சனி, 27 அக்டோபர், 2012

சொற்களைச் சுவைப்போம் - 3: வலிமிகாத ஆத்திசூடி


வலிமிகாத ஆத்திசூடி
 பசுபதி
“ சார், இன்று தமிழ்த் தொலைக் காட்சி ஒன்றில் அறிஞர் ஒருவர் ஔவையாரின் ‘ஆத்திச்சூடி’யின் சிறப்பையும் , அதில் உள்ள சில நீதிகளைப் பற்றியும்  மிக அழகாகப் பேசினார் ”


“ ஆம், உண்மையிலேயே அது ஒரு நல்ல நீதி நூல் தான்.  அதை மனத்தில் வைத்து, அதே முறையில் பாரதி, பாரதிதாசன் போன்றோரும் எழுதி உள்ளனர். ஆனால், அந்த நூலின் சரியான பெயர் ‘ஆத்திசூடி’ தான்.  ‘ஆத்திச்சூடி’ அன்று.  அந்த நூலின் கடவுள் வாழ்த்துஆத்தி சூடி அமர்ந்த தேவனை

ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.என்று இருப்பதால் அதற்கு  அப்பெயர் வந்தது.   ‘ஆத்திசூடி’  என்பது சிவனைக் குறிக்கும் சொல். ஆத்தி மாலை சிவனுக்குரிய மாலை. ‘ஆத்தியைச் சூடுபவன்’ என்று  இரண்டாம் வேற்றுமையை விரித்துச் சொல்லும்போது,  ‘ச்’ வரும். ஆனால்,  ‘ஆத்திசூடி’ என்பதில் அந்த இரண்டாம் வேற்றுமை உருபான ‘ஐ’  மறைந்து இருப்பதால் , ‘ச்’ வராது. 


 “ இப்படிச் சொற்களுக்கிடையே, ‘க்’, ‘ச்’, ‘த்’ ‘ப்’ எப்போது வரும் ? வரக் கூடாது? என்பதை அறிய நல்ல கட்டுரைகளைப் படித்துத்தான் கற்றுக் கொள்ள வேண்டும் போலிருக்கிறதே? ”

  
“ ஆம், இந்தக் கருத்தை வைத்தே நாம் ஒரு புதிய  ‘ஆத்திசூடி’ விளையாட்டு விளையாடலாமே?  இலக்கணம் போதிக்கும் புதிய ஆத்திசூடி என்று கூட இந்த விளையாட்டைக் கூப்பிடலாம்.”
 

 ‘அ’ முதல் ‘ஔ’ வரை , 12 உயிர் எழுத்துகளில் தொடங்கும் சொற்றொடர்களைத் தயாரிக்க வேண்டும். எல்லாத் தொடர்களும் நாம் வழக்கமாகத் தின ஏடுகளிலும், வார, மாத இதழ்களிலும் படிப்பவையாக,  கடிதங்களில் எழுதக் கூடியவையாக இருக்கவேண்டும். இந்தப்  ‘புதிய ஆத்திசூடி’.யில்  இலக்கணத்தைப் பொறுத்தவரை எல்லாம் சரியான சொற்றொடர்களாக அமைய வேண்டும். ஆனால்,  இந்தச் சொற்றொடர்களின் நடுவில் பலரும் மெய்யைச் (ஒற்றைச்) சேர்த்துத் தவறாக எழுதும் வாய்ப்பு உண்டு. ‘ஆத்திசூடி’ என்ற சொற்றொடரைப் போல.   அப்படிப்பட்ட 12 சொற்றொடர்களைத் தயாரிப்பது தான் இந்த ‘வார்த்தை விளையாட்டு’ . க், ச், ப், த் போன்ற வல்லெழுத்து ஒற்று வராததை, “வலிமிகா” என்றழைப்பர் இலக்கணத்தில். அதனால்,  இந்தப் பட்டியலை ‘வலிமிகாத ஆத்திசூடி’ என்று கூட வேடிக்கையாக அழைக்கலாம்! ”


இதோ ஒரு மாதிரிப் பட்டியல்: சொற்றொடர்களைத் தொடர்ந்து அவை வரும்
மாதிரி வாக்கியங்களும் உள்ளன. விளையாட்டுக்கு விளையாட்டு, இலக்கணத்திற்கு இலக்கணம், எப்படி?”அசைபோடு’ : மாடு அசைபோட்டது.

ஆசைகாட்டு’: குழந்தைக்குச் சும்மா ஆசை காட்டாதே !

இலைபோடு’ : திருமணத்தில் உடனே இலைபோட்டுவிட்டனர்.

ஈடுகட்டு’: அந்த இழப்பை ஈடுகட்ட முடியாது.

உச்சிகுளிர்’ : அவன் புகழ்ச்சியில்  எனக்கு உடனே உச்சிகுளிர்ந்துவிட்டது.

‘ஊசிபோடு’; வைத்தியர் குழந்தைக்கு ஊசிபோட்டார்.

‘எடைபோடு’ : என்னைக் கண்ணால் அவள் எடைபோட்டாள்.

ஏறுதழுவுதல்; ஜல்லிக் கட்டுக்குப் பழைய பெயர் ‘ஏறுதழுவல்’.

ஐந்துகொடு’ : அந்தப் பழவகையில் ஐந்து கொடு.

ஒருகை பார்’ : மதிய உணவை ஒருகை பார்த்தேன்.

ஓய்வுபெறு’ : ஓய்வுபெற்றபின் எங்கே போகப் போகிறாய்?

ஔவை பாடல்’:  ஔவை பாடல்களில் இதுவும் ஒன்று.  


“ இப்போது நீங்களும் ஒரு ‘வலிமிகா ஆத்திசூடி’ தயாரிக்க முயலுங்களேன்.
நகைச்சுவை கலந்த வாக்கியங்களைத் தேர்ந்தெடுக்க நல்ல வாய்ப்பு!” 


~*~o0O0o~*~

தொடர்புள்ள பதிவுகள்:
சொல்விளையாட்டு

13 கருத்துகள்:

Muthu Muthusubramanyam சொன்னது…

பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பக் காலத்தில் தமிழ் இலக்கணம் இந்த முறையில் யாரும் கற்றுக் கொடுத்ததே இல்லை! இது எனக்குப் புதிய செய்தி. சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறேனா என்று சோதிக்க:
இலை போடு அல்லது இலயைப் போடு; ஊசி போட்டார் அல்லது ஊசியைப் போட்டார்; சரியா?

சு.பசுபதி சொன்னது…

சரியே!

Muhunthan Rajadurai சொன்னது…

வித்தியாசமான அனுகுமுறை. சிறப்பாக உள்ளது ஐயா.

சு.பசுபதி சொன்னது…

@Muhunthan Rajadurai

நன்றி !

Pas Pasupathy சொன்னது…


நண்பர் புலவர் இராமமூர்த்தியின் 'ஆத்திசூடி'


அன்பு காட்டு
ஆலை காண்
இசை கேள்
ஈடு சொல்
உதடு குவி
ஊசி கொடு
எடைகட்டு
ஏடு போடு
ஐந்துகரம்
ஒன்று தா
ஓடு பார்

Swami சொன்னது…

அமுக்கி விடு
ஆவின்பால் அருந்து
இதமாய் வருடு
ஈயை விரட்டு
உற்சாகம் கொள்
ஊசியை மிதிக்காதே
ஐஸை வை
எண்ணை தடவு
ஏராள எடை தவிர்
ஒத்தடம் கொடு
ஓமலேகியம் விழுங்கு
ஒளடதம் குடி

இதெல்லாம் மெய்யாகவே ‘வலி’மிகாமல் காக்கும் (;-)

Prasad DV சொன்னது…

வியாபாரிக்கு ஆடிட்டரின் ஆலோசனை:

அணா சம்பாதி
ஆடிட்டர் வை
இன்கம்டாக்ஸ் கட்டு
ஈதல் செய்
உறுதிச்சீட்டு பேணு
ஊதாரித்தனம் செய்யாதே
எழுது கணக்கை
ஏமாற்ற விடாதே
ஐஸாபைசா சரிபார்
ஒப்பனை (கணக்கு) வேண்டாம்
ஓய்வுக்கு சேமி

Pas Pasupathy சொன்னது…

யாவருக்கும் நன்றி ! ஒரே ஒரு திருத்தம் : ஓய்வுக்கு*ச்* சேமி .

Ms. Tamil சொன்னது…

இரயில் பயணங்களில்
(வலிமிகாத ஆத்திசூடி)

அன்ரிசர்வ்ட் தவிர்
ஆர்.பி.எப். துணை
இரயில் மாடல் ஆடு
ஈயாடும் பண்டம் தவிர்
உணவு முடி
ஊன்றி நில்
எலிகள் ஜாக்கிரதை
ஏடு பகிர்
ஐயமற நேரமறி
ஒரிஜினல் அடையாள அட்டை கொள்
ஓடி ஏறாதே
ஔடதம் மறவாதே

(Inspired by Douglas Adams.)

நன்றி.
அர்விந்த்

Lakshmi Niranjan சொன்னது…

அனாடமி கற்றிடு
ஆருயிர் பேணிடு
இருதயம் காத்திடு
ஈறுகள் கவனித்திடு
உடற்பயிற்சி செய்திடு
ஊசிகள் போட்டிடு
எடை கவனித்திடு
ஏறி இறங்கிடு
ஐயம் அகற்றிடு
ஒத்தடம் கொடுத்திடு
ஓடி ஆடிடு
ஒளதடம் குடித்திடு

மருத்துவரின் ஆத்திசூடி
பிழைகள் இருந்தால் சுட்டிக் காட்டவும் .

Ramanan Isaikkavi சொன்னது…

பசுபதி அண்ணா! இந்த அருமையான பதிவை உங்கள் அனுமதியுடன், உங்கள் பெயர் சொல்லி, மக்கள் தொலைக்காட்சியில் நான் பேசி வரும் தமிழ் அமிழ்து நிகழ்ச்சியின் பயில்வோம் பகுதியில் பயன்படுத்திக் கொள்கிறேன். சரி என்று ஒரு வார்த்தை சொல்லுக. அதுதான் சரியான விடை!!!

Pas Pasupathy சொன்னது…

சரி!

Nachu Hosanna சொன்னது…

'ஒளதடம்' என்பது தவறான சொல். ஒளடதம் என்பது தான் சரி. ஒளடதம் என்றால் மருந்து என்று பொருள்

கருத்துரையிடுக