புதன், 7 டிசம்பர், 2011

கல்கி -1 : இராஜாம்பாள் ; நூல் மதிப்புரை

இராஜாம்பாள் ; நூல் மதிப்புரை
கல்கி 




ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஜே.ஆர். ரங்கராஜு ஆகிய மூவரைத் துப்பறியும் நாவல்களின் ”முன்னோடி மும்மூர்த்திகள்” என்றே சொல்லலாம்.

இவர்களைப் பற்றி நாரண. துரைக்கண்ணன் ஒரு ‘கலைமகள்’ கட்டுரையில் சொல்கிறார்:

“ ஆங்கில நாவல்களை ஆரணியார் நேராக மொழி பெயர்த்துத் தந்தார். ஐயங்கார் அந்நாவல்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு தம் கற்பனைகளையும் சேர்த்து வருணனைகளைப் புகுத்தித் தம் சொந்தச் சரக்குப் போலத் தரமுயன்றார். ரங்கராஜு அவற்றைத் துப்பறியும் கதைகளாக மாற்றிக் கொடுத்தார்” 

ஜே.ஆர்.ரங்கராஜு ( 1875-1959) வின் முழுப் பெயர்: ஜெகதாபி ரகுபதி ரங்கராஜு.
இவருடைய ‘இராஜாம்பாள்’ நாவலைப் பற்றிக் ‘கல்கி’ எழுதிய மதிப்புரையைக் கீழே காணலாம்:


நூல் : இராஜாம்பாள்
ஆசிரியர் : ஜே.ஆர். ரங்கராஜு


'மோசம் போனேன்...' என்னும் தலைப்பில் கல்கி எழுதிய நூல் மதிப்புரை


''நான் யார்? என்ற விசாரணையில் இறங்கிய வேதாந்திகள் அதிலிருந்து மறுபடி வெளிக்கிளம்புவதே யில்லையென்று கேள்விப்பட்டிருக்கிறோம் - அதாவது உண்ட உணவு ஜீரணமாகும்வரையில் பசி வந்ததோ இல்லையோ, வேதாந்த சித்தாந்தங்கள் எல்லாம் பறந்து போய் ''நான் கேவலம் ஒரு வேளைப் பசி தாங்கமுடியாத ஒர் அற்பப் பிராணி'' என்ற ஞானம் அவர்களுக்கு உண்டாகிறது. உடனே பக்கத்திலுள்ள ''பிராமணாள் கிளப்''பில் நுழைந்து ''முக்கால் சேர் காப்பி கொண்டா!'' என்று கதறுகிறார்கள். ''நான் யார்?'' என்ற வேதாந்த விசாரணை ஒரு புறமிருக்க, ''பதினைந்து வருஷத்திற்கு முன்பிருந்த நான் யார்? இப்போதுள்ள நான் யார்? இருவரும் ஒன்று தானா? வேறு வேறு ஆசாமிகளா? என்ற சந்தேகம் நம்மெல்லாரையும் சிலசில சமயம் பிடித்துக் கொள்கிறதல்லவா?


அந்தக் காலத்திலே நாம் செய்த சில காரியங்களை நினைத்துக் கொண்டால் நமக்கே சிரிப்பு, சிரிப்பாய் வருகிறது. அப்போது நாம் ரஸித்த விஷயங்களெல்லாம் இப்போது சுத்த அசட்டுத்தனமாய்த் தோன்றுகின்றன. அப்போது நினைத்தாலே வெட்கமாயிருக்கிறது. நமக்கு மட்டுந்தான் இது என்பதில்லை. பெரிய பெரிய மனிதர்களுடைய சமாசாரங்கூட இப்படித்தான்.

இன்றைய தினம் நாம் உலக சிரேஷ்டர் என்று கொண்டாடி பயபக்தி விசுவாசத்துடன் வரவேற்கும் மகாத்மா காந்தியை எடுத்துக் கொள்வோம். அவர் ஒரு மாதத்துக் குழந்தையாயிருந்தபோது அவருடைய வீட்டில் நடந்திருக்கக் கூடிய ஒரு சம்பவத்தைக் கவனிக்கலாம்.

தாயார் குழந்தையைத் தொட்டிலில் இட்டு, அண்ணணைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டுச் சமையலறையில் காரியமா யிருக்கிறாள். அண்ணன் திடீரென்று ''அம்மா! ஒடி வா! ஒடி வா! ஓர் அதிசயம்!'' என்று கத்துகிறான். அந்த கூச்சலைக் கேட்டு அம்மா, அப்பா எல்லாரும் ஓடி வருகிறார்கள்.

''என்னடா அதிசயம்?''

''குழந்தை வாயில் விரல் போட்டிண்டிருக்கு, அம்மா!'' அவ்வளவுதான்; ஒரே அமர்க்களம் . ''ஆமாம்; போட்டிண்டிருக்கு, போட்டிண்டிருக்கு!'' என்று அம்மா குதிக்கிறாள்; அப்பா கூத்தாடுகிறார்.

மெதுவாகக் கட்டை விரலை வாயிலிருந்து எடுக்கிறார்கள். குழந்தை 'வீல்' என்று கத்துகிறது. மறுபடியும் போடுகிறார்கள். அழுகை நின்று விடுகிறது.

அந்தக் கட்டை விரலில் அப்படி என்னதான் ருசியிருக்குமோ?

அது அந்தக்காலம்! இப்போது வேண்டுமானால், யாராவது காந்திஜியைப் பேட்டி கண்டு அந்த நாளை ஞாபகப்படுத்தி, ''தங்கள் கைக் கட்டை விரலில் ஏதாவது தேன், கீன் ஊறுகின்றதா?'' என்று கேட்டுப் பாருங்கள். பொக்கை வாய் சிரிப்பைத் தவிர வேறு பதில் கிடைக்காது.

எல்லாருடைய விஷயமும் இப்படித்தான். அந்தக் காலத்தில் நமக்கிருந்த ருசிகள் எல்லாம் இப்பொழுது மாறிவிட்டன.

அப்போது நாம் பாட்டிகளிடம் கேட்ட ''ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு இராஜாவாம்'' என்று தொடங்கும் கதைகள் நமக்குப் பரமானந்தம் அளித்தன. காக்கை, நரி, கழுதைகளின் கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்தால் சாப்பாட்டு நினைவுகூட இருப்பதில்லை. இப்போதோ 'விகட'னில் சிறுவர் பகுதிப் பக்கங்களை அப்படியே புரட்டித் தள்ளிவிட்டு மேலே படிக்கிறோம்.

அப்போது கேட்டு அநுபவித்த பாட்டுக்கள் எல்லாம் இப்போது சுத்த அபத்தமாய்த் தோன்றுகின்றன. அந்நாளில் இரவெல்லாம் கண் விழித்து படித்த புத்தகங்களோ? கடவுளே! இப்போது கூலி கொடுத்துப் படிக்கச் சொன்னால் கூடப் படிக்க மாட்டோம்!

ஆகவே, பதினைந்து வருஷத்துக்கு முந்தியிருந்த ''நானும்'' இப்போதுள்ள ''நானும்'' ஒரே ஆசாமிதானா என்ற சந்தேகம் எனக்கு மிகவும் பலமாக உண்டு. இதனால்தான் 'இராஜாம்பாள்' என்னும் நாவலின் 26ஆம் பதிப்பு மதிப்புரைக்காக வந்து மூன்று மாதத்துக்கு மேலாகியும் அதை எடுத்துப் படிப்பதற்குப் பயப்பட்டுக் கொண்டிருந்தேன்.

நமது வாழ்நாளில் என்ன என்ன விஷயங்கள் மனதில் ஆழ்ந்து பதிகின்றனவோ அவைதாம் அந்திம காலத்தில் மனதில் தோன்றும் என்று சொல்கிறார்கள். காலஞ்சென்ற கோபாலகிருஷ்ண கோகலே மரணத் தறுவாயிலிருந்த போது ''பகவானை நினையுங்கள்'' என்று பக்கத்திலிருந்தவர்கள் சொன்னார்களாம். அவர் ஆன மட்டும் முயற்சி செய்து பார்த்துவிட்டுக் கடைசியில் ''என்ன செய்வேன்? கண்ணை மூடினால் இந்தியாவின் பொருளாதாரம் சம்பந்தமான புள்ளி விவரங்களும், அரசியல் அமைப்பு விதிகளும், சட்டங்களும், சட்ட நுட்பங்களுத்தான் மனதின் முன் நிற்கின்றன. என்ன முயன்றாலும் பகவான் நினைவு வரவில்லை'' என்றாராம்.

இதுபோலவே என்னுடைய அந்திம நாளில் மனதில் தோன்றும் விஷயங்களுக்குள் ''மோசம் போனேன், கோபாலா! என்னைச் சுடலை மாடன் கோவில் தெரு 29வது நம்பர் வீட்டிலுள்ள குதிரில்...'' என்னும் வாக்கியம் முதன்மையாக இருக்குமென்று நம்புகிறேன்.

சென்னைப் பட்டணத்திலிருந்து எங்கள் கிராமத்துக்கு வந்த ஒருவர் ''இராஜாம்பாள்'' என்னும் துப்பறியும் நாவலைக் கொண்டு வந்தார். அவர் அதைப் படித்து முடிக்கும் வரையில் பக்கத்திலேயே காத்திருந்து அவரிடமிருந்து புத்தகத்தை வாங்கிக் கொண்டேன். அன்றிரவு புகைந்து கொண்டிருந்த சிம்னி விளக்கின் வெளிச்சத்தில் புத்தகத்தை ஒரே மூச்சாகப் படித்து முடித்து இரவு சுமார் மூன்று மணிக்குத் தூங்கச் சென்றது இன்னும் எனக்கு ஞாபகமிருக்கிறது.


மறுநாள் பொழுது விடிந்ததும் மறுபடியும் ஒரு தடவை அடியிலிருந்து கடைசிவரையில் படித்து முடித்தேன். புத்தகத்தைப் பற்றி அப்போது நான் கொண்ட அபிப்பிராயம் என்னவென்பதை உடனே என் நண்பனிடம் தெரிவித்தேன். அது என்னவென்றால், ''இதோ பார், முத்து! இந்த மாதிரி புத்தகம் தினம் ஒன்று மட்டும் என்னிடம் கொடுத்துவிட்டால் வாழ்க்கையில் எனக்கு வேறொன்றும் வேண்டாம். 'ராபின்ஸன் க்ரூஸோ'வைப் போல் தனியாக ஒரு தீவில் கொண்டு போய் விட்டுவிட்டால் ரொம்ப சந்தோஷமாக இருப்பேன்'' என்றேன்.

'பாரிஸ்டர் கொக்குதுரை' என்ற பெயரைப் படித்தபோது என்ன சிரிப்பு வந்தது? வக்கீல் துரைசாமி அய்யங்கார் கொக்குதுரையை மண்டையிலடித்துப் பேசிய போதெல்லாம் எவ்வளவு பெருமையாக இருந்தது? இராஜாம்பாள் கொலையுண்ட செய்தி எவ்வளவு திடுக்கிடச் செய்தது? கடைசியில் அவளைக் கோவிந்தன் உயிரோடு கொண்டு வந்து சேர்த்ததும் என்ன ஆச்சரியம், என்ன சந்தோஷம்! அந்த சமயத்தில் ஏதோ ஒரு தேர்தல் நடந்து துப்பறியும் கோவிந்தனும், லோகமான்ய திலகரும் அத்தேர்தலில் போட்டியிட்டார்களானால் துப்பறியும் கோவிந்தனுக்கே என்னுடைய வோட்டைக் கொடுத்திருப்பேன்!

இளம் பிராயத்தில் இவ்வளவு தூரம் எனது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட புஸ்தகம் இப்போது மற்றும் பலவற்றைப் போல் ரஸமற்றதாய்த் தோன்றப் போகிறதே என்ற பயத்தினால்தான் அதைப் படிப்பதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன். இரண்டு, மூன்று தடவை ஞாபகப்படுத்தப்பட்ட பின்னர் எடுத்துப் படித்த போது மேற்சொன்ன பயத்துக்கு அதிக காரணமில்லை யென்றறிந்து பெருமூச்சு விட்டேன்.

மேனாட்டில் ஆசிரியர்கள் அற்புதமான நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதுகிறார்களென்றும், தமிழ்நாட்டில் அவ்வாறு எழுதக் கூடியவர்கள் இல்லையென்றும் சிலர் அடிக்கடி சொல்வதைக் கேட்கிறோம். மேனாட்டு ஆசிரியர்கள் மகா கெட்டிக்காரர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களைத் தமிழ்நாட்டில் கொண்டு வந்து விட்டுக் கதை எழுதச் சொல்ல வேண்டும். அப்போது தெரியும் அவர்கள் கெட்டிக்காரத்தனமெல்லாம், முழிமுழியென்று முழிப்பார்கள்.

சுமார் ஒரு வருஷ காலத்திற்குப் பிறகு சென்ற வாரத்தில் மேனாட்டு மாத சஞ்சிகை யொன்றை நான் படித்தேன். அதில் மொத்தம் பத்துச் சிறுகதைகள் வெளியாகி இருக்கின்றன. அவற்றுள் எட்டுக் கதைகள் காதலை அடிப்படையாகக் கொண்டவை. அவைகளின் சாராம்சத்தைக் கீழே தருகிறேன்.

1. ஐம்பது வயதான மனிதன் ஒருவன் வாலிபனைப் போல் குதூகலமுள்ளவனாயிருக்கிறான்; ஓர் இளம் பெண்ணுக்கும் அவனுக்கும் இடையே நேசம் உண்டாகிறது; அம்மனிதனுடைய சொந்த மனைவி இதை அறிந்தாள். அவனுக்குச் சில சமயம் காச நோய் வருவதுண்டு; சில அபத்தியமான காரியங்களைச் செய்து அந்தப் பெண்ணின் முன்னிலையில் தன் புருஷனுக்கு காசம் வருமாறு செய்கிறாள். அப்போது அவன் ஒரு நோயாளிக் கிழவன் என்பதை அவ்விளம்பெண் உணருகிறாள். அத்துடன் அவர்கள் காதல் முடிகிறது.

2. மனைவியை இழந்த ஒரு கணவன் தனது குழந்தையைச் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் விடுகிறான். அக்குழந்தைக்குச் சிகிச்சை செய்த 'நர்ஸி'ன் மேல் அவன் காதல் கொண்டு முடிவில் அவளைக் கலியாணம் செய்து கொள்கிறான்.

3. இரண்டு இளைஞர்கள். ஒரு பெண். அவர்களில் ஒருவன் அந்தப் பெண்ணைப் பற்றி விளையாட்டாகப் பரிகசித்து எழுதியதை மற்றவன் எழுதியதாக அந்தப் பெண் எண்ணிக் கொண்டு அவன் மேல் காதல் கொண்டிருந்தும், தன்னிடம் வர வேண்டாமென்று சொல்லி விடுகிறாள். தன் தகப்பனாருடைய தூண்டுதலால் மற்றொருவனைக் கலியாணம் செய்து கொள்ள இசைகிறாள். கலியாணம் நடப்பதற்குக் கொஞ்சம் முன்னால் அவளுக்கு உண்மை தெரிந்து பழைய காதலனையே மணந்து கொள்கிறாள்.

4. வட துருவப் பிரதேசங்களில் ஸர்வே செய்வதற்காக ஒரு கப்பல் போகிறது. அங்கே எஸ்கிமோப் பெண் ஒருத்தியின் காதல் காரணமாக ஒரு கொலை நடக்கிறது.

5. ஒரு ஹோட்டல்காரனுடைய வளர்ப்புப் பெண்ணை டம்பாச்சாரி ஒருவன் இச்சிக்கிறான். அவளை அடைவதற்காக அந்த ஹோட்டல்காரன் மீது பொய்யான கொலைக்குற்றம் சாட்டுகிறான். பெண் தன் தந்தையைக் காப்பாற்றுவதற்காக அவனுக்கு இணங்கச் சம்மதிக்கிறாள். கடைசி நேரத்தில் உண்மைக் குற்றவாளி வெளிப்பட்டு டம்பாச்சாரிக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது.

6. உலக வாழ்க்கையில் வெறுப்புக் கொண்ட ஒரு பத்திராதிபரிடம் கையெழுத்துப் பிரதியுடன் ஓர் இளம்பெண் வருகிறாள். இருவரும் காதல் கொண்டு எகாந்தமான ஒரு காட்டுப் பிரதேசத்திற்குப் போய் வசிக்கிறார்கள். அங்கே ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட கைதியொருவன் அவர்களுடைய குடிசையில் வந்து சரணாகதி அடைகிறான்; பெண் அவனுக்கு அபயமளிக்கிறாள்; புருஷன் அவன் மீது பொறாமை கொண்டு போலீஸ்காரரிடம் காட்டிக் கொடுத்து விடுகிறான். அந்தப் பெண், கைதியைப் பின் தொடர்ந்து சென்று சிறைக்கு வெளியே இருந்து வேண்டிய உதவி செய்து வருகிறாள். கடைசியில் அவன் இறந்த பிறகு புருஷனிடம் வந்து சேருகிறாள்.

7. ஷாங்காயில் அமெரிக்கத் தூதர் நடத்திய விருந்துக்குப் பிரிட்டிஷ் தூதரின் காரியதரிசி கழுத்தில் கருப்புச் சுருக்குடன் போய் விடுகிறான். அதன் பலனாகப் பெரிய தகராறு ஏற்பட்டு விடுகிறது. கடைசியில் அவனுடைய காதலியான அமெரிக்க தூதரின் பெண் சிபார்சினால் சமரசம் ஏற்படுகிறது.

8. கடைகளில் வேலை செய்த சில பெண்கள் சில இளைஞர்களுடன் விடுமுறை நாளைக் கழித்துவர பிரயாணம் செய்கிறார்கள். எல்லாரிலும் சாதுவான ஒருத்தியைச் சமைக்கச் செய்யச் சொல்லிவிட்டு மற்றவர்கள் ஆற்றில் படகோட்டிக் கொண்டு செல்கிறார்கள். எல்லாரும் போன பிறகு அங்கு ஒரு இளைஞன் வந்து சேருகிறான். அவனும் சமையலுக்கு விடப்பட்ட பெண்ணும் காதல் கொண்டு கல்யாணம் செய்து கொள்கிறார்கள்.

இவ்வளவு கதைகளும் மேனாட்டாரின் சமூக வாழ்க்கைக்கு முற்றும் பொருத்தமாகவும், இயற்கையாகவும் காணப்படுகின்றன. இதே விதமாக ஆங்கில பாஷையில் மாதந்தோறும் ஆயிரக்கணக்கான கதைகளும் நாவல்களும் எழுதப்படுகின்றன. அவைகளில் மிகப் பெரும்பாலானவை காதல் சம்பவங்களே.

தமிழ்நாட்டில் நல்ல கதைகள் எழுதப்படவில்லையென்றால் எங்கிருந்து எழுதுவது?

வரதக்ஷணையின் கொடுமை, சிறு பெண்ணைக் கிழவன் கலியாணம் செய்து கொள்வது, பால்ய விதவையின் துயரங்கள் - இவைகளைப் பற்றியே திரும்பத் திரும்ப நமது நாட்டில் கதைகளும், நாவல்களும் எழுதப்படுகின்றனவென்றால் அதற்கு யார் என்ன செய்யலாம்?

நமது சமூக வாழ்க்கை காதல் கதைகளும், நாவல்களும் எழுதுவதற்குப் பொருத்தமானதாய் இல்லையென்பது உண்மை. (இது நல்லதா, கெடுதலா என்பது வேறு விஷயம்)

இத்தகைய சாரமற்ற சமூக வாழ்வை ஆதாரமாக வைத்துக் கொண்டு ஸ்ரீமான் ரங்கராஜு இவ்வளவு ருசிகரமான நாவலை எப்படி சிருஷ்டித்தார் என்று எனக்குள்ள ஆச்சரியத்தைச் சொல்லி முடியாது. இதை உத்தேசிக்கும் போது இந்த நாவலில் பொருத்தமற்றதாகக் காணப்படும் சில விஷயங்களைப் பெரிதாகக் கருதக் கூடாதென்று தோன்றுகிறது.

