வியாழன், 27 பிப்ரவரி, 2020

1478. கதம்பம் - 8

சர்தார் அ. வேதரத்தினம் 




பிப்ரவரி 25. சர்தார் வேதரத்தினத்தின் பிறந்த தினம்.
=====

வேதரத்தினம் என்ற பெயரைக் கேட்டமாத்திரத்தில், வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகம் நினைவுக்கு வரும். ராஜாஜி நினைவுக்கு வருவார். கடுமையான தியாகமும், முரட்டு கதர் உடையும் நம் நினைவுக்கு வரும். அது மட்டுமா? வேதாரண்யத்தில் சிறப்பாக நடைபெற்று வரும் ‘கஸ்தூரிபா காந்தி கன்னியா குருகுலம்’ நம் நினைவுக்கு வரும். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்கி அவர் காலமான அறுபதுகள் வரை, வேதரத்தினம் பிள்ளையின் பெயர் சொல்லாமல் எந்த காங்கிரஸ் இயக்கமும் தமிழ்நாட்டில் இல்லை எனலாம். அந்த அளவுக்கு அவர் தன்னை காங்கிரஸ் இயக்கத்தோடு இணைத்துக் கொண்டவர், பொதுநலத்துக்காக சொத்து, சுகம் அனைத்தையும் இழந்து தியாகசீலராக விளங்கியவர். அவரது வரலாற்றை இப்போது சுருக்கமாகப் பார்ப்போம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடற்கரை கிராமமான வேதாரண்யம் இவரது ஊர். இவரது தந்தையார் அப்பாகுட்டி பிள்ளை என்பவர். உப்பு சத்தியாக்கிரகம் உச்ச கட்டத்தில் நடந்து கொண்டிருந்த போது, இவரது உடமைகளுக்கும் ஆபத்து வந்து, இவர் கைது செய்யப்படப்போகிறார் என்ற நிலையில் அவ்வூர் மாஜிஸ்டிரேட் ஒருவர் 90 வயதைக் கடந்த முதியவர் அப்பாக்குட்டி பிள்ளையிடம் வந்து, “ஐயா! நீங்களோ பெரிய குடும்பத்தில் வந்தவர். கெளரவமான குடும்பம். உங்கள் மகன் தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கடிதம் கொடுத்து விட்டால், அவர் மீது எந்த வழக்கும் வராமல் நான் பார்த்துக் கொள்ளுகிறேன்” என்றார். அதற்கு அந்த முதிய தேசபக்தர் என்ன சொன்னார் தெரியுமா? எப்படியாவது தனது மகன் ஜெயிலுக்குப் போகாமல் தப்பி, சொத்துக்களும் பறிமுதல் ஆகாமல் போனால் சரி, கேவலம் ஒரு மன்னிப்புக் கடிதம் தானே, கொடுத்துவிடலாம் என்றா எண்ணினார். இல்லை. இல்லவே இல்லை. அவர் சொன்னார், “என் மகன் வேதரத்தினம் உங்களிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்பதிலும், அவன் சிறைக்குச் செல்வதையே நான் விரும்புவேன்” என்றார். அந்த முதியவரின் தேசப்பற்றுக்கு எதனை உவமை கூற முடியும்? அப்படிப்பட்ட தியாக பரம்பரையில் பல தலைமுறைகளுக்கு முந்தி உதித்தவர் தாயுமானவ சுவாமிகள். இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா? தாயுமானவர் கோயில் கொண்டுள்ள திருச்சியில் உப்பு சத்தியாக்கிரகம் தொடங்கியது. தாயுமானவரின் குலவாரிசுகள் வாழும் வேதாரண்யத்தில் முடிவடைந்தது. இதனை முன்னின்று நடத்தியவரும் தாயுமானவ சுவாமிகளின் வாரிசுதான். என்ன ஒற்றுமை.

சர்தார் வேதரத்தினம் தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவராக பல ஆண்டுகள் இருந்திருக்கிறார். 1929இல் வேதாரண்யத்தில் தமிழ் மாகாண காங்கிரஸ் மகாநாட்டை சர்தார் வல்லபாய் படேலை அழைத்து வந்து ராஜாஜி முன்னிலையில் வெற்றிகரமாக நடத்தினார். இவர் விரல் அசைந்தால் தஞ்சாவூர் மாவட்டம் அசையும் நிலை அன்று இருந்தது. இவ்வளவுக்கும் இம்மாவட்ட நிலப்பிரபுக்கள் அனைவரும் ஆங்கிலேயர்களின் ஆதரவாளர்களாகவும், நிலமற்ற ஏழை விவசாயக் கூலிகள் கம்யூனிஸ்ட் ஆதிக்கத்தின் கீழ் ஓர் வர்க்கப் புரட்சியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், நடுத்தர மக்கள் மட்டுமே தஞ்சை மாவட்ட சுந்ததிரப் போரில் பங்கு கொண்டார்கள். அவர்களுக்குத் தலைமை வகித்தவர் சர்தார் வேதரத்தினம் பிள்ளை.


இவர் சென்னை சட்டசபைக்கு 1952இல் மன்னார்குடி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957இல் திருத்துறைப்பூண்டி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டார். 1961இல் சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருந்த போது இவர் பேசிக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பு வந்து, உடல் நலம் கெட்டு இறந்து போனார். இவர் உடல் வேதாரண்யம் கொண்டு வரப்பட்டு கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலத்தில் இறுதி அஞ்சலி செய்யப்பட்டது. இவரது சமாதியை இன்றும் அங்கு பல்லாயிரக்கணக்கானோர் சென்று பார்த்து வழிபட்டு மரியாதை செய்கின்றனர். வாழ்க சர்தார் வேதரத்தினம் பிள்ளை புகழ்!

முழுக்கட்டுரையையும் படிக்க :
https://tamizhagathiyagigal.pressbooks.com/chapter/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/

'கல்கி'  1952-இல் ' கன்யா குருகுல'த்தைப் பற்றி எழுதிய கட்டுரை இதோ:






[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
தொடர்புள்ள பதிவுகள்:

கதம்பம்

வேதரத்தினம் பிள்ளை : விக்கிப்பீடியா

கருத்துகள் இல்லை: