வெள்ளி, 22 ஜூன், 2012

’சசி’ - 1 : பெயர் மாற்றம்!

பெயர் மாற்றம்!
சசி

ஆனந்த விகடனில் 40, 50 -களில் பல ஒரு பக்கக் கதைகளை எழுதியவர் ‘சசி’. ( இயற்பெயர்: எஸ்.ஆர்.வெங்கடராமன்). ‘ரமணி’ என்ற  பெயரிலும் ‘திண்ணைப் பேச்சு’ கட்டுரைகளை எழுதினார். 14 வருடங்கள் விகடனில் உதவி ஆசிரியராய்ப் பணி புரிந்த ‘சசி’  25 ஏப்ரல் 1956 இல் காலமானார்.

பள்ளியில் ஓர் ஆசிரியர் அவருடைய வகுப்பில் எங்களை ஒரு சிறு  நாடகம் போட  அனுமதிப்பார். அப்போது சசியின் கதையையோ, ‘குமுத’த்தில் வரும் கோமதி சுவாமிநாதனின் நாடகத்தையோ தான்  நாங்கள் நாடகமாக நடத்துவது உண்டு. இப்போது ’நகைச்சுவை’ மன்னர்களான இவர்களின் படைப்புகள் நூல்களாக இல்லை என்பது வருத்தத்திற்குரியது.

இதோ ஒரு ‘சசி’ கதை :
=======


''யாரோ உங்களைப் பார்க்க வந்திருக்காங்க, ஸார்! மிஸ் இந்திராவாம்; வேலை வேணுமாம், நம்ம ஆபீஸில்'' என்று பியூன் வந்து தெரிவித்ததும், மானேஜர் குண்டுராவ், ''ஐயையோ! ஒரு தடவை அனுபவப்பட்டது போதும்! இனிமேல் நம்ம ஆபீஸில் எந்த ஸ்திரீயையும் வேலைக்கு வைத்துக் கொள்ள முடியாது! 'மானேஜரை இப்போது பார்க்கமுடியாது' என்று அந்த அம்மாளிடம் சொல்லி அனுப்பு, போ!'' என்று உத்தரவிட்டார்.
ஆனால், அந்த உத்தரவைப் பியூன் நிறைவேற்றுவதற்கு முன்னமேயே மிஸ் இந்திரா, ''நமஸ்காரம்'' என்று கும்பிடு போட்டவாறு மானேஜர் அறைக்குள் நுழைந்து விட்டாள். ''எனக்கு உங்கள் ஆபீஸில் ஏதாவது வேலை கொடுத்தால் புண்ணியமாக இருக்கும், ஸார்! இங்கே ஒரு கிளார்க் வேலை காலியாக இருக்கிறதென்று கேள்விப்பட்டேன்...'' என்றாள்.
''காலியாக இருப்பதென்னவோ வாஸ்தவந்தான். ஆனால், ஸ்திரீகளை இந்த ஆபீஸில் வேலைக்கு வைத்துக்கொள்ள உத்தேசமில்லை'' என்று பதிலளித்தார் குண்டுராவ்.
''ஆண்களும் பெண்களும் சரிநிகர் சமானமாகவே வாழ வேண்டுமென்ற கொள்கை நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டு இருக்கும் இந்த நாளில், பெண்களுக்கு உங்கள் ஆபீஸில் வேலை இல்லை என்றால், அது நியாயமாக இருக்கிறதா, ஸார்? யோக்கியதை இல்லை என்றால் சரிதான்!''
''யோக்யதையைப் பற்றிப் பேசவில்லை. முன்பு ஒரு தடவை ஒரு ஸ்திரீயை கிளார்க் வேலையில் அமர்த்தியதால் நான் ரொம்பவும் அவஸ்தைப்பட்டுப் போனேன்!''
''ஒரு ஸ்திரீயால் அவஸ்தை ஏற்பட்டால், எல்லா ஸ்திரீகளாலுமே அம்மாதிரி அவஸ்தை ஏற் படும் என்று எப்படி நீங்கள் தீர்மானிக்கலாம்?''
''ஏது... நீ ரொம்பப் பிடிவாதக்காரியாக இருக்கிறாயே!''
''என்ன ஸார் செய்கிறது? வேலை அகப்படாமல் வெகு நாளாக திண்டாடிக்கொண்டுஇருக்கிறேன்!''
''சரி, ஒரு நிபந்தனைக்கு நீ உட்பட்டால், போனால் போகிறது என்று உனக்கு நான் வேலை கொடுக்கிறேன்.''
''என்ன நிபந்தனை, ஸார்?''
''உன் பெயரை அலமேலு என்று மாற்றிக்கொள்ளச் சம்மதமா, சொல்!''
''எதனால் அவ்வாறு சொல்கி றீர்கள் என்று தெரியவில்லையே! 'இந்திரா' என்ற பெயர் நன்றாக இல்லையா?''
''நீ இவ்வளவு தர்க்கம் செய்வதால் உண்மையைக் கூறிவிடுகிறேன். தூக்கத்தில்கூட நான் ஆபீஸ் விஷயங்களையே நினைத்துக்கொண்டிருப்பவன். அவற்றைப் பற்றியே கனவுகளும் காண்பது வழக்கம்!''
''சரி, அதனால் என்ன?''
''முன்பு ஒரு தடவை 'மங்களம்' என்று நான் தூக்கத்தில் பிதற்றி விட்டேன்! ஆபீஸில் மங்களம் என்று ஒரு கிளார்க் இருந்தாள். ஏதோ ஒரு வேலையைப்பற்றி அவளிடம் பேசுவதுபோல் கனவு கண்டிருக்கிறேன் போலிருக்கிறது! அந்தச் சமயத்தில் அந்தப் பெயரைக் கூப்பிட்டிருக்கிறேன்! அதைக் கவனித்துக் கொண்டிருந்திருக்கிறாள் என் சம்சாரம். 'யார் அந்த மங்களம்? அவளுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?' என்று பெரிய சண்டைக்கு ஆரம்பித்து விட்டாள்!''
''அடப் பாவமே!''
''என் சம்சாரத்தின் பெயர் அலமேலு. அந்தப் பெயரை நான் தூக்கத்தில் தட்டுக்கெட்டுப் பிதற்றினாலும், நான் கனவில்கூட அவளை நினைத்துக்கொண்டு இருப்பதாக எண்ணிச் சந்தோஷப்படுவாள்!''

[ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

சசியின் கதைகள்

9 கருத்துகள்:

'பசி'பரமசிவம் சொன்னது…

நானும் ’சசி’யைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

‘ஒரு பக்கக் கதைகள்’ என்னும் என் முனைவர் பட்ட ஆய்வு நூலில் அவரைக் குறிப்பிட்டிருக்கிறேன்.

அவருடைய ஒரு சுவையான ஒ.ப. கதையை வெளியிட்டதற்கு மிக்க நன்றி.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

உண்மையில் வித்தியாசமான கதைதான்.

Muthu சொன்னது…

50-60 களில் ஆனந்த விகடன் வார இதழ் ஒன்று 4 அணா என்பதாக நினவு. எங்கள் வீட்டில் சந்தா கட்டும் வழக்கம் கிடையாது. நடு நடுவில் வாங்குவது உண்டு. முடிவெட்டப் போகும்போது, படிப்பதும் இண்டு.

ஒரு சசி கதையில் ஒருவர் மற்றொருவரை ஏமாற்றுவார். அவரிடம் இருக்கும் ரூபாய் நோட்டுக்களின் எண்களைக் கேட்டு எழுதிக் கொள்வார். பிறகு போலீஸ்காரரைக் கூப்பிட்டு, மற்றவர் தன் பர்ஸைப் பறித்துவிட்டதாகவும், ஆதாரமாக தான் வைத்திருந்த ரூபாய் நோட்டு எண்கள் காட்ட முடியும் என்றும் கூறுவார்!

Pas S. Pasupathy சொன்னது…

முனைவர் பரமசிவம், T.Muralidharan, இன்னமுதம் :

உங்கள் வருகைக்கும், இடுகைக்கும் நன்றி.

மேலும் தேடி, வேறு ‘சசி’ கதைகளை இட முயல்கிறேன்.

இன்னம்பூரான் சொன்னது…

அவருடைய கதைகள் சில நினைவில் இருக்கின்றன, மங்கலாக. அவர் தானே அந்த 'அஸ்கா' வியாபார கதை எழுதினார்?

Pas S. Pasupathy சொன்னது…

'அஸ்கா’ வியாபாரம் ? எனக்கு நினைவில்லையே

Unknown சொன்னது…

Naanum oru Sasi rasikan.He was master of1 page stories with 'a twist in tail'like Oscar Wilde. 2 stories come to mind now.1.secret of success of 1 of 2 competing diary publishers as they cut prices(one leaves later pages unprinted as now one uses diary after a fewdays!2 a lucrative enterprise of karagoshappadai moving from one meeting to another providing clap service for a fee!! K.Balasubramanian

Pas S. Pasupathy சொன்னது…

Thanks, K Balasubramanian.

Pas S. Pasupathy சொன்னது…

Thanks, K Balasubramanian.