பேனா மன்னன்
எஸ். எஸ். வாசன்பேராசிரியர் கல்கி 1954-இல் மறைந்தவுடன், எஸ். எஸ். வாசன் விகடனில் ‘உபயகுசலோபரி’ என்ற தலைப்பில், தன் கையொப்பமுடன், நான்கு பக்கங்கள் கொண்ட ஒரு நீண்ட கட்டுரையை எழுதினார். அந்தக் கட்டுரையின் முதல் பக்கம் இதோ:
அந்தக் கட்டுரையின் சில பகுதிகள் மட்டும் கீழே உள்ளன:
பேனா மன்னன்
எஸ். எஸ். வாசன்
நேயர்களுக்கெல்லாம்
'கல்கி'க்கும்
ஆனந்தவிகடனுக்கும் பல ஆண்டுகளாக உள்ள உறவு நன்கு தெரியும். விகடனி லேதான்
முதன்முதலாகப் பெருவாரியான தமிழ் மக்கள் அவருடைய எழுத்தின் சுவையை
நுகர்ந்தார்கள்.
1928-ம் வருஷம் ஜூலை
மாதம், ஒரு நாள்
பரலி சு.நெல்லையப்ப பிள்ளை 'கல்கி'யுடன் கூட, ஒரு நன்கொடை
பற்றி என்னைக் காண வந்தார். அந்தச் சமயம் நெல்லையப்ப பிள்ளை 'கல்கி'யை எனக்கு
அறிமுகம் செய்வித்து, ''இவர் பெயர்
ரா.கிருஷ்ணமூர்த்தி. 'நவசக்தி'யில் 'தேனீ' என்ற புனை பெயருடன் கட்டுரைகள் எழுதி
வருகிறார். தங்கள் ஆனந்த விகடனுக்கும் எழுத வேணும் என்று விரும்புகிறார். கட்டுரை
அனுப்பினால் பிரசுரிக்கிறீர்களா?'' என்று கேட்டார். ''தாராளமாக'' என்று பதில்
சொன்னேன்.
அதன் பிறகு, 'ஏட்டிக்குப் போட்டி' என்ற தமது முதல் கட்டுரையை 'கல்கி' எனும் பெயரில்
எனக்குத் தபாலில் அனுப்பி வைத்தார். நான் அதை மூன்று நான்கு முறை திரும்பத்
திரும்பப் படித்து, ஹாஸ்யத்தை அனுபவித்து, விழுந்து விழுந்து சிரித்தேன். என்
தாயாருக்கும் படித்துக் காட்டினேன். அவரும் மிகவும் அனுபவித்துச் சிரித்தார்.
நாங்கள் அப்போது, 'இந்த மாதிரியும் தமிழில்
எழுத முடியுமா?' என்று ஆச்சர்யப்பட்டோம்.
அந்த நாளில், பண்டித நடையில் கடுமையான
தமிழிலேயே கட்டுரைகள் படித்து அனுபவப்பட்ட எங்களுக்கு, அந்தக் கட்டுரை ஓர் ஆச்சர்யமாக இருந்தது. 'கல்கி' என்ற பெயரில்
அவர் எழுதிய முதல் கட்டுரையும் அதுதான். அதையடுத்து, 'பூரி யாத்திரை' முதலான பல கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார்.
விகடனில் ஆசிரியர் பதவியை அவர் ஏற்ற பின்பே, மாதம் ஒரு இதழாக
இருந்த விகடன் இரண்டு மூன்று என்று வளர்ச்சி அடைந்து, வாரப் பத்திரிகையாகியது. ஏராளமான வாசக
நேயர்களும் ஏற்பட்டார்கள்.
விகடனை மேலும்
மேலும் ரஞ்சகமாக்கும் இலட்சியத்துடன் கலைவிமர்சனங்களை 'கர்நாடகம்' எனும்
புனைபெயரில் எழுதினார் 'கல்கி'. நுண்கலைகளில் ஈடுபட்டுள்ள வித்வான்கள் அவருடைய
புகழ்ச்சிக்கும் பாராட்டுக்கும் பாத்திரமாகத் தவறியதில்லை. பாடகரானாலும்
நடிகரானாலும் வேறெவ்வகையில் புனிதரானாலும் பொதுமக்களின் அறிமுகத்தை 'கல்கி'யின் பேனா
வாயிலாகச் செம்மையுடன் அவர்கள் பெற்றார்கள்.