இந்த நாவலின் கதாநாயகியாகிய இராஜாம்பாள் இப்போதுதான் வயது பன்னிரெண்டு பூர்த்தியாகி பதின்மூன்றாவது வயதில் இருப்பவள். அவளுடைய பேச்சும், சிந்தனையும், செய்கைகளும் பதின்மூன்று வயதுப் பெண்ணுக்க உரியவைகளாவென்ற சந்தேகம் இந்தத் தடவை படித்தபோது எனக்கு ஏற்பட்டது. அவ்வாறே கோபாலனைக் காதலிக்கும் லோகநாயகி, கொலையுண்ட தாஸி பாலாம்பாள் இவர்களுடைய செய்கைகளெல்லாம் நடக்கக் கூடியனவா என்ற சந்தேகத்தை உண்டு பண்ணுகின்றன. ஆனால் இப்படியெல்லாம் பார்த்தால் பின்னர் நாவல்தான் எப்படி எழுதுகிறது?

ஸ்ரீமான் ரங்கராஜு மிகுந்த தாராள மனதுடையவரென்பதில் சந்தேகமில்லை. அவருடைய கதாபாத்திரங்களெல்லாம் கோடீஸ்வரார்களாகவும், லக்ஷாதிபதிகளாகவும் இருக்கின்றனர். சாமிநாத சாஸ்திரிகள் தம்முடைய மைத்துனன் நடேச சாஸ்திரிக்கு அறுபது லக்ஷம் ரூபாய் பெறுமான கிராமங்களையும், தம் மகள் இராஜாம்பாளுக்கு மற்றோர் அறுபது லக்ஷம் ரூபாய் பெறுமான கிராமங்களையும் உயில் எழுதி வைக்கிறார். 'அர்பத்நாட் பாங்கி' யில் ('அர்பத்நாட் பாங்க்' என்று வெள்ளைக்காரர்கள் நடத்திய ஒரு பிரபலமான வங்கி அந்த நாட்களில் சென்னையில் இருந்தது. அது திவாலானதும், அதில் பணம் போட்டிருந்த பலர் தெருவுக்கு வந்ததும் அந்த நாளைய 'தலைப்புச் செய்தி) வேறு அவருக்கு ரொக்கம் இருக்கிறது. நீலமேக சாஸ்திரிகள் தம்முடைய கல்யாணத்திற்குப் பூர்வாங்கமான ஏற்பாடுகளில் ஐந்து லக்ஷம் ரூபாய் செலவு செய்கிறார். லோக சுந்தரியின் சொத்துக்குக் கணக்கு வழக்கே இல்லையென்று தோன்றுகிறது.

ஸ்ரீமான் ரங்கராஜுவின் தமிழ்நடை பேசும் நடை; எனவே உயிருள்ள நடை. அவருடைய நாவல்கள் தமிழ் மக்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதற்கு இது ஒரு முக்கிய காரணமென்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் ஒரு நெருடல். இராஜாம்பாளின் வாய் மொழியாக அவர் பின்வரும் வாக்கியத்தை அமைத்திருக்கிறார்.

''ஜோஸ்யர்களுடைய வார்த்தையை லக்ஷ்யம் செய்யாமல், என் தகப்பனார் பொருத்தமில்லாவிட்டாலும் தங்களுக்கே என்னைக் கலியாணஞ் செய்து கொடுப்பேனென்று சொன்னவுடனே, நீலமேக சாஸ்திரியும் இராமண்ணாவும் யோசனை செய்து, போலீஸ் புலியாகிய மணவாள நாயுடுவுக்குப் பலமாய் லஞ்சங் கொடுத்துத் திருட்டு நகையை எங்கள் வீட்டில் கொண்டு வந்து வைத்து, எனது தகப்பனாரைப் பிடித்த பிடியிலேயே போலீஸ் ஸ்டேஜனில் அடைத்து அவர் பயப்படும்படியான வகைகளெல்லாம் செய்து, கடைசியில் இராமண்ணாவையும் உள்ளேவிட்டு, நயத்திலும் பயத்திலும் என்னை நீலமேக சாஸ்திரிக்குக் கலியாணஞ் செய்து கொடுப்பதாக என் தகப்பனாரை வாக்களிக்கும்படி சொல்ல, அவர் தம் பிராணன் போனாலும் அப்படிச் செய்ய மாட்டேனென்று சொன்னதின் பேரில், தங்களைப் பிடித்து ஜெயிலில் அடைக்க உத்தேசித்திருப்பதாகவும், நீலமேக சாஸ்திரி இன்னும் மூன்று தினங்களில் அவர் ஹிம்சைப்படுத்தி அநியாயமாய் ஜெயிலுக்கு அனுப்பிய ஓர் கைதியினால் கொல்லப் படுவாரென்றும் இராமண்ணா பிரமாணமாய்ச் சொன்னதின் பேரில், என் தகப்பனார் நீலமேக சாஸ்திரிக்கு என்னைக் கலியாணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாதென்னும் எண்ணத்தைக் கொண்டு வாக்களித்ததாகவும் என்னிடம் சொன்னார்.''

இதைப் படித்தபோது, இப்படிப் பேசியது உயிரும், இரத்தமும், தசையும் உள்ள ஒரு பெண்ணா அல்லது 'ரோபோ' என்று மனிதனைப் போலவே பேசிக் காரியமும் செய்யும் புதிய இயந்திரம் கண்டுபிடித்திருப்பதாய்ச் சொல்லுகிறார்களே, அதுவா என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதிலும் இந்த வாக்கியம் இராஜாம்பாள் கோபாலனிடம் சொன்னதாக கோபாலன் கோவிந்தனிடம் சொல்வதில் காணப்படுகிறது. எனவே, இந்த கோபாலன் என்பவன் உண்மை மனிதனா, 'ஹம்பக்' பேர்வழியா என்னும் சந்தேகம் உதயமாயிற்று. ஆனால் இவையெல்லாம் சில்லரை விஷயங்கள். முக்கியமான அம்சத்தில், அதாவது கதையின் சுவையைப் பொருத்தவரை அந்தக் காலத்தில் நான் கொண்ட அபிப்பிராயமே இப்போதும் ஊர்ஜிதமாயிற்று. அன்று போலவே இன்றும் ஒரே மூச்சில் புத்தகத்தைப் படித்து முடித்தேன். புத்தகத்தைக் கீழே வைத்ததும் அடுத்த முறை காஞ்சீபுரம் போனால் கோபாலனையும், இராஜாம்பாளையும், பேரன் பேத்திகளை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் சாமிநாத சாஸ்திரிகளையும் பார்த்துவிட்டு வரவேண்டுமென்று தோன்றியது. அவர்களை ''ஆனந்த விகடன்'' இலவச ஜாப்தாவில் சேர்த்துப் பத்திரிகை அனுப்பலாமேயென்றும் எண்ணினேன்.

''இராஜாம்பாள்'' ஒரு ஜீவசக்தி வாய்ந்த நாவல் என்பதற்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?

-ஆனந்த விகடன், 17-12-1934
=================
[நன்றி:  http://www.appusami.com ]


தொடர்புள்ள பதிவுகள்;

கல்கி கட்டுரைகள்

கல்கியைப் பற்றி .

1)

இராஜாம்பாள் 1951-இல் திரைப்படமாக வெளிவந்தது. அதைப் பற்றி ராண்டார் கை ’ஹிந்து’வில் எழுதிய குறிப்புகளைக் கீழ்க்கண்ட கட்டுரையில் படிக்கலாம்.

இராஜாம்பாள் திரைப்படம்: 1951: ராண்டார் கையின் கட்டுரை

2)

ரங்கராஜுவின் ‘மோஹனசுந்தரம்’என்ற நாவலைப் பற்றிய ஒரு திறனாய்வைத் தமிழ் இணையப் பல்கலைக் கழகச் சுட்டியில் படிக்கலாம்.


மோஹனசுந்தரம்: கதைப் பாத்திரங்கள்


3 கருத்துகள்:

ப.கந்தசாமி சொன்னது…

ஓ, எல்லாவற்றையும் சாவகாசமாப் படிச்சு அசை போடணும். போடுவேன்.

ப.கந்தசாமி சொன்னது…

comment moderation இருக்கும்போது word verification உம் வேண்டுமா? கமென்ட் போடுவது சிரமமாயிருக்கிறது.

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி. அப்படி ஒன்று இருந்தது தெரியாது!இப்போது எடுத்து விட்டேன்!