செவ்வாய், 16 அக்டோபர், 2012

முத்தமிடு! : கவிதை

முத்தமிடு!
பசுபதி



போகி ஒருநண்பன் - எனக்குப்
   போதித்த சொற்களிவை.
"தேகம் நிரந்தரமோ ? - இதனைச்
   சிந்தனை செய்துவிடு!
சோகம் தவிர்த்துவிடு -தினநள
    பாகம் புசித்துவிடு!
மோகக் கடல்மூழ்கி -- மங்கை
    முத்துகள் முத்தமிடு! "

யோகம் பயில்பெரியார் - ஒருவர்
   என்னிடம் சொன்னதிது.
தேகம் ஒருகோயில் - அதனைத்
    தினமும் வணங்கிவிடு!
நாகம் எனவளைந்தே -- உனது
    நாபியை முத்தமிடு!
ஏகன் ஒருவனையே -- நினைத்து
   இந்த்ரியம் கட்டிவிடு! "

காவி உடுத்தியவர் -- எனது
   காதில் உரைத்ததிது.
" தேவை சுருக்கிவிடு -- உனது
    சிந்தை விரித்துவிடு!
பாவம் வெறுத்துவிடு -- ஆனால்
    பாவியை முத்தமிடு!
சாவில் அமைதியுறு -- ஆன்ம
   சாதனை செய்துவிடு! "

கனவில் அருவுருவம் -- என்றன்
   கருத்தில் பதித்ததிது.
"நினைவை எரித்துவிடு -- உன்றன்
    நெற்றிக்கண் பார்வையிலே!
மனதை முழுங்கிவிடு -- தினமும்
    மெளனத்தை முத்தமிடு !
எனதெனும் எண்ணமதைக்-- கொன்றே
    இறையுன தாக்கிவிடு ! "

~*~o0O0o~*~
[ இது ‘திண்ணை’யில் முதலில் 2001-இல் வெளியானது.]

தொடர்புள்ள பதிவுகள்:

9 கருத்துகள்:

Unknown சொன்னது…

கவிதை இயற்றிக் கலக்கிவிட்டீர்கள் பேராசிரியரே. மிகவும் ரசித்தேன்.

அன்புடன் புகாரி

Pas S. Pasupathy சொன்னது…

மிக்க நன்றி, புகாரி.

Muthu சொன்னது…

முத்தமிட வேண்டிய கவிதை!

Pas S. Pasupathy சொன்னது…

Muthu Muthusubramanyam:

ரசித்தமைக்கு நன்றி !

ananth சொன்னது…

முத்தம்பலவிதம்! முத்து அம்பலவிதம்!

அனந்த்

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி, அனந்த்.

Torontovasi சொன்னது…

முத்து முத்தான கவிதை அளித்த உமக்கு முத்தஆரத்தை பரிசளிக்க விழைகிறேன்!
-கீதா ஸ்ரீனிவாசன்

Raveenthiran சொன்னது…

அருமை

VangalSam சொன்னது…

சத்தமின்றி முத்தான முத்தம் !