வாரப்
பத்திரிகைக்கு நிரந்தரமான வாசகர்களை உண்டாக்கி விடத் தொடர்கதை என்பது ஓர்
இன்றியமையாத அங்கம் என்பதை அவருடைய முதல் நீண்ட தொடர் நாவல் 'தியாக பூமி' ஸ்தாபித்துவிட்டது.
இன்றைக்கும் எனக்கு நினைவிலிருக்கிறது... 'தியாக பூமி'யைப் படித்துவிட் டுத்தான் வெள்ளிக்கிழமை இரவு
படுப்பது என்று பிடிவாதமாகக் காத்திருக்கும் விரதம் கொள்ளும்படி செய்த முதல்
எழுத்தாளர் 'கல்கி'தான். தமிழ் நாடெங்கும், தமிழ் பேசும் மக்கள் வாழுமிடமெங்கும் 'தியாக பூமி' அன்று அடைந்த
செல்வாக்கு வேறெந்தத் தொடர்கதைக்கும் கிட்டியிருப்பதாகச் சொல்லமுடியாது.
சட்டசபை
நிகழ்ச்சிகளைக் கண்ணெதிரில் பார்ப்பது போல் தீட்டினார். அதுவரையில் ரஸமற்ற சட்டசபை
நடப்புகளைப் படித்த வாசகர்கள், ரஸபாவத்துடன், ஒரு மேதை அளிக்கும் ஜீவனுடன் 'கல்கி'யின் எழுத்துக்
களில் விவரங்களை வாசிக்க விரைந்தார்கள். தமிழ் இலக்கியத்திலே முதல்முறையாகப்
பிரயாணக் கட்டுரையில் 'கல்கி' சுவை காட்டினார். 'மாலி'யுடன் அவர் இலங்கைப் பிரயாணம் செய்து வந்ததை
மறக்கமுடியாது. ஆகாய விமானம் அந்த நாளிலே ஒரு புதுமை. இன்று ஒரு விமானத்தில் 50, 60 பிரயாணிகள் செல்வது சகஜம் எனினும், அப்போது 'கல்கி'யையும் 'மாலி'யையும் தவிர விமான ஓட்டிகளே இருந்தார்கள்! 'கல்கி'யின் கண்களின்
தீக்ஷண்யத்தை, இலங்கையின் சுவையை யெல்லாம்
ஒற்றிக்கொண்டு வந்து விடும் திறனை அவருடைய தொடர் கட்டுரைகள் வெளியாக்கின.
'கல்கி'யின் பிரிவினால் எழுத்துலகம் பரிதவிக்கிறது.
விகடனுக்கு நீண்ட காலம் ஆசிரியராக இருந்து என்னுடன் வாழ்வில் பெரும் பகுதியும்
பழகி வந்துள்ள 'கல்கி' காலமானார் என்பதை என் மனம் ஏற்க மறுக்கிறது.
நேயர்களுடன் என் துயரத்தை நான் பகிர்ந்து கொள்கிறேன்.
[ நன்றி : விகடன் ]தொடர்புள்ள பதிவுகள்:
கல்கி படைப்புகள்
கல்கியைப் பற்றி
’கல்கி’ பற்றி எழுத்தாளர் ’கடுகு’
’கல்கி’ பற்றி அறிஞர் அண்ணாதுரை
’கல்கி’யின் நாவல்கள், சிறுகதைகள்
’சிவகாமியின் சபதம்’ பற்றி வைகோ
1 கருத்து:
நான் கூட 'உபயகுசலோபரி' ஆசாமி தான். அதுவும், அந்தக்காலத்திலிருந்து. சில வருடங்கள் முன்னால் திருமதி ஆனந்தி ராமசந்திரன் இங்கு எங்கள் அகம் வந்த போது, இது பற்றி பேசிக்கொண்டது நினைவுக்கு வருகிறது. மிக்க நன்ரி, பசுபதி சார்.
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
கருத்துரையிடுக