சனி, 25 மே, 2013

முருகன் -2

சென்னை நகர் மேவும் சண்முகத் தெய்வமணி 
குருஜி ஏ.எஸ்.ராகவன் 


’கல்கி’ யில் 2002-இல் வந்த ”தலந்தோறும் தமிழ்க்கடவுள்” என்ற கட்டுரைத் தொடரில் 29-ஆவது கட்டுரை இது. ஓய்வுக்குப் பின் டில்லியிலிருந்து ’சென்னை நகர் மேவிய’ ஒரு குருமணி எழுதிய கட்டுரை.



  முத்துக்குமரன் என்ற பெயரை உச்சரிக்கும்போதே மனத்திலே ஒரு குழந்தையைக் கொஞ்சி உச்சி முகரும் ஆனந்தம் ஏற்படும். அந்தத் திருப்பெயரைத் தாங்கி தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்தில் வளர் செல்வன் நம் மனத்துள் தோன்றும் பிம்பத்தின் பிரதிபலிப்பாகவே சின்னஞ்சிறு மூர்த்தியாகக் காட்சி தருகிறான். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்று சொல்லத் தேவையில்லை! கீர்த்தியைக் காட்டிலும் பெரிது மிகப் பெரிது அவனது தனிப்பெருங் கருணை. அதனால்தானே, படிப்பு வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு ஆன்மத்தேடலில் இறங்கிய ராமலிங்க சுவாமிகளை ஆட்கொண்டு, உருக்கும் தமிழில் அருட்பா பாட வைத்தான். தனியறையில் கண்ணாடி முன் தீபம் ஏற்றி தியானத்தில் இருக்கையில் இளைஞன் ராமலிங்கத்தின் முன் முருகன் தோன்றியதாகவும் அதன் பின்னர் அவனருளால் ஆட்கொள்ளப்பட்டு கவிதை பாடியதாகவும் அவர் வாழ்க்கை சரித்திரம் சொல்கிறது.

  சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ் கடப்பந்  
   தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும் ஓர் 
  கூர்கொண்ட வேலும் மயிலுநற் கோழிக் கொடியும் அருட் 
   கார் கொண்ட வண்மைத் தணிகா சலமும்என் கண்ணுற்றதே

  என்று முருகனை தரிசித்த கணம் முதல் வள்ளலார் தீந்தமிழ்க்கவி பாடலானார்.

  வள்ளலார் வரிந்து வரிந்து பாடிய ஷண்முகத் தெய்வமணி எப்படித்தான் இருக்கிறான் என்று நாமும் பார்த்து விடுவோமே! (பழைய?) பூக்கடை பஸ் ஸ்டாண்ட் - அங்கிருந்து பிரியும் இராசப்பா செட்டி வீதி. முத்துக்குமாரஸ்வாமி தேவஸ்தானம் என்ற பெயருடன் கம்பீரமாக நிற்கிறது பழம்பெரும் கோயில். வடதிசை நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம். உள்ளே போய் வினாயகரை வணங்கிவிட்டு முன்னேறினால், கிழக்குப் பிராகாரத்தில் ஒரு பெரிய பக்தர் கூட்டமே கொலுவிருக்கிறது. பக்தர் என்றால் சாமானிய பக்தர் அல்ல! சிதம்பர சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், இராமலிங்க அடிகளார் என்று பண்ணால் முருகனை அர்ச்சித்து மகிழ்ந்தவர்களின் சந்நிதிகள். கொடி மரத்தையும் கடந்து போனால் இந்த அடியார்க் குழாத்தின் மிக மூத்த முன்னோடியாம் அருணகிரிநாதர், தமக்குரிய சன்னிதியில் இருக்கிறார்.

  அர்த்த மண்டபம் - இங்கே, வள்ளலார் பாடிய சித்தி விநாயக வள்ளல், இளவலை முந்திக் கொண்டு அடியார்களுக்கு அருள் செய்யக் காத்திருக்கிறார். சூரியனார், வீரவாகுத் தேவர் என தனித்தனி சன்னிதிகளில் பரிவார தேவதைகள். அம்மையப்பர்கள் மீனாக்ஷி - சுந்தரேஸ்வரராகக் காணப்படுகிறார்கள்; வள்ளி - தெய்வானையருக்குத் தனித்தனி சன்னிதிகள்.

  மூலஸ்தானத்து கந்தஸ்வாமியின் அழகு நம்மை ஆட்கொண்டு விடுகிறது. வள்ளி தெய்வானை சமேதராக பாதாதி கேசம் அழகு சிந்த நிற்கிறார். ஒன்பதாவது வயதிலேயே இவரிடம் ஈர்க்கப்பட்டு வள்ளலார் கவியாகி ‘தெய்வமணி மலை’ பாடினார் என்றால் அதில் ஆச்சரியப்பட என்னவிருக்கிறது என்று தோன்றுமளவுக்கு ஒரு பொலிவு, பிரகாசம்.

  மூலஸ்தானத்து மூர்த்தி திருப்போரூரிலிருந்து வந்தார் என்பதற்கான கதை இருக்கிறது. சுமார் 500 வருடங்களுக்கு முன்பு நடந்த கதை.

  மராட்டியர்களுக்கும் பாளையக்காரர்களுக்குமிடையே மோதல். கலவரம் உச்சத்தை அடைந்தபோது கலகக்காரர்கள் வீடுகளையும் கோயில்களையும் தரைமட்டமாக்கினர்; கொள்ளையடித்தனர். திருப்போரூரில் முருகன் கோயில் பொன்னம்பலத் தம்பிரானின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இருந்தது.    கலகக்காரர்கள் கண்ணில் படாதபடி மூர்த்தியை பத்திரப்படுத்த எண்ணி, மூல விக்ரஹத்தை கல் சுவர் எழுப்பி மறைத்து விட்டார் தம்பிரான்.

  கலகமெல்லாம் ஓய்ந்து அமைதி திரும்பிய காலகட்டத்தில் கல் திரையை உடைத்து எடுத்தார்கள். ஆனால், அதிசயத்திலும் அதிசயம் - அதன் பின்னேயிருந்த முருகனைக் காணவில்லை! அதிர்ச்சியும் துயரும் தாளாமல் உயிர்நீத்தார் தம்பிரான்.

  அதன் பிறகு ஆட்சியாளராக வந்த அம்பலவாணத் தம்பிரானின் கனவில் அடிக்கடி முருகப் பெருமான் தோன்றலானார். தாம் ஒரு மரத்தடியில் புற்றில் மறைந்திருப்பதாகவும் தம்மை வெளிக் கொணர்ந்து கோயில் நிறுவும் படியும் தெரிவித்து வந்தார். ஆனால் தம்பிரான் அக் குறிப்பைக் கட்டளையாக ஏற்காமல் விட்டு விட்டார்.

  கிருத்திகைக்குக் கிருத்திகை சென்னையிலிருந்து திருப்போரூர் சென்று வழிபடும் வழக்கம் கொண்டிருந்தனர் மாரி செட்டியார், கந்தப்ப ஆசாரி என்ற இரு நண்பர்கள். ஒருமுறை களைப்புத் தீர, கோயில் வாசலிலிருந்த வேப்பமர நிழலில் சற்று உறங்கினர். அருகேயிருந்த புற்றில்தான் முருகப்பெருமான் மறைந்திருந்தான். அம்பலவாண தம்பிரானின் கனவில் தோன்றியது போலவே மாரி செட்டியாரின் கனவில் தோன்றி, தான் வெளிப்பட விரும்புவதை உணர்த்தினான். விழித்தெழுந்த செட்டியார், நடந்ததைத் தம் நண்பரிடம் தெரிவிக்க, இருவரும் திருப்போரூரில் வழிபாடு முடித்துத் திரும்புகையில் புற்றின் அருகே நின்று வேண்டிக் கொண்டனர். தங்களால் சுமந்து செல்லக்கூடிய அளவுக்கு முருகன் சிறிய உருவமாக மாறி உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். அதேபோல் முருகனும் சிற்றுரு கொண்டான். புற்று மலர்ந்தது; அப்படியே மாரி செட்டியாரின் கைக்கு அடக்கமாக அமர்ந்தான் முருகன். இருவரும் சென்னை நோக்கிப் புறப்பட்டனர்.

  சென்னையில், சரவணப் பொய்கை என்ற குளத்தருகில், தாங்கள் ஏற்கெனவே வணங்கி வந்த சித்தி வினாயகர் கோயிலில் முருகனைப் பிரதிஷ்டை செய்தார்கள் நண்பர்கள். வள்ளி தேவசேனா சமேதனாக முருகன் அக் கோயிலில் மூலஸ்தானத்தில் குடியேறினான்.

  சிறிது காலம் சென்று, கந்தகோட்டம் என்றே கோயில் வழங்கலாயிற்று. அப் பகுதியில் வாழ்ந்த வணிகப் பெருமக்கள், முருகனுக்குப் பிரும்மோத்ஸவம் நடத்த விரும்பி உற்சவ மூர்த்தியைப் பஞ்சலோகத்தில் செய்வித்தனர். அத் திருவுருவில் சில இடங்களில் பிசிறுகள் அமைந்து விட்டன. அவற்றை நீக்க, திருவுருவின் முகத்தில் செதுக்கியபோது தீப்பொறிகள் தெறிக்கக் கண்டு பயந்து போய், சிற்பிகள் சிலைகளை அப்படியே வைத்து விட்டனர். இரண்டு வருடங்கள் கழித்து அங்கே வந்த அந்தணர் ஒருவர் சில மந்திரங்களை ஓத, குறைபாடுகள் மறைந்து முழுப் பொலிவுடன் உத்ஸவ விக்கிரகம் ஜொலிக்க ஆரம்பித்தது.

  இப்படியாக, கட்டம் கட்டமாக பக்தர்களைத் தூண்டி இயங்கச் செய்து, கந்த கோட்டத்தில் வந்தமர்ந்தான் முத்துக்குமார சுவாமி. கும்பாபிஷேகமும் பிரும்மோத்ஸவமும் கோலா கலமாகக் கொண்டாடப்பட்டன.

  அதிசயம் அனேகமுற்ற இத் திருத்தலத்தின் நிர்வாகம் இன்றும் நித்யோத்ஸவம் போல் குறைவின்றி நடைபெற்று வருகிறது. சூழும் பக்தர்கள் மனம் குளிர முத்துக் குமாரசுவாமி அருளைக் குளிர் நிலவெனப் பொழிந்து கொண்டிருக்கிறான்.

  செல்வமுத்துக்குமாரசுவாமி என்ற பெயருக்கேற்ற ஐச்வர்யம் சூழ இருக்கிறான் முருகன். வியாபார ஸ்தலமான டவுன் பகுதி என்பது மட்டுமல்ல... உத்ஸவரின் மகாமண்டபத்தைப் பார்த்தால் தெரிகிறது அவன் செல்வ மகிமை - வெள்ளிக் கதவுகள் கொண்ட வெள்ளி விமானம், பொன்னாலான பிரபை; உத்ஸவருக்குத் தங்கக் கவசம் என பொன்னிழைத்த திருமேனியனாய் காட்சி தருகிறான். உலகின் அத்தனை ஐச்வர்யங்களுக்கும் உரிமையாளன் அவனன்றி வேறு யார் என எண்ணும் அளவுக்கு அழகு!

  தருமமிகு சென்னை என வள்ளலார் பாடிய தலைநகரம் அறத்துக்கு எடுத்துக்காட்டாக இன்று இருக்கிறதா? என்று யோசிக்க ஆரம்பித்தால் சோர்வுதான் வரும். ஆனால், மலியும் அதர்மத்திடையேயும் ஏழைமைக்கும் அக்கிரமங்களுக்கிடையேயும் நாம் நன்னெறியாளர்களைப் பார்க்க முடிகிறது; பக்தியும் சிரத்தையும் உள்ள மெய்யன்பர்கள் இருக்கவே செய்கிறார்கள். வேறொன்றும் இல்லா விட்டாலும் தருமமிகு சென்னையில் தினந்தோறும் பிரவசனங்களும் ஆன்மிகச் சொற்பொழிவுகளும் மூலைக்கு மூலை முழங்கிக் கொண்டிருக்கின்றன. பகவத் கீதை, உபநிஷத்தில் ஆரம்பித்து ராமாயணம், பாரதம், பாகவதம், கந்தபுராணம் என ஒன்று விடாமல் எங்கேனும் ஒரு பகுதியில் செவிக்குணவும் சிந்தைக்கு உரமும் பரிமாறப்பட்டு வருகிறது. இவற்றுக்கெல்லாம் அதிபதியாயிருந்து கலியுக தெய்வமாய் ஆட்சி செலுத்தி நம்மைப் பரிபாலனம் செய்து வருபவன் கந்தகோட்டத்து முருகன்தான்.

  அவனை நோக்கி ராமலிங்க சுவாமிகள் பாடியது இன்றளவும் எத்தனை பொருத்தமாயிருக்கிறது! வாழ்க்கை நெறியை  வேண்டும் அப்பிரார்த்தனையை நாமும் செல்வமுத்துக்குமாரசுவாமியின் முன் வைப்போமே :
 ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
   உத்தமர்தம் உறவு வேண்டும் 
  உள்ளொன்று வைத்துப் புறம்புஒன்று பேசுவார் 
   உறவுகல வாமை வேண்டும் 
  பெருமைபெறும் நினதுபுகழ் பேச வேண்டும் பொய்மை 
   பேசாது இருக்க வேண்டும் 
  பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய் 
   பிடியாது இருக்க வேண்டும் 
  மருவுபெண் ணாசையை மறக்கவே வேண்டும்உனை 
   மறவாது இருக்க வேண்டும் 
  மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற 
   வாழ்வில்நான் வாழ வேண்டும் 
  தரும மிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர் 
   தலமோங்கு கந்த வேளே 
  தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி 
   சண்முகத் தெய்வ மணியே

  முத்துக்குமாரசாமியிடம் ‘வேண்டும் வேண்டும்’ என வள்ளலார் வேண்டுகின்ற விஷயங்களின் பட்டியல் இதோடு முடிந்து விடவில்லை. இன்னும் நீண்டுகொண்டே தான் போகிறது. கேட்பவையெல்லாம் தரவா போகிறான் என்ற கேள்விக்கிடமளியாமல், கேட்பதையே அழகிய நெறியாக்கினார் வள்ளலார். முருகனின் கருணை நிதியினிடத்து அவர் கொண்ட நம்பிக்கை நம்மையும் பற்றிக் கொள்ளப் பிரார்த்திப்போம்.

[ நன்றி : கல்கி ]
தொடர்புள்ள பதிவுகள்:



கருத்துகள் இல்லை: