2. சூடிக்கொண்டவள்
லா.ச.ரா
நவராத்திரி சமயம். கோவில்களிலும், வீடுகளிலும் பலர் லலிதா சஸஸ்ரநாமம், அபிராமி அந்தாதி போன்றவற்றைப் படிப்பது வழக்கம். லா.ச.ரா வும் ஒரு முறை லலிதா சஸஸ்ரநாமம் படித்திருக்கிறார். என்ன நடந்தது? படியுங்கள்! நம்புகிறீர்களோ இல்லையோ, ஒரு நல்ல கட்டுரை நிச்சயமாய்க் கிடைத்திருக்கிறது.
இது ‘சிந்தா நதியில்’ இரண்டாம் கட்டுரை.
லா.ச.ரா
நவராத்திரி சமயம். கோவில்களிலும், வீடுகளிலும் பலர் லலிதா சஸஸ்ரநாமம், அபிராமி அந்தாதி போன்றவற்றைப் படிப்பது வழக்கம். லா.ச.ரா வும் ஒரு முறை லலிதா சஸஸ்ரநாமம் படித்திருக்கிறார். என்ன நடந்தது? படியுங்கள்! நம்புகிறீர்களோ இல்லையோ, ஒரு நல்ல கட்டுரை நிச்சயமாய்க் கிடைத்திருக்கிறது.
இது ‘சிந்தா நதியில்’ இரண்டாம் கட்டுரை.
கதிரில் வந்தது:
[ நூலில் சில மாற்றங்கள் செய்திருப்பது தெரிகிறது.
கான் ரிலிஜியஸ்? ( Gone Religious) என்று இரண்டாம் பத்தியில் முதலில் வருவதை ‘ பக்தி பற்றிக்கொண்டதா?’ என்று நூலில் மாற்றி இருக்கிறார்.]
கட்டுரை:
[ நன்றி: தினமணி கதிர், மதுரைத் திட்டம்; படம்: உமாபதி ]
தொடர்புள்ள பதிவுகள்:
லா.ச.ராமாமிருதம் படைப்புகள்
[ நூலில் சில மாற்றங்கள் செய்திருப்பது தெரிகிறது.
கான் ரிலிஜியஸ்? ( Gone Religious) என்று இரண்டாம் பத்தியில் முதலில் வருவதை ‘ பக்தி பற்றிக்கொண்டதா?’ என்று நூலில் மாற்றி இருக்கிறார்.]
கட்டுரை:
தோட்டத்தில் செம்பருத்திச் செடிகள் இரண்டு. வேறு தாவரங்கள் ஏதேதோ பயிர் செய்ய முயன்றும், மண் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் செம்பருத்திச் செடிகளில் மட்டும் தினம் மூன்று நான்கு பூக்களுக்குக் குறைவில்லை. ஒரேயொரு சமயம் ஏழு, எட்டுகூடப் பூத்துத் தள்ளி விடும்.
அம்பாளுக்குச் செம்பருத்திப் பூ விசேஷமாமே! சில நாட்களாக லலிதா சஹஸ்ரநாமம் படிக்கிறேன்.
* * *
பக்தி பற்றிக்கொண்டதா? உன் உதட்டுக் குழியில் புன்னகையின் குமிழ் தெரிகிறது. பக்தி பொங்குமளவுக்கு மனம் களங்கமற்று இல்லை. இருக்கப் போவதுமில்லை. தெரிகிறது. வட்டம் ஆரம்பித்துப் புள்ளிக்குத் திரும்பி, அதில் முடியப் போகிறதென்று நினைக்கிறேன். முறைதானே!
அன்று அம்மா, தன் மடியில் என்னை இருத்தி, என் கைகளை ஒன்று சேர்த்துக் கூப்பி, 'ஓம்மாச்சி' சொல்லித் தந்தாள்.
இன்னமும் அம்மா மடி கிடைக்குமா? நானும் ஆசைப் படலாமா ?
அடுத்து அம்பாளின் மடிதான் அடைக்கலம், அங்கு இடம் என்ன சுலபமா? இருந்தாலும்-
ஒம் புவனேஸ்வரியே நம:
* * *
இதைக் காலட்சேப மேடையாக மாற்றுவதாக எண்ணமில்லை. அதற்கு என்னிடம் சரக்கு இல்லை. எனக்கு எந்தத் தகுதியும் இல்லை. குங்குமத்தால் அர்ச்சிக்கவோ, மலர்களைத் துாவவோ- ஊஹும். வடமொழி எழுத்து வாஸனைகூடக் கிடையாது. முதுகு நிமிர்ந்து இரண்டு மணி நேரம் தொடர்ந்து உட்காரக்கூடத் திராணி இல்லை. ஆனாலும் உட்காருகிறேன். சில நாட்களாக லலிதா சஹஸ்ரநாமம் படிக்கிறேன்.
ஒம் மாத்ரே நம:
ஆரம்பமே அம்மா.
* * *
ஆனால் இன்று-இடறி, இடறி நாமாக்களை எழுத்துக் கூட்டிப் படித்துக் கொண்டே வருகையில், திடீரென்று நான் தனியாயில்லை.
ஆனால் பூஜை அறையில் நான் மட்டும்தான். எனக்குத் திடீரென ஒரே பரபரப்பு.
அவள் விளக்கில் இறங்கி, குத்து விளக்கின் தலையில் சூட்டியிருந்த செம்பருத்திப் பூவை எடுத்துத் தன் கூந்தலில் செருகிக் கொண்டது போல- முகம் காட்டவில்லை தலையின் பின்புறம்- அதையும் ஸ்துலமாகக் காண்பதென்பது அத்தனை சுலப சாத்தியமா? சிரமமாகக்கூடச் சாத்தியமா? முதலில்- சாத்தியமா?
• * *
பிரமை? ஒப்புக்கொள்கிறேன், பிளட் பிரஷர்? இதுவரை இல்லை. "ஹம்பக், புரளி, காதில் பூ சுத்தறே" ஊமையாகிறேன். தரப்பு பேச வாதங்களுக்கு எங்கு போவேன்? ஃபான்டஸி? இருக்கலாம். ரொமாண்டிக் இமாஜினேஷன்? மறுக்கப் போவதில்லை. அதற்கு வயது உண்டா?
* * *
என் பங்கில் ஒன்று மன்றாடுகிறேன். தானாக எழுந்த தோற்றம்தான். எண்ணத்தை முறுக்கி நான் வரவழைக்கவில்லை. "எப்படியும் முன்னால் முறுக்கி இருப்பாய். முறுக்காமல் இருந்திருக்க முடியாது". சரி. வலுக்கட்டாயத்தில் மட்டும் வந்துவிடுமா? எப்படியும் இந்த வடிவத்தில் நினைக்கவில்லை.
"அது உன் ஸ்ப் கான்ஷியஸ்."
இருக்கலாம், இருந்துவிட்டுப் போகட்டுமே! எதையும் நான் நிரூபிக்க வரவில்லை. எனக்கு நேர்ந்ததை அல்லது நேர்ந்த மாதிரி இருந்ததைச் சொன்னேன். இதுவும் நான் சொல்வதுதான். ஆனால் நேர்வதில் 'மாதிரி' என்பது கிடையாது. நேர்ந்தது நேர்ந்ததுதான். நம்பு என்று சொல்ல நான் யார்?
உருவகம், கனவு, ப்ரமை, ஹம்பக், ஃபான்டஸி இன்னும் என்னென்னவோ, உள்ளத்தின் அவஸ்தையில் உள்ளனவே. இன்றியமையாமையே.
ஆனால், விசாரணை, ருசு, நிரூபணை, தீர்ப்பு, நிபந்தனை, இதையெல்லாம் கடந்து, அறியாத, புரியாத, நிலைகளும் இருக்கின்றன என்கிற தடத்தில் சம்மதம் காண்போமா?
ஒன்று நிச்சயம், அவளே இருக்கிறாளா? அது அவளா, அவனா? சர்ச்சையை விற்பன்னர்களுக்கு விட்டு விட்டால், மிஞ்சுவது என்ன? எண்ணத்தின் அழகு. எண்ணத்தில் அழகு என்று சொல்கிறேன், ஒருவேளை இதுவேதான் அவளாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறதோ?
ஒரு சமயம் அவள்.
ஒரு சமயம் அவன்.
* * *
சிந்தா நதி தீரே, சிந்தா விஹாரே.
-------------------
[ நன்றி: தினமணி கதிர், மதுரைத் திட்டம்; படம்: உமாபதி ]
தொடர்புள்ள பதிவுகள்:
லா.ச.ராமாமிருதம் படைப்புகள்
1 கருத்து:
அற்புதம்.. அபாரம்..ஆன்ம உணர்ச்சி மீதூற எழும்பிய வரிகள். அதுதான் லா சரா!
வேதம்
கருத்துரையிடுக