சுப்பிரமணிய முதலியாரின் உரைமுயற்சி
சுப்பிரமணிய முதலியார் பல ஏட்டுப்பிரதிகளையும், கையெழுத்துப் பிரதிகளையும், உரைப்பிரதிகளையும் ஒருங்கிணைத்து உரை செய்யப் புகுந்துள்ளார். இவரின் பெரியபுராண உரை எழுதும் பணி ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்தைந்தாம் ஆண்டில் தொடங்கப் பெற்றது. பல இடையூறுகளைக் கடந்த 13. 7. 1948 ஆம் நாள் முடிவு பெற்றது. இது எழுத்துப்பணி மட்டுமே. வெளியிடும் அச்சுப்பணியையும் துணிவுடன் இவரே செய்துள்ளார். கோவைத்தமிழ்ச் சங்கத்தின் சார்பாக இவ்வுரை 15.9.1937ல் முதன்முதலாக முதல்¢தொகுதி வெளியிடப் பெற்றது. பெரியபுராண நிறைவு உரைப்பகுதி 6.5.1954ல் வெளியிடப் பெற்றது. அதாவது பதிமூன்று ஆண்டுகள் உரையெழுதும் பணியும் பதினேழு ஆண்டுகள் அதனை அச்சாக்கும் பணியும் நடைபெற்றுள்ளன. ஒரு தனிமனிதரின் வாழ்வில் ஏறக்குறைய இருபது ஆண்டுகாலம் பெரியபுராணத்திற்கும் உரைசெய்யும் பணி நிகழ்ந்திருப்பது மிகப் பெரிய சாதனைதான்.

சுப்பிரமணிய முதலியாரின் உரை அமைப்பு
சுப்பிரமணிய முதலியார் சருக்கம், புராணம் இவற்றை விளக்கியபின் பெரிய புராணப் பாடல்களுக்கு உரை செய்யப் புகுவார்.

சேக்கிழார் வகுத்த சருக்கத்தின் அமைப்பினை சருக்கப் பெயர்க்காரணம், சருக்க நிகழ்வுச் சுருக்கம், சருக்க அளவு என்ற மூன்று நிலைகளாகப் பிரித்துக் கொண்டு இவர் உரை கண்டுள்ளார்.

இதுபோலவே புராணத்தினையும் அதன் பெயர்க்காரணம், புராண நிகழ்வுச் சுருக்கம், புராண அளவு என்ற மூநிலைகளில் விளக்குவார்.

இதன்பின் மூலபாடத்தின் செய்யுள் ஒன்றன்பின் ஒன்றாக அமைக்கப் பெறும். இதனைத் தொடர்ந்து பாடலின் பொருள் பாடல் எண் தரப்பெற்று 1. இதன் பொருள், 2. விளக்கவுரை என்ற இரு அமைப்புகள் வழியாகச் சொல்லப் பெறும்.

ஒன்றுக்கு மேற்பட்ட பாடல்கள் ஒரே கருத்து முடிவைப் பெற்றிருக்குமானால் அந்த பாடல்கள் முதலில் இடம்பெறும். அதன்பின் பாடல் எண்கள் தரப்பெற்று அந்தப்பாடல்கள் அனைத்திற்கும் இதன்பொருள் தரப்பெறும். அதன்பின் இதே அமைப்¤ல் விளக்கவுரை தரப் பெறும்.

பாடலுக்கான எண்கள் தொடர் எண்களாகத் தரப் பெற்றுள்ளன. உலகெலாம் எனத் தொடங்கும் முதல் பாடல் ‘1’ என்ற எண்ணில் தொடங்குகிறது. உலகெலாம் என நிறைவு பெறும் பாடல் ‘4286’ என்ற எண்ணில் முடிவு பெறுகிறது. இது தவிர புராணத்திற்¢கு உரிய எண்கள் தமிழ் எண்களாகவும் தரப் பெற்றுள்ளன.

ஒரு புராணப் பாடல்கள் அனைத்திற்கும் பொருள் கண்டபின் புராணம் முடிவுறும் தருவாயில் புராணத் தொகுப்புரை என்ற ஒன்றைச் சுப்பிரமணிய முதலியார் கற்பனை என்ற தலைப்பின் கீழ் அமைத்துள்ளார். இத்தொகுப்புரையி¢ல்¢ அப்புராணத்தின் வழியாகச் அறிந்து கொண்ட நாயன்மாரின் வாழ்வை ஒட்டிய கருத்துக்களைத் தொகுத்து உரைக்கிறார். இத்தொகுப்புரையைப் படித்தாலே புராணத்தைப் படித்த முழுநிறைவு கிடைத்துவிடுகிறது. இக்கற்பனைப் பகுதி குறித்து ” கற்பனை என்ற தலைப்பின் கீழ் அவ்வவ் புராணங்களினின்றும் நாம் அறிந்து கொள்ளக் கூடிய உண்மைகளை என் சிறிய அறிவுக்கு உட்பட்ட குறிப்புகளைக் குறித்துள்ளேன். அவை அவ்வப் புராணங்களில் ஆராய்ச்சியைத் தூண்டி மக்களை நல்வழிப் படுத்துமென்று நம்புகிறேன்” (சி. கே. சுப்பிரமணிய முதலியார் (உ. ஆ), திருத்தொண்டர் புராணம், முன்னுரை, ப.15) என்று கருத்துரைக்கிறார் சுப்பிரமணிய முதலியார்.

மேலும் இவரது உரையில் நன்னூல் கூறும் உரைப் பகுதிகளான பாடங்காட்டல், கருத்துரை, சொல்வகை, சொற்பொருள், தொகுத்துரை, உதாரணம், வினா, விடை, விசேடம், விரிவு, அதிகார வரவு காட்டல், துணிவு, பயன், ஆசிரிய வசனம் முதலான அனைத்தையும் பெற்றுள்ளன.

இவை தவிர சேக்கிழார் கவிநலம் காட்டல், பழமொழிகளைப் பயன்படுத்தல், பிறரது உரைகளை ஒப்புமை காட்டல், ஒரு கருத்தை விளக்க அதன் சார்பாய் மூன்று விளக்கங்களை பொருத்தமுற அமைத்தல், பாத்திரப் பண்புகளை எடுத்துரைத்தல், முரண்பாடு எழும் போது அதனை மூல நூலுக்குக் குறைவராதபடி காத்தல், இடைச் செருகல் பாடல்களைத் தக்க காரணம் காட்டி விலக்கல், பதிகத்தின் இடமாறுபாடு குறி¢த்துச் சரியான முடிவை எடுத்தல், பெரியபுராணத்தில் சுட்டப் பெறும் திருமுறைப் பதிகத்தினை தக்க இடத்தில் பதிகத்தின் முதல் பாடலையும்¢ இறுதிப்பாடலையும் அதன் பொருளோடு தருதல் , பெரியபுராண காலத்தில் இருந்துத் தற்போது மறைந்து போன இடங்களைக் கண்டறிந்து தருதல், பெரியபுராணத்தில் கூறப் பெறும் தலத்தைப் பற்றிய செய்திகளை தற்கால நிலைப்படி விளக்கல், தக்கப் புகைப் படங்களைத் தருதல், அப்பர், சம்பர்ந்தர் ஆகிய அருளாளர்கள் சென்ற வழித்தடத்தை நில வரைபடமாகத் தருதல் ஆகிய சிறப்புப் பண்புகள் இவரின் உரையில் உள்ளன.

மேலும் இவரது உரை இலக்கியப்புலமை, சாத்திர நூல் புலமை, இலக்கணப் புலமை, இசைப்புலமை, வழக்கு விவாதப் புலமை, சூழலியல் அறிவு, பிற சமய அறிவு, ஆங்கில மொழி அறிவு, அறிவியல் அறிவு, பழக்க வழக்கங்களின் முறைமை மரபு பற்றிய அறிவு ஆகியன கொண்டதாகும்.

இவற்றைச் சுப்பிரமணிய முதலியாரின் உரைநெறிகளாகக் கொள்ளலாம். அவரின் உரைப் பகுதிகள் சில பின்வருமாறு.

பெரியபுராணம் பெருங்காப்பியமே
”இது ஒரு பெருங்காப்பியம்; அங்ஙனமின்றி பல சரிதங்கள் சேர்ந்த ஒரு கோவை எனச் சிலர் எண்ணுவர். அது சரியன்று. சுந்தரமூர்த்திகளைத் தலைவராகவும், பரவையார் சங்கிலியார் என்ற இருவரையும் தலைவியராகவும் கொண்ட அவர்கள் கயிலையிலிருந்து ஒரு காரணம் பற்றிப் பூவுலக்தில் அவதரித்து, உலகத்தார்க்கு அறம், பொருள், இன்பம், வீடுஎன்ற நான்கு உறுதிப் பொருள்களையும் காட்டி, உணர்த்தி, உய்வித்து மீளவும் திருக்கயிலை சேர்¢ந்தார்கள் என்பது காப்பியத்தின் உட்பொருள். இதில் தலைவன் தலைவியர் கூட்டம், பிரிவு முதலிய அகப் பொருளும், போர் முதலிய புறப் பொருளும் சூரியன் உதயம் அத்தமணம் ஆகிய பொழுதின் சிறப்புகளும் பெரும் பொழுது சிறுபொழுது முதலிய பகுப்புகளும் இன்னும் பெருங்காப்பிய உறுப்புகள் முற்றும் சிறப்பாய் அறியக் கிடக்கும்”(சி. கே. சுப்பிரமணிய முதலியார் (உ. ஆ), திருத்தொண்டர் புராணம், பாயிரம் .2)

இவ்வுரைப்பகுதி வழியாக பெரியபுராணம் ஒரு பெருங்காப்பியம் என்று எள்ளளவும் சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவப்படுகிறது. மேலும் தண்டியலங்காரம் குறிப்பிடும் பெருங்காப்பிய இலக்கணம் இங்கு அடிப்படையாகப் போற்றப் பெற்றிருப்பதும் கவனிக்கத் தக்கது.

தற்கால நிகழ்வை இணைக்கும் உரைப்பாங்கு

” சில ஆண்டுகளின் முன் ஒரு சிறுவன் ஆற்றுமடுவில் முதலையினால் விழுங்கப்பட்டு அதன் வயிற்றுக்குள் போயினான். ஆனால் உயிர் நீங்கவில்லை. அங்கு அவ்வயிறு பெரியதொரு வளைவாகிய குகைபோலப் புலப்பட அவன் அதன் உட்புறத்தைத் தன் கை நகங்களினாலும், தன்னிடமிருந்ததொரு சிறு கத்தியாலும் பிறாண்ட அதற்கு வேதனையுண்டாகினமையின் முதலை அவளை மீளக் கொண்ரந்து (கக்கி) உமிழ்ந்துவிட்டது. உணர்வற்ற நிலையில் கிடந்த அவனைச் சிலர் கண்டு எடுத்து உபசரிக்க அவன் உயிர்பிழைத்தான். அவன் சொல்லிய வரலாறு இது. அவன் உடலில் முதலையின் பற்களால் முதலை விழுங்கிய போதும், பற்றும் போதும் உளவாகிய கீறல் புண்கள் மட்டுமே கண்டன. அவை நாளடைவில் ஆறிவிட்டன என்பது. இச்செய்தி பத்திரிக்கைகளிலும் வெளிவந்தது” என்ற பகுதி சுந்தரரின் முதலை உண்ட பாலகனை மீட்ட இடத்தில் உரையாசிரியரால் காட்டப் பெறுகிறது. பத்திரிக்கை செய்தி என்று அதனைப் புறந்தள்ளிவிடாமல் அதனைத் தக்கசான்றாக காட்டியுள்ள சுப்பிரமணிய முதலியாரின் உரைப் பாங்கு பாரட்டற்குரியது.

சேக்கிழார் கவிநலம் காட்டும் உரை
சேக்கிழார் பரவையாரிடம் தூதாகச் சென்றபோது அது முதன்முறை பலன் தராது போயிற்று. எனவே அவர்¢ மறுமுறையும் தூது போகவேண்டியவர் ஆனார். இச்சூழலில் முதல் தூதினைப் பாதித்தூதாக் கருதிச் சேக்கிழார் பின்வரும் பாடலைப் படைத்துள்ளார்.

பாதி மதிவாழ் முடியாரைப் பயில் பூசனையின் பணிபுரியும்
பாதியிரவி லிங்கணைந்த தென்னோ? னென்ற பயமெய்தி
பாதியுமையாடிரு வுருவிற் பரமராவதியறியாரோ
பாதிமதி வாணுதலாரும் பதைத்து வந்து கடை திறந்தார் ” (3493)

இப்பாடலுக்குச் சுப்பிரமணிய முதலியார் தரும் உரை பின்வருமாறு.
”இந்நிலையில் இறைவரது தூது பாதிப்பயனுடன் நின்ற மீண்டும் வருதலுடன் முழுப்பயனும் தந்து நிறைவானது என்று குறிப்பு தர இப்பாட்டில் பாதி என்று நான்கடியிலும் எதுகை வைத்துச் சொற்பொருட் பின்வரும் நிலையில் அருளிய கவிநலமும் கண்டு கொள்க” (சி. கே. சுப்பிரமணிய முதலியார் (உ. ஆ), திருத்தொண்டர் புராணம், ஆறாம் பகுதி ப,383) என்ற உரைப்பகுதியில் சேக்கிழார் படைத்தார் என்பதைக் கூறவந்த ஆசிரியர்¢ அருளிய கவி நலம் தந்திருப்பதன் மூலம் இவர் எவ்வளவு மதிப்பை மூல நூல் ஆசிரியரிடம் வைத்திருந்தார் என்பது தெரியவருகிறது. இந்த முறைமை தற்போது உரைகாணும் பெருமக்கள் பின்பற்றவேண்டிய ஒன்று.

இவ்வாறு விரிக்க விரிக்கப் பொருள் செறிவும், இலக்கிய நயமும், உரைவிரிவும் கொண்டது சுப்பிரமணிய முதலியாரின் உரை. இதன்வழியாக சைவஉலகம் பெறற் கரிய பேற்றைப் பெற்றது என்பதில் ஐயமில்லை.

சுப்பிரமணிய முதலியாரின் பிறபடைப்புகள் ஒரு கண்ணோட்டம்
இவரின் நூல்களுள் சிறப்பானது சேக்கிழார் என்ற நூலாகும். இது சென்னைப் பல்கலைக் கழகத்தில் 1930 ஆம் ஆண்டு இவர் நிகழ்¢த்திய பொழிவின் பதிவாகும். இப்பொழிவு பல்கலைக்கழக அனுமதியுடன் பின்னர் நூல்வடிவம் பெற்றது. இந்நூலே இவரைப் பெரியபுராண உரை செய்யத் தூண்டியதாக இவர் குறிப்பிடுகிறார். இதனுள் சேக்கிழாரின் கவிச்சிறப்பும், அவரின் அருள் உள்ளமும், பக்திப் பெருமையும் சுட்டப் பெறுகிறது.

சேக்கிழாரும் சேயிழையாரும் என்ற மற்றொரு நூல் பக்க அளவில் சிறியதாயினும் பொருள் அளவில் சீரியது. பெண்களைப் புறக்கணித்த சமுதாயத் தொடர் ஒட்டத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய சேக்கிழாரின் செந்நெறியை உலகிற்குக் காட்டியது இந்நூல்.

இதுபோன்று இவரின் அனைத்து நூல்களும் செம்மை வாய்ந்தன. அவை மறுபதிப்பு செய்யப் பெறவேண்டும். இதன்வழி சைவ உலகம் மேன்மேலும் சிறக்கும். இதற்கான முயற்சிகளில் அனைவரும் இறங்கவேண்டும்.



{  நன்றி : https://old.thinnai.com/?p=60701182   ]

தொடர்புள்ள பதிவுகள்:

கதம்பம்

கருத்துகள் இல்லை: