ஞாயிறு, 2 ஜூன், 2013

சசி - 6 : பயங்கர மனிதன்!

பயங்கர மனிதன்!
சசி 
===


கதைகளை வெளியிடும் நூல்களுக்கும், பத்திரிகைகளுக்கும் பொருத்தமான படங்கள் எவ்வளவு முக்கியம் என்று நான் அடிக்கடி சொல்வதற்கு ஒரு நல்ல உதாரணம் இதோ! ’சசி’யின் இந்தக் கதையைப் படித்து முடித்தவுடன் சொல்லுங்கள் : இந்தக் கதையைக் ‘கோபுலு’வின் படம் இல்லாமல் படித்தால் உங்களுக்குத் திருப்தி இருக்குமா?  
===


''ந்தாருங்கோ, உங்களைத் தானே! இந்த க்ஷணமே பக்கத்து வீட்டுக்காரர் கிட்டே போய், அவர் சம்சாரம் பண்ற அக்கிரமத்தைப் பற்றிச் சொல்லிச் சண்டை போட்டுட்டு வாங்கோ! இல்லாத போனா இந்த வீட்டிலே என்னாலே அரை நிமிஷம்கூடக் குடித்தனம் பண்ண முடியாது!'' என்று மங்களம் என்னிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள்.

''என்னடி நடந்தது? விவரமாத்தான் சொல்லேன்!'' என்றேன்.


''தினம் எச்சக்கலையைக் கொண்டு வந்து இங்கே நம்மாத்திலே எறிகிறாள், அந்த மனுஷி! கேட்டாக்க, அப்படித்தான் எறிவாளாம்!''

''அப்படியா சொல்கிறாள்! உம்..! இதோ, இப்பவே போய் சண்டை போட்டுட்டு வரேன்! புதுசாகக் குடிவந்த பேர்வழிகளோல்லியோ, நான் எப்பேர்ப்பட்டவன்னு இன்னும் தெரிந்து கொள்ளலை!'' என்று கூறிவிட்டு, விடு விடென்று பக்கத்து வீட்டுக்கு விரைந்து சென்றேன். அங்கு வாசலில் உட்கார்ந்திருந்த வேலைக்காரன் என்னைத் தடுத்து, ''ஐயாவை இப்போ பார்க்க முடியாதுங்க, சார்!'' என்றான்.

''பார்க்க முடியாதா? அவசரமாகப் பார்க்கணும்னு போய்ச் சொல்லுடா! சண்டை கூடப் போடணும்னு சொல்லு! ஹும்! என்னை யாருன்னு நினைச்சிண்டிருக்கார்!'' என்று அதட்டிப் பேசினேன்.

அதைக் கேட்டதும், அந்த வேலைக்காரன் உள்ளே செல்ல எழுந்திருந்தான். அதே சமயம், அங்கே வராந்தாவில் மாட்டப்பட்டிருந்த ஒரு புகைப்படம் என் கண்ணில் தென்பட்டது.

''டேய்! சித்தே இரு! அதோ மாட்டியிருக்கே, அது யாருடைய படம்?'' என்று பீதியடைந்து கேட் டேன்.

ஆமாம், பெரிய மீசையுடன் இருந்த அந்தப் பயங்கர மனிதரின் படத்தைப் பார்த்ததும், எனக்கு நடுக்கமெடுத்துவிட்டது.

''எங்க எசமானர் படம்தான் அது!'' என்று வேலைக்காரன் சொன்னதும், என் நடுக்கம் இன்னும் அதிகமாகிவிட்டது.

''இன்னொரு சமயம் வருகிறேன்'' என்று கூறிவிட்டு, நிற்காமல் என் வீட்டுக்கு ஓடி வந்து விட்டேன்.

வீட்டுக்கு வந்ததும், ''சண்டை போட்டேளா?'' என்று மங்களம் கேட்டாள்.

''ஐயையோ! ஆளைப் பார்த்தா ராக்ஷஸன் மாதிரி பயங்கரமாக இருக்கேடி! அவனோடு நான் எப்படியடி சண்டை போடறது? வாசலிலே மாட்டியிருக்கிற அவன் போட்டோவைப் பார்த்தேன். அப்படியே திரும்பிவிட்டேன்!'' என்றேன்.

''நாசமாப் போச்சு! அவர் பரம சாதுவான்னா இருப்பார்! நாடகத்திலே அவர் கம்ஸன் வேஷம் போட்டுண்டபோது எடுத்த போட்டோவைப் பார்த்துட்டு ஓடி வந்திருக்கேள்! அவர் வீட்டு வேலைக்காரி அன்னிக்குச் சொன்னாளே... பிச்சைக்காரர்களை பயமுறுத்தறதுக்காகன்னா வெளியிலே மாட்டிவைத்திருக்காராம்! நன்னாயிருக்கு!''

[ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:
சசியின் சிறுகதைகள்

1 கருத்து:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ரசித்தேன்....

கோபுலுவின் படம் அசத்தல்!